வணக்கம் நலந்தானே!கடவுள் அருளால் களைகளைக் களைவோம்!

வயலில் பயிரிடுவதில் ஒரு முக்கியமான அங்கம் - களை பிடுங்குவது. பயிர் ஒரு கட்டத்துக்கு மேல் வளர ஆரம்பிக்கும்போது அந்த வளர்ச்சியைத் தடுப்பவை இந்தக் களைகள். வயல் பயிர் என்றில்லாமல் தோட்டங்களில் நற்பயன்களை அளிக்கக்கூடிய செடி, கொடி, மரங்களடியிலும் தோன்றக்கூடியவை களைகள்.

இந்தக் களைகள் எப்படி முளைக்கின்றன, எந்த ஆதாரத்தில் வளர்கின்றன என்பது ஆச்சரியம்தான்.  விதை, நாற்று, உரம், நீர்ப் பாய்ச்சுதல் என்று அடுத்தடுத்த கட்டங்களில் பயிரின் அபிரிமிதமான, ஆரோக்கியமான வளர்ச்சிக்குப் பாடுபடும்போது, எங்கிருந்து வந்து முளைக்கின்றன இந்தக் களைகள்?

அதேசமயம், நற்பயிர் தொகுதியைவிட இந்தக் களைகளின் எண்ணிக்கை சொற்பமாக இருப்பதால் எளிதாகக் களைந்துத் தூர எறிந்துவிட முடிகிறது, பயிரைக் காக்க முடிகிறது.

நம் வாழ்க்கையும் அப்படித்தான். நல்லெண்ணங்கள், நல்ல பேச்சு, நற்செய்கை இவையெல்லாவற்றையும் மீறி, தீய எண்ணம் எப்படி நமக்குள் புகுந்துவிடுகிறது? நாம் எப்படி அனுமதித்தோம்? ஆனால் பயிரைக் காப்பதுபோல, பல சந்தர்ப்பங்களில், நம் நல் மனதைக் காத்துக்கொள்ள முடியாமல் போய்விடுகிறதே, ஏன்? மனசுக்குள்களை தோன்றும்போதே அதை அடையாளம் கண்டுகொண்டு அதனை உடனே வேரறுக்க முடியவில்லையே, நம்மால், ஏன்?

களையிடமிருந்து பயிரைக் காக்கவேண்டும் என்ற உத்வேகம், தீய எண்ணங்களிலிருந்து நல்மனதைக் காக்கவேண்டும் என்று தோன்றாததுதான் காரணம். நம்முடைய திசை மாறிய ஆர்வம், நமக்கு ஒன்றும் நேர்ந்துவிடாது என்ற அதீத நம்பிக்கை, நம்மை அறிவுறுத்தும் நல்லவர்களைப் புறக்கணிப்பது முதலான பலவீனங்களால்தான் இந்தக் களைகள் அதிக உரம் பெறுகின்றன?. சரி, அவற்றைக் களைவது எப்படி, மீண்டு வருவது எப்படி?

இறையருள் என்ற ஒளி புகுந்தால், களை என்ற இருள் மறையும். எந்த கட்டத்திலும், எந்த வயதிலும் இறைவனை முழுமையாக நம்புவது, அவர் அருளை யாசிப்பது என்ற ஆன்மிகப் பயிற்சியால் களைகள் பட்டுப்போகும். நற்பயிர் செழித்து வளரும். இப்படி முயற்சித்தவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.

- பிரபுசங்கர்