இறைவன் விதித்திருக்கும் சஸ்பென்ஸ்!



மரணம் என்னும் இலக்கை அடையும் வாழ்க்கை ஓட்டப் பந்தயத்தில், யாரும் யாரையும் முந்திச் செல்ல விரும்புவதில்லை என்பதுதான் யதார்த்தம். ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஒரு ஓடுபாதை. ஆனால், ஒவ்வொருவருக்குமான பூரணமான இலக்கு என்னவோ ஒன்றுதான். அதேசமயம், வாழ்க்கையில் சுவாரஸ்யமே, எப்போது அது நிகழும் என்று தெரியாதிருப்பதுதான்! கடவுள் இவ்வாறு விதித்திருப்பது நம்முடைய ஆற்றலை நாம் வெளிப்படுத்துவதற்காகத்தான். நம் வாழ்க்கையில் இப்படி ஒரு சஸ்பென்ஸை வைத்துவிட்டு, கூடவே ஒருநாளைக்கு 86400 விநாடிகளையும் நமக்கு அவர் அளித்திருப்பதில்தான்
அவருடையை கருணை ஒளிர்கிறது.

அதாவது, அந்த ஒவ்வொரு விநாடியையும் நாம் ஆக்கபூர்வமானதாக செலவழித்துக்கொள்ள வேண்டும் என்பது பகவானின் தீர்மானம். நன்கு அனுபவித்து உண்பதற்காகவும், பணியில் ஈடுபடுவதற்காகவும், தூங்குவதற்காகவும் அவர் அளித்திருக்கும் கால பொக்கிஷம் இது. இறைவன் அளித்திருக்கும் அத்தனை விநாடிகளில் எப்போது வேண்டுமானாலும் மரணம் நிகழலாம். ஆகவே அதுவரை, வாழும் ஒவ்வொரு விநாடிக்கும் மதிப்பளிக்கும்வகையில் நம் எண்ணத்தை, பேச்சை, செயலாக்கத்தை நாம் நெறிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

இறைவன் நிர்ணயித்த அந்த காலத்திற்குள், அவர் அளித்திருக்கும் ஒவ்வொரு மணித்துளியையும் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக, நாம் முறையாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஆனால் ,வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது அவரவருடைய மனநிலை, கிடைக்கும் வாய்ப்புகளைப் பொறுத்துதான் அமையும். இதுதான் நம் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கான அர்த்தமும்கூட. அந்த முன்னேற்றம் எத்தகையதாக இருத்தல் வேண்டும் என்பது, அவரவர் மன ஓட்டத்துக்கு ஏற்ப அமைவதில்தான் வாழ்க்கையின் தரம் நிர்ணயமாகிறது.

நமக்குக் கண்கூடாக இறைவன் அளித்திருக்கும் கால பொக்கிஷத்தை முறையாகக் கையாளுவோம். இதற்கும் அவர் துணையையே நாடுவோம். அவர் அளித்திருக்கும் மணித்துளிகளில் சிலவற்றை அவருக்கு நன்றி சொல்வதற்காகச் செலவிடுவோம். அனைத்து மணித்துளிகளுமே நிச்சயமாக, ஆக்கபூர்வமானதாக அமைந்து பலன் தரும். அவர் விதித்திருக்கும் சஸ்பென்ஸ், அதற்கான தூண்டுகோலாக அமையும்.  

பிரபுசங்கர்
(பொறுப்பாசிரியர்)