பிரசாதங்கள்



பாசிப்பருப்பு மாவு லட்டு

என்னென்ன தேவை?

லேசாக வறுத்து அரைத்த பாசிப்பருப்பு மாவு - 2 கப்,
பொடித்த சர்க்கரை - 1¼ கப்,
நெய் - 1/2 கப், உடைத்த
முந்திரி - 1/4 கப்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
அலங்கரிக்க முந்திரி - 10.

எப்படிச் செய்வது?

கடாயில் நெய் ஊற்றி சூடாக்கி மிதமான தீயில் வைத்து முந்திரியை சேர்த்து வறுத்தெடுத்து தனியே வைக்கவும். பின்பு அதே நெய்யில் பாசிப்பருப்பு மாவை கொட்டி கைவிடாமல் வறுக்கவும். அது நிறம் மாறி வாசனை வந்ததும் இறக்கி, கைவிடாமல் கிளறிக் கொண்டே வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும். மாவு சிறிது ஆறியதும் சர்க்கரையை கொட்டி கலந்து சிறு சிறு லட்டுகளாக உடனே பிடித்து, மேலே முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.
குறிப்பு: மாவு கலவை அதிக சூடாக இருக்கும்போது சர்க்கரை சேர்த்தால் சர்க்கரை இளகி விடும்.

பச்சைப் பட்டாணி பூரி

என்னென்ன தேவை?

மேல் மாவிற்கு :
கோதுமை மாவு - 2 கப்,
ரவை - 1 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

பூரணத்திற்கு:
வேகவைத்து மசித்த பச்சைப் பட்டாணி - 1 கப்,
கரகரப்பாக பொடித்த காய்ந்தமிளகாய், தனியா, மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.
 
எப்படிச் செய்வது?
மேல் மாவிற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு பதத்திற்கு பிசைந்து மூடி 15 நிமிடத்திற்கு வைக்கவும். கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பூரணத்திற்கு கொடுத்த பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி உதிர் உதிராக வந்ததும் இறக்கவும். பூரணம் ரெடி.

பிசைந்த பூரி மாவிலிருந்து எலுமிச்சைப்பழ அளவு உருண்டையாக எடுத்து சொப்பு போல் செய்து 1 டேபிள்ஸ்பூன் பூரணத்தை உள்ளே வைத்து மூடி பூரிகளாக திரட்டிக் கொள்ளவும். கடாயில் பொரிக்க எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடாக்கி திரட்டிய பூரி மாவை போட்டு பொரித்தெடுத்து எண்ணெயை வடித்துக் கொள்ளவும். சாஸ், கிரீன் சட்னி, இனிப்பு சட்னியுடன் பரிமாறவும்.

காராமணி பக்கோடா

என்னென்ன தேவை?

வெள்ளை அல்லது சிகப்பு காராமணி - 1 கப்,
காய்ந்த மிளகாய் - 2,
பொடியாக நறுக்கிய தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்,
சோம்பு - 1/2 டீஸ்பூன்,
விரும்பினால் பெருங்காயத்தூள் - சிறிது,
நறுக்கிய கறிவேப்பிலை - 1 டீஸ்பூன்,
அரிசி மாவு - 1 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

காராமணியை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் தண்ணீரை வடித்து காய்ந்த மிளகாய், உப்பு போட்டு கரகரப்பாக அரைக்கவும். இத்துடன் தேங்காய், சோம்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, அரிசி மாவு, 2 டீஸ்பூன் சூடான எண்ணெய் சேர்த்து பக்கோடா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி மிதமான தீயில் வைத்து பக்கோடா மாவை கிள்ளிப் போட்டு கரகரப்பாக பொரித்தெடுத்து சூடாக பரிமாறவும்.

சாமை அரிசி மாவு உப்பு உருண்டை

என்னென்ன தேவை?

பதப்படுத்திய சாமை அரிசி மாவு - 2 கப்,
உப்பு - தேவைக்கு,
தேங்காய்த் துருவல் - 1/2 கப்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை - தலா 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
இடித்த மிளகு - 1/2 டீஸ்பூன்,
தாளிக்க எண்ணெய் - 2 டீஸ்பூன்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் 2½ கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு உப்பு, நெய், சாமை அரிசி மாவைத் தூவி கைவிடாமல், கட்டித்தட்டாமல் கிளறி இறக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், மிளகு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை தாளித்து தேங்காய்த் துருவலை சேர்த்து வதக்கி, மாவில் கொட்டி பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.

சிகப்பு புட்டரிசி கீர்

என்னென்ன தேவை?

சிகப்பு புட்டரிசி - 1/2 கப்,
பால் - 1 லிட்டர்,
பொடித்த வெல்லம் - 1/2
பல் பல்லாக நறுக்கிய தேங்காய் - சிறிது,
நெய் - 2 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைக்கவும். வெல்லத்தை ஒரு கம்பி பதத்திற்கு காய்ச்சி வடித்து கொள்ளவும். கடாயில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் தேங்காய் பல்லை போட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் அரைத்த மாவு, பால் சேர்த்து மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும். மாவு நன்கு வெந்ததும் வெல்லப்பாகு சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும். கீர் பதத்திற்கு வந்ததும் ஏலக்காய்த்தூள், வறுத்த தேங்காய்ப்பல் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

சோள அல்வா

என்னென்ன தேவை?

ஃப்ரெஷ் சோள முத்துக்கள் - 1 கப்,
சர்க்கரை - 2 கப்,
நெய் - 1/2 கப் - 3/4 கப்,
உடைத்த முந்திரி - 1/4 கப்,
ரவை - 1 டேபிள்ஸ்பூன்,
துருவிய கோவா - 1/2 கப்,
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

மிக்சியில் சோள முத்துக்களை போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். நான்ஸ்டிக் தவாவில் 1/2 கப் நெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து முந்திரியை வறுத்து எடுத்து தனியே வைக்கவும். பிறகு அதே நெய்யில் ரவையை கொட்டி வறுத்து, அத்துடன் அரைத்த சோள விழுதை சேர்த்து கைவிடாமல் கட்டியில்லாமல் வதக்கவும். கலவை நன்கு வெந்து சுருண்டு வரும்போது கோவா, சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும். தேவையானால் நடுநடுவே நெய் சேர்த்து அல்வா பதத்திற்கு தவாவில் ஒட்டாமல் வந்ததும் முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும். முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.

- சந்திரலேகா ராமமூர்த்தி