அனந்தனுக்கு 1000 நாமங்கள்26. சர்வாய நம: (Sharvaaya namaha)
ஆதியில் பிரம்மதேவர் ஐந்து முகங்களுடன் விளங்கினார். கிழக்கு நோக்கிய முகத்தால் ரிக் வேதமும், தெற்கு முகத்தால் யஜுர்வேதமும், மேற்கு முகத்தால் ஸாம வேதமும், வடக்கு முகத்தால் அதர்வண வேதமும், இவற்றுக்கும் மேலே மேல்நோக்கி இருந்த ஐந்தாவது முகத்தால் இதிஹாஸ புராணங்களும் ஓதி வந்தார். அவரது ஐந்தாவது முகம் மிகுந்த பொலிவோடு விளங்கியதால் மிகுந்த கர்வம் கொண்டார் பிரம்மதேவர். வேத வல்லார்களான ரிஷிகள் தன்னை வணங்கினாலும் அவர்களைப் பதிலுக்கு வணங்க மறுத்தார். அவரது ஐந்தாம் தலையிலிருந்து வந்த ஒளியால் தேவர்கள் ஒளி இழந்து நிழல் போல ஆனார்கள்.

அதைக் கண்ட பிரம்மாவுக்கு அகந்தை மேலும் அதிகரித்தது. ஒளியிழந்த தேவர்கள் பரமசிவனை அண்டினார்கள். பிரம்மாவின் கர்வத்தை அடக்கித் தாங்கள் இழந்த ஒளியை மீண்டும் பெற்றுத் தரும்படிப் பிரார்த்தித்தார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற பரமசிவனும் பிரம்மலோகத்துக்குச் சென்றார். ஆனால், அகந்தையில் மிதந்த பிரம்மாவோ பரமசிவனையும் புறக்கணித்தார். “நலமாக உள்ளீரா?” என்று அன்புடன் பரமசிவன் பிரம்மாவிடம் கேட்டார். ஆனால், அதற்கும் பதில் கூறாமல் அப்படியே அமர்ந்திருந்தார் பிரம்மா. அகந்தை தலைக்குமேல் ஏறுவது பிரம்மதேவருக்கே நல்லதல்ல என்று எண்ணிய பரமசிவன்,

ஓர் அட்டகாசச் சிரிப்பை வெளிப்படுத்தினார். மூவுலகங்களும் அந்தச் சிரிப்பொலியால் நடுங்கின. ஆனால், அதற்கும் பிரம்மாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ளக்கூடாது என்றெண்ணிய பரமசிவன், தன் இடக்கைப் பெருவிரல் நகத்தால், பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கொய்தார். பிரம்மாவின் தலையை இடக்கையில் ஏந்தியபடி கபால நடனம் புரிந்தார். அதைக் கண்ட தேவர்களும் மகிழ்ச்சியில் கூத்தாடினர். ஐந்து முகனாயிருந்த பிரம்மா இப்போது நான்முகன் ஆகிவிட்டார். ஆடி முடித்த பரமசிவனால் பிரம்மாவின் தலையைக் கையிலிருந்து கீழே போட முடியவில்லை.

கையில் அது ஒட்டிக் கொண்டு விட்டது. வேதம் சொல்பவரின் தலையை வெட்டியதால் சிவனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டுவிட்டது. பிரம்மா, சிவனுக்குத் தந்தை முறை என்பதால், தோஷம் மேலும் வீரியம் அடைந்துவிட்டது. இப்போது பிரம்மதேவர் சிவனைப் பார்த்துச் சிரித்தார். “சிரிக்காதீர்கள்! எனக்கு ஏற்பட்டுள்ள இந்த தோஷம் தீர வழி கூறுங்கள்!” என்று கேட்டார் பரமசிவன். அதற்குப் பிரம்மா, “என்னைப் படைத்தவன் திருமால் என்பதையும் மறந்து நானே படைப்புக் கடவுள் என்றெண்ணிக் கர்வத்துடன் இருந்தமையால் உன் மூலமாகத் திருமால் என் அகந்தையைப் போக்கிவிட்டார்.

நீயும் திருமாலைச் சென்று வழிபட்டு உன் சாபத்தைப் போக்கிக் கொள்!” என்று அறிவுறுத்தினார். பிரம்ம கபாலத்துடன் திருவையாறுக்கு அருகிலுள்ள திருக்கண்டியூர் என்னும் க்ஷேத்ரத்துக்கு வந்த சிவபெருமான், அங்குள்ள கபால மோக்ஷ புஷ்கரிணி என்னும் பொய்கையில் நீராடி, கமலவல்லியுடன் எழுந்தருளியிருக்கும் கமலநாதப் பெருமாளை வணங்கித் தன் சாபத்தைப் போக்கியருளும்படி வேண்டினார். உடனே திருமால் தன் வலக்கைப் பெருவிரலால் தன் திருமார்பைக் கீறி, அதிலிருந்து வந்த ரத்தத்தால் சிவனின் கையிலுள்ள பிரம்ம கபாலத்தை நிரப்பினார். அடுத்த நொடி சிவனின் கையிலிருந்து அந்தத் தலை கீழே விழுந்துவிட்டது.

“எனக்காக நீ ரத்தம் சிந்திவிட்டாயே!” என்று திருமாலைப் பார்த்து சிவன் கேட்க, “நீ என் உடலின் ஓர் அங்கம்! என்னுடைய உடல் உறுப்புக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்காக நான் ரத்தம் சிந்துவதில் என்ன தவறு?” என்று திருமால் பதிலளித்தார். இன்றும் கண்டியூரில் பிரம்மாவின் தலையைக் கொய்த சிவபெருமான் ‘பிரம்மசிரக் கண்டீச்வரர்’ என்ற பெயருடன் காட்சி தருகிறார். அவருக்கு அருகில் பிரம்மதேவரும் சரஸ்வதி தேவியுடன் காட்சி தருகிறார். சிவனுக்கு சாப விமோசனம் தந்த திருமால் ‘ஹரசாப விமோசனப் பெருமாள்’ என்ற திருநாமத்துடன் கமலவல்லித் தாயாருடன் எழுந்தருளியுள்ளார்.

கண்டியூரை மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார் “பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிந்துண்ணும் உண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகமேத்தும் கண்டியூர்” என்று பாடியுள்ளார். இவ்வாறு உலகையும் உயிர்களையும் தனக்கு உடலாகக் கொண்டு நமக்கு நேரும் துன்பங்களை எல்லாம் தனக்கு நேர்வதாகக் கருதிப் போக்கும் திருமால் “சர்வ:” என்றழைக்கப்படுகிறார். ‘சர்வ:’ என்றால் துன்பங்களைப் போக்குபவர் என்று பொருள். இதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் இருபத்தாறாவது திருநாமம். “சர்வாய நம:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு வாழ்வில் துன்பம் நேராமல் எம்பெருமான் காத்தருள்வான்.

27. சிவாய நம: (Shivaaya namaha)
தனது மருமகனாரான பரமசிவனை அவமானப் படுத்தவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தட்சன் ஒரு யாகத்துக்கு ஏற்பாடு செய்திருந்தான். தட்சனின் மகளான சதிதேவி தன் கணவனுடன் அந்த யாகத்துக்குச் செல்ல விரும்பினாள். “அழையா விருந்தாளியாகச் சென்றால் அவமானம்தான் கிட்டும்!” என்று அறிவுறுத்தினார் பரமசிவன். ஆனால், சதிதேவியோ, “தந்தையின் இல்லத்துக்குச் செல்ல அழைப்பை எதிர்பார்க்க வேண்டியதில்லையே!” என்றாள். “நீ அவர்மேல் அன்பு வைத்திருக்கும் அளவுக்கு, அவர் என்னிடம் மதிப்போ மரியாதையோ கொண்டிருக்கவில்லை.

எனவே நான் வரமாட்டேன்!” என்றார் பரமசிவன். “பிரஜாபதிகளின் கூட்டத்துக்குச் சென்ற நீங்கள் என் தந்தையை மதிக்கவில்லை. அதனால்தான் உங்கள் மேல் என் தந்தைக்குக் கோபம்!” என்றாள் சதிதேவி. “நடந்ததைச் சொல்கிறேன், கேள்!” என்ற பரமசிவன், “உன் தந்தை வந்தபோது தேவர்களான நாங்கள் அனைவரும் மரியாதையுடன் எழுந்து நின்றோம். ஆனால் அவர் எங்களுக்கு வணக்கம் செலுத்தவில்லை, அமருங்கள் என்றும் சொல்லவில்லை. அவர் முகத்தில் ஆணவம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

அதைக் கண்ட நான் இவ்வளவு ஆணவம் உள்ளவருக்கு இதுவரை கொடுத்த மரியாதையே போதும் என்று கருதி, அவர் ஆசனத்தில் அமருவதற்கு முன் என் ஆசனத்தில் அமர்ந்து விட்டேன். அதை ஒரு பெரிய தவறாக எண்ணி எல்லோரிடமும் நான் அவரை அவமானப் படுத்தியதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்!” என்றார். “அப்படியானால் நீங்கள் வரவேண்டாம், நான் மட்டுமாவது சென்று வருகிறேன். என்னுடைய சகோதரிகள், அவர்களின் பிள்ளைகள், என் மைத்துனர்கள் எல்லோரும் யாகத்துக்கு வருவார்கள். அவர்களைக் காண வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்காதா?” என்று கேட்டாள் சதி.

“நீ செல்லவேண்டும் என்று முடிவெடுத்து விட்டாய். இனி நான் தடுத்துப் பயனில்லை. ஆனால் நீ அவமானத்துடன் தான் திரும்புவாய்!” என்று எச்சரித்து அவளை அனுப்பிவைத்தார் பரமசிவன். யாகத்துக்குச் சென்ற சதியைக் கண்ட தட்சன், “‘சிவன்’ என்ற சொல்லுக்கு மங்களங்களுக்கு இருப்பிடமானவன் என்று பொருள். ஆனால் உன் கணவனோ பெயரளவில் மட்டும்தான் சிவன். மண்டை ஓடு, சாம்பல், மயானம் என அனைத்து அமங்களங்களோடும் தொடர்பு கொண்டவன். அவன்  மனைவிக்கு இங்கு என்ன வேலை?” என்று கத்தினான்.

தன் கணவனை ஏசுவதைச் சகித்துக் கொள்ள முடியாத சதி, அங்கேயே தீக்குளித்தாள். இச்செய்தியைக் கேள்வியுற்ற சிவபெருமான், வீரபத்ரன் என்ற தளபதி தலைமையில் பெரும் சேனையை அனுப்பி தட்சனின் யாகசாலையை அழித்தார். வீரபத்ரன் தட்சனின் தலையைக் கொய்து யாகத்தீயில் அர்ப்பணித்தான். பிரம்மதேவர் அப்போது தலையிட்டு, தட்சனை மீண்டும் உயிர்த்தெழச் செய்யுமாறு பரமசிவனிடம் வேண்ட, சிவன் ஆட்டின் தலையைத் தட்சனின் கழுத்தில் ஒட்ட வைத்து உயிர் பிழைக்கச் செய்தார். தீயில் இறங்கிய சதிதேவி, பருவதராஜனின் மகளாகப் பார்வதி என்ற பெயருடன் பிறந்து, பரமசிவனை மணக்கவேண்டும் என்று விரும்பித் தவம் புரிந்தாள்.

ஒரு முதியவன் வேடத்தில் அவளிடம் வந்த சிவபெருமான், “நீ மணந்து கொள்ள விரும்புபவன் பெயரளவில் மட்டும் தான் சிவன். அவனிடம் எந்த மங்களமும் கிடையாது. அவனை மணக்காதே! அதற்காகத் தவமும் செய்யாதே!” என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், விடாமுயற்சியுடன் தவத்தில் ஈடுபட்டுப் பரமசிவனை மணந்தாள் பார்வதி. திருமணமானபின் மானசரோவர ஏரிக்கரையில் ஏகாந்தமாகப் பரமசிவனோடு அமர்ந்திருந்த பார்வதி அவரிடம், “நான் தவம்செய்த போது, நீங்களே முதியவர் வேடத்தில் என்னிடம் வந்து உங்களை நிந்தித்துக் கொண்டீர்கள். நான் அதைக் கண்டுகொள்ளவில்லை.

ஆனாலும் எனக்கும் அந்த ஐயம் உள்ளது. கையில் மண்டை ஓட்டுடன் சாம்பலைப் பூசி மயானத்தில் நடனமாடும் உங்களுக்கு எப்படி மங்களகரமானவன் - சிவன் என்ற பெயர் ஏற்பட்டது?” என வினவினாள். அதற்குப் பரமசிவன், “திருமாலின் 1000 பெயர்களில் இருபத்தேழாவது பெயர் “சிவ:”. திருமாலை எண்ணி “சிவாய நம:” என்று தினமும் நான் சொல்லிவருகிறேன். “சிவாய நம:” என்ற திருநாமம் எப்போதும் என் நாவில் இருப்பதால் அந்தப் பெயரை இட்டே ‘சிவன்’ என்று என்னை எல்லோரும் அழைக்கிறார்கள். நான் மயானத்தில் நடனமாடினாலும்,

மண்டை ஓட்டைக் கையில் ஏந்தினாலும், சாம்பலை உடலில் பூசினாலும், என் நா “சிவாய நம:” என்ற திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பதால், சிவன் என்ற திருநாமத்துக்குரியவரான திருமால் அந்த அமங்களங்கள் எதுவுமே என்னைத் தீண்டாதபடி செய்துவிடுகிறார். நான் எப்போதும் மங்கள ஸ்வரூபியாக இருக்கிறேன்!” என்று பதிலளித்தார். இவ்வாறு அமங்களங்களைப் போக்கி மங்களங்களை அருளும் திருமால் “சிவ:” என்று அழைக்கப்படுகிறார். “சிவாய நம:” என்று தினமும் சொல்லி வருவோர்க்கு வாழ்வில் அனைத்து மங்களங்களும் உண்டாகும்.

28. ஸ்தாணவே நம: (Sthaanave namaha)
திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார் திருநகரியிலிருந்து திருமலை யாத்திரை சென்ற திருமால் அடியார்கள், வழியில் மதுராந்தகத்தில் ஏரிகாத்த ராமரைத் தரிசித்துவிட்டு, மதுராந்தகம் ஏரிக்கரையில் தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களைக் கொண்டு தாங்களே உணவு தயாரித்து உண்டார்கள். நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழிப் பாசுரங்களைச் சொல்லியபடியே அந்த அடியார்கள் உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். உணவின் வாசனையால் ஈர்க்கப்பட்ட ஓர் உடும்பு அவர்களருகில் வந்தது.

அந்தக் கூட்டத்தில் உணவருந்தி முடித்த ஒரு சிறுவன் திருவாய்மொழியின் நிறைவு வரியிலுள்ள “பிறந்தார் உயர்ந்தே” என்ற தொடரைச் சொல்லியபடி வாயைக் கொப்புளித்தான். “பிறந்தார் உயர்ந்தே” என்று சொன்னபடி அவன் கொப்புளித்த அந்தத் தண்ணீர் அந்த உடும்பின் மேல் தெறித்தது. அந்தத் தண்ணீரை அருந்திய உடும்பு திகைத்துப்போய் நின்றது. திருமலைக்குச் சென்று ஏழுமலையானைத் தரிசித்துவிட்டு வரும் வழியில் மீண்டும் மதுராந்தகம் ஏரிக்கரையில் அந்தத் திருமால் அடியார்கள் உணவு சமைத்து உண்டார்கள். ஆனால், இம்முறை அவ்விடத்தில் அந்த உடும்பைக் காணவில்லை.

வருடங்கள் பல கடந்தன. காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவனின் மகளை ஒரு பேய் பிடித்துக் கொண்டது. அதை விரட்டவேண்டும் என்று காஞ்சியில் இருந்த யாதவப்பிரகாசர் என்ற பண்டிதரை அழைத்தான் மன்னன். அவரும் தன் சீடர்களுடன் அரண்மனைக்கு வந்தார். சிறிது நேரம் தியானம் செய்து விட்டு, மந்திரத்தால் தூய்மையாக்கப்பட்ட நீரை இளவரசிமேல் தெளித்தார். “ஏ பிசாசே! இந்தப் பெண்ணை விட்டு ஓடிவிடு!” என்றார். “ஏ உடும்பே! உன்னைக் கண்டு நான் அஞ்ச மாட்டேன்! உன் முன்பிறவி பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.

மதுராந்தகத்தில் உடும்பாக இருந்த நீ, திருவாய்மொழிப் பாசுரங்களைக் கேட்டதன் விளைவாகவும், திருமால் அடியவனான ஒரு சிறுவன் வாய் கொப்புளித்த தீர்த்தம் உன்மேல் பட்டதன் விளைவாகவும் தான் இன்று ஒரு பண்டிதனாக விளங்குகிறாய். உன் மந்திரம் என்னை எதுவும் செய்யாது! உன் சீடர்களுள் ராமாநுஜர் என்று ஒரு மகான் இருக்கிறாரே! அவரது இரு திருவடிகளையும் என் தலைமேல் வைக்கச்சொல்! நான் இளவரசியின் உடலை விட்டுச் செல்கிறேன். நான் சென்றதற்கு அடையாளமாக அரண்மனைக்கு அருகில் உள்ள புளியமரம் கீழே சாய்ந்துவிடும்!” என்றது அந்தப் பிசாசு.

யாதவப்பிரகாசரிடம் அப்போது சீடராக இருந்த ராமாநுஜர் தம் இரு திருவடிகளையும் அந்தப் பெண்ணின் தலையில் வைக்க, பிசாசும் அவளை விட்டு விலகியது, புளியமரமும் பெருத்த ஒலியுடன் கீழே சாய்ந்தது. ஏற்கெனவே ராமாநுஜர் தன்னை மிஞ்சிய சிஷ்யராக விளங்கியதைக் கண்டு பொறாமை கொண்ட  குரு யாதவப்பிரகாசர், இப்போது தன்னுடைய முன்பிறவியின் வரலாற்றையும், ராமாநுஜரின் மேன்மைகளையும் அறிந்ததால் மேலும் ராமாநுஜர் மேல் பொறாமை கொண்டார். ராமாநுஜரையே கொல்லத் துணிந்து அவரைக் காசியாத்திரைக்கு அழைத்துச் சென்றார்.

கங்கையில் தள்ளி ராமாநுஜரை மாய்க்க வேண்டும் என்பதே யாதவப்பிரகாசரது திட்டம் என்பதை விந்திய மலை அடிவாரத்தில் ராமாநுஜருக்கு அவரது தம்பி கோவிந்தபட்டர் தெரிவிக்கவே, ராமாநுஜர் யாத்திரையைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு காஞ்சிபுரத்துக்குத் திரும்பினார். பின்னாளில் தன் தவறுகளை உணர்ந்த யாதவப்பிரகாசர், திருவரங்கத்தில் எழுந்தருளியிருந்த ராமாநுஜருடைய திருவடிகளைப் பற்றி அவருக்குச் சீடரானார். தான் செய்த தவறுகளுக்குத் தன்னை மன்னித்தருளும்படி ராமாநுஜரை வேண்டினார். ராமாநுஜருடைய திருவடி சம்பந்தத்தால் முக்தியும் பெற்றார்.

இந்நிகழ்ச்சிகளை நோக்குகையில் இவை அனைத்தும் எம்பெருமான் செய்த லீலை என்பது நன்கு விளங்கும். ஏனெனில் தன் கருணையால் உடும்பாக இருந்த ஒருவரை யாதவப்பிரகாசர் என்னும் பண்டிதராக்கி, அதன்பின் அவரை ராமாநுஜருக்குச் சீடராகவும் ஆக்கி, இறுதியில் அவருக்கு எம்பெருமான் முக்தியும் அருளிவிட்டான். இவ்வாறு எல்லையில்லாத, அழிவில்லாத தன் அருட்பார்வையால் ஈ, எறும்பு முதலிய உயிரினங்களுக்குக் கூட கருணை புரிந்து அவற்றை ஜனன-மரண சுழற்சியிலிருந்து விடுவிப்பவனான எம்பெருமான் ‘ஸ்தாணு:’ என்றழைக்கப்படுகிறான். “ஸ்தாணவே நம:” என்று தினமும் சொல்லி வந்தால் நாமும் திருமாலின் எல்லையற்ற கருணையை அநுபவிக்கலாம்.

29. பூதாதயே நம: (Bhoothaadhaye namaha)
அது ஒரு வசந்த கால நண்பகல் வேளை. பசுக்களைப் புள்வெளியில் மேயவிட்ட கண்ணபிரான், தன் தோழர்களுடன் மதிய உணவு உண்பதற்காக யமுனா நதிக்கரையில் அமர்ந்தான். தன் தோழர்கள் ஒவ்வொருவரும் கொண்டு வந்த உணவிலிருந்து ஒரு பிடி எடுத்துத் தான் உண்டு விட்டுத் தான் உண்ட மிச்சத்தைப் பிரசாதமாக அவர்களுக்கு வழங்கினான். இதை வானிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள், இத்தகைய ஒரு பாக்கியம் தங்களுக்குக் கிடைக்கவில்லையே என்று ஏங்கினார்கள். அந்தச் சிறுவர்கள் உண்டபின் யமுனையில் கைகளை அலம்பும் போதாவது கண்ணனின் பிரசாதத்தில் ஒரு துளி கிடைக்குமே என்றெண்ணி, முப்பத்து முக்கோடி தேவர்களும் யமுனா நதியில் மீன்களாக வடிவெடுத்து வந்தார்கள்.

ஆனால், இதையறிந்த கண்ணன் தன் தோழர்களிடம், “இது பகவத் பிரசாதம். அதனால் கைகளை அலம்பக் கூடாது. உங்கள் வேஷ்டிகளிலேயே கைகளைத் துடைத்துக் கொள்ளுங்கள்!” என்றான். மீன்களாக வடிவெடுத்துக் காத்திருந்த தேவர்கள் அனைவரும் ஏமாந்து போனார்கள். பிரம்மாவிடம் சென்று, “அந்தக் கண்ணன் எங்களை எல்லாம் ஏமாற்றி விட்டான். தேவர்களை இப்படியா அவமதிப்பது? அவனுக்கு நீங்கள் சரியான பாடம் புகட்டவேண்டும்!” என்று முறையிட்டார்கள்.“இந்தச் சிறுவர்களையும், பசுக்களையும் தனக்கு மிகவும் நெருக்கமானவை என்று கருதுகிறானல்லவா கண்ணன்?

அவனிடமிருந்து இவற்றைப் பறித்து விட்டால் என்ன செய்கிறான் என்று பார்ப்போம்!” என்று சொல்லியபடி, கண்ணனின் தோழர்களையும் ஆநிரைகளையும் ஒரு குகைக்குள் கொண்டுபோய் மறைத்துவிட்டார் பிரம்மா. கண்ணனுக்குச் சரியான பாடம் புகட்டிவிட்டோம் என்று எண்ணியபடித் தன் சத்தியலோகத்துக்குள் பிரம்மா நுழைந்தபோது, அங்கிருந்த காவலாளி, “ஏ போலி பிரம்மனே! நில்! இப்போது தான் பிரம்மதேவர் உள்ளே சென்றார். பின்னால் ஒரு போலி பிரம்மா வருகிறான். அவனைக் கீழே தள்ளி விடுங்கள் என்று கூறியுள்ளார்!” என்று சொல்லி பிரம்மாவைக் கீழே தள்ளினான்.

ஆயர்பாடியில் வந்து விழுந்தார் பிரம்மா. அவர் சத்தியலோகம் சென்று மீண்டும் பூமிக்குத் திரும்புவதற்குள் பூலோகத்தில் ஒரு வருட காலம் ஆகிவிட்டது. ஆயர்பாடியில் கண்ணனுடன் அவனது தோழர்களும், பசுக்களும் இருப்பதைக் கண்டு வியந்தார் பிரம்மா. ஒரு வருடம்முன் அந்த ஆயர்களையும் ஆநிரைகளையும் தான் மறைத்து வைத்த குகைக்குச் சென்று பார்த்தால் அங்கேயும் அவர்கள் இருந்தார்கள். மீண்டும் புல்வெளிக்கு வந்து பார்த்தால் அங்கும் கண்ணனும் சிறுவர்களும் பசுக்களும் இருந்தார்கள்.

அப்போது பலராமன் கண்ணனிடம், “கண்ணா ஒரு வருடத்துக்கு முன் நம் நண்பன் சுனந்தனைக் கொடுமைப் படுத்திய அவனது சித்தி, இப்போது அவனிடம் மிகவும் பாசத்துடன் இருக்கிறாள். கவனித்தாயா? நம் கபீசனை எப்போதும் அடித்துக் கொண்டே இருக்கும் அவனது தந்தை அவனைக் கொஞ்சுகிறார், பார்த்தாயா? நம் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் நீ மதிய உணவு கொண்டு செல்லும் பாத்திரத்தை ஆசையுடன் தடவித் தடவிச் சுத்தம் செய்கிறாள், அதையாவது கவனித்தாயா?” என்று கேட்டார். “அண்ணா! நம் வீட்டில் மட்டுமல்ல. அனைத்து வீட்டுப் பணிப்பெண்களும் மதிய உணவுப் பாத்திரத்தை மட்டும் ஆசையுடன் வருடிக்கொண்டிருக்கிறார்கள்!” என்றான் கண்ணன்.

இதைக் கவனித்த பிரம்மா, கண்ணனே அத்தனைப் பசுக்களாகவும், சிறுவர்களாகவும், அவர்களின் மதிய உணவுப் பாத்திரங்களாகவும், பிரம்மதேவராகவும் வடிவம் எடுத்துக் கொண்டுவிட்டான் என்பதை உணர்ந்து கொண்டார். கண்ணனிடம் வந்து ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார் பிரம்மா. தான் செய்த தவறை மன்னித்தருளும்படிப் பிரார்த்தித்தார். அடைத்து வைத்திருந்த ஆயர்களையும் ஆநிரைகளையும் கண்ணனிடம் ஒப்படைத்தார். இதைக் கண்ட பலராமன், உலகையே ஈர்க்கவல்லவனான கண்ணனே சிறுவர்கள் வடிவில் வந்ததால்தான் அவர்களின் பெற்றோர்கள் அவர்களை ஆசையுடன் கொஞ்சினார்கள் என்றும்,

அதோடு மட்டுமின்றி அச்சிறுவர்கள் கைகளில் உள்ள பாத்திரங்களாகவும் கண்ணனே வந்தமையால் தான் பணிப்பெண்கள் பாத்திரங்களை ஆசையுடன் தடவினார்கள் என்றும் புரிந்து கொண்டார். கண்ணனே அவ்வடிவில் வந்துள்ளான் என்பது அவர்களுக்குப் புரியாவிட்டாலும், தங்களை அறியாமல் அவர்களுக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. இவ்வாறு உலகிலுள்ள அனைவரையும் ஈர்ப்பவனாக எம்பெருமான் விளங்குவதால் அவன் ‘பூதாதி:’ என்றழைக்கப்படுகிறான். அனைவரையும் ஈர்க்கும் திறமையைப் பெறுவதற்கு “பூதாதயே நம:” என்ற விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 29-வது திருநாமத்தைத் தினமும் சொல்லி வருவோம்.

30. அவ்யயநிதயே நம: (Avyayanidhaye namaha)

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை மீட்டுத்தந்த நாதமுனிகளின் சீடர் உய்யக்கொண்டார். உய்யக்கொண்டார் வைகுந்தம் செல்லுமுன் தம் சீடரான மணக்கால் நம்பியிடம், “நாதமுனிகளின் திருப்பேரனாரான யாமுனாச்சாரியாரைச் சந்தித்து அவரை அடுத்த ஆச்சாரியராக நியமித்துத் திருவரங்கநாதனுக்குத் தொண்டு செய்ய அவரைத் திருத்திப் பணிகொள்ள வேண்டும்!” என்று கூறியிருந்தார். யாமுனாச்சாரியார் தம்முடைய வாதத் திறமையினால் அரசியிடமிருந்து பாதி ராஜ்ஜியத்தையே பரிசாகப் பெற்று அரசரானார். அவரது ஞானத்தைக் கண்டு வியந்த அரசி “எம்மை ஆள வந்தீரோ!” என்று அழைத்தமையால் ஆளவந்தார் என்று பெயர் பெற்றார்.

தன் ஆச்சாரியரின் கட்டளையை நிறைவேற்ற எண்ணிய மணக்கால் நம்பி, ஆளவந்தாரைக் காண வந்தார். ஆனால், அவரால் அரண்மனைக் காவலைத் தாண்டி உள்ளே செல்ல முடியவில்லை. அரண்மனைச் சமையலறையில் பணிபுரிபவர்களின் வாயிலாக, ஆளவந்தார் தூதுவளைக் கீரையை விரும்பி உண்பார் என்ற விஷயத்தை விசாரித்துத் தெரிந்துக்கொண்டார். தினமும் தூதுவளைக் கீரையைக் கொண்டு வந்து அரண்மனைச் சமையலறையில் கொடுக்க ஆரம்பித்தார். தூதுவளைக் கீரை கொண்டு வந்து தருபவர் யார் என்று ஆளவந்தார் கேட்பார் என எதிர்பார்த்தார்.

ஆனால், ஆறுமாதம் கடந்த பிறகும் ஆளவந்தார் இவரைப் பற்றி விசாரிக்காமல் போகவே திடீர் என்று நான்கு நாட்கள் கீரை கொடுப்பதை மணக்கால் நம்பி நிறுத்தி விட்டார். ஆளவந்தார், “நான்கு நாட்களாக ஏன் தூதுவளைக் கீரை இல்லை?” என்று தன் சமையல் பணியாட்களை விசாரிக்க, “ஒரு வயதான அந்தணர் ஆறு மாதங்களாகக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார், நான்கு நாட்களாக அவர் வரவில்லை!” என்று கூறினார்கள். “அப்படியா! எனக்காக ஒருவர் ஆறு மாதம் எனக்கு மிகவும் பிடித்தமான தூதுவளைக் கீரையைக் கொண்டுவந்து தந்தாரா? அவரை நான் காணவேண்டும்.

அவர் மறுபடி வந்தால் எனக்குத் தெரிவியுங்கள்!” என்று ஆளவந்தார் பணித்தார். மறுநாள் மணக்கால் நம்பி கீரையைக் கொண்டு போய்க் கொடுக்க, சமையற்காரர் ஆளவந்தாரிடம் அவரை அழைத்துக்கொண்டு சென்றார். ஆளவந்தார், மணக்கால் நம்பியைப் பார்த்து, “உங்களுக்கு என்ன நிதி வேண்டும்?” என்று கேட்க, மணக்கால் நம்பி, “எனக்கு ஒரு நிதியும் வேண்டாம்! உங்கள் பாட்டனார் தேடிவைத்த குறையாத நிதி ஒன்று என்னிடம் இருக்கிறது! அதை உம்மிடம் அளிப்பதற்கு நான் இங்கே அடிக்கடி வரவேண்டும். நான் அரண்மனைக்குள் சுதந்திரமாக வந்து செல்ல அனுமதி மட்டும் தாருங்கள்!” என்று வேண்டிக்கொண்டார்.

ஆளவந்தாரும் அதை ஏற்கவே, தினமும் மணக்கால் நம்பி அரண்மனைக்கு வந்து கீதையின் உட்பொருளை அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தார். படிப்படியாக ஆளவந்தாரின் உள்ளம் தினமும் மணக்கால் நம்பியின் வரவை நாடத் தொடங்கியது. கீதையின் உட்பொருளில் திளைத்த ஆளவந்தார் “அவனை அடைவதற்கு என்ன வழி?” என்று கேட்க, மணக்கால் நம்பி “ஸர்வ தர்மான் பரித்யஜ்ய...” எனத்தொடங்கும் கீதையின் சரம ஸ்லோகத்தை உபதேசித்து, “அவனை அடைவதற்கு அவனே வழி!” என்று உபதேசித்தார். இந்தக் கீதைதான் என் பாட்டனார் தேடிவைத்த நிதியா?” என்று கேட்டார் ஆளவந்தார்.

“இல்லை!”என்று சொன்ன மணக்கால் நம்பி, ஆளவந்தாரைத் திருவரங்கத்துக்கு அழைத்துச் சென்று திருவரங்கநாதனைக் காட்டி, “உங்களுடைய பாட்டனார் நாதமுனிகள் தேடிவைத்த நிதி இதுவே. இவன்தான் அழியாத செல்வம், குறையாத செல்வம், நீங்காத செல்வம். அதனால் தான் ‘அவ்யய நிதி’ என்றழைக்கப்படுகிறான்!” என்றார். அரங்கனைக் கண்ட ஆளவந்தார் ராஜ்ஜியத்தையும் செல்வத்தையும் துறந்து துறவு மேற்கொண்டு திருவரங்கத்தையே உறைவிடமாகக் கொண்டு ஆசார்ய பொறுப்பும் ஏற்று, திருவரங்கநாதனையே தனக்கு நிதியாகக் கருதி அவனுக்கு அனைத்துத் தொண்டுகளும் செய்து வந்தார்.

இன்றும் திருவரங்கத்தில் ஆளவந்தாரின் திருநட்சத்திரமான ஆடி உத்திராடத்தன்று ஆளவந்தாருக்கு தூதுவளைக் கீரை சமர்ப்பிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இவ்வாறு அடியார்களுக்குக் குறையாத செல்வமாக எம்பெருமான் விளங்குவதால், “அவ்யய நிதி:” என்றழைக்கப்படுகிறான். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 30-வது திருநாமம். “அவ்யயநிதயே நம:” என்று தினமும் சொல்லி வருபவர்களுக்கு நீங்காத செல்வம் நிறையும்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

- டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்