வணங்குதலே ஒரு வேலைதான்!



சக்தி தத்துவம் - 15

இறைவியைப் பற்றி ஏன் அறிய வேண்டும், எப்படியறிய வேண்டும் என்பதை அடுத்தப் பாடல் விவரிக்கிறது. அறிய வேண்டிய முறையையும், அறிவதற்குண்டான சாதனத்தையும், அந்த சாதனங்களைப் பயன்படுத்தி நாம் செயல்பட வேண்டிய முறைகளையும், அப்படி முறையாகச் செயல்படும்போது நமக்குக் கிடைக்கும் அனுபவத்தையும் குறிப்பிடுகிறது.  நின்றும் இருந்தும், கிடந்தும், நடந்தும் உமையம்மையை அறிய வேண்டும் என்று நான்கு வரிகளில் கூறுகிறது. ‘நினைப்பது உன்னை’ என்கின்ற சொற்றொடரால், அறிய உதவுவது மந்திரம் என்று பரிந்துரை செய்கிறது. ‘என்றும் வணங்குவது’ என்பதால் இடையீடு அற்ற நம்பிக்கையுடன் கூடிய குறிப்பிட்ட மனநிலையிலான தொடர்ந்த முயற்சியைக் குறிக்கிறது.

‘உன் மலர்த்தாள்’ என்பதனால் வணங்குவதற்குப் பயன்படும் இறைத்திரு உருவத்தையும் குறிப்பிடுகிறது. வணங்குவதற்கு அடிப்படையாக அறிய உதவும் ஆன்மாவைப் பற்றிய தெளிவான கருத்தையும், அந்த ஆன்மாக்களோடு இறைவனுக்கு உண்டான உறவையும் அறிந்து அனுபவிப்பதனால் மனிதர்கள் துன்பம் நீங்கி நிரந்தர இன்பத்தை பெறுவார்கள். இப்பாடலின் வழியே சாதனத்தையும், சத்தியத்தையும் அடைய வேண்டிய இலக்கையும் சாக்த சித்தாந்தத்தின் அடிப்படையையும் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். இனி பாடலுக்குள் செல்வோம்.

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
    என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே உமையே இமயத்து
    அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!
- பாடல் எண் - 10

* ‘நின்றும்’

யோக முறையில் மூச்சுக் காற்றை உள் இருத்தி, ஒற்றை காலில் நேராக நிமிர்ந்து நிற்பது என்பது ‘ஏக பாதாசனம்’ என்று பொருள். இந்த முறையில் சிவனை குறித்து தவம் செய்பவர்கள் விரைவில் அவன் அருளைப் பெறுவார்கள் என்கிறது ‘ஹட யோகம்.’இந்நெறியைப் பின்பற்றி ஒரு முனிவர் தனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும் என்று காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார். அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருக்கும் பசு மாடுகள் அசையாது தவம் செய்யும் இவரை மரம் என்று கருதி தனக்கு அரிப்பு (தினவு) எடுத்தபோதெல்லாம் அவர் மீது உராய்ந்து தனது தினவை தீர்த்துக் கொண்டன.

அந்த அளவிற்கு மன உறுதியுடன் ஒரு பசுமாடு தன்னைத் தேய்த்ததுகூட தெரியாமல் தன்னை மறந்து உடல் உணர்வு அற்று, உயிர் உணர்வு பெற்று கல் போன்று தவம் செய்யும் அவரை மக்கள் ‘மிருகண்டு முனி’ என்று அழைத்தார்கள். இவருடைய மகன் மார்க்கண்டேயராவார். மிரு என்றால் மிருகம் என்று பொருள். கண்டு என்றால் தினவு, மிருகங்களின் தினவு தீர்க்கும் கல் என பொருள்.

* ‘இருந்தும்’

ஓரிடத்தில் அமர்ந்தபடியே அசையாது ஒன்பது வாயில்களையும் அடக்கி, ஒரு மந்திரத்தை சொல்வதால், அதன்வழி மன அடக்கமுடையவராய் மனதின் உள்ளேயே இறைவனை எழுந்தருளச் செய்து வழிபாடு செய்வதையே இருந்தும் என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார். இதை ஆகமங்கள் ‘சிவ மானச பூஜா’ என்கின்றன. விநாயகர் அகவல், ‘ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்’, ‘ஐம்புலக் கடவுள் அடைப்பதுவும் காட்டி,’ ‘சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி’ என்ற வரிகளால் குறிப்பிடுகிறது. ஒன்றில் ஒன்றுவதால் பிறவற்றை மறந்து உள்நோக்கி செலுத்துவதாகிய மனப்பயிற்சியை செய்து இறையருளைப் பெறலாம் என்கின்றார் பட்டர்.

இதையே எதிர்மறையாய் ‘நெஞ்சம் பயில நினைகின்றிலேன்’ (பாடல் - 59) என்கிறர். இதே வழிபாட்டையே திருநின்றவூர் தல வரலாறு நமக்கு மேலும் வலியுறுத்துகிறது. நாயன்மார்களில் ஒருவரான பூசலார் திருநின்றவூரில் பிறந்தவர். இவர் தினமும் அவ்வூரிலுள்ள சிவலிங்கம் ஒன்றை தரிசித்து வந்தார். மேற்கூறை இல்லாத அந்த லிங்கம் வெயிலிலும், மழையிலும் நனைந்தது. இதை பார்த்து பூசலாருக்கு சிவனுக்கு கோயில் கட்ட ஆசை வந்தது. இவரோ பரம ஏழை. எனவே சிவனை தன் மனதில் இறுத்தி தன்னிடம் ஏராளமான பணம் இருப்பது போல கற்பனை செய்து கொண்டார்.

மனதுக்குள்ளேயே கோயில் கட்ட ஆரம்பித்தார். அந்தக் கோயிலில் இல்லாத பொருளே இல்லை. செய்யாத வசதியே இல்லை. மனம் காற்றை விட வேகமானது. மனம் நினைத்தால் ஒரே நாளில் கோயிலை கட்டி விடலாம். ஆனால், நாயனார் அவசரப்படவில்லை. உண்மையிலேயே ஒரு கோயிலைக் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆகுமோ, அத்தனை ஆண்டுகள் காத்திருந்து இந்த கோயிலைக் ‘கட்டினார்’.காஞ்சிபுரத்தில் ஒரு மன்னன் சிவனுக்கு ஒரு கோயிலைக் கட்டிக் கொண்டிருந்தான். மன்னன் கோயிலைக் கட்டி முடித்த நேரமும்,

பூசலார் தன் மனக்கோயிலை கட்டி முடித்த நேரமும் ஒன்றாக அமைந்தது. இருவரும் ஒரேநாளை கும்பாபிஷேகத்திற்காக நாளாகக் குறித்தனர். காஞ்சி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான், ‘‘நீ எனக்கு கோயில் கட்டியிருப்பது குறித்து மகிழ்ச்சிதான். ஆனால், இதேநாளில் திருநின்றவூரில் பூசலார் என்ற அடியார் கும்பாபிஷேகம் செய்ய நாள் குறித்து விட்டார். நான் அந்த கோயிலுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே நீ வேறொரு தேதியில் கும்பாபிஷேகத்தை வைத்துக் கொள்’’ என்று கூறி மறைந்தார்.

திடுக்கிட்டு விழித்தான் பல்லவ மன்னன். கும்பாபிஷேகத்தை நிறுத்தி விட்டு இறைவன் குறிப்பிட்ட திருநின்றவூருக்கு புறப்பட்டான். அங்கு சென்றதும் பூசலார் என்பவர் இவ்வூரில் கட்டியிருக்கும் கோயில் எங்கே என விசாரித்தான். யாருக்கும் அந்த கோயில் பற்றி தெரியவில்லை. பின் பூசலாரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அவரை வணங்கி, ‘‘நீங்கள் கட்டியுள்ள கோயில் எங்கே உள்ளது? நேற்றிரவு சிவன் எனது கனவில் இங்கு ஒரு கோயில் கட்டியுள்ளதாக கூறினார். கட்டியுள்ள கோயிலை தரிசிப்பதற்காக வந்துள்ளேன்.’’ என்றான்.

அதைக் கேட்டு பூசலாருக்கு மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டது. ‘‘அரசே சிவபெருமான் உங்கள் கனவில் கூறியதை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். கோயில் கட்டுமளவிற்கு என்னிடம் வசதியில்லை. எனவே எனது உள்ளத்திற்குள் ஒரு சிவாலயம் கட்டி இன்று கும்பாபிஷேகம் நடத்துவதாக கற்பனை செய்து கொண்டேன்,’’ என்றார். இதை கேட்டதும் மன்னன் அதிர்ச்சியடைந்தான். அன்பினால் மனதில் கட்டும் கோயிலானது பல லட்சம் செலவு செய்து கட்டும் கோயிலைவிடச் சிறப்பானது. இந்த முறையையே ‘இருந்தும் நினைப்பது உன்னை’ (பாடல் - 10) என்று குறிப்பிடுகிறார் பட்டர்.

* ‘கிடந்தும்’

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனை எப்பொழுதும் தாங்கிக் கொண்டிருப்பது ஆதிசேஷன். அந்த பணியை செம்மையாகவும், சிரமம் ஏதுமின்றியும் செய்து வந்தார். ஒருநாள் துயின்று கொண்டிருந்த பரந்தாமன் தூக்கத்திலேயே புன்னகைத்தார். அவர் உடலெல்லாம் மயிர் கூச்செரிந்து புளங்காகிதம் அடைந்ததை நோக்கி வியந்தான் ஆதிசேஷன். மகாவிஷ்ணுவை தினமும் சுமந்த ஆதிசேஷனுக்கு, அவர் சிரித்த அந்த வினாடிகளில் மட்டும் பஞ்சு போன்று இலகுவாக இருந்த அவர், கனம் மிக்கவராகத் தோன்றினார். அவரைச் சுமக்க முடியாமல் திணறவும் செய்தார்.

பிறகு பரந்தாமன் விழித்துக் கொண்டவுடன் அதன் காரணம் கேட்டார். விஷ்ணு, ‘மகப்பேறு வேண்டி மனதிற்குள்ளேயே சயனாசனத்தில் (படுத்தபடியே வணங்குதல்) வணங்கிய விஷ்ணுவிற்கு, சிவபெருமான் மனதிற்குள் காட்சியளித்தார். அந்தப் பொழுதுதான் நான் மிகவும் மகிழ்ந்தேன்,’ என்று அவர் ஆதிசேஷனுக்கு விளக்கி கூறினார். மிகுந்த அவாவுடன் தாங்களே மகிழ்ந்த அந்த அற்புத காட்சியை அடியேனும் உணர அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ஆதிசேஷன். அதற்கு அவர் சிதம்பரத்தில் சென்று தவம் செய்வாயாக என்று அருளினார். அப்படி அவர் அகத்தில் கண்ட காட்சியைத்தான் சிதம்பரத்தில் சிவபெருமான், ஆதிசேஷனாகிய பதஞ்சலி முனிவருக்கு தந்தருளினார்.

சில சித்தர்கள் மூலிகைகளை அருந்தி பலநாள் பசியற்று, கிடந்தபடியே உடல் அசைவற்று சவம் போல் கிடந்து இறைவனைத் தியானிப்பர். இதையே சவாசனம் என்கிறது யோக முறை. இந்த முறையிலும் உமையம்மையை வழிபாடு செய்யலாம். உமையம்மையை வணங்குவதற்குள்ள ஒன்பது சித்தாந்தத்தில் ‘ஔசத வாதம்’ என்ற சக்தி வழிபாட்டு முறையானது இங்கே விளக்கப்படுகிறது. இல்லற வாழ்வை விட்டு மந்திரங்களை ஜெபித்து மனிதர் நடமாட்டமில்லாத காடுகளில் மூலிகைகளை தின்று பேய்போல் திரிந்து பிணம்போல் பலநாள் கிடந்து உமையம்மையை தியானிப்பதை வழக்கமாக கொண்டவர்கள் சித்தர்கள்.

‘பேய் போல் திரிந்து பிணம் போல் கிடந்து... உண்மை ஞானம் தெளிந்தவரே’ - பட்டினத்தார். இவர்கள் மனதினாலே இறைவியை எண்ணி சவம் போல் கிடப்பர். உடலை எந்தவித அசைவிற்கும் உட்படுத்தாமல் மூச்சுக் காற்றை சுழு முனையில் நிறுத்தி இறைவியை ‘வாலை’ என்ற பெயருடையவளாய் (சிறு குழந்தையின் வடிவம்) குண்டலினி என்று அழைக்கப்படும் மூலாதாரத்திலிருந்து துவாத சாந்தம் குறித்து பயணிப்பவளாய் பாவிப்பார்கள். வெகுநாளைய பிரம்மச்சரிய விரதத்தால் அசைவற்றுக் கிடந்ததால் அமானுஷ்யமான பேராற்றலை அடைவதற்கு, கிடந்து தவம் செய்வதையே ‘கிடந்தும்’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார்.

* ‘நடந்தும்’

இந்த வார்த்தையால் பரிவ்ராஜக என்ற சந்நியாசிகள் வழிபடுகின்ற முறையை குறிப்பிடுகிறார். ‘பரிவ்ராஜக’ என்றால் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும் துறவி என்பது பொருள். இவர்கள் ஒரு இரவிற்கு மேல் ஒரு கிராமத்திலும், ஐந்து இரவிற்கு மேல் ஒரு நகரத்திலும் தங்க மாட்டார்கள். தொடர்ந்து பயணித்துக் கொண்டேயிருப்பார்கள். இவர்கள் சக்தி வழிபாடு செய்வதையே ‘நடந்தும்’ என்று குறிப்பிடுகின்றார். கர்மாவினாலேயே ஞானம் என்பதை (செயலே இறைவனை அடைகின்ற வழி) அடிப்படை கொள்கையாகக் கொண்டு தாருகாவனத்தில் வாழும் ஒருவகை வேதப் பிரிவினருக்கு, ஈசன் துறவுருவில் நடந்து அருள் புரிந்த திருக்கோலமே பிக்ஷாடனர்.

உலகியலில் ஈடுபட்டுள்ள மக்களுள் சிலர் நடந்து கொண்டு மூலமந்திரம் ஜபம் செய்வது சிறப்பாகும் என்கிறது ஆகமம். அப்படி நடப்பதென்பது ஆலயத்தில் உள்ள பிராகாரத்திலும், ரத வீதியிலும் சென்று கொண்டு ஜெபிப்பது என்பது ஒன்றுக்கு பத்து பலனை தரும் என்கிறது ஜபவிதானம். திருவிழாக் காலங்களில் இறை திரு உருவத்தை முன்னும், பின்னும், வேத பாராயணம், திருமுறை பாராயணம் முதலியவைகளை தொடர்ந்து சொல்லியவாரே வலம் வருவதையே ‘நடந்தும் நிலைப்பது உன்னை’ என்கிறார் அபிராமி பட்டர். பாதயாத்திரையாக ஆலயத்திற்கு நடந்த சென்று வழிபடுவதையும் இதே சொற்றடரால் குறிப்பிடுகின்றார்.

* ‘நினைப்பது உன்னை’

‘நினைப்பது’ என்கின்ற சொல்லால் மந்திரத்தையே குறிப்பிடுகின்றார். மந்திரத்தின் கீழ்காணும் வரையறைகள், அதை மேலும் உறுதி செய்கின்றன.
1. நினைத்தல் காத்தல் என்பது மந்திரம் - நினைத்தல் என்பது மனதின் தொழில். அப்படி நினைத்தலை தொழிலாகக் கொண்ட மனதை காப்பது மந்திரம். ‘மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்’ என்கிறது சித்தர் கோவை.

2. நினைத்தல் என்பது மந்திரம் - மனது பல நினைவுகளிலிருந்து நீங்கி ஒரே நினைவை தக்க வைத்து கொள்ளுகின்ற முயற்சிக்கு உதவும் சாதனம் மந்திரம்.

3. நினைத்ததை காத்தல் என்பது மந்திரம் - நினைக்கின்ற இறை எண்ணத்தை சிதைவுபடாமல் காத்தல் மந்திரமாகும். ‘குறிக்கோளிலாது...’ என்கிறது திருமுறை. ஒன்றை நாம் அடைய விரும்பினால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளாமல் அதையே தொடர்ந்து நினைத்துக் கொண்டே வருதல் ஆகிய செயலை குறிக்கிறது இது. ‘பாட வேண்டும் உன்னையே நான் போற்றி நின்னையே பாடி நைந்துருகி’ என்கிறது தேவாரம்.

4. நினைப்பதனால் காக்கப்படுவது மந்திரம் - நினைப்பதனாலே காப்பாற்றுகிற தன்மையைக் கொண்டது மந்திரம். மறந்தால் காப்பாற்றும் தன்மை அதற்கு இல்லை. உதாரணத்திற்கு மந்திரத்தை சொன்னால் அது பலன் தரும். இந்த மந்திரத்திற்கு இந்த பலன் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால், அதை சொல்லாதவன் அதை அடைய முடியாது என உறுதியாகிறது.

5. நினைப்பதற்காகவே காக்கப்படுவது மந்திரம் - ஒரு மந்திரம் அல்லது தியானத்தை முறைப்படி அனுசரிக்க வேண்டும் என்று கூறியிருப்பதால், இவை நினைப்பதற்காகவே உருவாக்கப்பட்ட சாதனங்களாம். ஆகமம், வேதம் மற்றும் புராணம் இவற்றில் உள்ளது. இதையே சிற்ப சாஸ்திரமானது இவ்வாறு கூறுகிறது:

‘தேவாதீனம் நரானாம் ச்யேஷீ ரம்யதா சிரம்
மநாஸி ச்ப்ரஸீதத்தி ப்ராஸாதேஸ் தேஹ கீர்த்தித:’

6. நினைப்பதிலிருந்து காக்கப்படுவது மந்திரம் - ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு தியானம் உள்ளது. அந்த தியானத்தை செய்தால்தான் அதில் குறிப்பிட்ட பலன் கிடைக்கும். ஒரு நினைவிலிருந்து அது நம்மை காக்கிறது. உதாரணத்திற்கு ஒருவன் செய்த தீமையை நினைப்பதால் அவரிடம் வெறுப்பும், ஒருவன் செய்த நன்மையை நினைப்பதால் அவரிடம் நட்பும் கொள்வதுபோல் நினைப்பதிலிருந்து காக்கப்படுவது மந்திரம்.

7. நினைத்ததன் கண் காக்கப்படுவது மந்திரம் - ஒன்றைத் தொடர்ந்து நினைப்பதனாலேயே அது காக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, தற்போது நாம் காணும் தீ மிதிப்பு போன்றவற்றில் இறைத்தன்மையால் அது சுடாது என்ற நினைப்பில் இருப்பதனாலேயே அது சுடாமல் இருப்பதற்கு காரணம், நினைவு (மந்திரம்).

8. நினைத்தலையுடைய மனதை காப்பது மந்திரம் - நினைத்தல் தொழிலையுடைய மனதை கவலை, துக்கம், அந்தர் சத்துருக்களாகிய காம, க்ரோத, லோப, மோக மத மாத்ஸர்யம் ஆகியவற்றினால் ஏற்படக்கூடிய பிடியிலிருந்து காப்பது மந்திரம்.

‘நினைப்பது உன்னை’ என்ற சொற்றொடர் உமையம்மை மந்திரத்தையேதான் ஜெபிப்பதாக குறிப்பிடுகின்றார். ‘சிந்தையுள்ளே மன்னியது உன் திரு மந்திரம்’ (பாடல் - 6) ‘என்றும் வணங்குவது’ கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களிலுமே,
1. உஷத்காலம்,
2. பிராதசந்யா,
3. இரண்டாம் காலம்
4. உச்சிக்காலம்,
5. சாயம் சந்தியா,
6. சாயரட்ஷை,
7. அர்த்தஜாமம்,
8. பள்ளியறை

ஆகிய எட்டு இறைவழிபாட்டு நேரங்களிலும் பரிசாரகராக பணிபுரியும் பட்டரானவர் தொடர்ந்து இறை நினைவிலேயே இருந்ததனால் ‘என்றும்’ என்கிறார். ‘வணங்குவது’ என்பதால் காலையில் உழவர்கள், வணிகர்கள், அரசர்கள், அவரவர் வேலையாகப் பயிரிடுதல், வியாபாரம் செய்தல், நிர்வாகம் செய்தல் என்ற வெவ்வேறு செயலைச் செய்கிறார்கள். முடிவிலும், துவக்கத்திலும் மட்டுமே ஆலயத்தில் வந்து வணங்குகிறார்கள். ஆனால், அபிராமி பட்டரோ வணங்குதலையே வேலையாகவே செய்கின்றார். ஆகையால் ‘என்றும் வணங்குவது’ என்றார். ஆதிசைவர்களுடன் எப்பொழுதும் இணைந்தே பணியாற்றுபவர்கள் பரிசாரகர்கள். ஆதிசைவர்களே முப்போதும் வணங்குபவர்கள். இதையே சேக்கிழார் கீழ்க்காணுமாறு குறிப்பிடுகிறார்:

தெரிந்துணரின் முப்போதும்
   செல்காலம், நிகழ்காலம்
வருங்கால மான வற்றின்
   வழிவழியே திருத்தொண்டின்
விரும்பி அர்ச் சனைகள் சிவ
   வேதியர்க்கே யுரியன அப்
பெருந்தகையார் குலப்பெருமை
   யாம் புகழும் பெற்றியதோ

‘உன் மலர்த்தாள்’ - பட்டர் உமையம்மையின் திருவடியை வணங்கினார். கூடுதலாக ஸ்ரீசக்கரத்தையோ அல்லது மேருவையோ, சக்கரம் அமைக்கப்பெற்ற அணியையோ அவர் வழிபாடு செய்திருக்கிறார். இந்த இடத்தில் ‘உன்மலர்த்தாள்’ என்பது உமையம்மையின் திருவடியையே குறிக்கும். வழிபாட்டு முறையில் புறத்தில் வைத்து வழிபடக்கூடிய இறைதிரு உருவங்களாக கருதப்படும் யந்திரவடிவை அவர் இங்கு குறிப்பிடுகிறார். இதை ஆன்மிக வழக்கில் ஆத்மார்த்த மூர்த்தி அல்லது உபாசனா மூர்த்தி என்று குறிப்பிடுவர்.

‘வணங்குவது உன் மலர்த்தாள்’ என்பதால் ஒவ்வொரு மூர்த்திக்கும் ஒவ்வொரு வழிபாட்டு முறை, காலம், செயல் இவை வெவ்வேறாய் அமையும் என்பது தெரியவருகிறது. இந்த பூஜைமுறையைக் கொண்டு வழிபடும் தெய்வத்தையும், வழிபடும் முறையையும், அபிராமி அந்தாதியை படிப்பவர் நலனுக்காக ரகசியமாக சாஸ்திர விருக்தம் இல்லாமல் (நெறி பிறழாமல்) சொல்லியிருக்கிறார். ஸ்ரீவித்யா உபாசகர்கள் வணங்கும் முறையான நவாவர்ண பூஜையை, தான் செய்வதாக மறைமுகமாக குறிப்பிடுகின்றார். ‘ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே’ (பாடல்-19) என்ற வரிகள் மேலும் இதை உறுதி செய்கின்றன.

‘எழுதாமறையின் ஒன்றும் அரும் பொருளே’ -‘எழுதாமறையின்’ என்ற சொல்லை புரிந்துகொள்ளும் முன் ஒரு நியாயத்தை நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். நியாயம் என்றால் சொல்லை விளக்கும்போது பொருளை புரிந்துகொள்ள உதவும் துணை விளக்க வரி எனலாம். அவ்வாறு விளக்கப்படும் வரி ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயருண்டு. அந்த வகையில் ‘அருத்தா பத்ததி’ நியாயம் கீழே உதாரணத்துடன் விளக்கப்படுகிறது.

‘பகல் உண்ணான் பருத்திருப்பான்’ என்றால் உணவு உண்ணாமல் பருக்க முடியாது. ஆதலால் இரவு உண்ணுபவன் என்பதையே (இரவு உணவு உண்பவன் என்பதை நேரிடையான சொற்களைக் கொண்டு அறிந்துகொள்ள முடியாதபோது) மேற்கண்ட வாக்கியம் பரிந்துரைக்கிறது. ‘எழுதாமறை’ என்பது எழுதி கற்கப்படாதது (வேதம்). குருவின் வழியாக சொல்லுதல், கேட்டல் வழியாகவே துவங்கிய காலத்திலிருந்து இன்றுவரை பயிலப்பட்டதனால் ‘ஸ்ருதி’ எனப்பட்டது.

‘ஒன்றும் அரும்பொருளே’ - வேதம் உபதேசிக்கும் பொருளாக உமையம்மையே இருக்கிறாள் என்பதையே ‘ஒன்றும் அரும்பொருளே’’ என்று குறிப்பிட்டார். பொருளே என்று குறிப்பிடாமல் அரும்பொருளே என்று முன்னடை சேர்த்து குறிப்பிட்டதன் காரணம் வேதத்திற்கு பொருள் சொல்ல வந்த சிக்ஷை (பயிற்றுமுறை),  வியாகரணம் (இலக்கணம்), சந்தஸ் (யாப்பு), ஜோதிஷம் (எண்கணிதம்), மற்றும் காலக்கணக்கு, கல்பம் (வேள்வி பயிற்றும் நெறி முறைகள்), நிருக்தம் (வேதம் கூறும் சொற்களுக்கு பொருள் காணும் முறைமை) இவை எல்லாம் வேதத்தின் பொருளை புரிந்துகொள்ள உதவும் அங்கங்களாகும். இவற்றையே ‘பொருள்’ என்று சொல்கிறார்.

ஆனால், ‘அரும்’ என்ற சொல் அருமை என்பதில் (கடைக்குறையாய்) ஒரு எழுத்து குறைந்து, ‘அரும்’ என்று ஆகியது. அத்தகைய பொருளைப்புரிந்து கொள்வதன் மூலம் ஆன்மாவை அறிந்துகொள்ளலாம். ஆனால், சிவத்தையோ அவன் அருளையோ அறிய முடியாது - அவன் அறிவிக்காமல். அதனாலேயே வேதத்தின் முடிவான இறைவனால், அவன் கருணையினால், ஆன்மாக்களுக்கு அருளப்பட்ட தன்விளக்கப் பகுதியையே வேதாந்தம் என்று குறிப்பிடுவர். இதை தெளிவாகச் சொல்வதற்காகவே ‘அரும் பொருளே’ என்று அடை சேர்த்து குறிப்பிட்டார். வேதத்தின் முடிவான வேதாந்தத்தின் விழுப்பொருளாக (ரகசியமாக) இருப்பவள் என்பதையே ‘எழுதாமறையின் ஒன்றும் அரும்பொருளே’ என்கிறார்.

*‘அருளே’

இச்சொல்லானது இரண்டற சிவனோடு அத்வைதமாய் கலந்திருக்கும் சக்தியை ஆன்மாக்களின் நலன் பொருட்டு பிரித்து ‘அருளே’ என்று தனியாக குறிப்பிடுகிறார். இதை மூன்று உதாரணங்களால் புரிந்துகொள்ளலாம்.

1. ஒரு தாளுக்கு இரண்டு பக்கமுண்டு. ஒருபக்கமுள்ள தாள் கிடையாது. அதுபோலவே சிவனும், சக்தியுமாகும்.

2. இங்கு ‘அருள்’ என்பது அந்தத் தாளில் எழுதப்பட்ட எழுத்தை குறிக்கும். அந்த எழுத்துகள் விளங்கி தோன்றுவதற்குக் காரணம், தாளின் எழுதப்படாத (Plain white paper) பின்பகுதி.

3. சூரியனும் அதன் கதிரும்போல. சூரியன் சிவனென்றால் அதன் கதிர்கள் சக்தியெனவும் உணர்க. ஒரு பக்கமுடைய தாள் என்ற உதாரணத்தால் இறைவனோடு ஒன்றாக இருக்கிறாள், பிரிக்க முடியாதவளாய், அர்த்தநாரி. சிவபெருமான் தாள் என்றால் முற்றிலும் வேறான எழுத்தாயிருப்பவள் உமையம்மை.
சிவபெருமான் சூரியன் என்றால் அதன் உடனேயே இருக்கின்ற உறவாய் (கதிராய்) இருப்பவள் சக்தி. இப்படி சிவபெருமானுடன், ஒன்றாகவும், உடனாகவும் வேறாகவும், இருக்கின்றவளுக்கு சக்தி என்று பெயர். ஆன்மாக்களுக்கு ஒன்றாகவும் உடனாகவும் வேறாய் இருக்கின்ற சக்திக்கு ‘அருள்’ என்று பொருள்.
இது மகனுக்குத் தாயாக இருக்கும்போது ‘அருள்’ என்றும், தந்தைக்கு மனைவியாக இருக்கும்போது சக்தி எனவும், ஒரே உமையம்மையே அழைக்கப்படுகின்றாள்.

‘அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்’ (பாடல் - 44)

(தொடரும்)

- முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்