அந்த மெல்லியக் கோடு!தன்னம்பிக்கையையும், அகங்காரத்தையும் ஒரு மெல்லியக் கோடுதான் பிரிக்கிறது - மனிதாபிமானம்! தன்னம்பிக்கை கொண்டவர் சாதனையாளராக இருப்பார். ஆனால், இவருடைய சாதனைகளிலும், சாதனைகளுக்கான முயற்சிகளிலும் முற்றிலுமாக சுயநலம் நிரவி இருக்காது. இவரிடம் பொதுநோக்கு கட்டாயம் இருக்கும். பிறர் நலத்தில் அக்கறை இருக்கும். தான் சாதிக்கவேண்டும் என்பதற்காக பிறர் சுதந்திரத்தில் குறுக்கிடமாட்டார். பிறர் நலனைப் புறக்கணிக்கமாட்டார், அதேசமயம் பிறர் நலம்பெறும் வகையில்தான் நடந்துகொள்வார். இவர் சித்தத்தில் திடம் இருக்கும். தீர்மானம் இருக்கும்.

ஆனால், இவை அடுத்தவரை பாதிக்காது. ஏனென்றால் தன்மீது அவருக்கு அவ்வளவு நம்பிக்கை! தன்னம்பிக்கை என்பது ஆரோக்கியமான மனதின் விளைவு. அகங்காரம் கொண்டவரும் சாதனையாளராகவே இருப்பார். இவரும் எப்படியாவது சாதித்துவிடவேண்டும் என்ற உறுதி கொண்டிருப்பார். அந்த ‘எப்படியா’வதில் பலியாகும் பிறர் நலன்களைப் பற்றி இவர் அக்கறை கொள்ளமாட்டார். ‘எனக்கு ஒரு கண் போனால், அவனுக்கு இரண்டு கண்களும் போகவேண்டும்’ என்ற பிடிவாதம் இவர் முயற்சிகளில் இருக்கும். பொறாமை, அழுக்காறு, பகை, பழிவாங்கும் வேட்கை, சமயத்துக்குத் தகுந்தவாறு பொய் பேசுதல்,

தன் நலனுக்காக அடுத்தவரை அழிக்கும் ஆத்திரம், ஏற்கெனவே பெற்றுவிட்ட வெற்றிகளால் பொங்கியெழும் ஆணவம், தனக்கு நிகர் யாருமில்லை என்ற திமிர், தகுதியில்லாவிட்டாலும் தோல்வியை ஏற்க மறுக்கும் வீம்பு, தனக்குக் கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைத்துவிடக் கூடாது என்ற பேராசை, தன் சொந்த நலத்திற்காக, சொந்தம், பந்தம், நட்பு என்று எல்லா நல்லுறவுகளையும் ‘தியாகம்’ செய்யத் தயாராக இருக்கும் இழிகுணம் - இவையெல்லாம் இவர் மனதை அலங்கரித்துக் கொண்டிருக்கும். தன்னம்பிக்கையாளர், மனிதாபிமானம் என்ற கோட்டைத் தன் எல்லையாக வகுத்துக்கொண்டு அதற்குள் நிதானமாக இயங்குபவர்.

அகங்காரக்காரர்  அந்தக் கோட்டை மதிக்கத் தெரியாதவர், அதை மிதித்து நசுக்கி குரூர சந்தோஷம் அடைபவர். தன்னம்பிக்கையாளர் பெரும்பாலும் இறை சிந்தனை கொண்டவராக இருப்பார். தன்னை நல்வழிப்படுத்தும் இறையருளைத் தனக்குத் துணையாகக் கொண்டவராக இருப்பார். அகங்காரக்காரர் தன்னைவிட்டுக் கீழிறங்கி வந்து, இறையருளை நாடுவாரேயானால், இவரும் தன்னம்பிக்கையாளரைப்போலத் திகழ முடியும். இரு குணங்களையும் வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காகத்தான் இறைவன் இப்படி இரு மனங்களைப் படைத்திருக்கிறான் போலிருக்கிறது!

- பிரபுசங்கர்
(பொறுப்பாசிரியர்)