அலைகடல் அபிஷேகத்தில் ஐந்து லிங்கங்கள்!



குஜராத்-பவநகர்

குஜராத் மாநிலம் தலைசிறந்த சிவாலயங்களைத் தன்னகத்தே கொண்ட பெருமை உடையது. சோம்நாத் மஹாதேவ், துவாரகாதீஷ் போன்ற பல முக்கியமான ஆலயங்கள் அம்மாநிலத்தின் நீண்ட கடற்கரையையொட்டியே அமைந்துள்ளன. பல சிவாலயங்கள் கடற்கரைக்கு மிக அருகில், அன்றாடம் கடல் நீர் மட்டம் உள் வாங்கும்போது வெளியில் தெரிவதும், நீர் மட்டம் உயரும் போது மூழ்குவதுமாக அமைந்துள்ளன. அவற்றுள் பவநகரில் உள்ள ஸ்ரீநிஷ்களங்க மஹாதேவ் மந்திர், கவி காம்போய் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீஸ்தம்பேஷ்வர் மஹாதேவ் மந்திர், யூனியன் பிரதேசமான டையு-டாமன் கடற்கரையில் உள்ள ஸ்ரீகங்கேஷ்வர் மஹாதேவ் மந்திர் ஆகியன குறிப்பிடத்தக்கவை. இந்த டாமன் டையு  இரு இடங்களும் அக்காலத்தில் போர்ச்சுக்கீசிய காலனிகளாக இருந்தவை.

டையு தீவின் கிழக்குப் பகுதியில் டையுவிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள ஃப்யூதாம் என்ற கிராமத்தின் நாகோவா கடற்கரையோரத்தில் தரைமட்டத்திற்குக் கீழ் உள்ள குகையில் ஐந்து சிவலிங்கத் திருமேனிகளைக் கொண்ட ஸ்ரீகங்கேஷ்வர் மஹாதேவ் மந்திர் அமைந்துள்ளது. இங்கு ஐந்து சிவலிங்கங்கள் இருப்பதன் பின்னணியில் மஹாபாரத காலத்தையொட்டிய கதை ஒன்று கூறப்படுகிறது. பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் நாட்டை இழந்து வனவாசம் மேற்கொண்டபோது இப்பகுதிக்கு வந்திருந்தனர். சிவபூஜை செய்த பின்னரே உணவு உட்கொள்ளும் நியமத்தைக் கைகொண்டிருந்த அவர்கள், இங்குள்ள குகை ஒன்றில் ஐந்து சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடற்கரையை ஒட்டி, தரை மட்டத்திற்குச் சற்றுக் கீழே உள்ள குகையில் சில படிகள் இறங்கிச் சென்று தரையோடு தரையாக அமைந்திருக்கும் ஐந்து சிவலிங்கத் திருமேனிகளையும் தரிசிக்கலாம். கருங்கல்லில் வடிக்கப்பட்ட ஆவுடை அமைப்புகள் தரையில் பதிக்கப்பட்டு, அவற்றில் பாண லிங்கங்கள் பொருத்தப்பட்டுள்ளன. யுதிஷ்டிரர், பீமன், அர்ச்சுனன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய ஐவரும் ஒவ்வொரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்து ஆராதித்தாக ஐதீகம். ஒரே அளவாக இன்றி சிறிதும் பெரிதுமாக காட்சி தரும் இந்த  ஐந்து சிவலிங்கங்களும் சேர்ந்து கங்கேஷ்வர் மஹாதேவ் என்ற பெயராலேயே அழைக்கப்படுகின்றன. சிவலிங்கங்களுக்கு மேற்புறம் குகையின் சுவரில் நீளமான ஐந்து தலை சேஷநாகம் வடிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் விநாயகர், மஹாவிஷ்ணு, மஹாலக்ஷ்மி ஆகியோரை தரிசிக்கலாம்.

சிவலிங்க சந்நதிக்கு எதிர்ப்புறம் சிறிய நந்தி ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் மேலிருந்து இந்த குகைக்கு கீழே இறங்குவதற்கும், தரிசனத்திற்குப் பின் மேலே ஏறுவதற்கும் தனித்தனியே படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கரையை நோக்கி திரண்டு வருகின்ற கடல் அலைகள் தொடர்ந்து குகைக்குள் இடைவெளிகளுடன் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவருக்குள் புகுந்து சிவலிங்கங்களை சூழ்ந்து அபிஷேகித்துப்  பின்வாங்குவதும், மீண்டும் உள்ளே அடுக்கடுக்காக இடைவெளியின்றி அலைகள் வருவதுமாக இடைவிடாது நிகழும் இந்தக் காட்சியைக் கண்டு களிக்க ஏராளமான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். அபிஷேகப் பிரியரான சிவபெருமானை இயற்கை, கடல் நீரைக் கொண்டு நீராட்டுவதாக பக்தர்கள் கூறி மகிழ்கின்றனர். காலை ஆறு மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் சிவபெருமானை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

- விஜயலட்சுமி சுப்பிரமணியம்