கடவுளின் முன்னேற்பாடு!இறைவன் படைப்பவற்றில் அதி அற்புதமான ஒன்று - மனிதன். எத்தனையோ கோடி மக்கள். ஒவ்வொருவரும் தனித்தனி. இது எப்படி சாத்தியம்? ஒரு ஓவியர் பல கதாபாத்திரங்களை வரைகிறார் என்றால், ஒரு சிற்பி பல சிற்பங்களை வடிக்கிறார் என்றால், அவருடைய ஓவியங்களிலேயே, சிற்பங்களிலேயே பல, ஒரே சாயலுடையதாக இருக்கும். ஆனால், இறைவன் வித்தியாசமானவன் - ஒவ்வொரு மனிதரையும் வித்தியாசமாகப் படைப்பதில். யோசித்துப் பாருங்கள், ஒரு குடும்பத்தில் ஒரே சாயலுள்ள சில உறுப்பினர்கள் இருக்கலாம்.

ஒரே தோற்றம் கொண்ட இரட்டைப் பிறவிகள் இருக்கலாம். ஆனால், இவர்களும் ஒருவருக்கொருவர் வித்தியாசமானவரே! எப்படி?அவர்களுடைய கைரேகை, உதட்டு ரேகை, கண் ரேகை எல்லாமே தனித்தனி. ஒருவரைப்போல மற்றொருவருக்கு இல்லை. என்ன அதிசயம் இது! ஒரு குடும்பத்தில் கொள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா, மகன், பேரன், கொள்ளுப் பேரன் என்ற வம்சாவளியில் ஜீன் தொடர்பு இருக்கலாம், ஆனால் ரேகை தொடர்பு இருப்பதில்லை. ஆமாம் இந்த ஆறு உறவுகளுக்குள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானது இந்த ரேகைதான்!

சமீபத்தில் ஒரு குழந்தை காணாமல் போய்விட்டது. அது கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து அக்குழந்தையின் கைவிரல் ரேகைகளைப் பதிவு செய்து விசாரித்து, அதன் பெற்றோரிடம் உடனே அக்குழந்தையை சேர்ப்பிக்க முடிந்திருக்கிறது. ஆதார் அட்டையில் பதியப்பட்டிருந்த அதன் கைவிரல் ரேகைகளே இந்த சந்தோஷமான மீட்புக்குக் காரணம். அதாவது, தன் படைப்பைத் தம் வசதிக்காக மக்கள் பயன்படுத்திக்கொள்ளும் இறைவனின் கருணை இது. பல வருடங்களுக்கு முன்னாலிருந்தே தடயவியல் அறிவியல் துறையில் குற்றவாளிகளை அடையாளம் காண இறைவன் படைத்த ரேகைகள் உதவியிருக்கின்றன.

கணினியின் அடிப்படை மொழியான ‘பைனரி நம்பர்ஸ்’ (0 மற்றும் 1 ஆகிய இரண்டே எண்கள்) எத்தனையோ கோடிக்கணக்கான கணினி நிகழ்த் தடங்களுக்கு ஆதாரமாக இருப்பதுபோல, இறைவன் மனித படைப்பு ஒவ்வொன்றும் (ஆண், பெண் என்ற இரண்டே கணக்கீட்டில்) எண்ணற்ற முன்னேற்றங்களுக்கு அடிகோலியிருக்கிறது. ஒருவரது ரேகைபோல இன்னொருவருக்கு இல்லை என்ற உண்மையைப் போலவே ஒவ்வொருவரும் தனித்தனிச் சிறப்பு கொண்டிருக்கிறோம். பெருந்தலைவர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் என்று பிரபலமாக முன்னேற்றம் கண்ட எத்தனையோ பேரைப்போலவே - அவராகவே - இன்னொருவர் என்றுமே உருவாகாததுபோல! இப்படி ஒன்றுபோலில்லாத இன்னொன்றைக் கோடிக்கணக்கில் படைக்கும் மாபெரும் சக்திக்குத் தலைவணங்குவோம்.

பிரபுசங்கர்
(பொறுப்பாசிரியர்)