பிரசாதங்கள்



கோதுமை இனிப்பு குழிப்பணியாரம்

என்னென்ன தேவை?


கோதுமை மாவு - 1 கப், அரிசி மாவு அல்லது ரவை - 1/4 கப், பால் - 1/2 கப், பல் பல்லாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 1/4 கப், வெல்லத்தூள் - 1 கப், சோடா உப்பு - 1 சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை, வெண்ணெய் - 1/4 கப், தண்ணீர் - தேவைக்கு, பொரிக்க நெய் அல்லது எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

ெநய்யை தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து பால் மற்றும் தேவையான அளவு தண்ணீரில் இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி குழியில் 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் ஒரு சிறு கரண்டி கரைத்த மாவை ஊற்றவும். மாவு வெந்து உப்பி வந்ததும் திருப்பிப் போட்டு இருபுறமும் சிவக்க வந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்பு: விரும்பினால் தேங்காய்க்கு பதில் உடைத்த முந்திரி, திராட்சை, பேரீச்சை, வாழைப்பழம், பொடித்த பலாப்பழம் சேர்க்கலாம்.

கோதுமை பால் பூரி

என்னென்ன தேவை?


கோதுமை மாவு - 1¾ கப், நெய் - 1/4 கப், ரவை - 1/4 கப், உப்பு - 1 சிட்டிகை, பால் - 3 கப், சர்க்கரை - 1/2 கப், சோள மாவு - 1 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன், விரும்பினால் குங்குமப்பூ - சிறிது, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு, உடைத்த நட்ஸ், டிரைஃப்ரூட்ஸ் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கோதுமை மாவு, ரவை, நெய், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து மூடி வைக்கவும். அடிகனமான ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து சுண்ட காய்ச்சவும். பாதியாக வரும்பொழுது சோள மாவை 1/4 கப் பாலில் கரைத்து சேர்க்கவும். பின்பு சர்க்கரை சேர்த்து பாயசம் பதத்திற்கு வந்ததும் இறக்கவும். பிசைந்த மாவை சிறு சிறு பூரியாக திரட்டி அல்லது விருப்பமான வடிவத்தில் செய்து சூடான நெய்யில் பொரித்தெடுத்துக் கொள்ளவும். பரிமாறும் பொழுது ஒரு தட்டில் பூரிகளை அடுக்கி, அதன் மீது கெட்டியான பாலை ஊற்றி, அதன் மீது நட்ஸ், டிரைஃப்ரூட்ஸை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

கோதுமை பஞ்சிரி

என்னென்ன தேவை?


கோதுமை மாவு - 2 கப், காய்ந்த திராட்சை - 25 கிராம், உடைத்த பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர்ந்த பேரீச்சை, மக்னா (காய்ந்த தாமரை விதை), தர்பூசணி, கிர்ணி பழ விதை அனைத்தும் சேர்த்து - 1 கப், பொடித்த சர்க்கரை - 1½ கப், தேன் - 1/4 கப், ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன், ஜாதிக்காய் தூள் - 1 சிட்டிகை, சுக்கு தூள் - 1 சிட்டிகை, துருவிய கொப்பரை - 1/4 கப், நெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வாயகன்ற ஒரு கடாயில் நெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து நட்ஸ், உலர்ந்த பழங்கள், கொப்பரை துருவலை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் மீதியுள்ள நெய்யில் கோதுமை மாவை போட்டு கைவிடாமல் நன்கு சிவக்க வறுத்து இறக்கி இத்துடன் சர்க்கரைத்தூள், வறுத்த நட்ஸ், விதைகள், ஏலக்காய்த்தூள், சுக்கு தூள், ஜாதிக்காய் தூள் அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து தேன், நெய் 2 டீஸ்பூன் ஊற்றி கலந்து பரிமாறவும்.

கோதுமை ரவை காய்கறிப் பொங்கல்

என்னென்ன தேவை?


சம்பா கோதுமை ரவை - 1 கப், நறுக்கிய பீன்ஸ், கேரட், குடைமிளகாய், பச்சை பட்டாணி, பாசிப்பருப்பு - தலா 1/4 கப், உப்பு - தேவைக்கு, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, கறிவேப்பிலை - 1 கைப்பிடி, பொடித்த பச்சைமிளகாய் - 3, கரகரப்பாக பொடித்த மிளகு, சீரகம் - தலா 1 டேபிள்ஸ்பூன், முந்திரி - 20, பொடித்த இஞ்சி - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - தேவைக்கு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2.

எப்படிச் செய்வது?

சம்பா கோதுமை ரவையை சுத்தம் செய்து குக்கரில் போட்டு, 3 மடங்கு தண்ணீர் ஊற்றி, 3 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பையும் கழுவி தேவையான தண்ணீர் விட்டு பதமாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மிளகு, சீரகம், முந்திரி தாளித்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், நறுக்கியகாய்களையும் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைக்கவும். இதில் வெந்த கோதுமை ரவை, பாசிப்பருப்பு கலவையை கொட்டி நன்கு கிளறி பரிமாறும் முன்பு நெய், வறுத்த முந்திரி, கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.

பாசிப்பருப்பு பால் பாயசம்

என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு - 1 கப், பெரிய முழு தேங்காய் - 1, முந்திரி - 20 கிராம், நெய் - 1/2 கப், பல் பல்லாக நறுக்கி நெய்யில் வறுத்த தேங்காய் துண்டுகள் - 1/2 கப், ஏலக்காய் - 2, வெல்லத்துருவல் - 1 கப், திராட்சை - 15.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் பாசிப்பருப்பை போட்டு மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து குழையாமல் வேகவைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி கெட்டியான முதல் பால், இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சையை வறுத்து இரண்டாம் தேங்காய் பால், வெந்த பாசிப்பருப்பு சேர்த்து வேகவைக்கவும். வெந்து வரும்போது வெல்லத்தை சிறிது தண்ணீரில் கெட்டியாக கரைத்து வடித்து சேர்க்கவும் அல்லது பாகு செய்து வடித்து சேர்க்கவும். அனைத்தும் ஒன்றாக சேர்ந்து கொதித்து பாயசம் பதத்திற்கு வரும்போது முதல் தேங்காய்ப் பாலை ஊற்றி கைவிடாமல் கலந்து இறக்கவும். வறுத்த தேங்காய், ஏலக்காய்த்தூள் கலந்து பரிமாறவும்.

சிம்லி

என்னென்ன தேவை?

கேழ்வரகு மாவு - 2 கப், கறுப்பு எள் - 1/2 கப், ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன், வெல்லம் - 1½ கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், துருவிய தேங்காய் - சிறிது.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, 1 சிட்டிகை உப்பு, தேங்காய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, உருண்டையாக உருட்டி சப்பாத்தியாக தேய்த்து, சூடான தோசைக்கல்லில் நெய் சேர்த்து மொறு மொறுவென்று சுட்டு எடுக்கவும். மாவு அனைத்தையும் சுட்டு எடுத்துக் கொள்ளவும். ஆறியதும் சிறு சிறு துண்டுகளாக உடைத்து மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். இத்துடன் எள்ளையும் வறுத்து பொடித்து மாவில் சேர்த்துக் கொள்ளவும். ஏலக்காய்த்தூள், பொடித்த வெல்லம் சேர்த்து அனைத்தையும் கலந்து இடித்துக் கொள்ளவும் அல்லது மிக்சியில் ஒரு சுற்று சுற்றி உருண்டைகளாக பிடித்து பரிமாறவும்.

படங்கள்: ஆர்.சந்திரசேகர்

- சந்திரலேகா ராமமூர்த்தி