ஆடற்கலை வளர்த்த ஐயாறு திருத்தலம்!



கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்-திருவையாறு

தேவார மூவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரை ஆளுடைய பிள்ளை, ஆளுடைய அரசு, ஆளுடைய நம்பி என்ற திருநாமங்களால் போற்றுவது  சைவ மரபாகும். காவிரியின் தென்கரையிலுள்ள திருக்கண்டியூரைச் சேரமான் பெருமான் நாயனாருடன் வழிபட்டு மகிழ்ந்த உடைய நம்பியாகிய சுந்தரர், காவிரியின் எதிர்கரையில் திருவையாற்று ஐயாறப்பர் திருக்கோயில் திகழ்வது கண்டு அப்பெருமானை உடன் வழிபட்டு மகிழ விரும்பினார்.

எதிர்கரை செல்ல இயலாத அளவுக்குக் காவரியில் வெள்ளம் பெருக்கெடுத்ேதாடியது. சேரமானுருடன் காவிரியின் தென்கரையில் நின்றவாறே ‘பரவும் பரிசு ஒன்று அறியேன் நான்...’ எனத் தொடங்கும் பதினொரு பாடல்கள் கொண்ட பதிகமொன்றினைப் பாடி, ‘ஆடும் திரைக்காவிரிக்கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ’ என முடித்தார். அடுத்த கணமே எதிர்கரை ஐயாறப்பர் கோயிலிலிருந்து ‘ஓலம்’ என்ற ஓசை அண்டசராசரங்கள் எல்லாம் கேட்குமளவு ஒலித்தது. காவிரி பிளந்து இடையே ஒரு தடம் தோன்றியது. அவ்வழி சென்று இருவரும் ஐயாறப்பரைத் தரிசித்துப் போற்றினர்.

இவ்வரலாற்று நிகழ்வினைப் பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான், ‘மன்றில் நிறைந்து நடம் ஆட வல்லார் தொல்லை ஐயாற்றில் கன்று தடையுண்டு எதிர் அழைக்கக் கதறிக் கனைக்கும்  புனிற்று ஆப்போல்ஒன்றும் உணர்வால் சராசரங்கள் எல்லாம் கேட்க ஓலம் எனநின்று மொழிந்தார் பொன்னிமா நதியும் நீங்கி நெறிகாட்ட...’- எனக்குறிப்பிட்டுள்ளார். ஓலம் என்ற சொல் ஒலி, அபயக்குரல் என்பதைக் குறிப்பதாகும். ஒல் என்ற சொல்லும் இதே பொருளினை உரைக்கும். தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில் கருவறை வடபுறச் சுவரில் சுந்தரரின் வரலாற்றை சிற்பக்காட்சிகளாகக் காட்டிடும் ஏழு சிற்பத் தொகுதிகள், சோழர்கால கல்வெட்டுக் குறிப்புகளுடன் உள்ளன.

அவ்வரிசையில் நான்காவதாகத் திகழும் சிற்பக் காட்சிக்கு மேலாக ‘உடைய நம்பிக்கு ஒல்லென்றருளினபடி’ என்று குறிப்பிடப்பெற்று கீழாக கண்டியூர் கோயில், அதனருகே தென்கரையில் நின்றவாறு சேரமானாருடன் சுந்தரர் பதிகம் பாட, வெள்ளம் பெருகும் காவிரி நடுவே பிளந்து நின்று காணப் பெறுகிறது. காவிரியின் வடகரையில் ஐயாறப்பர் திருக்கோயில் பேரழகோடு காட்சி நல்குகின்றது. இங்கே கல்வெட்டு, சுந்தரர் ஐயாறு சென்ற வரலாற்றை காட்சியோடு நமக்குக் காட்டி நிற்கின்றது.

காவிரிக் கோட்டம் என அழைக்கப்பெறும் திருவையாறு ஐயாறப்பர் திருக்கோயில் சோழப் பெருவேந்தர்கள் காலத்தில் மூன்று தனித்தனி சிவாலயங்களை உள்ளடக்கிய ஒரு பெருங்கோயிலாகத் திகழ்ந்திருந்தது. நடுவே மிகச் சேய்மையான காலந்தொட்டு திகழும் மூலக்கோயிலும், தென்பிராகாரத்தில் தென்கயிலாயமும் வடபிராகாரத்தில் வடகயிலாயமும் இடம் பெற்றுள்ளன. இராஜராஜசோழனின் பட்ட மகிஷியான தந்தி சக்தி விடங்கி எனும் லோகமாதேவி வடகயிலாயத்தையும், கங்கை கொண்ட ராஜேந்திர சோழனின் தேவி பஞ்சவன் மாதேவி தென் கயிலாயத்தையும் கற்றளிகளாகப் புதிதாக எடுப்பித்தனர் என்பதை அங்குள்ள கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன.

தென்கயிலாயம், வடகயிலாயம் என சோழ மாதேவியர்களால் இக்கோயில்களுக்கு பெயரிடப் பெற்றமைக்கு ஒரு காரணம் உண்டு. நடுவமைந்த பண்டைய ஐயாறப்பர் கற்றளிதான் தமிழ்நாட்டில் அமைந்த தொன்மையான ஸ்ரீகயிலாசமாகும். அதனைத்தான் அப்பர் பெருமான் கயிலை மலையாகவே கண்டு அங்கு சிவதரிசனம் பெற்றார்.

தாராசுரம் திருக்கோயிலில் திருவையாற்று ஐயாறப்பர் ேகாயிைலக் கல்ெவட்டுக் குறிப்புடன் காட்டும் சில சிற்பத் ெதாகுதிகள் உள்ளன. ஒரு ெதாடருக்கு மேலாகக் ‘கிடந்தார் தமிழளியார்’ என்ற சோழர்கால கல்வெட்டுக்குரிய செந்தூர எழுத்துப் பொறிப்பு காணப்பெறுகின்றது. அப்பர் பெருமானார் ‘மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்’ என்று கூறியவாறு கயிலைக்கு நடந்தும், மண்டியிட்டும், தரையில் படுத்து உருண்டும் செல்லும் அவர்தம் முயற்சிகள் அங்கு சிற்பங்களாகக் காட்டப் பெற்றுள்ளன. ஈசனார் தம் கையில் எடுத்து வந்த புனல் தடமாகிய பொய்கையில் அப்பரை மூழ்கச்சொல்ல, அவரும் மூழ்கிணறார். மூழ்கி எழும்போது திருவையாற்று குளத்திலிருந்து பொலிவு பெற்ற திருமேனியோடு எழுகிறார். அவர் முன்பு ஐயாற்றுத் திருக்கோயில் காணப்பெறுகின்றது.

அதனைக் கயிலையாகவே தரிசிக்கும் அவர் முன்பு இணை இணையாக, களிறில் தொடங்கி பெடையோடு கோழி, வரிக்குயில், மயில், மகன்றில் பசு, எருது போன்ற பறவைகளும், விலங்குகளும் செல்கின்றன. அவை அனைத்தும் சக்தியும் சிவமுமாக அவருக்குத் தோன்றவே ‘மாதற்பிறைக் கண்ணியானை’  எனத்தொடங்கும் பதினொரு பாடல்கள் கொண்ட ஐயாற்றுப் பதிகமொன்றினைப் பாடுகின்றார்.
 
கல்வெட்டும், சிற்பக்காட்சிகளும் நம்மை ஏழாம் நூற்றாண்டுக்கே இட்டுச் செல்கின்றன. முதல் தல யாத்திரையில் திங்களூர் வந்த அப்பர், ஏன் அடுத்தவூரான ஐயாறு வரவில்லை என்ற வினாவுக்கு ‘யாதும் சுவடு படாமல் ஐயாறு வரவேண்டும் என்பதற்காகவே புனலில் மூழ்கி பின்பு வந்தார்,’ என்பார் தி.வே.கோபாலய்யர். சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரனார், மேலும் ஒரு குறிப்பாக அப்பர் அடிகள் நீரில் மூழ்கி பிரணவ சரீரம் பெற்ற பின்பே ஐயாறு வந்து கயிலை கண்டார் என்பார்.

ஒளி பெற்ற யாக்கையுடன் திருநாவுக்கரசு பெருமான் கயிலை தரிசனம் கண்ட பெருங்கோயிலே ஐயாறப்பர் திருக்கோயிலாகும். தென்னாட்டில் சுட்டப்பெறும் கயிலாயம் எனும் முதற்கோயில் திருவையாற்று திருக்கோயிலே. திருக்கயிலாயமாக பாவிக்கப் பெற்று ராஜ சிம்ம பல்லவனால் எடுக்கப் பெற்ற காஞ்சி கயிலாய நாதர் கோயிலும், தட்சிண மேடு என்ற திருநாமத்தோடு வான்கயிலாயமாகவே எடுக்கப்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலும் திருக்கயிலாயமாம் ஐயாறப்பர் கோயில் தோற்றம் பெற்ற காலத்திற்கு பல நூற்றாண்டுகள் பின்பே எடுக்கப் பெற்றவையாகும். அவற்றுக்கு ஆதாரமாய் விளங்கியதே ஐயாற்று சிவாலயமாகும். அது தென்நாட்டு முதற்கயிலையாக விளங்கிய காரணத்தால்தான் அதன் இருமருங்கும் சோழப் பேரரசிகளால் எடுக்கப்பெற்ற இரண்டு சிவாலயங்களும் தென்கயிலை என்றும் வடகயிலை என்றும் கல்வெட்டுகளில் குறிக்கப்பெற்றுள்ளன.

ஐயாறப்பர் கோயில் கல்வெட்டுகளில் அவ்வூர் ‘வடகரை ராஜேந்திர சிங்க வளநாட்டு பொய்கை நாட்டு தேவதானம் திருவையாறு’ என்று குறிக்கப்பெற்றுள்ளது. ஏறத்தாழ 150 கல்வெட்டுகளைச் சுமந்து நிற்கின்றது இவ்வாலயம். பல்லவ மன்னன் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் பண்டைய மண்தளி, கற்கோயிலாகப் புதுப்பிக்கப் பெற்றுள்ளது. அப்பல்லவனில் தொடங்கி, ஆதித்தன், பராந்தகன், சுந்தரன், ஆதித்த கரிகாலன், ராஜராஜன், ராேஜந்திரன், ராஜாதி ராஜன், இரண்டாம் ராஜேந்திரன், விக்கிரம சோழன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜராஜன் போன்ற சோழ அரசர்களும், அவர்தம் தேவிமார் பலரும், ஜடாவர்மன் சுந்தர பாண்டியனும், விஜயநகரர், நாயக்கர் போன்ற அரசர்களும் இத்திருக்கோயிலுக்கு அளப்பரிய கொடைகளை நல்கியுள்ளனர் என்பதை சிலா சாசனங்கள் எடுத்துரைக்கின்றன.

கி.பி.1311ல் வடபுலத்து கொள்ளையர்களால் மண்டபங்கள் நேர்பட்டு குலைந்தன என்ற கல்வெட்டுக் குறிப்பும் காணப் பெறுகின்றது. ராஜராஜ சோழனின் தேவி லோகமாதேவியின் உயர்நிலை பெண் அதிகாரி ஒருத்தியின் அலுவல் பெயராக ‘அதிகாரிச்சி’ என்ற குறிப்பு காணப்பெறுவது சிறப்பு அம்சமாகும். ஆலய ஊழியர்களின் அலுவல் பெயர்களின் நீண்ட பட்டியல் இங்கு இடம் பெற்றுள்ளது. அதில் அபிடேக நீரை நாளும் சுத்தம் செய்து வெளியேற்றும் பணியாளனின் பெயராக ‘நிர்மாலிய நீர் அட்டுவான்’ என்ற குறிப்பும் ஒரு கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது.

ஐயாறப்பரின் திருநாமங்களாக திருவையாற்று மகாதேவர், திருவையாற்று மகாதேவ பட்டாரகர், திருவையாற்று அடிகள், ஐயாறடிகள், திருவையாற்று பரம மகாதேவர், பஞ்ச நதிவாணன், திருவையாற்று நயினார் என பல பெயர்கள் பல்வேறு காலகட்டங்களில் கல்வெட்டுகளில் குறிக்கப்பெற்றுள்ளன. குறிப்பாக வடகயிலாயத்தை லோகமா தேவியார்க்காக எடுப்பித்த தச்சாச்சாரியர்களின் பெயர்களாக எழுவடியான், காரோனனான புவனி மாணிக்க ஆச்சாரியன், கலியுகரம்பை பெருந்தச்சன், சக்கடி சமுதையான செம்பியன் மாதேவி பெருந்தட்டான் என்பவை கல்லிலே காணப்பெறுகின்றன. கலைஞர்களை போற்றிய பாங்கு இதனால் நன்கறியப் பெறுகின்றது.

தஞ்சாவூர் பெரிய கோயிலான ராஜராஜேச்சரத்துக்கு ராஜ சூளாமணி தலைக்கோலி, ஐயங்கொண்ட தலைக்கோலி, ஒலோக மாதேவி தலைக்கோலி, மதுராந்தகத் தலைக்கோலி என இருபதுக்கும் மேற்பட்ட ஆடல் அரசிகளை ஐயாற்றுக் கோயிலிலிருந்து தேர்வு செய்து அங்கு நியமித்தான் என்பதை தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுகள் வாயிலாக அறியும்போது ஐயாறப்பர் திருக்கோயில் ஒரு கலை வளர்த்த திருக்கோயில் என்பது  நன்கு விளங்கும்.

‘வேந்து ஆகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும் விகிர்தன் ஆகிப்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில்
காந்தாரம் இசை அமைத்துத் காரிகையார் பண் பாடக் கவின் ஆர் வீதி
தேம் தாம் என்று அரங்கு ஏறிச் சேயிழையார் நடமாடும் திரு ஐயாறே.’

- என்ற திருஞானசம்பந்தரின் திருப்பாடலை மேற்காணும் கல்வெட்டுக் குறிப்போடு நோக்கும்போது ஆடற்கலை வளர்த்த ஐயாற்றின் பெருமையை நம்மால் நன்கு அறியமுடிகிறது. நான்கு திருச்சுற்றுகள், எட்டு கோபுர வாயில்கள், மூன்று கயிலாயக் கோயில்கள், அறம் வளர்த்த நாயகியின் திருக்காம கோட்டம், ஆலய வளாகத்திற்குள் சூரிய புஷ்கரணி ஆகியவற்றுடன் ஐயாறப்பர் கோயில் பெருந்திருக்கோயிலாக காட்சி நல்குகின்றது. மூலவர் மணற்கல்லால் அமைந்த சுயம்பு மூர்த்தியாவார். அதனால் பீடத்திற்கு மட்டுமே திருமஞ்சனம் செய்வர்.

சப்த ஸ்தான தலங்களில் தலைமைத் தலமாக ஐயாறு திகழ்வதால் திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் என்ற ஆறு தலங்களின் சோமாஸ்கந்த திருமேனிகள் திருப்பல்லக்குகளில் எழுந்தருளச் செய்யப்பெற்று இத்தலத்தில் திருக்காட்சி நல்கப் பெறுகின்றது. இங்கு எழுவரையும் ஒருங்கே சேவிக்கும் பாக்கியம் சிவபுண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே கிட்டுகின்றது.

முதற்திருச்சுற்றில் உள்ள சப்த மாதர் சிற்பக்காட்சி அரிய ஒன்றாம். தாயார் எழுவரும் தம்தம் கொடியொடு இங்கு காணப் பெறுகின்றனர். இவ்வாலயத்தில், முன்பு இடம் பெற்றிருந்த சிவனாருடன் கூடிய அட்ட மாதர் தம் அரிய சிற்பத் தொகுதி தற்போது உள்ளூர் மாரியம்மன் ஆலயத்தில் இடம் பெற்றுள்ளது. ஐயாறு சென்று அப்பர் தரிசித்த கயிலையை சேவித்து அருள் பெற்று உய்வோம்.

- முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்