மகிமை வாய்ந்த மகாசங்கராந்தி திருவிழாக்கள்!கர்நாடகா

தமிழகத்தில் பொங்கல் திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படும் அதே நாளில் கேரளம், கர்நாடக மாநிலங்களில் மகா(ர)சங்கராந்தி வைபவம் வெகு சிறப்பான விழாவாக அனுசரிக்கப்படுகிறது. அந்தவகையில், கர்நாடக மாநில கோயில்கள் சிலவற்றில் மகாசங்கராந்தியன்று சில சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அந்த அபூர்வ வழிபாடுகளையும், அற்புத தரிசனங்களையும் இங்கே கண்குளிரக் காணலாம்.

1. கவி கங்காதரேஸ்வரா கோயில்
பெங்களூரு கவிபுரத்தில் கங்காதரேஸ்வரர் என்ற குகை சிவன் கோயில் அமைந்துள்ளது. பெங்களூரின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்று. கௌதம முனிவர் முதலில் இங்கு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. 16ம் நூற்றாண்டில் கெம்ப கௌடா இந்த நகரை பெரிய அளவில் உருவாக்கியபோது இந்தக் கோயிலையும் சிறப்பாக புனரத்தாரணம் செய்ததாக கூறப்படுகிறது. இது ஒரு குகைக் கோயில் என்பதே வித்தியாசமான தகவல். கோயில் வாசலில் பெரிய தூண்களின் உச்சியில் தனித்தனியே சூரியனும், சந்திரனும் அமைக்கப்பட்டுள்ளார்கள். இருவரும் தெற்கு நோக்கி அருள்புரிகிறார்கள். சிவ அம்சமாக, பிரம்மாண்டமான திரிசூலமும், உடுக்கையும் இக்கோயிலின் கூடுதல் சிறப்புகள்.

இங்கு சிவராத்திரியும், மகாசங்கராந்தியும் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன என்றாலும், மகாசங்கராந்தியன்று கங்காதரேஸ்வரரை தரிசிக்க பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுகிறார்கள். ஏன்? அன்று பிற்பகலில் சூரிய கிரகணங்கள், வாசலில் உள்ள நந்தியின் கொம்புகளின் இடையே புகுந்து நேராக லிங்கத்தின் மீது விழுகின்றன. இவ்வாறு சூரியன் ஈஸ்வரனை பூஜிப்பதைக் காண்பதற்காகவே இவ்வாறு பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் குழுமுகிறார்கள். கூடவே நடைபெறும் பால் அபிஷேகம், பூஜை, ஆரத்தி ஆகியவற்றையும் கண்டுகளித்துப் பேரானந்தம் அடைகிறார்கள்.

ஜனவரி 13-15 நாட்களில் சூரிய கிரகணம் இப்படி விழுவதாக கூறப்பட்டாலும், சங்கராந்தி அன்று விழுவது பக்திபூர்வமான அதிசயம். இவ்வாறு சூரியன் பூஜிப்பது ஒரு மணிநேரத்துக்குத் தொடர்கிறது. இந்த கோயிலில் அக்னி மூர்த்தி சிலை குறிப்பிடத்தக்கது. இவர் இரண்டு தலைகள், ஏழு கைகள் மற்றும் மூன்று கால்கள் கொண்டவராக அமைந்துள்ளார். இவரைத் தரிசித்தால் கண் நோய் நிச்சயம் குணமாகும் என ஒரு நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது. இந்தக் கோயிலிலிருந்து வாரணாசிக்கு ஒரு சுரங்கப்பாதை உள்ளதாகவும், இது தற்போது மூடப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

2. உடுப்பி கிருஷ்ணன் கோயில்
இந்தக் கோயிலில் ஜனவரி மாதம் மகாசங்கராந்தியின்போது சப்தோற்சவம் என ஒரு விழா நடக்கிறது. இது ஏழு நாள் பிரம்மோற்சவம். மகாசங்கராந்திக்கு ஐந்து நாட்கள் முன்பே துவங்கி சங்கராந்திக்கு அடுத்த நாளோடு முடிவடைகிறது. இதில் மகாசங்கராந்தி தினம் விசேஷமானது. ஏனென்றால், 750 ஆண்டுகளுக்கு முன் இதே மகாசங்கராந்தியன்றுதான் ஸ்ரீமத்வர், ஸ்ரீகிருஷ்ணனை இங்கு எழுந்தருளச் செய்தார். இதனைக் கொண்டாடும் விதமாக தேர்கள் திருவிழா நடக்கிறது. பிரம்ம ரதத்தில் ஸ்ரீகிருஷ்ணனும், அடுத்த சிறிய தேரில் ஸ்ரீஅனந்தேஸ்வரர் மற்றும் ஸ்ரீசந்திரமெளலீச்வரும் கொலுவிருந்தபடி, ஆயிரக்கணக்கான பக்தர்களின் பக்தியலைகளுக்கு ஊடே ஊர்வலமாக வருகிறார்கள்.

மூன்றாவது தேரில் ஸ்ரீமுக்கிய பிராணமூர்த்தி வீற்றிருக்கிறார். தெற்கு ரத வீதியில் பெரிய தேர் மையத்திலும் மற்ற இரண்டு தேர்கள் பக்கவாட்டிலும் நிற்கின்றன. மகாசங்கராந்தியன்று மட்டுமே இப்படி மூன்று தேர்களையும் ஒன்றாக தரிசிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்ம ரதம், அதாவது பெரிய ரதம் முன்செல்ல மற்ற இரு ரதங்களும் பின்செல்ல, வாணவேடிக்கைகள் முழங்க, வீதிகளை சுற்றி வந்து கிருஷ்ணன் கோயில் முன் தேர்கள் வந்து நிற்கின்றன. பிறகு தெய்வங்கள் இறக்கப்பட்டு தங்க பல்லக்குகளில்அமர்த்துகிறார்கள்.

இந்தப் பல்லக்குகள் வசந்த பூஜை கூடத்துக்கு சுமந்து வரப்படுகின்றன. அங்கு சுவாமிகள் பூஜை செய்து, மந்திர ரட்சையை பக்தர்களுக்கு வழங்குகிறார். பிறகு உற்சவ மூர்த்திகள் கர்ப்பக்கிரகத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு மங்கள ஆரத்தி நடக்கிறது. பிறகு ஸ்வாமிகள் அனைவருக்கும் தீர்த்தம் தருகிறார். இதன்பின் ஸ்வாமிகள் உற்சவமூர்த்தியை ஸ்ரீமத்வசரோவர் என அழைக்கப்படும் கோயில் குளத்திற்கு எடுத்துச் செல்கிறார். அங்கே அடுத்து உற்சவமூர்த்தி தீர்த்தவாரி காண்கிறார்.

இதனைத் தொடர்ந்து உடுப்பியின் மற்ற கோயில் சுவாமிகளும், பக்தர்களும் தாங்களும் புனித நீராடுகின்றனர். இதனுடன் அன்றைய நிகழ்ச்சி முடிவடைகிறது. ஏழாம் நாளன்று ஸ்ரீகிருஷ்ணனை தங்க பொடி பூசிய மலர்களால் அர்ச்சனை செய்து, நிறைவாக அந்த மலர்களை பக்தர்களை நோக்கி வீசுகின்றனர். இதனை ஸ்வர்ணோற்சவம் என அழைக்கின்றனர். இத்துடன் மகாசங்கராந்தி விழா நிறைவு பெறுகிறது.

3. ஸ்ரீரங்கப்பட்னா
மைசூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் காவிரி இருபுறமும் ஓட நடுவில் ஒரு தீவாக ஸ்ரீரங்கப்பட்னா அமைந்துள்ளது. இங்கு காவிரி அன்னைக்காக, பெருமாள் பள்ளிகொண்ட திருக்கோலத்தில் காட்சி தந்து இங்கேயே நிரந்தரமாய் கோயில்கொண்டு விட்டார் என்பது ஐதீகம். கௌதம ரிஷியுடன் சம்பந்தப்பட்ட ஊர் இது. இங்கு மகாசங்கராந்தியன்று லட்சம் தீபங்கள் ஏற்றப்படுவது தனிச்சிறப்பு. கோயிலுக்குள் செல்லும் பாதையில் சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு, இருபுறமும், நடுவிலும் தீபங்களை ஏற்றி பக்தர்கள் பெருமாளை தரிசிப்பதுதான் இந்த விழாவின் பிரதான அம்சம்.

அன்று மாலை பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் காவிரியில் நீராடிவிட்டு கோயிலுக்கு சென்று லட்ச தீபங்களை ஏற்றி பிறகு பெருமாளை தரிசித்து மனநிறைவு பெறுகிறார்கள். வருடாவருடம் தீபங்களின் எண்ணிக்கையும், பக்தர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போவது மற்றொரு சிறப்பு. மகாசங்கராந்தியன்று மட்டும் தான் இப்படி இந்த கோயிலில் தீபம் ஏற்றப்படுகிறது என்பது குறித்துக்கொள்ளவேண்டிய தகவல்.

4. கர்கலா வெங்கட்ரமணா கோயில்
இக்கோயிலுக்கு மேற்கு திருப்பதி (படு திருப்பதி) எனவும் பெயருண்டு. கோவாவில் 16ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் குடியேறியதும், மக்களைத் துன்புறுத்தி மதம் மாற வைத்தனர். இதனால் பலர் மதம் மாறினாலும் கவுத்சரஸ்வத் பிராம்மண குடியினர் மட்டும் மதம் மாறாமல் தங்கள் இன மக்கள் மற்றும் உடமைகளுடன் கர்நாடகாவின் இந்த பகுதிக்கு வந்து குடியேறினர். கார்வர், அங்கேலா, கும்தா, பட்கல் மற்றும் சிராலி ஊர்களிலும் இவ்வாறு குடியேறினர். கேரளத்திலும் இவர்கள் உள்ளனர். அன்றைய ஜைன மன்னன் இவர்களை மதித்து வாழ இடம், உணவு எல்லாம் கொடுத்து உதவினான். இவர்களுக்கு விவசாயம்தான் முக்கிய தொழில்.

இவர்கள் தங்கள் குலதெய்வமான வெங்கட்ரமணாவை கூடவே எடுத்து வந்திருந்தனர். அதனை பிரதிஷ்டை செய்து கோயிலும் எழுப்பினர். இந்த கோயிலில் திருப்பதி போன்றே காலை முதல் இரவு வரை பூஜை முறைகள் நடைமுறையில் உள்ளன. இங்குள்ள கருட மண்டபத்தில் நின்று வெங்கட்ரமணனிடம் நாம் எந்த கோரிக்கையை வேண்டினாலும் நிறைவேறி விடும் என்பது நம்பிக்கை. முதலில் இந்த பகுதி பாண்டிய நகரி என அழைக்கப்பட்டதாம். 550 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் மகரசங்கராந்தியன்று லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. கோயில் முழுவதும் துவஜஸ்தம்பம் உட்பட விளக்குகள் ஏற்றப்பட்டு ஜொலிக்கிறது. இந்த கோயில் மங்களூரிலிருந்து 50வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது.

- ராஜிராதா