மகோன்னதமாய் அருள்பாலிக்கும் மா ஆஷாபுரா தேவிகுஜராத்

தலைசிறந்த கலைநுணுக்கங்களுடன்கூடிய எண்ணற்ற ஆலயங்களைத் தன்னகத்தே கொண்ட பெருமைக்குரிய மாநிலம் குஜராத். இவற்றில், தேவிக்கு என்று பானஸ்கந்தா அம்பாஜி மாதா, பாவ்காட் காளிகா மாதா, சோடில்லா சாமுண்டா மாதாஜி போன்ற சிறப்பான பல ஆலயங்கள் உள்ளன. இங்குள்ள தேவி ஆலயங்களில் இன்னொரு மிகப் பிரபலமான ஆலயம் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஆஷாபுரா தேவி ஆலயமாகும். அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி வைப்பவள் என்ற பொருள்படும் மா ஆஷாபுரா தேவி மந்திரின் பின்னணியில் பல புராணச் செய்திகள் உள்ளன.

இந்த கட்ச் பகுதி ஒரு காலத்தில் கடலில் மூழ்கியிருந்து பின்னர் வெளிப்பட்டு, தற்போது மிகப்பெரிய உப்புப் பாலைவனம் கொண்ட மாவட்டமாகத் திகழ்கிறது. மழைக்காலங்களில் பெரும்பாலும் சதுப்பு நிலமாக மாறிவிடும் இந்தப் பாலைவனப் பகுதிக்கு கட்ச் ரண் (ரண் - பாலைவனம்) என்ற பெயர் ஏற்பட்டது. கட்ச் மாவட்டத் தலைநகராக உள்ள புஜ் பகுதியை அக்காலத்தில் புஜங்க (பாம்பை குறிக்கும் சொல்) என்ற பெயர் பெற்ற நாகர் இனத் தலைவன் ஆண்டுவந்தான். அந்த அரசனை சேஷபட்டணத்தை சேர்ந்த ராணி சஹாயி என்பவள், பேரியா குமார் என்பவரோடு சேர்ந்து எதிர்த்துப் போரிட்டு தோல்வியடைந்தாள்.

அதன்பின்,  புஜங்க மன்னன் பெயரில் இங்குள்ள குன்று புஜ் என்று அழைக்கப்படுவதோடு, அவன் நினைவாக இங்கு புஜங்க நாக் ஆலயமும் உருவானது. 1510ல் ராஜ் ஹமீர்ஜீ என்பவரால் புஜ், கட்ச் பகுதியின் தலைநகராக மாற்றப்பட்டது. புஜ் நகரிலிருந்து 80 கி.மீ. தொலைவில் லாக்பத் வட்டத்தில் உள்ள மதனோமத் என்ற கிராமத்தைச் சுற்றிலும் குன்றுகளும், நீரோடைகளும் எழில் சேர்க்கின்றன. ஒரு  நீரோடைக் கரையில் ஸ்ரீ ஆஷாபுரா தேவி ஆலயம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் கட்ச் பகுதியை ஆண்ட ஜடேஜா மன்னர்களின் குல தேவதையாக வழிபடப்பட்ட ஆஷாபுரா தேவி இப்பகுதியின் காவல் தேவதையாகவும் அருள்பாலிக்கிறாள். மேலும் சௌஹான், சிந்தி இன மக்களுக்கும் தேவி, குலதேவதையாகத் திகழ்கிறாள். 

இந்த ஆலயம் இங்கு ஒன்பதாம் நுற்றாண்டிலேயே இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளதாகவும்,  ருத்ர யாமள தந்திரம் என்ற ஆகம நுலில் இந்த ஆலயம் பற்றிய குறிப்பு காணப்படுவதாகவும் கூறுகின்றனர். கார்வாரிலிருந்து (தற்போதைய ராஜஸ்தான்) தேவ்சந்த் என்ற வியாபாரி தன் விற்பனைப் பொருட்களுடன் இங்கு வந்து நவராத்திரி திருவிழாவில் கலந்துகொண்டு தனக்கு மகப்பேறு வேண்டும் என்று தேவியை மனதாற வேண்டினார்.  தேவியும் அவர் கனவில்  தோன்றி தனக்கு ஓர் ஆலயம் நிர்மாணித்து, அதன் கதவுகளை ஆறு மாதங்களுக்குப் பின்னரே திறக்கவேண்டும் என்று கட்டளையிட்டாளாம்.

தேவ்சந்த் துயில் கலைந்து எழுந்து பார்க்க, தேவியின் அடையாளங்களான மட்டைத் தேங்காயும், சுங்க்ரி எனப்படும் சிவப்புத் துணியும் தன் அருகில்  இருந்தது கண்டு தேவியின் அருளை நினைத்து ஆனந்தப் பரவசம் அடைந்தார் அவர். ஆலயம் கட்டத் துவங்கி இரண்டு மாதங்கள் ஆகியிருந்தபோது, ஒருநாள் அவருக்கு ஆலயத்திற்குள் தேவியின் சிலம்பொலி கேட்டது. ஆர்வ மேலீட்டால் அவர் ஆலயக் கதவுகளைத் திறந்து பார்க்க, அப்போது கருவறையில் தேவி, அமர்ந்த நிலையிலிருந்து எழுந்திருப்பது போன்று காட்சி தந்த ஒரு சுயம்பு  விக்கிரகத்தைக் கண்டு அப்படியே தேவியை பிரதிஷ்டை செய்து ஆலயக் கட்டுமானப் பணியை முடித்து வைத்தார்.  

பதினான்காம் நூற்றாண்டில் லாக்பத் என்ற மன்னரிடம் அமைச்சர்களாக இருந்த அஜோ  மற்றும் அனகார் என்ற இருவணிகப் பெருமக்கள் இந்த ஆலயத்திற்கு விரிவான திருப்பணிகள் செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. 1819ல் பூகம்பத்தில் சிதிலமடைந்த இந்த ஆலயத்தை சுந்தர்ஜி சிவாஜி மற்றும் மேதா வல்லபாஜி என்ற இரு பிரம்ம சத்திரியர்கள் புனர் நிர்மாணம் செய்துள்ளனர். 1762ம் ஆண்டு மியான் குலாம் ஷா என்ற சிந்து மன்னர் தன் படையுடன் இந்த ஆலயத்தைக் கொள்ளையிட எத்தனித்தபோது தேவியின் கோபத்தால் அவருடைய வீரர்கள் அனைவரும் கண் பார்வையிழந்தனராம்.  தேவியின் கோபம் தணியவும், தன் தவறுக்குப் பிராயச்சித்தமாகவும் அவர் தேவிக்குச் சமர்ப்பித்த பெரிய கண்டாமணியை இன்றும் ஆலயத்தில் காணலாம். மேலும் ஜமேதார் பதே முகம்மது என்ற கட்ச் ராணுவ தளபதி இரண்டு கிலோ எடையில், 41 விளக்குகள் கொண்ட தீப் மாலா என்ற வெள்ளி சரவிளக்கை தேவிக்கு அர்ப்பணித்துள்ளார்.

2001 பூகம்பத்தால் ஆலயத்திற்கு ஏற்பட்ட சேதங்கள் சரி செய்யப்பட்டு ஆலயம் புனரமைக்கப்பட்டுள்ளது. கட்ச் ஸ்ரீ ஆஷாபுரா தேவியின் ஆலயம் வடநாட்டு ஆலயப் பாணியில் பல கூரிய சிகரங்களுடன் மிக அழகாக அமைந்துள்ளது. 58 அடி நீளமும், 32 அடி அகலமும் 52 அடி உயரமும் கொண்ட இந்த அழகிய ஆலயம், கட்ச் மாவட்டம் கோட்டேஷ்வர் என்ற கிராமத்தில் உள்ள ஸ்ரீகோடிலிங்கேஸ்வரர் என்ற பழமையான  சிவாலயம் போன்று
அமைந்திருப்பதாகக் கூறுகின்றனர்.

ஆலயக்  கருவறையில் ஸ்ரீ ஆஷாபுரா தேவி செந்நிற வண்ணம் தீட்டப்பட்ட கருங்கற் சிலா ரூபத்தில் காட்சி தருகிறாள். ஆறு அடி உயரமும் ஆறு அடி அகலமும் கொண்ட சுயம்பு ரூப கற்பாறையில் ஸ்ரீஆஷாபுரா தேவி ஏழு ஜோடி கண்களுடன் அருள்பாலிப்பதாக உள்ள ஐதீகத்தின்படி கண் மலர்கள் பொருத்தப்பட்டு கிரீடம் ஆபரணங்கள் மற்றும் மலர் மாலைகளால் தேவி அலங்கரிக்கப்படுகிறாள்.

ஸ்ரீ ஆஷாபுரா தேவி ஆலயத்தில் சைத்ர (சித்திரை) மற்றும் ஆஸ்வின (ஐப்பசி) நவராத்திரி நாட்களில்  லட்சக்  கணக்கில்  பக்தர்கள் கூடுகிறார்கள். குஜராத் மற்றும்  அண்டை மாநிலங்களான மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்தும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகைதந்து தங்கள் அனைத்துக் கோரிக்கைகளையும் சமர்ப்பித்து தேவியின் அருளைப் பெறுகின்றனர். 

இந்த ஆலயத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ள ஜகோரா என்ற குன்றில் ஸ்ரீஆஷாபுரா தேவிக்கு ஒரு சிறிய ஆலயம் உள்ளது. பெரும் அளவில் வணிகப் பெருமக்கள் இந்த குன்றில் மூன்று நாட்கள் தங்கியிருந்து குன்றில் உள்ள கருமையான மண்ணை தேவிக்கு முன்பாக எரிக்கின்றனர். புராணகாலத்தில் தேவியால் வதம் செய்யப்பட்ட ஒரு அசுரனின் உடலே இவ்வாறு கருமணலாக மாறியிருப்பதாக ஐதீகம்.

ஸ்ரீ ஆஷாபுரா தேவிக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் பொக்ரான், மொட்ரான், நாடோல் போன்ற இடங்களிலும், மும்பையிலும் புனே கோந்தவாவிலும் ஆலயங்கள் உள்ளன. பெங்களூருவில் பன்னர்கட்டா தேசிய பூங்கா அருகில் ஸ்ரீ ஆஷாபுரா மாதாஜி மந்திர் என்ற ஆலயம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கட்சி ராண் உத்சவ் என்ற பெயரில் மிகப் பிரம்மாண்டமான விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பிற நாட்டவரும், பிற மாநில மக்களும் ஏராளமாகக் கலந்து கொள்கின்றனர்.

ஸ்ரீமதனாமத் ஜாகீர் டிரஸ்ட் என்ற அறக்கட்டளையினால் ஸ்ரீஆஷாபுரா தேவி ஆலயம் நிர்வகிக்கப்படுகிறது. அதிகாலை 4.45 முதல் 1 மணி வரையிலும், பிற்பகல் 3 முதல் இரவு 8,30 மணிவரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்படுகிறது. தேவிக்கு நடைபெறுகின்ற தீபாராதனை இந்த ஆலயத்தில மிகப்பிரபலமானது. அதிகாலை 5 மணிக்கு மங்கள ஆரத்தியும், காலை 9 மணிக்கு துரப் ஆரத்தியும், இரவு 7 மணிக்கு சந்தியா ஆரத்தியும் நடைபெறுகின்றன.

- விஜயலட்சுமி சுப்பிரமணியம்