அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் 9கொப்பரைத் தேங்காயைப் போன்றது ஆன்மஞானம்!

வாருதல் என்னும் செயலானது சீப்பைக் கொண்டு கூந்தலை பிரித்து ஒழுங்காக்குவது. வாரி என்றால் சீப்பு என்பது பொருள். ‘முறையாகப் பிரித்தல்’ என்கிற பொருளில் இதை கையாளலாம். பண்டைய காலத்து ஓட்டு வீடுகளில், வாரி தண்ணீர் என்ற அமைப்பு இருக்கும். அதாவது ஓட்டுக் கூரையில் மழை பெய்கிறபொழுது மழைநீர் பிரிதலை, முறையாகப் பிரிந்து விழும். அந்த வகையில் சடை என்பது முடிகள் பல இணைந்து கற்றையாகி விட்ட நிலையில் உள்ள முடியை குறிக்கும். அப்படி கற்றையாகிவிட்ட முடியானது பிரிதலை குறித்ததால் வார் சடை எனப்படுகிறது.

இந்த முடியை பற்றி சிற்பக்குறிப்பில் ஐந்திற்கும் மேற்பட்ட நிலைகள் கூறப்படுகின்றன.

1. வ்யுப்தகேசம் - மழிக்கப்பட்ட தலை (மொட்டை) - பழனியாண்டி
2. வ்யோமகேசம் - முடியில்லாத (வழுக்கை) தலை - ருத்ரன்
3. ஜடை - கற்றை சடை (கற்றையாக இருக்கும் நிலை) - தட்க்ஷிணாமூர்த்தி
4. கேசம் - வாரி முடிக்கப்பட்ட முடி - கல்யாணசுந்தரர்
5. வார்சடை - கற்றையாக இருக்கும் நிலையில் இருந்து பிரிந்தது - நடராஜர்

இது போன்ற முடி அலங்காரங்களைக் கொண்டு இறைவனை உறுதி செய்யலாம். அவற்றில் விரிசடை என்பது நடராஜரையே குறிக்கும்.
சிவபெருமான் கற்றை சடையை உடையவர். நின்று, இருந்து, கிடந்து இருக்கும் நிலையில், சிவபெருமான் ஆடும்பொழுது அவர் ஆடிய வேகத்தில் சடை பிரிந்தது. அப்படி பிரிந்த நிலையில் வார் சடை எனப்பட்டது. இதிலிருந்து நடராஜர் மின்னல் மற்றும் ஒலி வேகத்தில் ஆடுகிறார் எனப் புரிகிறது. அந்த வேகத்தில் மட்டுமே வார் சடை பிரியும். அந்த வேகம் இல்லை எனில் சடை பிரியாது. நடராஜரின் ஆடல் வேகத்தை குறிப்பதற்கு மட்டுமே சிற்பசாஸ்திரம்
வார் சடையைப் பயன்படுத்துகிறது.

நடராஜரை சுற்றியுள்ள வட்டத்தில் ஒளியை சுட்ட சுடரும், ஒலியை சுட்ட வளையமும் போடப்பட்டிருக்கும். இத்தகைய நுட்பங்களை எல்லாம் தான் உணர்ந்து ‘வார்சடை’ என்று அபிராமி பட்டர் நுட்பமாக குறிப்பிட்டுள்ளார். கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதிர்வேனில் ஆகியன இயற்கை வழங்கும் பருவ காலங்கள்.

ஆவணி, புரட்டாசி - கார்; ஐப்பசி, கார்த்திகை - கூதிர்; மார்கழி, தை - முன்பனி, மாசி, பங்குனி - பின்பனி, சித்திரை, வைகாசி - இளவேனில், ஆனி, ஆடி - முதிர்வேனில் என்ற காலக்கணக்குபடி அதிகமாகப் பனி நிலவும் மார்கழியைப் ‘பனிதரும்’ என்று குறிப்பிடுகின்றார்.
திங்கள் என்கிற வார்த்தை சந்திரனையும் குறிக்கும். (ஹிமகரன் - பனியை செய்பவன் சந்திரன்). ‘பனிதரும் திங்களும்’ என்பதால், ஜடையில் இருக்கும் சந்திரனைக் குறிப்பிடுகிறார்.  ஆருத்ரா அபிஷேகமானது, மார்கழி மாத ஆதிரை நட்சத்திரத்துடன் கூடிய பெளர்ணமி அன்று நடைபெறுகிறது. இந்த நோக்கத்திலும் ‘பனிதரும் திங்களும்’ என்று குறிப்பிடுகின்றார். இந்த ஆருத்ரா அபிஷேகமானது நடராஜ திருமேனிக்கு மட்டுமே செய்யப்படுவது என்பதால் இந்த வார்த்தைகளாலும் நடராஜப் பெருமானையே சூட்டுகிறார்.

சிற்பத்தில் பாம்பானது குடைபிடித்த தோரணையில், படமெடுத்தும், கழுத்திலும், கையிலும், இடையிலும் அணிகலனாகவும், கையில் ஆயுதமாகவும் காணப்படும். உதாரணத்திற்கு: பாம்பு குடை - மாரியம்மன், கழுத்தில் பாம்பு - ம்ருத்யுஞ்ஜயர், கையில் பாம்பு - அகோராங்த்திர மூர்த்தி, இடையில் பாம்பு - பிக்ஷாடனர், கையில் ஆயுதமாய் பாம்பு - தட்ஷிணாமூர்த்தி.

இப்படி பாம்பு அமைந்திருக்கும் நிலையை வைத்து என்ன மூர்த்தி என்று குறிப்பிடலாம். அந்த வகையில் பாம்பு தொங்கிக் கொண்டிருப்பது நடராஜர் மூர்த்தத்தில் மட்டுமே. அதனாலேயே அபிராமி பட்டர் இந்த பாடலை பொறுத்தவரை நடராஜரை மட்டுமே குறிப்பிடுகிறார் என்று தெளிவாகிறது.
பகீரதி என்ற சொல் கங்கையை குறிக்கும். இதை சடையில் தரித்தவர் சிவபெருமான். சிற்ப நூல், கங்கையை பாதி பெண், பாதி மீன் வடிவம் கொண்டதாக அமைக்கும். அதை சடையில் ஒட்டியவாறு நடராஜ மூர்த்தத்தில் அமைத்திருப்பர். ‘பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும்’ (பாடல் - 4) என்ற சொற்றொடர், நடராஜாவின் சடையைப் பற்றிய வர்ணனையாக அமைந்திருக்கிறது.

சிவபெருமான், தன் கற்றை சடையில் சந்திரனை சடையில் முறையாக சொருகியும், கங்கையை முறையாக வெளியில் செல்லாதபடி சுற்றிலும், பாம்பைக் கட்டி வைத்திருப்பர். ஆனால் நடராஜர் சடையில் இருக்கும் இந்த மூன்றும், நாட்டிய வேகத்தினால் நிலைத்தடுமாறி சந்திரனும், கங்கையும், சடையில் ஒட்டிக் கொண்டும், பாம்பு கையில் தொங்கிக் கொண்டும் அமைந்திருக்கிறது.  தன் இடம்மாறி, நிலைமாறி நிற்கிறது என்பது பொருள்.

புனிதம் என்கின்ற சொல்லுக்கு தூய்மைபடுத்துவது என்று பொருள். மனிதன் ஐந்து பொருட்களின் கலவையானவன். உடல், உள்ளம், அறிவு, ஆன்மா, எண்ணம் இந்த ஐந்தில் ஒன்று இல்லை என்றாலும் பூரண மனிதன் ஆக மாட்டான். அது எல்லாம் சரியாக அமைந்து தன் இச்சைபடி செயல்பட்டால் மாசுபடுவான். இறையருள்வழி இவை ஐந்தையும் தூய்மைப்படுத்தினால் மட்டுமே மனிதன் தூய்மையாவான். அப்படி தூய்மைபடுத்துபவனே புனிதன் எனப்பட்டான். இந்த இடத்தில் தூய்மைப்படுத்துபவன் சிவபெருமான் (நடராஜர்), தூய்மை செய்யப்படுபவன் மனிதன். அதனால் சிவபெருமானை (நடராஜரை) அவர் பெயரை கொண்டு குறிப்பிடாமல், தன்னை தீட்சையால், அசுத்தம் (மலம்) அழித்து ஞானத்தை உள்ளத்தே படைத்து தூய்மைப்படுத்தியதால் ‘படைத்த புனிதரும்’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகின்றார்.

கீழ்க்காணும் வரிகள் மேலும் அதை உறுதி செய்கின்றன. ‘தலைமேல் வலிய வந்து ஆண்டு கொண்ட’ (பாடல் - 32) என்று தீட்சையைக் குறிப்பிடுகிறார்.
தத்துவ நோக்கில், உடலை புனிதமாக்குவது - பாம்பு, உள்ளத்தை புனிதமாக்குவது - சந்திரன், அறிவை புனிதமாக்குவது - நெருப்பு,  ஆன்மாவை புனிதமாக்குவது - கங்கை, எண்ணத்தை புனிதமாக்குவது - கொன்றை. பாம்பைத் தத்துவ பொருளாக கூறுமிடத்து மூச்சுக்காற்றாக சொல்கிறார். அது உடலை தூய்மைப்படுத்தும் அதனால் தான் அது, பவன அசனி - (காற்றை உணவாக உண்பது) எனப்படுகிறது.

உள்ளத்தை சந்திரனாகக் குறிப்பிடுகின்றார். சந்த்ர மா மனசோ ஜாத: - புருஷ ஆக்தம் (சந்திரன் மனதாக தோன்றியது)
நெருப்பை அறிவாகக் குறிப்பிடுகிறார். ‘குரூர் அக்கினிர் த்விஜாதீநாம்’ என்ற ஆகம வசனம், அக்னியை அறிவை போதிக்கும் குருவாக குறிப்பிடுகிறது. இது நடராஜர் சிலையில் அக்னி மண்டபமாக (சுடராக) காட்டப்படுகிறது. ஆன்மாவாக வழிபடுபவர்களை சிற்பத்தில் காட்டுகிறார்கள். பதஞ்சலி, வியாக்ரபாதர், தீட்சிதர், மாணிக்கவாசகர், பொதுவான பக்தர் என யார் வழிபடுகிறாரோ அவரே ஆன்மாவாகிறார்.

சித்தத்தில் (புத்தியில்) எப்பொழுதும் இறைவியை பொருந்தி இருக்கும்படி பிரார்த்திக்கிறார் அபிராமி பட்டர். இறைவியானவள், மொழிக்கும் நினைவிற்கும் எட்டாதவள். அப்படிப்பட்ட தன்மை உடையவளை, தான் புத்தியுள் எப்போதும் பொருத்திக் கொள்ளுதல் இயலாது என்பதால் மொழிக்கும் நினைவிற்கும் எட்டும்படியாக கருணையினால் அருள் செய்து என் புத்திக்குள் பொருந்தும் அளவிற்கு எளிமையாய் தோன்றி அருள்புரிய வேண்டுகின்றார்.
மொழிக்கும் நினைவிற்கும் எட்டாத நின்திருமூர்த்தி (87), பாரில் உன்னை சந்திப்பவர்க்கு எளிதாம் (14) என்ற வரிகள் இதை மேலும் உறுதி செய்கின்றன.

மனிதரும், தேவரும், மாயா முனிவரும் வந்து சென்னிக்
குனிதரும், சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல்
புனிதரும், திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயுமென்புந்தி எந்நாளும் பொருந்துகவே (பாடல் - 4)

அந்தணர் வீடுகளில் ஹோமம் வளர்ப்பதற்குத் தேவையான சில பொருட்களை நிரந்தரமாக வைத்திருப்பார்கள். அவற்றில்  கொப்பரைத் தேங்காயும் ஒன்று. அதையே உதாரணமாக கொண்டு இப்பாடல் வரிகளுக்கும் விளக்கம் சொல்லலாம். தேங்காயை மட்டையுடன் தண்ணீரில் ஊற வைத்து வெயிலில் காய வைப்பர். இதனால் தேங்காயில் உள்ள இளநீர் வற்றி ஓடை விட்டு தேங்காய் தனியே பிரிந்துவிடும். கோப்பரைத் தேங்காய் தயாரிக்கும் முறை இது. அதுபோலவே உமையம்மையானவள் ஆன்மாக்களின் ஆணவ மலத்தைப் போக்கச் செய்ய, தாய் மூலமாக மாயாமலமாகிய தண்ணீரில் ஊற வைத்தும், கர்ம மலமாகிய வெம்மையால் காயவைத்தும் ஆன்மாவோடு இரண்டற ஒட்டியுள்ள ஆணவ மலமாகிற ஓட்டைவிட்டு நீக்கி பூரணமாக ஆன்ம ஞானத்தை அருள்வாள். இதையே இப்பாடல் வரிகள் வலியுறுத்துகின்றன:

பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர்முலையாள்
வருந்திய வஞ்சி மருங்குதல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சி அமுதாக்கிய அம்பிகை அம்பிய மேல்
திருந்திய சுந்தரி அந்தரி, பாதம் என் சென்னியதே. (பாடல்-5)

 ‘பொருந்திய’ - இது ஒரு தத்துவச் சொல். சக்தி தத்துவத்தின்படி ஆன்மாவில் அனாதியாகவே பொருந்தியிருப்பது ஆணவ மலம். இதை, ‘படிக்கின்ற ஒருவனுக்கு படிப்பதற்கு தடையான இருட்டை போக்க, மின்சாரத்தால் மின்விளக்கை இயக்கி ஒளிர்விடச் செய்வதுபோல்’ என்பதாகப் புரிந்துகொள்ளலாம். ஆன்மாக்களாகிய நம் பொருட்டு ஆணவ இருட்டால் அறிவு மறைக்கப்பட்டிருப்பதை, கர்மமலமான மூச்சுக்காற்றினால், மாயாமலமான உடலை இயக்கி அறிவைப்பெற உயிருடன் ஏற்கனவே பொருந்திய அறியாமையை நீக்க, உடலையும், மூச்சையும் பொருத்துகின்றாள் அம்பிகை.

படிப்பது - ஆன்மாக்களாகிய நாம்
இருட்டு - ஆணவமலமான, நம் அறியாமை
மின்விளக்கு - மாயாமலமாகிய நமது உடல்
மின்சாரம் - கர்ம மலமான நாம் விடும் மூச்சு காற்று அந்தவகையில் யாவற்றிற்கும் அடிப்படையான ஆன்மாவுடன் இணைந்தே இருக்கின்ற ஆணவமலத்தையே ‘பொருந்திய’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார் பட்டர்.

‘முப்புரை’ - இச்சொல்லானது புணர்ச்சி நெறியில் மூன்று+புரை என்று இணைந்து முப்புரை என்றானது. ‘மூன்றன் உறுப்பு அழிவும் வந்ததும் ஆகும்’ - நன்னூல் நூற்பா-190

மூன்று என்பது எண், புரை என்பது குற்றம். ‘முப்புரை’ என்றால் மூன்று குற்றம். ஆன்மாவிற்கு (உயிருக்கு) ஆணவமலம் (அறியாமை), கன்மமலம் (மூச்சு), மாயாமலம் (உடல்) - இந்த மூன்றும் குற்றமாகும் என்கிறார்.

‘செப்புரை’ - செப்பு+ உரை. செப்பு என்பதற்கு சொல் என்று பொருள். சொல் என்பது சொல்வனவற்றையும், பொருளோடு புணர்ந்த ஒலி என்பதையும் குறிக்கும். ‘உரை’ என்பது ஆகமப் பிரமாணம் என்றும், ‘உரக்க ஜெபிக்கும் வேதமொழி’ (தமிழ்ப் பேரகராதியின்படி) என்றும் பொருள்படுகின்றது. ‘செப்புரை’ என்பது ஆகம, மற்றும் வேத மந்திர உச்சரிப்பு ஆகும்.

‘செய்யும்’ - செய்யு என்பது ‘முப்புரை செப்புரை செய்யும்’ என்றே பொருள்படும். இதற்கு ஆன்மாக்களின் குற்றங்களான முப்புரையை நீக்குவதற்கு வேதங்களிலும், ஆகமங்களிலும், சொல்லப்பட்டபடி சிந்தனையாகவும், சொல்லாகவும், செயலாகவும் மனம், வாக்கு, காயத்தாலான முயற்சியால் (பூஜையால்) இயல்பாகவே பொருந்திய ஆணவமலத்தை (அறியாமை) நீக்குவதற்கு இறைவியால் ஆன்மாவில் பொருத்தப்பட்ட கர்மமலம் (மூச்சு) மாயாமலம் (உடல்), படைத்து, வேதாகம வழியினால் அதை நீக்குவது என்பது பொருள்.

‘புணர்’ - இயல்பாகவே உடலில் உள்ள சூட்டை போக்க எண்ணெய், சிகைக்காய் தூள் தேய்த்து நீராடும்போது உடல் குளிர்ச்சியடைகிறது. அதுபோலவே இறையருளானது ஆன்மாவின் குற்றமான சூட்டை நீக்கி சிவத்தின் குணமான குளிர்ச்சியுடன் புணர்கிறது. இதையேதான் ‘புனலினும் தண்ணியன்’ என்கிறது தேவாரம்.

இங்கு, புணர் என்பதற்கு இணைப்பது என்று பொருள். அனாதியாக - அறிவற்று, இயக்கமற்று, விழைவற்று - கிடக்கும் ஆன்மாக்களை இறைவி தனது கருணையினால் ஆன்மாக்களுடன்  கன்மம், மாயா மலங்களைக் கூட்டி, ஆணவ மலத்தைப் போக்க பரஞானம் என்கிற ஆகமத்தையும், ஞானம் என்கிற வேதத்தையும் பயன்படுத்தி ஆன்மாக்களை மலத்திலிருந்து நீக்கி சிவத்தோடு புணரச் செய்வதையே ‘புணர்’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார். இதையே ‘நின் அருட்புனலால் துடைத்தனை’ என்று பாடல் 27லும் காணலாம்.

‘முலையாள்’ - அந்தாதியை பொறுத்தவரை இந்த சொல் உமையம்மையை குறித்தது. இந்த சொல்லால் ஏன் குறிப்பிட வேண்டும்?

‘காரால் குழலம்மை’, ‘வாள் நெடுங்கண்ணி’ என்று குழலையோ, கண்ணையோ, குறிப்பிடலாமே! ஏன் ‘முலையாள்’ என்று குறிப்பிடுகிறார்? உமையம்மையின் முலைகளானது, சாதாரண பெண்களுக்கு உரியது போன்ற, குழந்தைகள் உடலை வளர்க்கும் பாலை சுரப்பதல்ல; உள்ளத்தையும், அறிவையும், ஆன்மாவையும் வளர்க்கின்ற பெருமை உடையது, தனித்தன்மை வாய்ந்தது.

தொடர்ந்து இடையூறின்றி, சிவனடியை மட்டுமே சிந்திப்பதனால் பெறுவது சிவஞானம். பிறவி என்ற துன்பத்தை இல்லாமலேயே செய்யும் ஓங்கிய ஞானம். ஆன்மாவிற்கு, உடலுக்கு, உள்ளத்துக்கு, அறிவிற்கு, வருகின்ற துன்பமான அடிமைத்தனம், உடலுக்கு நோய், உள்ளத்திற்கு கவலை, அறிவிற்கு குழப்பம் இவற்றை அறவே நீக்கும் ஞானம். உடலிற்கு ஆரோக்கியத்தையும், உள்ளத்துக்கு மகிழ்ச்சியையும், அறிவிற்கு தெளிவையும், ஆன்மாவிற்கு அடிமைத்தனம் நீக்குவதுமாகிய கலைஞானம்.

இந்த சிவஞானம், ஓங்கிய ஞானம், கலைஞானம் மூன்றும் மனித முயற்சியால் பெறுவதாகும். சிவபெருமானே அறிவித்தாலன்றி அறிய முடியாதது. ஆன்மாவின் சுய முயற்சியால் பெற முடியாதது. ஞானங்களுள் முதன்மையானது. உமையம்மையின் இடது முலைப்பால் ஆன்மாக்களுக்கு சிவஞானம், பிற உயிர்களைவிட ஓங்கிய ஞானம், கலைஞானம் ஆகியவற்றைத் தரவல்லது. வலது முலைப்பால் ஆன்மாக்களால் முயன்றாலும் முடியாத, சிவனால் மட்டுமே தரவல்ல மெய்ஞானத்தை தரவல்லது ஆகும்.

இதையே பட்டரின் ‘பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேர் அருள்கூர்’ (பாடல்- 9) என்ற வரி மேலும் உறுதி செய்கிறது. வடமொழியானது இதை பரஞானம், அபரஞானம் என்று பிரித்து கூறுவதும் நோக்கத்தக்கது. இந்த சிறப்புகளை நமக்கு அறிவுறுத்தவே முலையாள் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார் பட்டர்.

சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானம்
பவமதனை யறமாற்றும் பாங்கினிலோங் கியஞானம்
உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்
(பெரிய புராணம் - 64வது நாயனார்)

இத்தகைய ஞானத்தை தரவல்லது என்கிறார் சேக்கிழார்.

‘வருந்திய வஞ்சி மருங்குள்’ - ‘வஞ்சி’ என்னும் சொல் சினையால் வந்த பெயர், கொடி என்பது பொருள். கொடி போன்ற இடையை கொண்டதனால் கொடி என்பது உமையம்மையை குறித்தது. ‘கொடியே இளவஞ்சி கொம்பே’ (பாடல் - 22) கொடி என்பது இங்கே இறைவியின் இடையைக் குறிக்க பட்டர் பயன்படுத்தியுள்ளார்.

‘நாப்யாலவால ரோமாலி லதா பல குசத்வயீ லக்ஷ்யரோம லதாதாரதா ஸமுன்னேய மத்யமா ஸ்தன பாரதலன் மத்யபட்ட பந்த வலித்ரயா’- என்று இதை உறுதி செய்கிறது ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம்.

‘வருந்திய வஞ்சி’ என்று ஏன் சொன்னார்? மூன்று காரணங்கள்: வடிவம், தத்துவம், சிற்பம்.

கொடி இடையானது மென்மையாகவும் ஒல்லியாகவும் இருப்பதனால் பருமனாக உள்ள தனத்தின் பாரத்தைத் தாங்க இயலாமல் சுமையால் வருந்துவதாக சொல்கிறார். இதையே லலிதா ஸஹஸ்ரநாமம், ‘ஸ்தன பாரதலன் மத்யபட்ட வநித்ரயானய நம’ என உறுதி செய்கிறது.

தத்துவ நோக்கில் உமையம்மையைக் காணும்போது, இறைவனைப் பற்றிய அறிவாகிற பரஞானம் ஒரு ஸ்தனம், உலக உயிர்களைப் பற்றிய அபர ஞானம் ஒரு ஸ்தனம். அறியாமை, ஆணவமாகிய பருத்த இரண்டு ஸ்தனங்களின் சுமையால் நுண்ணியமான இடையானது வருந்துகிறது. தத்துவ நோக்கில்் அறிவாகிய ஞான நிறைவால் (பரஞானம் + அபர ஞானம்) அறியாமையாகிற ஆணவம் சுருங்கும்.

சைவ சித்தாந்த கருத்தின்படி முப்பொருளும் உண்மை. அதில் ஆணவ மலமும் நித்தியம். அதுபோலவே வலுகுன்றும் ஞானத்தால் வலுகுறைந்த அறியாமை வருந்தும். அந்த வருத்தத்தையே இடைமேல் ஏற்றி (தற்குறிப்பு ஏற்ற அணி) ‘வருந்திய வஞ்சி’ என்று குறிப்பிடுகின்றார், இதையே ‘தயங்கு நுண்ணூல் இடையர்களை’ என்றும் பாடல் 84லும் குறிப்பிடுகிறார்.

சிற்ப சாஸ்திரத்தின்படி, இயல்பான அளவைவிட பருத்திருப்பது, சிறுத்திருப்பது, அளவாயிருப்பது என்ற வகையில், காளியைப் போல முலையைப் பெரிதாகவும் இடையை சிறிதாகவும் கொண்ட உமையம்மையின் திருஉருவம் மோட்சத்தைக் கொடுக்கும்.

 ‘பென்னம் பெரிய முலையும் சின்னஞ்சிய மருங்கினில்’ (பாடல்-53) பேச்சியம்மன் - இடைபெரிதாகவும், முலை சிறிதாகவும் உள்ள உமையம்மையின் தோற்றம் ’போகத்தை கொடுக்கும் பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த’ (பாடல் - 14) சிவகாமசுந்தரி - முலையும் இடையும் குறையாமலும் மிகாமலும் அமைந்தால் ஞானத்தை கொடுக்கும்.

‘செங்கலம் முலையாள்’ (பாடல் -21) ‘மனோன்மணி’ - எல்லா சிவன் கோயில்களிலும் ‘உடனாய’ என்று குறிப்பிடப்படுகின்ற பெயருக்கு உரித்தான உமையம்மையாவாள். இவளுக்குமேல் எந்த சக்தியும் இல்லை. உயர்வுற உயர்ந்து நிற்கின்ற அம்பாள்.

எல்லா இடங்களிலும் நின்ற திருக்கோலத்தில் மட்டுமே இருப்பாள். நான்கு அல்லது இரண்டு கரங்களை மட்டுமே கொண்டிருப்பாள். இவள் இறைவனின் அருளே வடிவானவள், மீனாட்சி-சுந்தரேஸ்வரர், விசாலாட்சி-விஸ்வநாதர், பிரம்மவித்யா-ஸ்வேதாரண்யேஸ்வரர் போல.

அபிராமி பட்டரை பொறுத்தவரை உமையம்மையின் வடிவத்தை பலவாறு குறிப்பிட்டாலும் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தது: ‘சிவகாம சுந்தரி’ - நடராஜா, ‘மகிடன் தலைமேல் அந்தரி’ (துர்க்கை)  இதுபோல் சக்தியின் பிற வடிவங்களும் குறிப்பிடப்படுகின்றன என்றாலும், எல்லாவற்றையும்விட உயர்ந்ததாக சாஸ்திரங்களில் சொல்லப்படுகின்ற உமையம்மையின் திருஉருவம், சிற்ப சாஸ்திரத்தின்படி, மனோன்மணி ஆகும். சிவலிங்கத் திருமேனியின் சக்தியை மட்டுமே குறிக்கும்.

சாக்த உபாசகர்களை பொறுத்தவரை அஷ்டாதசமகாவித்யா (பாடல் - 18), தசமகாவித்யா (பாடல் - 10) என்று உமையம்மையின் வெவ்வேறு வடிவ நிலையில் ஒன்றைவிட ஒன்று உயர்ந்ததாக விளங்குகிறது. உபாசகர்கள், சாத்திரங்கள் குறிப்பிடும் தேவதைகள் அனைத்தையும் வழிபட்டு அதன் அருளை பெற்று கடைசியாக வழிபடும் உமையம்மையே மனோன்மணி எனப்படுவாள்.

நாயகி, நான்முகி, நாராயணி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு வாயகி, மாலினி, வாராகி,  சூலினி, மாதங்கி, உடையாள் கை நளின பஞ்ச சாயகி (தொகை பெயர்), பாலாதிரிபுர சுந்தரி,  மகா திரிபுர சுந்தரி, திரிபுர சுந்தரி, சுந்தரி, சிவகாமசுந்தரி - இவர்கள் எல்லோரையும்விட தலைமையாக இருக்கக்கூடிய சக்தியே மனோன்மணி என்று குறிப்பிடுகின்றார். (ஆனால், இந்தப் பாடலை பொறுத்தவரை இவர்கள் 17 பேரையும் குறிப்பிடாமல் முதன்மையான சக்தியாகிய மனோன்மணியையே  குறிப்பிடுகிறார் பட்டர்.)

மனோன்மணி என்ற சக்தியை, ‘சதுஷ்ஷஷ்டி கமலாத்மிகாயை, சதாசிவ குடும்பினி, சதாசிவ பதிவிரதா, மனோன்மணி, பஞ்ச கிருத்ய பாராயணா, அனுக்கிரகதா’ என்று லலிதா ஸஹஸ்ரநாமம் இவளையே குறிப்பிடுவதிலிருந்து இதை மேலும் உறுதி செய்துகொள்ளலாம். சிவாகமத்தைப் பொறுத்தவரை சிவன் கோயிலில் உள்ள அனைத்து தேவதைகளும் சிவனிடத்தில் ஒடுங்கும்.

சிவன் சக்தியிடத்து ஒடுங்குவார். அதுதான் பள்ளியறையாக வழிபடப்படுகிறது. இதையே ‘சக்தி தழைக்கும் சிவமும்’ (பாடல் - 29) என்கிறார் அபிராமி பட்டர். இது உலகத்தை ஆக்கும், காலத்துக்கும் அருள் செய்யும், காலத்துக்கும் பொருந்தும், ஆனால் உலகத்தை அழிக்கும் காலத்தில் சக்தி சிவனிடத்தில் ஒடுங்கும்.

(தொடரும்)