சண்டீசர் பெயரில் ஆவணப் பதிவு செய்யப்பட்ட சொத்துகள்!ஒவ்வொரு தலத்திற்கும் மூர்த்தி, தீர்த்தம், விருட்சம் என மூன்று சிறப்புகள் உண்டு. இறைத் திருமேனியின் மகத்துவம், திருக்குள மகிமை, தலமரத்து மருத்துவப் பயன் என்ற இவற்றின் அடிப்படையில்தான் திருக்கோயில்கள் சிறந்து விளங்குகின்றன.

சிலப்பதிகாரத்தின் இந்திர விழவூரெடுத்த காதையில் பூம்புகாரின் இலஞ்சி மன்றத்தில் திகழ்ந்த பொய்கையில் மூழ்கி மக்கள் உடல்நலம் பெற்றனர் என்ற குறிப்பினை இளங்கோவடிகள் சுட்டியுள்ளார். மேலும் கனாத்திறமுறைத்த காதையில் சோமகுண்டம், சூரிய குண்டம் எனும் இரண்டு தடாகங்களில் மூழ்கி அங்குள்ள கோயிலை வழிபடுபவர் பெறும் சிறப்பு களையும் எடுத்துரைத்துள்ளார். திருவெண்காட்டுச் சிவாலயத்தில் பதிகம் பாடிய திருஞான சம்பந்தர்,

‘‘பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு
ஆயினவே வரம் பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குள நீர்
தோய் வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே.’’

- என்று குறிப்பிட்டு அக்கோயில் வளாகத்தினுள் திகழும் மூன்று திருக்குளங்களின் தீர்த்த மகிமையை எடுத்துரைத்துள்ளார்.திருவாரூர் திருத்தலத்தின் சிறப்பினைக் குறிப்பிடுவோர் ‘‘கோயில் ஐவேலி, குளம் ஐவேலி, செங்குழு நீரோடை ஐவேலி’’ என்பர். மேலும் அவ்வாலயத்தினை ‘கமலாலயம்’ என்றே அழைத்து வந்தனர்.

பூங்கோயில் எனப்பெறும் புற்றிடங்கொண்டார் திருக்கோயிலும், திருவரநெறி என்ற அசலேசமும் ஐவேலி பரப்பளவுடைய ஒரே வளாகத்தினுள் திகழ்கின்றன. பூங்கோயில் கிழக்கு நோக்கியும், அரநெறி மேற்கு நோக்கியும் அமைந்துள்ளன. பூங்கோயிலுக்கு கிழக்காகவும், கீழை பிரதான ராஜகோபுரத்திற்கும் இரண்டாம் ராஜகோபுரத்திற்கும் இடையேயும் தேவாசிரிய மண்டபத்தினை ஒட்டியவாறும் அங்கு சிறுகுளமொன்றுள்ளது. அதனை ‘‘சங்கு தீர்த்தம்’’ என கரையில் உள்ள கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

கிரந்தலிபியில் வடமொழிப் பாடலாக அமைந்த அந்த கல்வெட்டின் தமிழாக்கமாவது: ‘‘கமலாலயத்தின் மத்திய பகுதியில் சங்கு தீர்த்தம் என இது அழைக்கப்பெறுகின்றது. வன்மீகர் சர்வ ரோகங்களையும் போக்கக்கூடியவர். சர்வ ரோகங்களையும் போக்கக்கூடிய பால்குண்டம் இது. சுபம். அங்கக்குறைவுற்ற வியாதிவுள்ளவர்கள் பங்குனி அமாவாசைக்கு  அடுத்த நாள் முதல் சித்திரை அமாவாசை வரை இரவு ஆகாரம் இல்லாமல்  நடுநிசியில் இதில் ஸ்நானம் செய்யவும். இழந்த அங்கங்களின் பிணி நீங்கப் பெற்று ஒளியுடன் திகழ்வர். இதில் ஐயமில்லை.’’

அந்நாட்களில் மருத்துவ குணம் நிரம்பப் பெற்றதாக இத்திருக்குள நீர் விளங்கி இருந்திருக்கிறது. தற்போது நீரின்றி வறண்டு காணும் இக்குளத்தையும், கல்வெட்டின் கூற்றையும் காணும்போது வருத்தமே மிகும். இந்த பாற்குளத்திற்கு அருகிலுள்ள தேவாசிரிய மண்டபத்திற்குள் நாம் நுழைந்தால் விதானம் முழுவதும் முசுகுந்த புராணக் காட்சிகளையும், ஆரூர் கோயில் விழாக் காட்சிகளையும், எதிர்புற சுவரில் மனுநீதிச் சோழனின் வரலாற்று நிகழ்வுக்காட்சிகளையும், வண்ண ஓவியப் படைப்புக் களாகத் திகழ்வதைக் கண்டு மகிழலாம்.

இவற்றை முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு தீட்டியுள்ளனர். மனுநீதிச் சோழனின் வரலாறு இடம் பெற்றுள்ள பகுதியில் ஆரூர் திருக்கோயிலும் அதன் மேற்றிசையில் அமைந்துள்ள தீர்த்தகுளத்தின் எழிற்காட்சியும் காணப்பெறுகின்றன. மேற்கு ராஜகோபுரம், குளத்தின் நடுேவ திகழும் நாகநாத சுவாமி கோயில், குளக்கரையில் அமைந்துள்ள சிறு கோயில்கள், நீரில் காணப்பெறும் மீன்கள், அவற்றின் இடையே ‘தேவ தீர்த்தம்’ எனத் தமிழில் எழுதப்பெற்றுள்ள வாசகம் ஆகியவை வண்ணப் பொலிவோடு அங்கு விளங்குவதைக் காணலாம்.

இந்த தேவ தீர்த்தக்குளம்தான் ஐவேலி பரப்பளவுடையது. இதன் மேற்கு  திசை கரையில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தை ‘திக்கு நிறைந்த விநாயகர் கோயில்’ என ஆரூர் கோயிலின் சோழர்காலக் கல்வெட்டொன்று கூறுகின்றது. குளத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தை ‘மாற்றுரைத்த விநாயகர் கோயில்’ எனக் குறிப்பிட்டு, சுந்தரர் வரலாற்றோடு இக்கோயிலினைத் தொடர்புபடுத்திக்கூறுவர். இக்கமலாலய குளத்தினை பண்டொருகால் அமணர்கள் சிதைத்தபோது பிறவிக் குருடரான தண்டியடிகள் குளத்திற்கும் கரைக்கும் கயிறு கட்டி அதனைப் பிடித்தவாறே குளத்தைத் தோண்டி சீர் செய்தார் என்பதையும், அதே தீர்த்த நீரில் மூழ்கி கண்ணொளி பெற்றார் என்பதையும் சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் குறித்துள்ளார். இவ்வரலாறு காட்டும் சிற்பக்காட்சி, தாராசுரம் சிவாலயத்தில் இடம் பெற்றுள்ளது. நமி நந்தியடிகள் இக்குளத்து நீரினை எடுத்துச்சென்று திருவாரூர் அறநெறியில் திருவிளக்கிலிட்டு தீபங்கள் எரியச் செய்தார் என்பதை,

‘நாரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி
நீரால் விளக்கிட்டமை நீள்நாடு அறியும் அன்றே’’

- என்று திருநாவுக்கரசர் பெருமான் கூறுவதோடு, சேக்கிழார் பெருமான் நமி நந்தியடிகள் புராணத்தில் இவர் தம் வரலாற்றை விளக்கமுற எடுத்துரைத்துள்ளார். நமி நந்தி அடிகள் திருக்குளத்து நீரைச் சொம்பில் எடுத்துச் செல்வதும், அறநெறி முன்பு அந்நீர் கொண்டு விளக்கிடுவதுமாகிய காட்சிகள் அடங்கிய சிற்பத் ெதாகுதியொன்று தாராசுரம் ஆலயத்திலேயே காணப்பெறுகிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் விருத்தாசலம் எனப்பெறும் திருமுதுகுன்றத்தில் ஈசனிடமிருந்து பெற்ற பன்னீராயிரம் பொன்னை மச்சம் வெட்டிக்கொண்டு மணிமுத்தா நதியில் இட்டார். பின்பு ஆரூர் வந்து தேவ தீர்த்தமாம் கமலாய குளத்தின் வடகீழ் பாரிசத்தில் நீரில் இறங்கி நின்று ‘‘பொன் செய்த மேனியினீர்’’ எனத் தொடங்கும் தேவாரப் பதிகம் ஒன்றினைப் பாடி, குளத்திலிருந்து முன்னர் நதியில் விட்ட பொன்னை எடுத்து பரவை நங்கையாரிடம் அளித்தார். அத்தகு சிறப்பு இத்தீர்த்த குளத்திற்கு உண்டு.

கமலாலய தீர்த்த குளத்தின் நான்கு கரை களிலும் 64 தீர்த்தத்துறைகள் உள்ளன. இக்கோயிலுக்கும் குளத்திற்கும் வடக்காக ஆரூரின் செங்கழுநீர் ஓட முன்பு ஐவேலி பரப்பளவில் திகழ்ந்ததை ஆவணங்கள் குறிப்பிடு கின்றன. ஆனால், இன்றோ அங்கு சிறிய கோரை மண்டிய பகுதியே காணப்பெறுகின்றது. ஓடை முற்றிலுமாக காணாமல் போய்விட்டது. ஆரூர் தியாகேசனுக்கே உரிய செங்கழுநீர் மலர்களைத் தந்த அந்த ஆரூரனின் சொத்து இன்று காணாமல் போன நீர்நிலைகளின் பட்டியலில் சேர்ந்துவிட்டதுதான் வேதனையான செய்தி.

வீதிவிடங்கப் பெருமானாகிய தியாகேச மூர்த்திக்கு நாளும் சூட்டப் பெறுகின்ற செங்கழுநீர் தாமம் (மாலை) பற்றி குறிப்பிடும் பல கல்வெட்டுகள் ஆரூர் திருக்கோயிலில் காணப்பெறுகின்றன. சோழர்கால அக்கல்வெட்டுகள் வரிசையில் திகழும் விக்கிரம சோழனின் நான்காம் ஆண்டு (கி.பி.1122) சாசனமொன்றில் ஆரூர் திருக்கோயிலிலுள்ள ஆதிசண்டேஸ்வர தேவர் என்ற இறைவன் முப்பத்திரண்டரை கழஞ்சு செம்பொன் விலை கொடுத்து இரண்டே முக்கால் வேலி பரப்பளவுடைய நெடுங்குளம் என்னும் குளத்தினை வாங்கி செங்கழுநீர்ப்பூ பயிரிட கொடுத்தார் என்ற சுவையான வரலாற்றுத் தகவல் குறிக்கப் பெற்றுள்ளது.

பூங்கோயிலின் (தியாகராஜர் கோயில்) இரண்டாம் பிராகாரத்தின் தெற்குப் பகுதியின் தென்புறச் சுவரில் பொறிக்கப்பெற்றுள்ள, மேற்குறித்துள்ள கல்வெட்டில்தான் இச்செய்தி காணப்பெறுகின்றது.

‘ஜயங்ெகாண்ட சோழ மண்டலத்து மணவில் கோட்டத்து மணவில்’ என்ற ஊரினைச் சார்ந்த அரும்பாக்கிழான் மதுராந்தகன் பொன்னம்பல கூத்தனான பொற்கோயில் தொண்டைமானார் என்பவர் வீதிவிடங்கப் பெருமானாகிய தியாகேச பெருமானுக்கு நாளும் செங்கழுநீர்த் திருப்பள்ளித்தாமம் (மாலை) அலங்காரம் செய்வதற்காக என்று ஒரு குளம் தேவை எனக்கருதி அதனை வாங்குவதற்கென நூறு பொற்காசுகளை கோயில் பண்டாரத்தில் முதலீடு செய்திருந்தார். இவர் முதற்குலோத்துங்கன் காலத்தில் தில்லையிலும் திருவதிகையிலும் எண்ணற்ற கொடைகளையும், பொற்பணிகளையும் ஏரிகளையும், மண்டபங்களையும் கட்டிய மணலிற்கூத்தன் காலிங்கராயன் என்பவனாக இருத்தல் கூடும் எனக் கருத முடிகிறது.

இவனிடமிருந்து கோயில் பண்டாரம் பெற்ற பொன்னைக்கொண்டு குளம் ஒன்றினை வாங்க கோயில் நிர்வாகத்தினர் முனைந்தனர். அதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர். அதன்படி திருநல்லூரில் உள்ள நெடுங்குளம் எனும் குளமொன்றினை விற்க குலோத்துங்க சோழ வளநாட்டு வேளா நாட்டு திருநல்லூர் ஊரார் முன்வந்தனர்.

இந்த திருநல்லூர் என்பது திருவாரூர் குடவாசல் நெடுஞ்சாலையில் அகரத்திருநல்லூர் என்ற பெயரில் தற்போது விளங்குகின்றது. கோயிலுக்கென உரிய அனைத்து உடைமைகளும், நிலங்களும் பிறவும் சண்டீசருக்கே உரியவை.

சோழர்கால கோயில் ஆவணங்கள் அனைத்தும் சண்டீசர் பெயரில்தான் ஆவணப்பதிவு செய்யப்பெறும். எனவே விக்கிரம சோழ தேவரின் நான்காம் ஆட்சியாண்டின் ரிஷப மாதத்து (வைகாசி) வளர்பிறை திருதியை புதன்கிழமை நாளில் திருவாரூர் மூலஸ்தானமுடையார் கோயிலில் உள்ள ராஜநாராயணன் என்ற மண்டபத்தில் திருநல்லூர் சபையினர் அனைவரும் ஒன்று கூடினர்.

மணவில் அரும்பாக்கிழான் குளம் வாங்க முதலீடு செய்த நூறு காசுகளுக்கு இணையான ராஜராஜன் மாடை எனப்பெறும் செம்பொன் முப்பத்திரண்டு கழஞ்சு பொன்னைத் தங்கள் ஊர் குளத்திற்கு விலையாக ஆரூர் கோயில் ஸ்ரீபண்டாரத்திலிருந்து அவர்கள் பெற்றுக்கொண்டு இரண்டே முக்கால் வேலி பரப்பளவுடைய நெடுங்குளம் என்னும் குளத்தை ஆரூர் கோயில் சண்டீஸ்வரர் பெயரில் ஆவணப் பதிவு செய்துகொடுத்தனர்.

அந்த ஆவணத்தில் குளத்துக்கு நீர் வரத்து, போக்கு ஆகியவை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும், தாங்கள் குளத்து நீரை கூடை கொண்டு இறைக்க மாட்டோம் என்றும் கரையில் தென்னை மரங்கள் பயிரிட்டு அதன் வருவாயிலிருந்து அதனைக் காப்போம் என்றும், குளத்திலிருந்து வடியும் நீரை தாங்கள் பயன்படுத்திக்கொள்வோம் என்றும் குறிப்பிட்டு, ‘‘இப்பிரமாணப்படி கல்லிலும், செம்பிலும் வெட்டிக்கொள்ளப் பெறுவதாகச் சம்மதித்து ஆதி சண்டேஸ்வர தேவர்க்கு விற்றுக்கொடுத்தோம்.

திருநல்லூர் பெருங்குறி மகாசபையோம்’’ எனக்கூறி கையொப்பமிட்டுள்ளனர். இவ்வாறு எழுதப்பெறும் சாசனங்களை சண்டீஸ்வரர் செப்புத் திருமேனியின் கையில் வைத்து நீர் வார்த்து கொடுப்பது பண்டைய மரபு என்பதை ஆரூர் கோயில் கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன. சண்டீஸ்வரர் விலை கொடுத்து வாங்கிய குளம் இன்றும் அகரத் திருநல்லூரில் உள்ளது.