விருப்பமும்,தேவையும்!



வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும்போது கைநிறைய அர்ச்சனைப் பொருட்களைக் கொண்டுசெல்லும் நாம் மனம் நிறைய நிறைவேற்றப்படவேண்டிய விருப்பப் பட்டியலையும் எடுத்துச் செல்கிறோம். அதுவரை நிறைவேறிய நம் விருப்பங்களுக்காக நன்றி சொல்கிறோமோ இல்லையோ, கூடுதல் விருப்பங்களை, நிறைவேற்றித் தரும்படி இறைவனிடம் இறைஞ்சுகிறோம்.

ஏனென்றால், நிறைவேறிவிட்டவையெல்லாம் மறக்கப்படவேண்டியவை, நிறைவேறவேண்டியவையெல்லாம் தொடர்ந்து கோரிக்கைகளாக இறைவன் முன் வைக்கப்படவேண்டியவை என்றவகையில் நாம் நம் பக்தியை வளர்த்துக்கொண்டிருக்கிறோம்.

அதேசமயம் பட்டியலிலுள்ள விருப்பங்களில் எவையெல்லாம் நம்முடைய தேவை பிரிவில் வருகின்றன என்பதையும் நாம் கணக்கு வைத்துக்கொள்வதில்லை. தேவையையும், விருப்பத்தையும் ஒன்றாக்கி நாம் குழப்பிக்கொள்வதுதான் காரணம்.

தேவை அத்தியா
வசியமானது, விருப்பம் ஆடம்பரமானது என்று நாம் பாகுபடுத்திக்கொள்வதில்லை. ‘என் விருப்பத்தை ஈடேற்றிக்கொடு இறைவா’ என்றுதான் நாம் மன்றாடுகிறோமே தவிர, ‘என் தேவையைப் பூர்த்தி செய்து தா,’ என்று கோருவதில்லை.

வசதிகள் என்ற விருப்பங்களைப் பட்டியலிடும் நாம், அவற்றுடன் அவசியம் என்ற தேவைகளையும் இணைத்துவிடுகிறோம். ஏன்? தேவை என்றால் அது ‘போதுமென்ற மனதின்’ நிறைவு. ஆனால், நாம் நிறைவுகொண்டு திருப்தியடையத் தயாராக இல்லை.

அனாவசிய விருப்பங்கள் எப்போது நிறைவேறும் என்று ஏங்க ஆரம்பித்துவிடுகிறோம்.  இறைவன் நம் தேவைகளைப் பூர்த்தி செய்கிறான் என்று நம்ப ஆரம்பித்தோமானால் இப்படி விருப்பப் பட்டியல் நீண்டுகொண்டே போகாது.

அந்தத் தேவைகளையும் மிகச்சரியான நேரத்தில் இறைவன் நிறைவேற்றிவைப்பதை, கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நம்மால் உணர முடியும்.  அப்படியும் ஏதாவது நிறைவேறாத விருப்பம் என்று நமக்கு இருக்கிறதா, அது ஈடேறவில்லையா, அந்த விருப்பம் நம் தகுதிக்கு உட்பட்டதல்ல என்று இறைவன் கருதியிருக்கிறான் என்றுதான் அர்த்தம். அதாவது, நிறைவேறாத விருப்பம், நம் அவசியத் தேவை இல்லை. அந்த விருப்பம் ஈடேறவில்லை என்பதற்காக வருத்தப்படுவதில் அர்த்தமில்லை.

பசித்தால் சாப்பிடுகிறோம், வயிறு நிறைந்தால் மேலும் சாப்பிடுவோமா? அதுபோல தேவை பூர்த்தியானால் சந்தோஷப்படுவோம், மேலும் மேலும் விருப்பங்கள் ஈடேறவேண்டும் என்று எதிர்பார்த்து அந்த சந்தோஷத்தையும் கெடுத்துக்கொள்ளாதிருப்போம்.