முற்பிறப்பில் செய்த தவத்தின் பயன்!



அருணகிரி உலா - 42

திருக்குடவாயில் திருப்புகழில், அருணகிரிநாதர் இத்தலத்தை ‘குடசை மாநகர்’ என்று போற்றுகிறார். பாடலின் முற்பகுதியில், முருகன் குருவாய்த் தமக்கு உபதேசித்தது பற்றியும், பிற்பகுதியில் அவன் தன் பன்னிரு தோள், வேல், மயில் இவற்றை யாரும் காணாதபடி மறைத்து ஞானசம்பதராய்த் தோன்றியது பற்றியும் பாடியுள்ளது தனிச்சிறப்பு வாய்ந்தது.  மயில் மண்டபம், மகர மண்டபத்துடன் கூடிய சந்நிதியில், முருகன், வள்ளி - தெய்வயானையுடன் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு விளங்குகிறான். பாடலின் முற்பகுதியைக் காண்போம்:

சுருதியாய், இயலாய், இயல் நீடிய
தொகுதியாய், வெகுவாய், வெகுபாக்ஷை
கொள் தொடர்புமாய், அடியாய், நடுவாய்
மிகுதுணையாய் மேல் துறவுமாய், அறமாய்,
நெறியாய், மிகு விரிவுமாய், விளைவாய்,
அருள் ஞானிகள் சுகமுமாய், முகிலாய்,
மழையாய், எழு சுடர்வீசும் பருதியாய்,
மதியாய், நிறை தாரகை பலவுமாய், வெளியாய்,
ஒளியாய், எழு பகல் இராவிலையாய் நிலையாய்
மிகு பரமாகும் பரம மாயையின் நேர்
மையை, யாவரும் அறியொணாததை, நீ
குருவாய் இது பகருமாறு செய்தாய் முதல்
நாளுறு பயனோதான்!

பொருள்: வேதமாய், உபநிடதங்களாய், அவற்றினை விரித்து உரைக்கும் நூல் தொகுதியாய், நானாவித சாஸ்திரங்களாய், அநேக மொழிகளில் கூறப்படும் கருத்துகளை உள்ளடக்கிய சாரமாய், அடிப்படையாய், நடுவாய், மிக்க துணையாய், அத்துடன் துறவு நிலையதாய், மிகுந்த விளக்கம் உடையதாய், விளைவுப் பொருளாய், அருள் நிரம்பிய ஞானிகள் அனுபவிக்கும் இன்பப் பொருளாய், மேகமாய், மழையாய், ஏழு நிறங்களுடைய கிரணங்கள் வீசும் சூரியனாய், சந்திரனாய், விண்மீன்களின் கூட்டமாய், பரவெளியாய், ஒளியாய், அதனால் உண்டாகின்ற பகலும் இரவும் இல்லாததாய், நிலைத்துள்ளதாய், எவரும் அறியமுடியாததாய் இவ்வாறு விளங்கும் மேலான பொருளையும், அதன் நேர்மையையும் நீ குருவாய் எனக்கு உபதேசித்தாய்; இதையெல்லாம் உலகோருக்கு எடுத்துக் கூறுவதற்கு திருவருள் புரிந்தாய்! இது முற்பிறப்பில் நான் செய்திருக்கக்கூடிய தவத்தின் பயன்தானோ!

‘‘கருதும் ஆறிரு தோள், மயில், வேல் இவை
கருதொணாவகை ஓர் அரசாய் வரு
கவுணியோர் குல வேதியனாய், உமை கன பாரக்
களப பூண்முலை ஊறிய பாலுணு
மதலையாய் மிகு பாடலின் மீறிய
கவிஞனாய் விளையாடிடம் வாதிகள் கழுஏறக்
குருதி ஆறெழ, வீதியெலா மலர்
நிறைவதாய் விட, நீறிடவே செய்து
கொடிய மாறன் மெய் கூன் நிமிராமுனை குலையா, வான்
குடிபுகீரென மாமதுராபுரி
இயலை ஆரண ஊரென நேர்செய்து
குடசை மாநகர் வாழ்வுற மேவிய பெருமாளே.’’

பொருள்: அனைவராலும் மனத்தில் கருதி வணங்கப்படும் பன்னிரு தோள்கள், மயில், வேல் இவற்றை யாரும் காணாத வகையில் மறைத்துக்கொண்டு, காழிப் பதியின் அரசாக, கவுணிய குலத்தின் சிறந்த வேதியனாக, உமாதேவியின் பருத்ததும், சந்தனம் பூசப்பட்டதுமான முலைகளில் ஊறிய பாலை உண்ட குழந்தையாய், உயர்ந்த பாடல்கள் பாடுவதில் மற்றவர்களைவிடச் சிறந்த கவிஞனாய்த் திருவிளையாடல்கள் செய்தவனே (தன்னுடன்) வீண்வாதம் (அனல் வாதம், புனல்வாதம்)  செய்த சமணர்கள் கழுவேறவும், அவர்கள் ரத்தம் ஆறாகப் பெருகவும் காரணமாய் இருந்தவனே!

பின்னர், வீதிகளிலெல்லாம் பூமாரி பொழியவும், அனைவரும் திருநீற்றை அணியும்படியும், சமண நெறியைத் தழுவிய பாண்டியனுடைய கூன்பட்ட உடல் (திருநீற்றால்) நிமிர்ந்து நேராகும்படியும், சமண நெறியை அழித்து, பின் தனது பாசுரங்களில் கடைக்காப்பாக ‘தேவலோகத்தில் புகுவீர்களாக’ என்று பாடி சிறந்த மதுரைப் பட்டணத்தை வேதபுரி எனும்படியாகவும் (சமண ஆளுகைக்கு முற்பட்டிருந்த செம்மையான நெறியில் செல்லும்படியாகவும்) மாற்றியவனே! திருக்குடவாயில் (குடசை மாநகர்) எனும் பெரிய நகரத்தில் வாழ்வு கொண்டருளும் பெருமாளே! சம்பந்தப் பெருமானாக வரும்போது தனது தோள்கள், வேல், மயில் இவற்றை முருகப் பெருமான் மறைத்து வைத்தான் எனும் கருத்து, பின்வரும் சிவன் திருவிளையாடற் பாடலை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது:

‘‘சடை மறைத்துக் கதிர் மகுடந் தரித்து
நறுங் கொன்றையந் தார் தணந்து
வேப்பந் தொடை முடித்து,
விடநாகக் கலன் அகற்றி
மாணிக்கச் சுடர்ப் பூண் ஏந்தி,
விடை நிறுத்திக் கயல் எடுத்து
வழுதி மருமகனாகி,
மீன நோக்கின் மடவரலை மணந்து,
உலக முழுதாண்ட சுந்தரனை
வணக்கஞ் செய்வாய்.’’

(சடை, கொன்றை மாலை, அரவு, விடை இவற்றை மறைத்து மீனவனாக வந்தார் சிவபெருமான்) குடவாயிலில் அருணகிரியார் பாடிய மற்றொரு பாடலில் ‘‘ஆணவம் கன்மம் மாயை எனப்படும் மும்முலங்களால் ஏற்படும் மாயைக் குணம் ஒழிந்துபோக, வேதங்கள் மிகவும் ஓதி, நிரம்பத் திருவருளை நான் பெறும்படி, அற்புதமான தேன் நிரம்பிய மாலைகள் அணியப்பட்ட உனது திருவடியைத் தந்தருளுக’’ என்று வேண்டுகிறார்.

‘‘மலமாயைக் குணமது மாற
மறையால் மிக்கருள் பெறவே அற்புத
மதுமாலைப் பதம் அருள்வாயே.’’

பாடலின் பிற்பகுதியில் ‘குயில்கள் கூவுகின்ற சோலைகள் சூழ்ந்துள்ள குடவாயில் என்னும் நகரில் உறைபவனே’ என்று போற்றுகிறார்.

‘‘கயிலாயப் பதி உடையாருக் கொரு
   பொருளே கட்டளை இடுவோனே
கடலாடிப் புகு முதுசூர் பொட்டெழ
   கதிர் வேல் விட்டிடு திறலோனே
குயில் ஆலித்திடு பொழிலே சுற்றிய
   குடவாயிற்பதி உறைவோனே
குறமாதைப் புணர் சதுரா! வித்தக
   குறையா மெய்த்தவர் பெருமாளே.’’

(‘பூஞ்சோலை வாசம் வீசும் குடவாயில்’ என்றும், ‘பைம்பொழிலும் சூழ்ந்த குடவாயில்’ என்றும் சம்பந்தரும் பாடுகிறார்.) விநாயகரை வணங்கி 24 படிகள் ஏறி கோணேசப் பெருமானைத் தரிசிக்கச் செல்கிறோம். நேர் எதிரே கருடனும் அவர் பூஜை செய்யும் லிங்கமும் தென்படுகின்றன. கம்பீரமான ஆலயமணியைக் கண்டு, தான்தோன்றி நாதரை வணங்கி கருவறையை நோக்கித் திரும்புகிறோம். சம்பந்தப் பெருமான், குடவாயிற் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் குடவாயிலை, ‘பெருங்கோயில்’ என்று குறிப்பிடுவதிலிருந்தே இக்கோயிலின் பெருமையை உணரலாம்.

‘‘அலைசேர் புனலன், அனலன், அமலன்,
தலைசேர் பலியன், சதுரன், விதிரும்
கொலை சேர் படையன், குடவாயில் தனில்
நிலைசேர் பெருங்கோயில் நிலாயவனே.’’

மற்றொரு பதிகத்தில், ‘குடவாயில் கோயிலையே கோயிலாகக் கொண்டவனே’ என்று பாடுகிறார். பின்வரும் பாடலில்  வழிவழியாக ‘மறைகளை நன்கு கற்று பயின்று ஓதும் அந்தணர்கள்

போற்றிப் புகழும் குடவாயில்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
‘‘அடியார்ந்த பைங்கழுலும் சிலம்பும் ஆர்ப்ப, அங்கையில்
செடியார்ந்த வெண்தலையொன்று ஏந்தி உலகம் பலிதேர்வீர்
குடியார்ந்த மாமறையோர் குலாவி ஏத்தும் குடவாயில்
படியார்ந்த கோயிலே கோயிலாகப் பயின்றீரே.’’

‘கோணேசர் வணக்கம்’ எனும் தலைப்பில் குடவாயிற் செய்யுள் புராணத்தில் பின்வரும் பாடல் உள்ளது:

‘‘சீர் கொண்ட வெளி முகடு கடந்து அண்டத்தப்பாலாய்
   சித்தாந்தத்தின்
வேர் கொண்ட பேரொளியாய்ச் சின்மயமாய்
   அகண்டமாய் விமலமாகிப்
பேர் கொண்ட நாதமாய் விந்துவாய்
   ஐந்தொழிலும் பிறக்கச் செய்து
பார் கொண்ட குடவாயில் அமர்ந்த கோணேசர் பதம்
   பணிந்து வாழ்வோம்.’’

கோயிலில் காணும் கஜலட்சுமி, சண்டீசர், நவகிரஹங்கள், இரண்டு பைரவர்கள், சந்திரன், சூதமுனி, சனீஸ்வரர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கொலுவிருக்கும் சந்நதிகளை வணங்குகிறோம். மேல் பிராகாரத்திலிருந்து பார்க்கும்பொழுது கோயிலுக்கு எதிரிலுள்ள தீர்த்தக்கரையில் ஆதி கஜானநர் சந்நதியின் விமானம் தென்படுகிறது. கோயிலில் நுழைந்ததும் காணப்படும் அனுமதி விநாயகரை வணங்கியே கோயிலுள் சென்று மூலவரைத் தரிசிக்க வேண்டும் என்பர். இங்கு இரட்டை விநாயகர் சந்நதியும் உள்ளது.

குடவாயிற் கீர்த்தனார் என்ற சங்கப் புலவர் இவ்வூரின் சிறப்புகளைப்பற்றி நற்றிணை, அகநானூறு போன்ற சங்கப் பாடல்களில் சிறப்பித்துக் கூறியுள்ளார் என்றறிகிறோம். இன்று ‘கோணேசம்’ என்ற பெயரில் விளங்கும் இரண்டு கோயில்களுள் ஒன்று குடவாயில்; மற்றொன்று இலங்கையிலுள்ள திரிகோணமலை செவ்வப்ப நாயக்கர் இவ்வாலயத்தில் பொறித்துள்ள கல்வெட்டு ஒன்றில் ‘குடவாசல் அழகர் தம்பிரானார்’ என்று இறைவன் பெயரும், ‘பெரிய நாச்சி’ என்று இறைவி பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமண்யன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

குடவாயில் கோணேசனையும் குமரனையும் வணங்கிப் புறப்படுகிறோம். நமது அடுத்த தரிசனம், சிவபுரம். கும்பகோணம் - திருவாரூர் நெடுஞ்சாலையில் சாக்கோடைக்கு வடக்கே இரண்டு கி.மீ. தொலைவிலுள்ள திருத்தலம் இது. இறைவன்: சிவபுரநாதர், இறைவி: சிங்காரவல்லி. இப்போது சிவகுருநாத சுவாமிகள் திருக்கோயில் என்றே வழங்கப்படுகிறது. பிரம்மன் இத்தலத்தில் சிவபூஜை செய்து உலகங்களைப் படைக்கும் ஆற்றலைப் பெற்றான். ஞானசம்பந்தப் பெருமானும் இதைத் தன் சிவபுரப் பதிகத்தில் பாடுகிறார்:

‘‘புவம் வளி கனல் புனல் புவிகலை உரைமறை
   திரிகுணம் அமர் நெறி
திவமலி தருசுரர் முதலியர் திகழ் தரும்
   உயிர் அவையவை தம
பவமலி தொழிலது நினைவொடு பதுமநன்
   மலரது மருவிய
சிவனது சிவபுர நினைபவர் செழுநிலன்
இனி நிலை பெறுவரே.’’

‘பஞ்ச பூதங்கள், ஆய கலைகள் அறுபத்து நான்கு, வேதம், முக்குணம் யாவும் அமையப் பெற்ற தேவர்கள் மற்றும் பூமிவாழ் உயிர் வகைகளுக்கு, அவ்வவற்றின் முன் வினைக்கேற்ப படைப்புத் தொழில் ஆற்றுபவன் பிரம்மன். அவன் சிவபிரான் திருவடிவை மனத்தில் நிலைக்கச் செய்தமையால் இத்தொழிலைச் செய்யும் தகைமை கொண்டான். இச்சிறப்புடைய சிவபுரத்தை நினைந்து வணங்குபவர்கள் செழுமையான இந்நில உலகில் இனிமையாக வாழும் நிலை பெறுவர்’ என்பது பாடலின் பொருள். இங்கு பூமிக்கடியில் அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாகக் கருதப்படுவதால் சம்பந்தப் பெருமான் இங்கு நடக்காமல் அங்கப் பிரதட்சிணம் செய்து ஊர் எல்லைக்கு அப்பால் சென்று நின்று இறைவனைப் பாடியதாகக் கூறுவர். அவ்வாறு அவர் நின்று பாடிய தலம் ‘சுவாமிகள் துறை’ என்றழைக்கப்படுகிறது.

(உலா தொடரும்)

சித்ரா மூர்த்தி