மங்கலங்கள் அருள்வார் மன்னீஸ்வரர்கோவை மாவட்டத்தில் உள்ள பழமையான சிவத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலம், கோவையிலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் அன்னுர்  என்ற ஊரில் உள்ள மன்னீஸ்வரர் ஆலயம். 1000 ஆண்டுகள் பழமையான கோயில் என்று சரித்திர சான்றுகள் கூறுகின்ற பெருமைகொண்டது. இத்தலத்தின் மூலவர் மன்னீஸ்வரர், சுயம்பு லிங்க வடிவினராக அமைந்துள்ளார். அம்பிகை, அருந்தவச்செல்வி என்று போற்றப்படுகின்றாள். தல விருட்சம், வன்னி. முன்னொரு காலத்தில் இந்த பகுதி அன்னியூர் என்ற பெயருடன் அடர்ந்த காடாக இருந்திருக்கிறது. காட்டில் கொடிய விலங்குகளை கொன்று புசிப்பவனாக ஒரு வேடன் இங்கு வாழ்ந்து வந்துள்ளான். ஒருநாள் வேடுவனுக்கு உண்பதற்கு எந்த விலங்கும் கிடைக்காததால் கடும் பசியுடன் காட்டில் சுற்றி திரிந்துள்ளான்.

வள்ளிக் கிழங்குகள் அதிகம் விளையும் பகுதி என்பதால் பசிக்கு வள்ளிக் கிழங்கை தோண்டி எடுத்து உண்ண முடிவு செய்து தனது ஆயுதத்தால் நிலத்தை தோண்ட, பூமியிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்ததை கண்டு பயந்தான். உடனே அப்பகுதியை ஆண்டு வந்த மன்னரிடம் முறையிட, மன்னரும் தனது படை பரிவாரங்களுடன் வந்து நிலத்தை தோண்டிப் பார்க்க, சுயம்புவாக சிவலிங்கம் வெளிப்பட்டது.  அதுகண்டு திகைத்த மன்னர், அந்த லிங்கத்தை எடுத்துச் சென்று வேறொரு பகுதியில் பிரதிஷ்டை செய்து கோயில் உருவாக்க நினைத்தார்.  ஆனால், லிங்கம் மண்ணில் ஆழமாக புதைந்திருந்ததால் அதனை அத்தனை சுலபமாக வெளிக்கொணர முடியவில்லை. பலவித முயற்சிகளுக்குப் பிறகு, இறுதியாக லிங்கத்திருமேனியை சங்கிலியால் கட்டி, அதை யானையில் பூட்டி இழுத்தான்.

அத்தருணத்தில் ஒரு அசரீரி கேட்டது:  ‘‘மன்னனே, என்னை வெளியில் எடுக்க முயலவேண்டாம். நான் இங்கு உறையவே விரும்புகிறேன். இங்கேயே எனக்குக் கோயில் எழுப்பி வழிபடு.’’ மன்னனும் கடவுளின் ஆணைக்குக் கட்டுப்பட்டு அங்கேயே கோயிலை நிர்மாணித்தான். அன்னியூரில் தோன்றிய ஈஸ்வரன் அன்னீஸ்வரன் என்று பெயர் பெற்று, காலப்போக்கில் மருவி மன்னீஸ்வரர் என்ற பெயரோடு இன்றளவும் மக்களை காத்துவருகின்றான். இன்றும், தோண்டியபோது ஏற்பட்ட காயத்தையும், சங்கிலி கட்டப்பட்ட வடுவையும், சுயம்பு லிங்க திருமேனியில் காணலாம். இத்தலத்து இறைவன், நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களை போக்கி ரட்சிப்பவனாக அருள்பாலிக்கின்றான்.

அம்பிகை அருந்தவச்செல்வி, நமது குறைகளை அன்புடன் கேட்டு ஈசனுக்கு எடுத்துரைக்கின்றாள் என்ற ஐதீகம் இங்கே போற்றப்படுகிறது. பொதுவாக, சிவாலயங்களில் சிவனின் பிராகாரத்தில்தான் துர்க்கை வீற்றிருப்பாள். ஆனால் இங்கு, அம்பிகையின் சந்நதி பிராகாரத்தில் துர்க்கை வீற்றிருப்பது வித்தியாசமான அமைப்பு. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையில் அம்பிகைக்கு ஊஞ்சல் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.  மார்கழி மாதத்தில் இத்தல ஈசனின் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. மேலும் இந்த மன்னீஸ்வரர் மேற்கு நோக்கி வீற்றிருப்பதனால் இத்தலத்தை மேல்தலை தஞ்சாவூர் என்று அழைக்கின்றனர். ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் கோயில் கோபுர வாயிலில் உட்புறம் அமைந்திருக்கும் சூரிய-சந்திரர் சந்நதிகளில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறுகின்றன.

இங்கே சனிபகவானுக்குத் தனி சந்நதி உள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமையிலும் இவருக்கு எள்சாதம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. உட்பிராகாரத்தில் சப்த நாகர் சிலைகளும், சர்ப்பராஜா சந்நதியும், பைரவ நடராஜர், ஆஞ்சநேயர், வள்ளி- தெய்வானை சமேத முருகன், கன்னிமூல கணபதி, சைவக்குரவர் நால்வர் என அனைவரும் தனித்தனியே சந்நதி கொண்டு அருள்பாலிக்கிறார்கள். ஏற்கெனவே 2004ம் ஆண்டு குடமுழுக்கு கண்ட இக்கோயில் மீண்டும் இந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் காணப்போகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஓர் அன்பர் குழாம் வெகு சிரத்தையோடு மேற்கொண்டுவருகிறது. கோயில் திருப்பணிகளில் பங்கேற்க விரும்புபவர்கள் 04254-262450, 98422 38564 ஆகிய தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

- முனைவர் பாபு கிருஷ்ணராஜ்