வணக்கம் நலந்தானே!போதி மரம்!  

இயற்கை மிகவும் அற்புதமானது. அதன் அழகுத் தன்மைகளில் ஒன்றான பசுமை, நம் மனதைக் குளிரவைக்கிறது. தோட்டம், வயல், தோப்பு, காடு என்று போகவேண்டாம், சாலையோர மரங்களைப் பார்த்தாலே போதும், நம் மனதில் பசுமை படர்கிறது.  நமக்குப் பிராணவாயு தருகிறது, நிழல் தருகிறது, குளிர்ச்சி தருகிறது, பூ-காய்-கனி தருகிறது என்ற எல்லா நன்மைகளையும் மீறி ஒரு மரம் நிகழ்த்தும் அதிசயத்தை நம்மில் எத்தனை பேர் கவனித்திருக்கிறோம்? மழையில்லை, ஊரெங்கும் வறட்சி, குடிநீர் பற்றாக்குறை, விவசாய நிலங்கள் நீருக்காக ஏங்குகின்றன என்ற மனிதக் குறைகளையும் மீறி மரங்கள் பல இப்படி குறைபட்டுக்கொள்வதில்லை என்பது உண்மை.

ஆமாம், குடிநீருக்காக இருநூறு அடி, முன்னூறு அடி என்று குடியிருப்புப் பகுதிகளில் குழாய்க் கிணறுகளைப் பதித்து நீரெடுத்து நாம் தாகம் தீர்த்துக்கொள்கிறோம். அதேசமயம், அதே பகுதியில் சில மரங்கள் ஓங்கி உயர்ந்து நிற்கின்றன, பசுமை மிளிர ஜொலிக்கின்றன. நம் தேவைக்கான தோண்டலில் ஐம்பது அடிக்கும் கீழாகத்தான் தண்ணீர் கிடைக்கிறது என்பது அனுபவ உண்மை. இந்த மரங்களின் வேர்கள் அதிகபட்சம் இருபது அடிக்கும் கீழாகப் போக வாய்ப்பில்லை. தன் வேரால் நீரை உறிஞ்சிக்கொள்ள முடியாத ஆழத்தில் நீர்மட்டம் இருக்கும் நிலையில் இந்த மரங்கள் எந்த ஆதாரத்தில் உயிர்வாழ்கின்றன?

இந்த சாலை மரங்களுக்கு ஆரம்ப காலத்தில் வேண்டுமானால் யாராவது நீர் வார்த்திருப்பார்களே தவிர, அதன் வளர்ச்சியின்போது யாராவது நீர் ஊற்றியிருப்பார்களா அல்லது உரம்தான் இட்டிருப்பார்களா? மரம் தானே தன்னைக் காத்துக்கொள்கிறது. எப்படியோ தன் வளர்ச்சிக்கான ஊட்டத்தைப் பெறுகிறது. உயர்கிறது. வேருக்கடியில் நீரில்லாத போதும், பூமிக் கடியிலும், தன்னைச் சூழ்ந்திருக்கும் காற்றிலிருந்தும் கிடைக்கக்கூடிய ஈரப்பசையை வேர்களாலும், தண்டு-இலைகளால் ஈர்த்துக்கொள்கிறது. ஆனால், சுற்றுச் சூழல் மாசடைந்திருக்கும்போதும் அது பசுமையாக வளர்ந்து நிற்கிறது. எப்படி? இளமையில் அதற்குக் கிடைத்திருக்கக்கூடிய ஊட்டத்தை அது முறையாகப் பயன்படுத்திக்கொண்டதால்தான்!

தன் வளர்ச்சிக்காக மட்டுமின்றி, தன்னால் சமுதாயம் பயன்படவேண்டுமே என்ற பொது நோக்கினாலும் அது தனக்குக் கிடைத்திருக்கக்கூடிய சொற்ப ஆதாரங்களை வைத்து வளர்கிறது, நிலைக்கிறது. பக்தியும் இப்படிப்பட்டதுதான். சிறுவயதிலிருந்தே அல்லது வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மனசுக்குள் நீராக ஊறவேண்டிய பண்பு; இறைவன் அருளை ஈர்த்துக்கொள்ள வேண்டிய பண்பு. அந்த அருளால் நமக்கு மட்டுமின்றி அனைவருக்கும் நலம் விளையவேண்டும் என்ற பிரார்த்தனை பண்பு. நம் மனதையும், வாழ்க்கையையும் என்றென்றும் பசுமையாக வைத்திருக்கும் பண்பு!  

பிரபு சங்கர்
(பொறுப்பாசிரியர்)