அடிக்கரும்பு இனிப்பதேன், நுனிக்கரும்பு கசப்பதேன்?



அர்த்தமுள்ள இந்து மதம்  - 42

பந்த பாசங்களை அறுத்து விட்டாலும் பழைய பாவங்களை எண்ணும்போது, மனிதனுக்கு கண்ணீர் பெருக்கெடுக்கிறது. தீண்டக்கூடாத ஒன்றைத் தீண்டிவிட்டபின், கையைக் கழுவித் துடைத்துவிட வேண்டுமே தவிர, அடிக்கடி வாசனை பார்க்கக் கூடாது. கோபிகள், பாவிகள், இழிமக்கள் இவர்களின் தொடர்பிலே தான் மனிதனுக்கு ஞானம் பிறக்கிறது. தரமில்லாத ஒரு இடத்தில் பெண் எடுத்த காரணத்தால், சக்கரவர்த்தியாக வேண்டிய பத்ரகிரியார் தத்துவ ஞானியாகி விட்டார். தமிழ்ப் பெரியவர்கள் எல்லாம் குடிப்பிறப்பை அடிக்கடி வலியுறுத்தியதற்குக் காரணம் இதுதான்.

நலத்தின்கண் நாரின்மை தொன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.

- என்றார் வள்ளுவப் பெருந்தகை. ஒருத்தியின் நடத்தை தவறாகத் தோன்றுமானால் அவள் பிறந்த குடும்பத்தையே கவனிக்க வேண்டும். குடிப்பிறப்பைப் பார்த்துப் பெண் எடுத்துவிட்டால், எடுக்கப்பட்ட பெண் கோபக்காரியாக, கொடுமையாக மாறினாலும் மாறலாமே தவிர, நடத்தை கெட்டவளாக ஆக மாட்டாள். யாரோ ஒருத்தி- அழகியாயிருந்தாள்- அது ஒன்றே போதுமானதாக இருந்தது பத்ரகிரிக்கு; விளைவு, நரக வேதனை; சித்ரவதை.

மேனி மயக்கத்தின் முடிவு, ஞான மயக்கமாகத்தானே இருக்க முடியும்? சிறைக்கூடத்திலே நான் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தேன். கம்பிக் கதவுகளுக்கு வெளியே விம்மல் சத்தம் கேட்டது. பிற உயிர்களின் அழுகை ஒலி, எப்போது உன் ஆன்மாவுக்குள் இருந்து நீ அழுவது போலவே கேட்கிறதோ, அப்போது நான் நீ பக்குவம் பெற்ற ஞானி ஆகிவிட்டாய் என்று அர்த்தம். படுத்த நிலையிலேயே கண்ணை விழித்துப் பார்த்தேன். பத்ரகிரியார் நின்றிருந்தார்.  தூரத்தில் சில காவலாளிகள் கையைக் கட்டிக்கொண்டு நின்றார்கள்.

அவரது கண்ணீரைப் பார்த்தவுடனேயே எனக்கென்னவோ, ‘பெண்ணுக்கு இரண்டு மனம்’ என்ற வார்த்தை நினைவுக்கு வந்தது. ‘‘கதவை நீங்கள் திறப்பதா நான் திறப்பதா?’’ என்றேன். ‘‘நீங்கள்தான் திறக்க வேண்டும்’’ என்று சாவியை என்னிடம் நீட்டினார் பத்ரகிரியார். நான் கம்பிகளுக்கு வெளியே கையைவிட்டுச் சிறைக்கூடப் பூட்டைத் திறந்தேன். ‘‘சுவாமி! நீங்கள் திறந்தது பூட்டையல்ல; என் அகக்கண்களை’’ என்றார் பத்ரகிரியார். ‘‘அல்ல; வேறு யாரோ அந்தக் கண்களைத் திறந்த பிறகுதான் நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள்!’’ என்றேன்.
‘‘உண்மைதான் சுவாமி; தீயொழுக்கம் கொண்டவள் தான் கணவனின் ஞானக் கண்களைத் திறக்கிறாள்’’ என்றார் பத்ரகிரியார். ‘எல்லார் கதையுமே அதுவல்ல; நான்கூட ஒருமுறை:

கைப்பிடி நாயகன் தூங்கையி லேயவன் கையெடுத்
தப்புறந்தன்னி லசையாமல் முன்வைத் தயல்வளவில்
ஒப்புடன் சென்று துயனீத்துப் பின்வந்து உறங்குவாளை
எப்படி நானம்புவேன் இறைவா! கச்சி ஏகம்பனே!

- என்ற பாடலை, காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் சந்நதியில் பாடினேன். பலர் என் மனையாளே அப்படி என்று கருதி விட்டார்கள். மனைவியால் நிலை குலைந்தவர்களின் மனசாட்சியாக நின்று நான் பாடினேனே தவிர, என் மனையாள் அப்படி அல்ல. பொன்னாசையையும், மண்ணாசையையும் வெறுத்து என்னை எண்ணாத எண்ணமெல்லாம் எண்ண வைத்தவன் ஒரு பிராமணச் சிறுவன். ‘‘பர்த்ருஹரி, காலையில் என்னைக் கழுவேற்ற வருவாய் என்று கருதினேன்; நீயே கழுவேற்றப்பட்ட நிலையில் கண்ணீரோடு வருவாய் என்று நான் கருதியதில்லை’’ என்றேன்.

‘‘சுவாமி! என்னை மணந்துகொண்ட ஒருத்தி, ஒரு கோரமான குதிரைக்காரன் மீது ஆசை வைத்தாளே! விதியின் விளையாட்டில் இத்தகைய விபரீதம் உண்டா?’’ என்று கேட்டார் பத்ரகிரியார். ‘‘அது தேனீயாக இருந்தால் தேனை மட்டும்தான் அருந்தும்; சாதாரண ஈயாக இருந்தால் நைவேத்தியத்திலும் உட்காரும், மலத்திலும் உட்காரும். சுவாமியின் பிரசாதத்தில் உட்கார்ந்த நாமா மலத்தில் உட்காருகிறோம் என்று சிந்தித்துப் பார்ப்பதில்லை. அன்று உன் பட்டத்து ராணி என்னிடம் பேசிய வார்த்தைகளில் இருந்தே, அவள் நலங்கேட்ட குடும்பத்தில் பிறந்தவள் என்பதை நான் கண்டுகொண்டேன். வார்த்தைகளே, பிறப்பை வெளிப்படுத்துகின்றன!’’ என்றேன்.

‘‘என் மோக வெறியில் உங்களை அலட்சியப்படுத்தி விட்டேனே...!’’ என்று கண்ணீர் வடித்தார் பத்ரகிரியார். ‘‘நீ எதை விரும்புகிறாயோ அதை ஒரு கட்டத்தில் வெறுக்கவும், எதை வெறுக்கிறாயோ அதை ஒரு கட்டத்தில் விரும்பவும் வைப்பதே இறைவனுடைய லீலை!’’ என்றேன் நான். ‘‘ஒன்றை விரும்பும்போதே, ஒருநாள் வெறுக்க வேண்டி இருக்கும் என்று எண்ணிக் கொண்டு விட்டால், விருப்பு வெறுப்புகள் சமமாகி விடும்’’ என்றேன். ‘‘நான் இனி என்ன செய்ய வேண்டும் சுவாமி’’ என்று கேட்டார் பத்ரகிரியார்.

‘‘அவளைத் துறந்துவிடு’’ என்றேன். ‘‘இல்லை, அவளுக்கு மரண தண்டனை விதிக்கப் போகிறேன்!’’ என்றார். ‘‘ஒழுக்கம் தவறுவதே ஒருத்திக்கு மரண தண்டனை தானே... இனி, புதிய தண்டனை எதற்கு?’’ என்றேன். ‘‘அவளை மட்டும் துறப்பதா? அரசையும் துறப்பதா?’’ என்று கேட்டார். ‘‘மேலாடையை இழப்பதா, கீழாடையையும் சேர்த்து இழப்பதா என்று நீதான் முடிவு செய்ய வேண்டும்’’ என்றேன். ‘‘சுவாமி! நீங்கள் உடனே அரண்மனைக்கு வரவேண்டும்!’’ என்றார்.

அரண்மனைக்கெல்லாம் போக மாட்டேன் என்று சொல்வது போலித்தனமான ஞானம் அல்லவா? ‘‘வருகிறேன்’’ என்று சீடர்களோடு புறப்பட்டேன். வானளாவிய அரண்மனை கண்டேன்; வாரணம் கண்டேன்; பரிகள் கண்டேன்; மானுடத்தின் மகத்துவத்தைக் காணவில்லை. மண் குடிசைக்கும் ஒளியூட்டக்கூடிய மாபெரும் பத்தினிகள் பலருண்டு; பளிங்கு மாளிகையையும் ஒளியிழக்க வைக்கும் ஒரு பத்தினியல்லவா இந்த மாளிகையில் குடியிருக்கிறாள் என்றெண்ணியபோது, எனக்கு சிரிப்பு வந்தது. நேரே அரியாசனத்திற்கு என்னை அழைத்துப் போனார் பத்ரகிரியார்.

‘தன் நிலை அறிவான் நாயகன்’ என்பதை அறியாத அவரது பத்தினி அதைத் தடுத்தாள். ‘‘அரசனது ஆசனத்தில் ஆண்டியா?’’ என்றாள் அவள். ‘‘ஏன்? அரசன் உட்காரக்கூடிய இடத்தில் ஒரு குதிரைக்காரனும் உட்காரலாம்!’’ என்றார் பத்ரகிரியார். சிருங்கார சதகம் பாடியவர் அல்லவா? வைராக்கியம் அவரை நோக்கி வந்து கொண்டிருந்தது. ‘‘இந்த ஆண்டியைவிட குதிரைக்காரர்கள் மோசமானவர்கள் அல்ல!’’ என்றாள் அவள். ‘‘அனுபவித்தவர்களுக்குத்தானே தெரியும்... எனக்கென்ன தெரியும்?’’ என்றார் அவர். ‘‘நான் பத்தினியானால், இந்த அரியாசனம் அவருக்கு இடம் கொடுக்காது!’’ என்றாள் அவள்.

பத்ரகிரியார் சிரித்தார். நான் சிரிக்கவில்லை. பத்தினி’ என்றொரு வார்த்தை இருப்பதையாவது அவள் அறிந்திருக்கிறாளே! போதாதா? திடீரென்று அவர் என்ன நினைத்தாரோ, அவளது ஆடைகளைக் கிழித்து நிர்வாணமாக்கினார். நான் தடுக்க முயன்றேன்;  முடியவில்லை. பத்ரகிரியார் வெறிபிடித்த வேங்கையானார். அவள் முகத்திலே கரும்புள்ளி, செம்புள்ளி குத்த வைத்தார். அந்தக் கோலத்திலேயே அவளைக் குதிரையில் ஏற்றி உட்கார வைத்தார். முன்னாலே ஒருவனைத் தண்டோரா போட வைத்தார். ‘‘பதித் துரோகத்திற்கு இது பரிசு’’ என்று அவனைச் சொல்ல வைத்தார்.

அவளை நகர்வலம் வர வைத்தார். ஆத்திரமடைந்த ஒருவன், கடைசியாகத் தன் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வதை யாரும் தடுக்க முடியாது; ஆனால், அந்த ஆத்திரம் தீர்ந்ததும் அவன் அழுவான்; அப்போதுதான் அவனுக்கு விஷயங்களைச் சொல்ல முடியும். பத்ரகிரியாரும் அழுதார். நான் அவருக்கு ஞான தீட்சை நடத்தி வைத்தேன். ‘கட்டிய ஆடையுடனேயே உங்களோடு புறப்படுகிறேன் சுவாமி!’’ என்றார். ‘‘தென்நாட்டுத் திருத்தலங்களை ஒருவன் தரிசிக்க ஆரம்பித்தால், பிறகு அவனுக்கு எந்த ஆசையும் வராது, புறப்படு!’’ என்றேன்.வாரிசு இல்லாத நாட்டை, காவலர்கள் கையில் ஒப்படைத்தார். இருவரும் வாசல் வரை வந்தோம். எதிரே குதிரையில் பட்டத்து ராணியின் சடலம் வந்தது.

ஏற்கெனவே அவளது ஆணவத்தால் ஆத்திரமுற்றிருந்த ஜனங்கள், துரோகமும் செய்தாள் என்பதால் கல்லால் அடித்துக் கொன்றுவிட்டார்கள். பத்ரகிரி குதிரை அருகே வந்தபோது, அந்தச் சடலம் அவர் காலடியில் விழுந்தது. அதிலிருந்து விலகி என்னைத் தொடர்ந்தார். அரண்மனை வெளிப்புற வாசலில் நின்று முதன்முதலாகப் பிச்சை கேட்டார்; பிறகு வீதி தோறும் பிச்சை.இதிலே அதிசயம் என்னவென்றால் வடமொழி, தென்மொழி இரண்டிலேயுமே அவர் கைதேர்ந்தவராக இருந்ததுதான். உஜ்ஜைனியைச் சேர்ந்த ஒரு மன்னர். சிருங்காரக் களியாட்டங்களில் ஈடுபட்ட நிலையிலும் தமிழ் மொழியைப் பழுதறக் கற்றிருந்தது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

சோழ மண்டலத்திலிருந்து குடியேறிய தமிழ்ப்பெரும் புலவர் ஒருவரிடத்தில் தமிழ் கற்றிருந்தார் பத்ரகிரியார். கல்லாதவன் கற்க விரும்பினால், அவன் முதலில் கற்பது தமிழைத்தானே! தமிழிலும் இனிமையான மொழியை உலகம் இன்னும் காணவில்லையே! ஒவ்வொரு வீட்டின் முன்நின்றும், ‘‘அன்ன மிடுங்கள் தாயே!’ என்று அவர் கேட்ட தொனியே எனக்குச் சுகமாக இருந்தது. தனது மன்னனை  கண்ணீரோடு அனுப்பியது உஜ்ஜைனி. வந்துகொண்டே இருந்தோம். வழியில் ஒரு சிறிய காளி கோயில். இரவில் அங்கே தங்கலாம் என்று உள்ளே நுழைந்தோம்.

‘‘திருவமுது தயாராக இருக்கிறது!’’ என்றான் பரிசாரகன். உணவு கொண்டோம். காளியின் சந்நிதானத்தில் தலை வைத்துத் துயிலத் தொடங்கினோம். நள்ளிரவு. ஒரு நாயின் முனகல் கேட்டது. மெதுவாக நான் எழுந்து பார்த்தேன். கோயிலின் கிழக்கு மூலையில் ஒரு நாய் குட்டி போட்டிருந்தது. ‘‘நாய் பல குட்டி போடும்’’ என்பார்கள். ஆனால், அந்த நாயோ ஒரே ஒரு குட்டி போட்டிருந்தது. அதுவும் பெண் குட்டி. அந்தக் குட்டியை நான் கையிலெடுத்ததும் தாய் நாய் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு இறந்துவிட்டது.

எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அந்த நாய்க்குட்டி வேறு யாருமல்ல; பத்ரகிரியாரது பட்டத்து ராணியின் மறுபிறவி. தீயவர்களை ஆண்டவன் உடனேயே திருப்பி அனுப்புகிறான், பாவ விமோசனத்துக்காக. ‘‘சுவாமி, இதை எங்கேயோ பார்த்தது போலிருக்கிறது?’’ என்றார் அவர். அது மறுபிறப்பு என்பதற்கு வேறு சாட்சி எதற்கு? காலையில் அங்கிருந்து நாங்கள் புறப்பட்டோம். பத்ரகிரியார், எனது பரமானந்த சீடராகப் பின்தொடர்ந்தார். உஜ்ஜைனி காளி கோயிலில் எனது திருவோட்டைத் தட்டிவிட்ட பிறகு, நான் புது ஓடு வாங்கவில்லை. ‘விமலர் தந்த ஓடுண்டு அட்சய பாத்திரம்’ என்று நான் பாடியது, என்னுடைய இரண்டு கைகளையே.

ஓடு வாங்காத நான், எங்கேயும் கற்றரையைத் துடைத்து அதிலேயே சாப்பிட்டு வந்தேன். ஓரிடத்தில் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, என்னிடம் வந்து பிச்சை கேட்டான் ஒரு பஞ்சப் பரதேசி. நான் சொன்னேன், ‘‘அப்பா நான் ஒரு ஆண்டி! அதோ உட்கார்ந்திருக்கிறான் ஒரு பணக்காரன்! அவனைக் கேள்!’’ என்று. உடனே பத்ரகிரியார் ஓடிவந்து, ‘‘என்ன சுவாமி, என்னைப் பணக்காரன் என்கிறீர்கள்!’’ என்றார். ‘‘பின் என்னப்பா? என்னிடம் என்ன இருக்கிறது? உனக்குச் சொந்தமாக ஒரு ஓடும் நாயும் இருக்கின்றனவே!’’

பத்ரகிரியார் ஓட்டைத் தூக்கி எறிந்து நாயைத் துரத்தினார். ஓடு பட்டு அந்த நாய் இறந்தது; அதன் பாவக் கதையும் முடிந்தது. பிறகு இருவரும் வந்துகொண்டிருக்கும் வழியில் ஒரு கரும்புக் காட்டருகில் அமர்ந்தோம். பசி அதிகம். இரண்டு கரும்புகளை எங்களுக்குக் கொடுத்தார் ஒரு நாட்டுப்புறத்தவர்.கரும்பைக் கடித்தபோது, அடிக்கரும்பு இனித்தது. நுனிக்கரும்பு கசந்தது. ‘‘ஏன் இப்படி?’’ என்று தெரியாதவன்போல் கேட்டேன், அந்த நாட்டுப்புறத்தவரை.

‘‘வாழ்க்கையில் தொடக்கம் இனிமை, முடிவில் அவலம்!’’ என்றார் அவர். சொல்லிவிட்டுப் போயே போய்விட்டார் அவர். சிவபெருமானே அப்படி வந்ததாகத்தான் கருதி, நான் இந்தக் கரும்பைச் சுமந்து கொண்டிருக்கிறேன். அந்தத் தத்துவத்தைக் குறிக்கவே, நான் இந்தக் கரும்பைச் சுமந்துகொண்டிருக்கிறேன். இருவினை அகன்று எய்திய ஞானம், இறைவனை எங்களுக்குக் காட்டித் தந்திருக்கிறது. செல்வம் செல்வம் என்று பேயாக அலைந்த என் தமக்கையும் அவள் கணவனும் எனக்கிழைத்த தீமைகளால் பெரு நோய்ப்பட்டு மாண்டனர். அவளது குழந்தைகள், திருக்காளத்தியில் நான் இருந்தபோது என்னிடம் வந்து ஆசி பெற்றுப் போயினர்.

இது எங்களுக்கு ஞானம் பிறந்த கதை. சம்சாரத்தில் உழன்று, அந்த ஞானத்தை அடைய முயற்சியுங்கள். எல்லாம் வல்லவன் இறைவன். பிறப்புக்கு முன்பும், இறப்புக்குப் பின்பும் பொறுப்பேற்றுக்கொள்கிறவன் அவனே. தாயின் வயிறும், சுடுகாடுமே அவனது அரசாங்கங்கள். அதனால்தான் சுடுகாட்டில் அவன் ருத்திர தாண்டவம் ஆடுகிறான். ‘ஓம் நமசிவாய’ என்று உரத்த குரலில் கூறுங்கள். மூன்று விரல்களும் நன்றாகப் பதியும்படி திருநீறு பூசுங்கள். அந்த மூன்று கோடுகளும் பிறப்பு, இறப்பு, இடைப்பட்ட வாழ்வு மூன்றையும் குறிக்கும்.
‘ஓம் நமசிவாய’ என்று முடித்தார், பட்டினத்தார்.

திருக்காளத்தி அவரையும் பத்ரகிரியாரையும் பிரியாவிடை கொடுத்து அனுப்பியது. பட்டினத்தார், பத்ரகிரியார் பாடல்களில் நான் விரும்பும் பாடல்களை மட்டும் இங்கே தந்திருக்கிறேன். இதில் பார பேதமோ, இலக்கணப்பிழையோ இருக்குமானால் நான் படித்த பதிப்புகளின் குற்றமே தவிர, என் குற்றமல்ல.  பட்டினத்தார் புலம்பல் மென்று விழுங்கி விடாய்கழிக்க நீர்தேடல் என்று விடியும் எனக்கு எங்கோவே-நன்றி கருதார் புரமூன்றும் கட்டழலால் சென்ற மருதாஉன் சந்நிதிக்கே வந்து. கண்டம் கரியதாம்; கண்மூன்று உடையதாம்
அண்டத்தைப் போல அழகியதாம்-தொண்டர் உடல்உலுகத் தித்திக்கும் ஓங்குபுகழ் ஒற்றிக்கடலருகே நிற்கும் கரும்பு.

ஓடுவிழுந்து சீப்பாயும் ஒன்பதுவாய்ப் புண்ணுக்கு
இடுமருந்தை யான்அறிந்து கொண்டேன்-கடுஅருந்தும்
தேவாதி தேவன் திருவொற்றியூர்த் தெருவில்
போவார் அடியிற் பொடி.
வாவிஎல்லாம் தீர்த்தம்; மணல்எல்லாம் வெண்நீறு
காவனங்கள் எல்லாம் கணாதர்;-பூவுலகில்
ஈது சிவலோகம் என்றென்றே மெய்த்தவத்தோர்
ஓதும் திருவொற்றியூர்.
ஆரூரர் இங்கிருந்த அவ்வூர்த் திருநாளென்று
ஊரூர்கள் தோறும் உழலுவீர்!-நேரே
உளக்குறிப்பை நாடாத ஊமர்காள் நீவீர்
விளக்கிருக்கத் தீத்தேடு வீர்.
எருவாய்க்கு இருவிரல்மேல் ஏர்உண்டு இருக்கும்
கருவாய்க்கோ கண்கலக்கப் பட்டாய்!-திருவாரூத்
தேரோடும் வீதியிலே செத்துக் கிடக்கின்றாய்
நீரோடும் தாரைக்கே நீ!
எத்தனைஊர் எத்தனைவீடு எத்தனைதாய்? பெற்றவர்கள்
எத்தனைபேர் இட்டழைக்க ஏன்என்றேன்-நித்தம்
எனக்குக் களையாற்றாய் ஏகம்பா; கம்பா
உனக்குத் திருவிளையாட் டோ?
அத்திமுதல் எறும்பீ றானவுயிர் அத்தனைக்கும்
சித்தம் மகிழ்ந்தளிக்கும் தேசிகா-மெத்தப்
பசிக்குதையா! பாவியேன் பாழ்வயிற்றைப் பற்றி
இசிக்குதையா காரோணரே!
பொய்யை ஒழியாய்; புலாலை விடாய்; காளத்தி
ஐயரை எண்ணாய்; அறம்செய்யாய்;-வெய்ய
சினமே ஒழியாய்; திருவெழுத்தைந்து ஓதாய்;
மனமே உனக்கென்ன மாண்பு?
மண்ணும் தணல்ஆற வானும் புகைஆற
எண்ணறிய தாயும் இளைப்பாறப்-பண்ணுமயன்
கையாறவும் அடியேன் காலாறவும் காண்பார்
ஐயா! திருவை யாறா!
காலன் வருமுன்னே கண்பஞ் சடையுமுன்னே
பாலுண் கடைவாய்ப் படுமுன்னே-’மேல்விழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு!
சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம்தேடி விட்டோமே-நித்தம்
பிறந்தஇடம் தேடுதே பேதைமட நெஞ்சம்
கறந்தஇடம் நாடுதே கண்!
தோடவிழும் பூங்கோதைத் தோகைஉனை இப்போது
தேடினவர் போய்விட்டார் தேறியிரு-நாடிநீ
என்னை நினைத்தால் இடுப்பில் உதைப்பேன்நான்
உன்னை நினைத்தால் உதை!
வாசற் படிகடந்து வாராத பிச்சைக்குஇங்
காசைப் படுவதில்லை அண்ணலே!-ஆசைதனைப்
பட்டிறந்த காலமெல்லாம் போதும் பரமேட்டி
சுட்டிறந்த ஞானத்தைச் சொல்.
நச்சவரம் பூண்டானை நன்றாய்த் தொழுவதுவும்
இச்சையிலே தான்அங் கிருப்பதுவும்-பிச்சைதனை
வாங்குவதும் உண்பதுவும் வந்துதிரு வாயிலில்
தூங்குவதும் தானே சுகம்.
இருக்கும் இடம்தேடி என்பசிக்கே அன்னம்
உருக்கமுடன் கொண்டு வந்தால் உண்பேன்-பெருக்க
அழைத்தாலும் போகேன் அரனே! என்தேகம்
இளைத்தாலும் போகேன் இனி.
விட்டுவிடப் போகுதுயிர்! விட்டஉடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்-அட்டியின்றி
எந்நேர மும்சிவனை ஏற்றுங்கள்; போற்றுங்கள்;
சொன்னேன் அதுவே சுகம்.
ஆவியோடு காயம் அழிந்தாலும் மேதினியில்
பாவி என்று நாமம் படையாதே! -மேவியசீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டா மடநெஞ்சே
செத்தாரைப் போலே திரி.
வெட்ட வெளியாய் வெளிக்கும் தெரியாது!
கட்டளையும் கைப்பணமும் காணாது! -இட்டமுடன்
பற்றென்றால் பற்றாது; பாவியே நெஞ்சில்
அவன் இற்றெனவே வைத்த இனிப்பு.
இப்பிறப்பை நம்பி இருப்பாயோ நெஞ்சமே!
வைப்பிருக்க வாயில்மனை இருக்கச் -சொப்பனம்போல
விக்கிப்பற் கிடக்கண் மெத்தப்பஞ்சிட்டு அப்பைக்
கக்கிச்செத் துக்கொட்டக் கண்டு.
மேலும் இருக்க விரும்பினையே! வெண்விடையோன்
சீலம் அறிந்திலையே! சிந்தையே! - கால்கைக்குக்
கொட்டையிட்டு மெத்தையிட்டு குத்திமொத்தப் பட்டஉடல்
கட்டையிட்டுச் சுட்டுவிடக் கண்டு.
ஒன்பது வாய்த் தோல்பைக்கு ஒருநாளைப் போலவே
அன்புவைத்து நெஞ்சே அலைந்தாயே! -வன்கழுக்கள்
தத்தித்தத் திச்செட்டை தட்டிக்காட் டிப்பிட்டுக்
கத்திக்குத் தித்தின்னக் கண்டு.
இன்னம் பிறக்க இசைவையா நெஞ்சமே?
மன்னரிவர் என்றிருந்து வாழ்ந்தாரை -முன்னம்
எரிந்தகட்டை மீதில் இணைக்கோ வணத்தை
உரிந்துருட்டிப் போட்டது கண்டு!
முதற்சங்கு அமுதூட்டும்! மொய்குழலார் ஆசை
நடுச்சங்கு நல்விலங்கு பூட்டும்! -கடைச்சங்கம்
ஆம்போ ததுஊதும்! அம்மட்டோ, இம்மட்டோ,
நாம்பூமி வாழ்ந்த நலம்?
எத்தனை நாள்கூடி எடுத்த சரீரம்இவை?
அத்தனையும் மண்தின்ப தல்லவோ? -வித்தகனார்
காலைப் பிடித்துமெள்ளக் கங்குல்பகல் அற்றிடத்தே
மேலைக் குடியிருப் போமே!
எச்சிலென்று சொல்லி இதமகிதம் பேசாதீர்
எச்சில் இருக்கும் இடம்அறியீர் -எச்சில்தனை
உய்த்திருந்து பார்த்தால் ஒருமை
வெளிப்படும்; பின்
சித்த நிராமயமா மே!
எத்தனைபேர் நட்டகுழி? எத்தனைபேர் தொட்டமுலை?
எத்தனைபேர் பற்றி இழுத்தஇதழ்? -நித்தம்நித்தம்
பொய்யடா பேசும்புவியின் மடமாதரை விட்டு
உய்யடா! உய்யடா! உய்!
இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை எண்ணாதே! -பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரி பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான்!
எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர்மனம் இருக்கும் மோனத்தே -வித்தகமாய்க்
காதிவிளை யாடிஇரு கைவீசி வந்தாலும்
தாதிமனம் நீர்க்குடத்தே தான்!
மாலைப் பொழுதில்நறு மஞ்சள் அரைத் தேகுளித்து
வேலை மெனக்கிட்டு விழித்திருந்து -குலாகிப்
பெற்றாள்; வளர்ந்தாள்; பெயரிட்டாள்; பெற்றபிள்ளை
பித்தானால் என்செய்வாள் பின்?
பத்ரகிரியார் புலம்பல்
முத்திதரும் ஞானமொழியாம் புலம்பல் சொல்
அத்தி முகவன்தான் அருள்பெறுவ தெக்காலம்?
நூல் ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டெரித்துத்
தூங்காமல் தூக்கிச் சுகம்பெறுவ தெக்காலம்?
நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே இருந்து
தேங்காக் கருணைவெள்ளம் தேக்குவதும் எக்காலம்?
தேங்காக் கருணைவெள்ளம் தேங்கியிருக்கும் துண்பதற்கு
வாங்காமல் விட்டகுறை வந்தடுப்ப தெக்காலம்?
ஓயாக் கவலையினால் உள்ளுடைந்து வாடாமல்,
மாயாப் பிறவி மயக்கறுப்ப தெக்காலம்?
மாயாப் பிறவி மயக்கத்தை ஊடறுத்துக்
காயா புரிக்கோட்டை கைக்கொள்வ தெக்காலம்?
சேயாய்ச் சமைந்து செவிடூமை போல்திரிந்து
பேய்போல் இருந்துஉன் பிரமைகொள்வ தெக்காலம்?
பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்த பெண்ணைத்
தாய்போல் நினைத்துத் தவம்முடிப்ப தெக்காலம்?
கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள் முகம்காட்டி
மால்காட்டும் மங்கையரை மறந்திருப் தெக்காலம்?
பெண்ணினல்லார் ஆசைப் பிரமையினை விட்டொழித்துக்
கண்ணிரண்டும் மூடிக் கலந்திருப்ப தெக்காலம்?
வெட்டுண்ட புண்போல் விரிந்த அல்குல் பைதனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்வதும் எக்காலம்?
தந்தை, தாய், மக்கள் சோதரரும் பொய்யெனவே
சிந்தைதனில் கண்டு கிறுகிறுப்ப தெக்காலம்?
வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னுபுளி
யம்பழமும் ஓடும்போல் ஆவதினி எக்காலம்?
பற்றற்று நீரில் படர்தா மரை இலைபோல்
சுற்றத்தை நீக்கிமனம் தூரநிற்ப தெக்காலம்?
சல்லாப லீலையிலே தன்மனைவி செய்தசுகம்
சொல்லாரக் கண்டெனக்குச் சொல்வதினி எக்காலம்?
மரும அயல்புருடன் வரும்நேரம் காணாமல்
உருகு மனம்போல் என்உள்ளம் உருவதும் எக்காலம்?
தன்கணவன் தன்சுகத்தில் தன்மனம்வே றானதுபோல்
என்கருத்தில் உன்பதத்தை ஏற்றுவதும் எக்காலம்?
கூடிப் பிரிந்துவிட்ட கொம்பனையே காணாமல்
தேடித் தவிப்பவள்போல் சிந்தவைப்ப தெக்காலம்?
எவ்வனத்தின் மோகம் எப்படியுண் டப்படிபோல்
கல்வனத் தியானம் கருத்துவைப்ப தெக்காலம்?
கண்ணால் அருவி கசிந்து முத்துப் போல் உதிரச்
சொன்ன பரம்பொருளைத் தொகுத்தறிவ தெக்காலம்?
ஆக மிகவுருக, அன்புருக, என்புருகப்
போக அனுபூதி பொருத்துவதும் எக்காலம்?
நீரில் குமிழ்ப்போல் நிலையற்ற வாழ்வைவிட்டுன்
பேரில் கருணைவெள்ளம் பெருக்கெடுப்ப தெக்காலம்?
அன்பைஉருக்கி, அறிவை அதன் மேல்புகட்டித்
துன்ப வலைப்பாசத் தொடரறுப்ப தெக்காலம்?
மனதைஒரு வில்லாக்கி, வான்பொறியை நாணாக்கி
எனதறிவை அம்பாக்கி, எய்வதினி எக்காலம்?
கடத்துகின்ற கோணிதனைக் கழைகள்குத்தி விட்டாற்போல்
நடத்துகின்ற சித்திரத்தை நான்அறிவ தெக்காலம்?
நின்றநிலை பேராமல், நினைவில்ஒன்றும் சாராமல்
சென்றநிலை முக்திஎன்று சேர்ந்தறிவ தெக்காலம்?
பொன்னும் வெள்ளியும்பூண்ட பொற்பாதத்தை  உள்அமைத்து
மின்னும் ஒளிவெளியே விட்டடைப்ப தெக்காலம்?
அருணப்பிரகாசம் அண்டம் எங்கும் போர்த்தது போல்
கருணைத் திருவடியில் கலந்துநிற்ப தெக்காலம்?
பொன்னில் பலவிதமாம் பூடணம்உண் டானதுபோல்
உன்னில் பிறந்து உன்னில் ஒடுங்குவதும் எக்காலம்?
நாயில் கடைப்பிறப்பாம் நான்பிறந்த துன்பம்அற
வேயில் கனல்ஒளிபோல் விளங்குவதும் எக்காலம்?
சூரியனின் காந்தஒளி சூழ்ந்தபஞ்சைச் சுட்டதுபோல்
ஆரியநின் தோற்றத்து அருள்பெறுவ தெக்காலம்?
இரும்பில் கனல்மூட்டி இவ்வுருபோய்
அவ்வுருவாய்க் கரும்பில் சுைவரசத்தைக் கண்டறிவ தெக்காலம்?
கருக்கொண்ட முட்டைதனை கடல்ஆமை தான்நினைக்க
உருக்கொண்ட வாறதுபோல் உனை அடைவை தெக்காலம்?
வீடுவிட்டுப் பாய்ந்து வெளியில் வருவார்போல்
கூடுவிட்டுப் பாயும் குறிப்பறிவ தெக்காலம்?
கடைந்த வெண்ணெய்மோரில் கலவாத வாறதுபோல்
உடைந்து தமியன்உனைக் காண்பதுவும் எக்காலம்?
இருளை ஒளிவிழுங்கி ஏகஉருக் கொண்டாற் போல்
அருளை விழுங்கும்இருள் அகன்றுநிற்ப தெக்காலம்?
மின்எழுந்து மின்ஒடுங்கி விண்ணில் உறைந்தாற்போல்
என்னுள்நின்று என்னுள்ளேயே யான்அறிவ தெக்காலம்?
கண்டபுனல் குடத்தில் கதிர்ஒளிகள் பாய்ந்தாற்போல்
கொண்ட சொரூபமதைக் கூர்ந்தறிவ தெக்காலம்?
பூணுகின்ற பொன்அணிந்தால் பொன்சுமக்கு மோஉடலைக்
காணுகின்ற என்கருத்தில் கண்டறிவ தெக்காலம்?
செம்பில் களிம்புபோல் சிவத்தை விழுங்கமிக
வெம்பிநின்ற மும்மலத்தை வேறுசெய்வ தெக்காலம்?
ஆவியும் காயமும்போல் ஆத்துமத்து நின்றதனை
பாவி அறிந்துமனம் பற்றிநிற்ப தெக்காலம்?
ஊமை கனாக்கண்டு உரைக்கறியா இன்பம்அதை
தாம்அறிந்து கொள்வதற்கு நாள்வருவ தெக்காலம்?
எள்ளும் கரும்பும் எழுமலரும் காயமும்போல்
உள்ளும் புறமும்நின்று உற்றறிவ தெக்காலம்?
அன்னம் புனலை வகுத்தமிழ்தை உண்பதுபோல்
என்னை வகுத்துன்னை இனிக்காண்ப தெக்காலம்?
அந்தரத்தில் நீர்பூத்து அலந்தெழுந்த
தாமரைபோல் சிந்தைவைத்துக் கண்டு தரிசிப்ப தெக்காலம்?
பிறப்பும் இறப்பும் அற்றுப் பேச்சும்அற்று மூச்சும்அற்று
மறப்பும் நினைப்புமற்று மாண்டிருப்ப தெக்காலம்?
மன்னும் பரவெளியை மனவெளியில் அடைத்தறிவை
என்னுள் ஒரு நினைவை எழுப்பிநிற்ப தெக்காலம்?
தன்உயிரைக் கொண்டு தான்திரிந்த வாறதுபோல்
உன்உயிரைக் கொண்டு இங்கு ஒடுங்குவதும் எக்காலம்?
சேற்றில் கிளைநாட்டும் திடமாம் உடலை
இனிக்காற்றில்உழல் சூத்திரமாய்க் காண்பதினி எக்காலம்?
என்வசமும் கெட்டு இங்கிருந்த வசம்அழிந்து
தன்வசமும் கெட்டுஅருளைச் சார்ந்திருப்பது எக்காலம்?
தன்னை மறந்து தலத்து நிலைமறந்து
கன்மம் மறந்து கதிபெறுவ தெக்காலம்?
என்னை என்னிலே மறைந்தே இருந்த பதிமறந்து
தன்னைத் தானேமறந்து தனித்திருப்ப தெக்காலம்?
தன்னையும் தானேமறந்து தலைவால் தாழ்போட்டே
உன்னை நினைத்துள்ளே உறங்குவதும் எக்காலம்?
இணைபிரிந்த போதில்அன்றி இன்பமுறும் அன்றிலைப்போல்
துணைபிரிந்த போதுஅருள்நூல் தொடர்ந்துகொள்வ தெக்காலம்?
ஆட்டம்ஒன்றும் இல்லாமல் அசைவுற்றும் காணாமல்
தோட்டம்அற்ற வான்பொருளைத் தேடுவது எக்காலம்?
முன்னை வினையால் அறிவு முற்றாமல் பின்மறைந்தால்
அன்னை தனைத்தேடி அமுதுண்ப தெக்காலம்?
கள்ளுண்டவர்போல் கனிதரும் ஆனந்தம் அதால்
தள்ளுண்டு நின்றபடி தடைப்படுவ தெக்காலம்?
நான்என்ற ஆணவமும் தத்துவமும்
கெட்டொழிந்தே ஏன்என்ற பேச்சுமின்றி இலங்குவதும் எக்காலம்?
நான்அவனாய்க் காண்பதெல்லாம் ஞான
விழியால் அறிந்து தான் அவனாய் நின்று சரண் அடைவ தெக்காலம்?

- கவிஞர் கண்ணதாசன்
(தொடரும்)


நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,
சென்னை - 600 017.