பரமன் கோயிலுக்காகப் பேரேரி எடுப்பித்தப் பேரரசி!



கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்: உடையார் கோயில்

தஞ்சாவூர் மாவட்டம் உடையார் கோயில் சிவாலயத்திலுள்ள கங்கையும் கடாரமும் கொண்ட முதலாம் ராஜேந்திர சோழனின் ‘திருமன்னி வளர’ எனத் தொடங்கும் மெய்க் கீர்த்தியுடன் காணப்பெறும் கல்வெட்டு சாசனத்தில், ‘‘நம்மூர் திரிபுவனமாதேவிப் பேரேரி உள்ளால் எழுந்தருளியிருந்த திருக்கிளாவுடைய மகாதேவர் கோயில் திருமுற்றத்தே கூட்டம் குறைவற கூடியிருந்து...’’ எனக்குறிப்பிட்டு, திருபுவன மாதேவி சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி மகாசபை எடுத்த ஒரு முடிவு பற்றி குறிக்கப் பெற்றுள்ளது.

அதே கோயிலிலுள்ள திரிபுவன சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவரின் மற்றொரு கல்வெட்டில் ‘‘நம்மூர் திரிபுவனமாதேவி பேரேரியுள் எழுந்தருளியிருக்கும் திருவிறையான்குடி திருக்கிளாவுடைய மகாதேவர் ஆதி சண்டேஸ்வரர்க்கு நாங்கள் இறையிலி செய்த கொடுத்த பரிசாவது...’’ என்று அதே திரிபுவனமாதேவி சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி மகாசபையோர் கொடுத்த கொடை பற்றி குறிக்கப் பெற்றுள்ளது. இரண்டு கல்வெட்டு சாசனங்களும் திரிபுவனமாதேவி பேரேரி நடுவுள் இறையான்குடி திருக்கிளாவுடையார் திருக்கோயிலாம் சிவாலயம் நிகழ்ந்தமையை தெளிவுபட விவரிக்கின்றன.

நீர் நிலைநடுவுள் சிவாலயம் திகழ்வது சிறப்புக்குரியதாகும். அப்பரடிகளாராகிய திருநாவுக்கரசு பெருமானார் சிவஜோதியில் கலந்த திருத்தலமான திருப்புகலூர் சிவாலயமும், திருஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலும், திருந்து தேவன்குடி சிவாலயமும் நீர்நிலையின் நடுவே அமைந்த சிவாலயங்களாகும். பிற்காலத்தில் ஒரு புறம் நீர்நிலையைத் தூர்த்து அவற்றின் தன்மையை மாற்றி விட்டனர். காம்போஜ தேசத்திலுள்ள (கம்போடியா நாட்டிலுள்ள) சிவாலயங்கள் அனைத்தும் நீர் நிலைகளின் நடுவே அமைந்த கோயில்களே.

ஆனால் உடையார் கோயில் திருக்கிளாவுடையார் திருக்கோயிலோ, ராஜேந்திர சோழன் காலத்தில் பேரேரி ஒன்றின் நடுவில் எடுக்கப்பெற்ற ஒரு தனிச்சிறப்புடைய ஆலயமாக இருந்துள்ளது. இன்றோ பேரேரி சுருங்கி சிறிய நீர்நிலையாகி அதன் நடுவே இவ்வாலயம் காட்சியளிக்கின்றது. ராஜேந்திர சோழன் தன் தாயார் திருபுவன மாதேவியின் (ராஜராஜ சோழனின் தேவியார்) பெயரில் ஐம்பது சிற்றூர்களை ஒருங்கிணைத்து புத்தூர் எனும் திரிபுவனமாதேவி சதுர்வேதி மங்கலம் எனும் ஊரினைத் தலைமையிடமாக அமைத்து அவ்வூர்களுக்குப் பாசன வசதியளிப்பதற்காக திரிபுவன மாதேவிப் பேரேரி என்ற ஏரி ஒன்றினை வெட்டுவித்து ஒருவளமுடைய பகுதியாக மாற்றி அமைத்தான்.

மிகப்பிரமாண்டமான அப்பேரேரியின் வடபாரிசத்தில் ஏரியின் உள்ளால் சிவபெருமானுக்காக ஒரு கோயிலும் எடுத்தான். அக்கோயிலே தற்போதைய அம்மாப்பேட்டை உடையார் கோயில் சிவாலயமாகும். காலப்போக்கில் பேரேரி அழிவுபட்டாலும் இன்றும் உடையார் கோயில் சிவாலயம் ஏரியின் எச்சமாகவுள்ள சிற்றேரியின் நடுவுள்தான் திகழ்கின்றது. களாமரத்தை தலவிருட்சமாகக் கொண்டு திகழும் இச்சிவாலயத்துப் பெருமானை திருக்கிளாவுடையார் என்றும், திருக்கிளாவுடை மகாதேவர் என்றும் கல்வெட்டுகள் கூறாநிற்க, மக்கள் வாக்கில் கரவந்தீஸ்வரர் திருக்கோயில் என்றே அழைக்கப்பெறுகின்றது.

இரண்டு திருச்சுற்றுகள் திருமதிலுடன் விளங்க, கீழ்த்திசையில் ஐந்து நிலைகளுடன் ஒரு ராஜகோபுரம் திகழ. இவ்வாலயம் எழிலுறு கற்றளியாக விளங்குகின்றது. சத்ர (கொடை வடிவில்) விமானம் எனப்பெறும் அமைப்பில் மூலட்டானத்தின் மேல்நிலை விளங்க அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றுடன் மூலவர் திருக்கோயில் அமைந்துள்ளது. கோஷ்ட மாடங்களில் முறையே கணபதிப்பிள்ளையார், சனகாதி முனிவர்களுடன் ஆலமர் செல்வர், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் இருபுறம் திகழ, நடுவண் அமைந்த லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரின் திருமேனிகள் இடம் பெற்றுள்ளன.

இவற்றில் கணபதிப்பிள்ளை மற்றும் ஆலமர்ச் செல்வராம் தட்சிணாமூர்த்தியின் திருமேனிகள் ராஜேந்திர சோழன் காலத்தவையாகும். பிற திருமேனிகள் பிற்காலத் திருப்பணிகளின்போது இடம் பெற்றவை. கருவறையுள் நெடிதுயர்ந்த திருவடிவத்துடன் கம்பீரமான லிங்கத் திருமேனியாக திருக்களாவுடைய மகாதேவர் திருமேனி காணப் பெறுகின்றது. மகாமண்டபத்தின் வடபுறத்தில், தென்புறம் நோக்கியவாறு அம்மன் ஆலயம் இடம் பெற்றுள்ளது. தர்மவல்லி என்பது ’ அம்பிகையின் திருநாமமாகும்.

மகாமண்டபத்துள்ளும், புறமும், இடப தேவர் திருவுருவங்களும் திருபலிபீடங்களும் அமைந்துள்ளன. வெளித்திருச்சுற்றில் வடக்கு நோக்கியவாறு உக்கிர சாந்தி விநாயகர் கோயிலும், உள்திருச்சுற்றில் பிரதான விநாயகர், சண்டீசர் கோயில்களும், திருச்சுற்று மாளிகையில் பிற பரிவாராலயங்களும் இடம் பெற்றுள்ளன. திருச்சுற்றின் தென்மேற்குப் பகுதியில் கிழக்கு நோக்கியவாறு அமைந்த பிரதான விநாயகர் ஆலயத்தின் முகமண்டபத்தில் கேது எனப்போற்றப்பெறும் நாக உருவமும், ராகு எனப் போற்றப்பெறும் நாகராஜர் திருவுருவும் இடம் பெற்றுள்ளன. அதே பகுதியில் தெற்கு நோக்கியவாறு அமைந்த சிற்றாலயத்தில் பத்மாசன கோலத்தில் சரஸ்வதியின் திருமேனி காணப் பெறுகின்றது.

அக்கமாலையும், நீர்ப்பாத்திரமும் பின்னிரு கரங்களில் விளங்க, எழிலார்ந்த கோலத்தோடு அருள்பாலிக்கும் இந்த கலைமகள் திருமேனி தஞ்சாவூர் பெரிய கோயிலிலும், கங்கை கொண்ட சோழபுரத்திலும் காணப்பெறும் திருமேனிகளை முழுதும் ஒத்து திகழ்கின்றது. ஸ்ரீஅனுராதாகிரமண சரஸ்வதி என்ற நாமகரணத்துடன் திகழும் இத்தேவி மாணவச் செல்வங்களுக்கு கல்வி ஞானத்தை அருள்பவளாக விளங்குகின்றாள். அருகே கல்விக்குரிய நாகதெய்வங்களும், ஞான குருவான தட்சிணாமூர்த்தியும் திகழ்வதால், இத்தலம் ஞானம், கல்வி, கலை ஆகியவற்றை, வணங்குவோர்க்கு அருளும் அற்புதக் கோயிலாகவும் விளங்குகின்றது.

திருச்சுற்றில் முக்குறுணி விநாயகர், பிரம்மபுரீசர், ஆனந்தபுரீஸ்வரர், காசி விஸ்வநாதர், வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமான், வேதபுரீஸ்வரர், சதுர்வேதபுரீஸ்வரர், பூலோக நாதர், கஜலட்சுமி ஆகிய தெய்வத் திருவுருவங்கள் இடம் பெற்றுள்ளன. வடகிழக்கில் நடராச மண்டபமும், கிழக்கில் பைரவர், சேக்கிழார், நால்வர், சூரியன், சந்திரன் ஆகியோரின் திருமேனிகள் இடம் பெற்றுள்ள சுற்று மண்டபமும் உள்ளன. நவகிரகங்கள் தனியாக பிரதிட்டை செய்யப்பெற்று காட்சி நல்குகின்றன. இவ்வாலயத்தில் முதலாம் ராஜேந்திர சோழன் காலம் தொடங்கி மூன்றாம் ராஜேந்திர சோழன் காலம்வரை உள்ள பல்வேறு சோழ மன்னர் தம் சிலாசாசனங்கள் இடம் பெற்றுள்ளன.

அவை இவ்வூரினை நித்த விநோத வளநாட்டு பூதியான ராஜ நாராயண சதுர்வேதி மங்கலம் எனக் குறிப்பிடுகின்றன. இவ்வூரின் பழம்பெயர் திருவிறையான்குடி என்பதாகும். பின்பு பூதி என்றும், ராஜ நாராயண சதுர்வேதி மங்கலம் என்றும் வழங்கப் பெற்றன.
தற்காலத்தில் ‘சேரி’ என்ற சொல்லை பயன்படுத்துவது தாழ்வுடையது எனப் போலியாகக் கருதி வருகின்றனர். ஆனால் அச்சொல் உயர்வுடையதாகவே விளங்கி இருக்கின்றது. பூதி அருகிலுள்ள திருபுவனமாதேவி சதுர்வேதி மங்கலத்தில் ராஜேந்திர சோழ சேரி, திருபுவன மாதேவி சேரி, அருண்மொழி தேவச்சேரி, மதுராந்தக சேரி, ஜனநாத சேரி, பவித்திர மாணிக்கசேரி என்ற பெயரில் மக்கள் வாழ்விடங்கள் இருந்தமையை திருக்களாவுடையார் கோயில் கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன.

இவ்வாலயத்திலுள்ள மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு குறிப்பிடத்தக்கவொன்றாகும். இத்திருக்கோயிலின் மூலவர் லிங்கத் திருமேனியின் பாணம் மட்டுமே கருங்கல்லால் அமைந்ததாக இருந்துள்ளது. அது நிற்கும் பீடம் சுண்ணாம்புச் சுதையால் (பசுங்கூட்டால்) நெடு நாட்களாக இருந்து அவ்வப்போது அது நிர்மாலிய நீரால் பழுதுபட்டு வந்திருக்கிறது. எனவே சுதை பீடத்தை நீக்கி கருங்கல் கொண்டு பீடம் அமைக்க வேண்டும் என இக்கோயிலின் சைவாச்சாரியார் (குருக்கள்) சதாசிவ பட்டர் என்பார் விக்கிரம சோழ பிரம்மராயன் என்ற அதிகாரியிடம் விண்ணப்பம் செய்தார்.

அதனை அவர் குலோத்துங்க சோழ தேவர்க்கு விண்ணப்பித்து கல்லால் பீடம் அமைக்க அனுமதி பெற்றார். அதன்படி ஆயிரம் பொற்காசுகளை அப்பணிக்கென அளித்ததோடு, மேலும் தேவைப்படும் பொருளுக்கு கோயில் பண்டாரத்திலிருந்து பெற அனுமதியும் அளித்தார். பீடம் செய்ய நொடியூர் பட்டணத்துக்கிள்ளியூர் மலையிலிருந்து கருங்கல் (சிலா) கொண்டுவர உத்தரவும் இட்டார். சைவ ஆச்சாரியர்கள், கணித சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ கணிதாதி ராஜரும் கூடி பீடம் சாத்த ஏற்ற நாள், நாழிகை ஆகியவற்றை கணித்து கோயிலார்க்கு ஓலை அனுப்பினர்.

அதன்படி ஸ்ரீபீடம் கல்லால் செய்து பிரதிட்டை செய்ய கோயிலில் பணிபுரியும் தச்சாச்சாரியார்கள் (ஸ்தபதிகள்) முயன்றும் சாஸ்திரோத்தமாக பீடம் சாத்த அவர்களால் இயலவில்லை. கிழார் கூற்றத்து உதய திவாகர ஆச்சாரியன்தான் அப்பணியை முடிக்கிறேன் எனக்கூறி அவன் புதல்வர்களுடன் அப்பணியை சாத்திர விரோதம் இல்லாமல், குறிப்பிட்ட நாளின் குறிப்பிட்ட நாழிகையில் செய்து முடித்தார். கோயிலார் ஒப்புக்கொண்டபடி அந்த தச்சாச்சாரியனுக்கு நிலம் அளித்து கௌரவித்தனர். இதனை அக்கல்வெட்டு விளக்கமுற எடுத்துக் கூறுகின்றது.

உதய திவாகர ஆச்சாரியன் என்ற அந்த ஸ்தபதி செய்த பீடமே லிங்கத் திருமேனியில் இன்றளவும் காட்சி நல்குகின்றது. திருக்கிளாவுடையார் கோயிலில் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் அம்மன்னவனின் விருது பெயரான எதிரிலி சோழன் என்ற பெயரில் ஒரு மண்டபம் திகழ்ந்ததை ஒரு சாசனம் விவரிக்கின்றது. மூன்றாம் ராஜேந்திர சோழன் காலத்தில் பூமி திருவுடையாளான திருவகம்படி நங்கை எனும் தேவரடியார் பெண் ஒருத்தி இக்கோயிலுக்கென ஆளுடைய பிள்ளையார் (திருஞானசம்பந்தர்) ஆளுடைய நம்பி (சுந்தரர்) அவர்தம் பிராட்டி (பரவையார்) பெரிய தேவர் (சோழ அரசர்) அவர் தேவியார்,

உமா மகேஸ்வரர், அவர் தேவியரான உமாபரமேஸ்வரியார் ஆகிய பிரதிமங்களையும், தெய்வத் திருமேனிகளையும் செய்தளித்ததோடு அவை தம் பூைஜகளுக்காக வீர சோழ பல்லவரையன் என்பானிடமிருந்து நிலத்தை விலைக்கு வாங்கினார். அதனை இறையிலி (வரியில்லாத) நிலமாக மாற்ற ஊர் சபையாரிடம் 250 காசு கொடுத்து இறையிலியாக மாற்றி கோயிலாரிடம் கொடுத்ததை அக்கல்வெட்டு கூறுகின்றது. திருக்கிளாவுடையார் கருணையால் உலகம் செழிக்க பிரார்த்திப்போம்.

- முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்