கோவிந்தா, கோவிந்தா, குடையுடையோனே கோவிந்தா!



ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் பிறந்ததுமே வடசென்னை வாசிகள் திருப்பதி குடையைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிடுவார்கள். கோயில்களில் சுவாமி பிராகாரம் சுற்றும் போதும், வீதிஉலா வரும்போதும் அவருக்குக் குடைபிடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இவ்வகைக் குடைகளுக்காக ஒரு திருவிழாவே கொண்டாடுவது என்பது சென்னைக்கே உரிய ஒரு தனிப்பெருமை! சுமார் ஒரு மாதகாலம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேட்டையில் (பகுதியில்) இந்த விழா நடைபெறுகிறது.

‘திருப்பதி குடை’ என்பது என்ன? இந்த விழாவின் தத்துவம் என்ன? வெங்கடாசலபதி கோயில் கொண்டிருக்கும் திருப்பதி மலையில் தினந்தோறும் விழா நடந்து கொண்டிருந்த போதிலும், புரட்டாசியில் நடைபெறும் பிரம்மோற்சவம் பெரியதொருவிழா. இதில் ஐந்தாவது நாள் நடைபெறும் கருடோத்ஸவம் மிக முக்கியமானது. அன்றைய தினம் பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா வருகிறார்.

அப்போது பயன்படுத்துவதற்காக ஆறு குடைகளை பெரும் பொருட் செலவில் தயாரித்து அனுப்பி, பெருமாளுக்கு சமர்ப்பிக்கிறார்கள் சென்னைவாசிகள். இந்தக் குடைகளைத் தயாரிக்கத் தொடங்கியதிலிருந்து, திருப்பதி மலையை அடையும் வரையில் உள்ள ஒரு மாத காலம் சென்னையில் ‘திருப்பதி குடை’ ஊர்வல விழா நடைபெறுகிறது. இந்தக் குடை விழா முதலில் எப்படி ஆரம்பித்தது? எப்படி நடத்தினார்கள்?

‘‘கருடோத்ஸவத்துக்குக் குடைகளை சமர்ப்பிக்கும் வழக்கம் 200 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. ஏழு, தலைமுறைக்கு முன் ‘வேங்கடகிருஷ்ணம்மா செட்டி(யார்)’ என்பவர் இதை நடத்தி வந்தார். அப்போதிலிருந்து இந்தக் கைங்கர்யம் வம்சப் பரம்பரையாக நடந்து வருகிறது. பெரியவை இரண்டு, சிறியவை நான்கு ஆக ஆறு குடைகளையும் தயாரிக்க, சுமார் ஒரு மாத காலம் தேவைப்படுகிறது. எனவே, கருடோத்ஸவத்துக்கு இரண்டு மாதம் முன்பாகவே இந்த வேலை துவங்குகிறது.

ஆடி அமாவாசைக்குப் பிறகு பெளர்ணமிக்குள் குறிப்பிட்ட ஒரு நாளில் குடை வேலையைத் துவங்கும் அடையாளமாக, சில மூங்கில் பத்தைகளை வைத்து ஏழுமலையானுக்குப் பூஜைகள் செய்து, அங்குரார்ப்பணம் செய்கிறார்கள். குடையின் பல பாகங்களை வெவ்வேறு இடங்களில் செய்கிறார்கள். மரவேலை வடசென்னையிலும், மூங்கில் வேலை காஞ்சிபுரத்திலும், பட்டுக் குஞ்சலத் தயாரிப்பு சென்னை சிந்தாதிரிப்பேட்டையிலும் நடக்கின்றன.

இந்த வேலைகளையெல்லாம் அந்தந்தக் குடும்பத்தின் பரம்பரைப் பாத்தியதையாம். ‘‘ஏழுமலையானுக்குத் தாங்கள் செய்யும் தொண்டு என்று கருதி, அவரவர்கள் சிரத்தையுடன் செய்து முடிக்கிறார்கள்’’ என்றார், இந்தப் பணியில் சம்பந்தப்பட்ட ஒருவர். குடையின் அடிப்புறத்தில் வெல்வெட் துணியும், அதன் மேல் உயர்ந்த ‘புரோகேட்’ துணியும், அதற்கு மேல் ‘டிரில்’ துணியும் போட்டு, சுற்றிலும் பட்டுக் குஞ்சலம் வைத்துத் தைக்கிறார்கள்.

இந்த மூன்று துணிகளுக்கு மேல் மற்றொரு வெள்ளை உறையும் உண்டு. ஒரு மாத காலம் சென்னை வீதிகளில் ஊர்வலம் வரும் இந்தக் குடைகள் மீது மாசு படிந்துவிடும் என்பதற்காக இந்த வெள்ளைத் துணியை உறையாக வைத்துத் தைக்கிறார்கள். இந்தக் குடைகள் கருடோத்ஸவத்தன்று திருமலையை அடைந்ததும், மேல் உறையைப் பிரித்து விடுவார்கள். அப்போது குடைகள் பளபளப்புடன் புத்தம் புதியனவாகத் தோன்றும். குடை மேல் பொருந்தும் கலசமும் அடியில் தாங்கலாக வைக்கும் குமிழும் தங்க முலாம் பூசப்பட்டவை.

சுமார் மூன்று லட்ச ரூபாய் செலவில் தயாராகும் ஆறு குடைகளுக்கும் ஆவணி அமாவாசை கழித்து, பவுர்ணமிக்குள் நல்ல நாள் பார்த்து பூஜை செய்து, குடை ஊர்வலம் தொடங்குகிறார்கள். ஒரு மாத காலம் தினசரி காலை, மாலையில் ஒவ்வொரு பேட்டையிலும் நாதஸ்வரம் மற்றும் பேண்டு வாத்திய முழக்கத்துடன் திரளான மக்கள் புடைசூழ, ஊர்வலம் நடைபெறுகிறது.

குடை ஊர்வலம் வரும் பகுதிகளில் வசிக்கும் பக்தர்கள், இந்தக் குடைகளை ஏழுமலையானின் அம்சமாகவே கருதி, சகலமரியாதைகளுடனும் தீபாராதனை முதலியவற்றை நடத்தி, காணிக்கையும் செலுத்தி, வணங்குவார்கள். குடைகளுடன் தாமும் மானசீகமாகப் பயணித்து ஏழுமலையானை தரிசிக்கும் நிறைவைப் பெறுகிறார்கள் இந்த பக்தர்கள். மக்கள் சேவையே மகேசன் சேவை என்றவகையில், அந்தந்தப் பகுதிகளில் உள்ள பக்தர்கள் தனித்தனியே சிறுசிறு கொட்டகை அமைத்து உள்ளே பெருமாளின் படம் வைத்து வணங்குவதோடு, அந்த வழியே வரும் மக்கள் அனைவருக்கும் அன்னதானமும் செய்கிறார்கள்.

குடை ஊர்வலம் வரும் சாலைகளில், குறிப்பாக இரவு நேரத்தில், போக்குவரத்தை வேறு வழிக்கு மாற்றவும் சென்னை போக்குவரத்துத் துறை ஏற்பாடு செய்கிறது. நூற்றுக்கணக்கில் பக்தர்கள் தெரு ஓரங்களில் காத்திருந்து குடைகளை தரிசித்து, தம் பக்தியை அவற்றுடன் அனுப்பி, மலையப்பனுக்கு சமர்ப்பிக்கிறார்கள். இதனாலேயே தற்காலிக சிறுசிறு பிளாட்பாரக் கடைகளும் உருவாகிவிடுகின்றன. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், சிற்றுண்டிகள் என்று அந்த தற்காலிக நடைபாதை வியாபாரிகளுக்கும் படியளக்கிறார் பரந்தாமன்.

குறிப்பிட்ட பேட்டைகளில் ஊர்வலம் முடிந்ததும், பிராட்வே கந்தப்ப செட்டித் தெருவில் உள்ள கல்யாண மண்டபத்தைக் குடைகள் அடைந்து விடும். ஒருகாலத்தில் சென்னை மேயராக இருந்த ராமுலு நாயுடு இந்தக் கட்டிடத்தை ஜூலை முதல் நவம்பர்வரை இந்தக் கட்டிடத்தைக் குடை உத்சவ ஏற்பாடுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள வழங்கினார். அந்த வழக்கம் இன்றளவும் தொடர்கிறது. பிற மாதங்களில் இந்த மண்டபத்தில் பொதுமக்களின் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்திக்கொள்ள அனுமதிக்கிறார்கள்.

கருடோத்ஸவத்தன்று திருப்பதி மூலவருக்கு அணிவிப்பதற்காக விலையுயர்ந்த பட்டாடை ஒன்றைத் தயாரித்து, இங்கே உள்ள பெரிய கண்ணாடி அலமாரியில் வைத்து அதற்கும் தினசரி பூஜை நடத்துகிறார்கள். நிறைவு நாளில் இந்தப் பட்டாடையை பிரத்தியேகமான ஒரு மூங்கில் பெட்டியில் வைத்து, திருமலை உச்சியை அடையும்வரை தலைச்சுமையாகவே குடை ஊர்வலத்துடன் எடுத்துச் சென்று, ஆறு குடைகளுடன் சமர்ப்பிக்கிறார்கள். வம்ச பரம்பரையாக இருந்து வரும் அதே பழைய மூங்கில் பெட்டிதான் ஒவ்வோர் ஆண்டும் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது!

பிரம்மோத்ஸவத்தன்று விசேஷ பூஜைகளுக்குப் பிறகு மாலையில் குடைகள் சகல பரிவாரங்களுடனும் சத்திரத்தை விட்டுப் புறப்படுகின்றன. ெசன்னை நகர எல்லையைக் கடக்க ஒரு நாள் முழுவதும் ஆகிறது. இந்த பயணத்தில் ‘குடைகள் கவுனி தாண்டும் நேரம்’ என்று குறிப்பிடுவர். அதாவது, சென்னை நகர வடக்கு எல்லையாக ‘யானை கவுனி’ என்னும் இடத்தைக் குறிப்பிட்டு, அந்த எல்லையை - அதாவது நகரத்தை - கடக்கிறது (தாண்டுகிறது) ஊர்வலம் என்று பொருள்.

பக்தர்களின் வழிபாட்டை உத்தேசித்து வழியில் அங்கங்கே குடைகள் தங்கிச் ெசல்லும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதைத் தொடர்ந்து ெகாண்டேயிருப்பார்கள். குறிப்பிட்ட இடங்களில் சாலையில் பந்தல் போட்டு, குடைகளுக்கு பக்தர்கள் மரியாதை செலுத்துவர். வழி நெடுக தண்ணீர் பந்தல், நீர் மோர் தானம் எல்லாம் உண்டு. கடைசி வரையில் குடைகளைப் பிடித்தபடியே தாங்கிச் செல்லவும், வாத்தியங்கள் முழங்கவும் நூற்றுக்கு மேற்பட்ட பணியாளர்களும் இருப்பர். அவர்கள் தங்கள் வேலையை முறை வைத்துச் செய்வர்.

குடைகள் ெசன்னையை விட்டுக் கிளம்பி ஏழுமலையான் சந்நதியை அடையும் வரையிலுள்ள 175 கி.மீ. தூரமும் நடந்தேதான் ெசல்கிறார்கள். ஆங்காங்கே உள்ள ஊர்களில் இவர்களுக்கு உணவு வசதி செய்து கொடுக்கப்படும். இரவிலும்கூட இவர்கள் நடந்து சென்று கொண்டேயிருப்பார்கள். குடைகளுடன் ஆங்காங்கே புதுப்புது பக்தர்கள் கூட்டமும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். போலீஸ் பாதுகாப்பும் உண்டு.

குடைகள் கருடோத்ஸவத்தன்று மலையுச்சியை அடைந்ததும், கோயில் அதிகாரிகள் வரவேற்று, குடைகளைப் பெற்றுக்கொண்டு, பதில் மரியாதையும் செய்கிறார்கள். அன்று இரவு ஏழுமலையான் கருடவாகனத்தில் வீதியுலா வரும்போது, இந்தக் குடைகளைப் பிடிக்கிறார்கள். பட்டாடையை மூலவருக்கு அணிவிக்கிறார்கள்.

- ஆர்.சி.சம்பத்