கலைமகள் வழிபட்ட சிவாலயங்கள்



ஆதிபராசக்தியின் அருளால் தோன்றிய சரஸ்வதி சிவனருள் பெறவும், அளவறிய ஞானம் பெறவும் பல திருத்தலங்களில் சிவபூைஜ செய்து வழிபட்டிருக்கிறாள்! சரஸ்வதி வழிபட்ட சிவாலயங்களில் முக்கியமானது ‘காளஹஸ்தி’யாகும். ஒரு முனிவரின் சாபத்தால், வாய்பேச முடியாமற்போன சரஸ்வதி இத்திருத்தலம் வந்து ‘சரஸ்வதி தீர்த்தம்’ என்று தன் பெயரிலேயே ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி அதில் நீராடி விட்டு சிவபெருமானை பூஜித்து வழிபட்டாள்.

சரஸ்வதிதேவியின் பக்தி வழிபாட்டை மெச்சி அவளுடைய ஊமைத்தன்மையைப் போக்கினாராம். வாய்பேச முடியாத குறைபாடு உள்ளவர்கள் இந்த சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி, ஈசனை வழிபட்டு அக்குறை நீங்கியதாகவும் சொல்லப்படுகிறது. சிவபெருமானை அவமானப்படுத்துவதற்காக தட்சன் நடத்திய யாகத்தில் பிரம்மதேவன் தன் துணைவி சரஸ்வதி தேவியாரோடு கலந்துகொண்டதால் வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்ததோடு, பிரம்மதேவனை தண்டித்து சரஸ்வதிதேவியின் மூக்கையும் அறுத்தார்.

இதனால் அச்சமடைந்த சரஸ்வதிதேவி பிரம்மதேவனுடன் சீர்காழி சென்று சிவலிங்க வழிபாடு செய்து இழந்த மூக்கையும், ஈசனின் அருளையும் பெற்றதாக வரலாறு. இந்நிகழ்வினை திருஞானசம்பந்தர் சீர்காழியில் பிரம்மனுடன் சேர்ந்து வழிபட்டதைப்போற்றும் வகையில், ‘‘நாவியலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலங்கோயில்’’ என்று பாடியுள்ளார். திருமறைக்காடு எனும் திருத்தலத்தில் சரஸ்வதி கலைகளின் வடிவமாக நின்று சிவனை வழிபட்டாள். அதனை ஞானசம்பந்தர் ‘கலைகள் வந்திறைஞ்சும் கழல்’ என்று பாடியுள்ளார். இங்கு வேத சரஸ்வதியாக கலைமகள் வீற்றிருக்கின்றாள்.

குருகாவூரில் பிரம்மதேவன் வழிபட்டபோது அவருடன் சரஸ்வதியும் சிவலிங்க பூைஜ செய்தாள். அங்கு அவள் உண்டாக்கிய சரஸ்வதி தீர்த்தம் தற்போது வடக்கு குளம் என்று அழைக்கப்படுகிறது. வாணிதேவி மூன்று காலங்களில் (சந்தியா தேவதையாக விளங்குகையில்) காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி என்று மூன்று வடிவங்களைப் பெறுகிறாள். இந்த மூன்று வடிவுடன் அவள் வழிபட்ட திருத்தலம் ‘திருவீழிமிழலை’யாகும். இங்குள்ள மூன்று லிங்கங்கள் ‘காயத்ரீஸ்வரர், சாவித்ரீஸ்வரர், சரஸ்வதீஸ்வரர்’ என்ற திருநாமங்களில் அழைக்கப்படுகின்றன.

ஓசையாக வெளிப்படும்போது வாணி என்றும், அறிவாக வெளிப்படும்போது சரஸ்வதி எனவும் கலைமகள் அழைக்கப்படுகிறாள். பிரம்மதேவனின் வலப்புறம் வாணியாகவும், இடது புறத்தில் சரஸ்வதியாகவும் வீற்றிருக்கின்றாள். இந்த இரண்டு உருவத்துடன் ‘பெருவேளூர்’ எனும் திருத்தலத்தில் சிவபெருமானை பூஜித்து கலைமகள் வழிபட்டதால் இங்குள்ள சிவலிங்கம் ‘வாணி சரஸ்வதீஸ்வரர்’ என்ற திருநாமத்தோடு திகழ்கின்றது! இப்படி பல்வேறு சிவாலயங்களில் ஈசனை கலைமகள் வழிபட்டு நற்பேறு பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. நாமும் ‘சரஸ்வதி பூஜை’ நன்னாளில் கலைமகளோடு கயிலாயநாதனையும் வணங்கி அருள் பெறுவோம்! ஓம் நமசிவாய!

- அயன்புரம்
த.சத்தியநாராயணன்