முருகனுக்கு மூன்று மயில் வாகனங்கள்!



- அருணகிரி உலா 38

அருணகிரி உலாவில் நமது அடுத்த இலக்கு, ‘‘திருவாஞ்சிய மேவிய செல்வனார் பாவந்தீர்ப்பர் பழிபோக்குவர் தம் அடியார்கட்கே’’ என்று சம்பந்தரால் போற்றப்பட்ட பெருமையுடைய ‘திருவாஞ்சியம்’ எனும் திருத்தலமாகும். கும்பகோணத்திற்குத் தென்கிழக்கே 24 கி.மீ. தொலைவிலுள்ளது. நன்னிலம் - குடவாசல் பேருந்து சாலையில் நன்னிலத்திலிருந்து மேற்கே 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இறைவன் வாஞ்ச லிங்கேஸ்வரர் என்றும் வாஞ்சிநாதேஸ் வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி மங்கள நாயகி என்ற மருவார் குழலி.

பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்த இத்தலக் கல்வெட்டில் ‘குலோத்துங்க சோழவள நாட்டுப் பனையூர் நாட்டுத் திருவாஞ்சியம்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. முன்னொரு காலம், திருமகளைப் பிரிந்த திருமால் அவளை அடைய வேண்டி, சிவனைப் பூசித்து செல்வமகள் மீண்டும் தன்னுடன் வாஞ்சையாக இருக்கும் வரம் பெற்றார் என்பதால் தலம் ‘திருவாஞ்சியம்’ எனப் பெயர் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. மூலவர், சுயம்பு லிங்கத் திருமேனி. உலகிலுள்ள 64 சுயம்பு லிங்கத் திருமேனிகளுள் இதுவே மிகவும் பழமையானதென்பர்.

சிவபெருமானும் தேவியும் காவிரிக் கரையிலுள்ள இவ்வூரின் அழகைக்கண்டு மயங்கி இங்கு விரும்பி அமர்ந்தனர். காசிக்குச் சமமான ஆறு தலங்களுள் இதுவும் ஒன்று. மற்ற ஐந்து தலங்கள்:  திருவையாறு, வேதாரண்யம், மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருவெண்காடு. 560 அடி நீளமும் 320 அடி அகலமும் உள்ள இவ்வாலயம் மூன்று கோபுரங்கள், மூன்று பிராகாரங்களுடன் விளங்குகிறது. பிரதான ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டிருக்கிறது. திருவாஞ்சியம் கோயிலில் யமதர்மனுக்கும், அவரது தலைமைக் கணக்கரான சித்ர குப்தருக்கும் தனிச் சந்நதி உள்ளது.

உயிர்களைப் பிரிப்பதால் ஏற்படும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க யமன் இங்கு கடும் தவம் செய்தார். மாசிமகப் பெருவிழாவில் இரண்டாம் நாள் இறைவன் யமனுக்குக் காட்சி அளித்த நிகழ்ச்சி இன்றும் ஐதீக விழாவாக நடத்தப்படுகிறது. சிவபெருமான் அளித்த வரத்தின்படி இங்குள்ள குப்தகங்கை தீர்த்தத்தில் நீராடி யமனை முதலில் தரிசனம் செய்த பின்பே இறைவனை வணங்க வேண்டும். யமராஜனுக்குத்தான் முதல் வழிபாடு, ஆராதனைகள் நடைெபறுகின்றன. யமன் நான்கு கரங்களுடன், பாசம் கதை சூலம் ஏந்தி இடக்காலை மடித்து வலக்காலைத் தொங்கவிட்டு பாதக்குறடுகளுடன் அமர்ந்துள்ளார்.

‘ரூப மண்டனம்’ எனும் நூல், யமன் தனது கரங்களில் புத்தகம், கோழி, தண்டம், பாசம் ஆகியவற்றைத் தரித்திருப்பதாகக் குறிப்பிடுகிறது. புத்தகம் காலத்தைக் கணக்கிடுவதையும், கோழி, காலத்தைச் சரியாகக் கடைப்பிடிப்பதையும், தண்டம், உயிர்களுக்குத் தண்டனை அளிப்பதையும், பாசம் உயிர்களைப் பற்றுவதையும் குறிப்பன என்கிறது இந்நூல். சிவ அடியார்களுக்கும் தர்மவழியில் நடப்பவர்களுக்கும் இதத்தையும் அன்பையும் அளித்துக் காப்பவன் யமன் என்கின்றன புராணங்கள். மரண பயம், மனக்கிலேசம் உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட அவை நீங்கும். இவ்வூரில் எந்த இடத்தில் மரணம் நடந்தாலும் கோயில் மூடப்படுவதில்லை.

கார்த்திகை ஞாயிறுேதாறும் இறைவன்-இறைவி இங்கு குப்தகங்கை தீர்த்தக்கரையில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகின்றனர். அங்கு விநாயகரும் அமர்ந்துள்ளார். கோயில் முன்மண்டபத்தில் அபயங்கர விநாயகரும் பாலமுருகனும் வீற்றுள்ளனர். உள்வாயிலைக் கடந்ததும் வலப்புறம் மங்களாம்பிகையைத் தரிசிக்கிறாம். கவசமிட்ட கொடிமரம், நந்தி, பலிபீடம் கடந்து நட்டுவன விநாயகரை வணங்கலாம். நுைழவாயிலருகே இன்னொரு விநாயகரைத் தரிசிக்கிறோம்.

வாயிலின் வலப்புறமும் ஒரு விநாயகர், சுப்ரமண்யரோடு காட்சி அளிக்கிறார். அதிகார நந்தி அருகில் மூன்று விநாயகர் உருவங்கள் உள்ளன. ஏராளமான தூண்களை உடைய நீண்ட தாழ்வாரத்தைக் கடந்து அழகியதொரு மண்டபத்தை அடைகிறோம். இங்கு உற்சவத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. கர்ப்பக்ருஹத்தின் இடப்புறம் விநாயகரும், இருபுறமும் துவாரபாலகர்களும் கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றனர். மூலவரை வணங்கி மகிழ்கிறோம்.

‘‘கரந்தை கூவிள மாலை கடிமலர்க் கொன்றை யுஞ் சூடிப்
பரந்த பாரிடம் சூழ வருவர்தம் பரமர்தம் பரிசால்
திருந்து மாடங்கள் நீடு திகழ் திருவாஞ்சியத் துறையும்
மருந்தனார் அடியாரை வல்வினை நலிய ஒட்டாரே’’

- என்று பாடுகிறார் சுந்தரர். மூலவரையும், எதிரே உள்ள அழகிய நந்திதேவரையும் வணங்கி உட்பிராகாரத்தில் வலம் வருகிேறாம். கருவறைக் கோட்டத்தில், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரையும், கீழே யமசண்டீசரையும் தரிசிக்கிறோம். சிவாலயங்களில் மிகவும் கண்டிப்பானவராகவும், நியாயாதிபதியாகவும் தண்டிப்பவராகவும் இருப்பவர் சண்டீகேஸ்வரர். இதே குணநலன்களை உடையவன்யம தருமன். அவன் சில சமயம் சண்டீச பதத்தில் வீற்றிருக்கும்போது ‘யம சண்டீசர்’ எனப் பெயர் பெறுகிறான். உள்சுற்றின் ஒருபுறம் அறுபத்து மூவர், உமாமகேஸ்வரர், உமாதேவி, சேக்கிழார், சந்திர மெளலீஸ்வரர், கன்னி விநாயகர், சட்டநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், சுப்ரமண்யர் ஆகியோரைத் தரிசிக்கலாம்.

ஆறுமுகன் பன்னிரு கரங்கள்கொண்டு தேவியருடன் காட்சி அளிக்கிறான். மயிலின் முகம் இடப்புறம் இருப்பதால் இது அசுர மயில் எனப்படும். (முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு; முதலாவது பிரணவமே மயிலானது; இரண்டாவது இந்திர மயில் - அசுரர்களை எதிர்த்துப் போரிடும்போது இந்திரனே மயிலாக வந்து முருகனைத் தாங்கினான். சூரபத்மன் என்றும் முருகன் அருகில் மயிலும் சேவலுமாக விளங்கும்படியான வரம் பெற்றிருந்தான். இதுவே மூன்றாவதான அசுர மயில்) ஆறுமுகனுக்குத் திருப்புகழ்ப் பாடலைச் சமர்ப்பிக்கிறோம்:

‘‘இபமாந்தர் சக்ர பதிசெறி
படையாண்டு சக்ர வரிசைகள்
இட வாழ்ந்து திக்கு விசயமண் அரசாகி
இறுமாந்து வட்டவணை மிசை
விரிசார்ந்து வெற்றி மலர் தொடை
எழிலார்ந்த பட்டி வகை பரிமள லேபம்
தபனாங்க ரத்ன அணிகலன்
இவை சேர்ந்த விச்சு வடிவது
தமர் சூழ்ந்து மிக்க உயிர் நழுவியபோது
தழல் தாங்கொளுத்தியிட ஒரு
பிடிசாம்பல் பட்டதறிகிலர்
தனவாஞ்சை மிக்குன் அடிதொழ நினையாரே
உபசாந்த சித்த குருகுல
பவபாண்டவர்க்கு வரதன் மை
உருவோன் ப்ரசித்த நெடியவன் ரிஷிகேசன்
உலகீன்ற பச்சை உமையணன்
வடவேங்கடத்தில் உறைபவன்
உயர் சார்ங்க சக்ரகரதலன் மருகோனே
த்ரிபுராந்தகற்கு வரசுத
ரதிகாந்தன் மைத்துன முருக
திறல் பூண்ட சுப்ரமணிய ஷண்முக வேலா
திரை பாய்ந்த பத்ம தடவய
லியில் வேந்த முத்தி அருள்தரு
திருவாஞ்சியத்தில்அமரர்கள் பெருமாளே’’

பொருள்: ‘நால்வகைப் படைகளையும் கொண்டு திக் விஜயங்கள் செய்து, பெரிய சக்ரவர்த்தியாகிப் பெருமை அடைகிறார்கள்; வட்ட வடிவமான மெத்தையில் சாய்ந்தமர்ந்து, வெற்றியைக் குறிக்கும் மலர்மாலைகள், அழகான ஆடைவகைகள், நறுமணக் கலவைப் பூச்சு, சூரியன் ஒளிரும் ரத்ன ஆபரணங்கள் முதலானவை அணிந்து, உறவினர் சூழ அமர்ந்திருக்கும்பொழுது பெருமைமிக்க இவ்வுடலை விட்டு உயிரானது நழுவுகிறது. அதை நெருப்பிட்டுக் கொளுத்த, ஒருபிடி சாம்பல் எனும் நிலையை அடைவது அறியாமல், உயிருள்ளபோது பொருளாசை மிகுந்து விளங்க, உனது திருவடியைத் தொழ நினைக்கின்றாரில்லை.

(‘தன் வாஞ்சை மிக்கு, உன் அடி தொழ நினையாரே’’) அமைதியான சித்தத்தை உடையவர்களும் குருகுலத்தில் உதித்தவர்களுமான பஞ்சபாண்டவர்க்கு வேண்டிய வரங்களை அளித்தவனும், கருேமக நிறத்தவன், கீர்த்தி பெற்றவன், விசுவரூபம் எடுத்தவன், ரிஷிகேசன், உலகங்களை ஈன்ற, பச்சை நிறமுடைய உமையின் அண்ணன், வடவேங்கடத்தில் வீற்றிருப்பவன், வில், சக்கரம் இவை தரித்திருப்பவன் எனும் பல பெருமைகளை உடையவனும் ஆகிய திருமாலின் மருகனே! முப்புரத்தை அழித்த சிவபெருமானின் மைந்தனே!

ரதியின் கணவன் மன்மதனுக்கு மைத்துனமுறை உடையவனே, முருகனே! பராக்ரமம் வாய்ந்த சுப்பிரமணியனே, ஷண்முகனே! வேலவனே! அலைவீசும் தாமரைத் தடாகங்களை உடைய வயலூருக்கு அரசனே! முக்தியைத் தருவதான திருவாஞ்சியத்தில் தேவர்கள் பெருமாளே! (‘மக்கள் பொருளாசை மிகுந்து உனைத் தொழுவதை மறந்துவிட்டார்களே’) மன்மதன் திருமாலுக்குப் புத்திரனாக ஜனித்தவன்; வள்ளியும் திருமாலுக்கு மகள் முறையாகிறாள்; எனவேதான் மன்மதனை (ரதிகாந்தன்) முருகவேளுக்கு மைத்துனன் என்று குறிப்பிடுகிறார். வேறொரு பாடலில் ‘காமவேள் மைத்துனப் பெருமாேள’ என்று கூறியுள்ளார். திருவாஞ்சியத்தில் இறப்பவர்க்கு யமவாதனை இல்லை.

‘‘செடிகொள் நோயின் அடையார், திறம்பார் செறு தீவினை
கடிய கூற்றமும் கண்டகலும் புகல் தான் வரும்
நெடிய மாலொடு அயன் ஏத்தி நின்றார் திரு வாஞ்சியத்து
அடிகள் பாதம் அடைந்தார் அடியார் அடியார்கட்கே’’

திருமாலும் திசைமுகனும் வணங்குகின்ற இறைவனாகிய திருவாஞ்சியத்தில் உறையும் சிவபெருமானின் அடிகளை வணங்கும் அடியார்களைப் போற்றும் மக்கள், நோய் நீங்கி, உறுதி படைத்தவராய் விளங்குவர்; அவர்களது தீவினை தானே விலகும்; முத்தி வீட்டில் புகலிடம் கிட்டும். காசியில் இறந்த உயிருக்கு, வயிரவர் சூலத்தழுத்தும் வாதனை சிறிது உண்டாம்; அதுவும் கிடையாது. திருவாஞ்சியத்தில் இறப்போர்க்கு! ஆதலால் இத்தலம் காசியினும் சிறந்தது என்கிறது தலபுராணம்.

‘‘செயிரறு காசி முத்தி சிறந்திடும் இறந்த
மாக்கட்கு
அயின்முனை நெடிய சூலத்தழுந்து நோய்
சிறிதுண்டு; அந்த
வயிரவ வாதை தானும் இல்லை அந்நகரின்
மாய்ந்த
உயிர் வலச் செவிக்கு எழுத்தைந்து உரைத்து
அரன் அளிப்பன் முக்தி’’

முருகப் பெருமானை வணங்கிய பின்னர் மஹாலட்சுமி, பஞ்சபூத லிங்கங்கள், ஜேஷ்டாதேவி, சனிபகவான் ஆகியோரைத் தரிசிக்கிறோம். மஹிஷாசுரமர்தினிக்கு இங்கு ராகுகாலத்தில் 108 தாமரை மலர்களால் பூஜை செய்வது மிகுந்த விசேஷமாகக் கருதப்படுகிறது. நடராஜர், பைரவர், சூரியன், சந்திரன், ராகு முதலான திருமேனிகளை ஒரே மண்டபத்தில் காணலாம்.

பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த களந்தைக் குமரமுனிவர், முப்பது செய்யுட்களைக் கொண்ட திருவாஞ்சியம் புராண நூலை எழுதியுள்ளார். தனவாஞ்சையை விட்டு, திருவாஞ்சியப் பெருமானின் அடிதொழ நினைக்கும் வரத்தைத் தரும்படி வேண்டிக்கொண்டு அடுத்த திருத்தலமான கீரனூரை நோக்கிப் பயணிக்கிறோம்.

(உலா தொடரும்)