ஓணம் பண்டிகை ஸ்பெஷல் பிரசாதங்கள்



வட்ட அப்பம்

என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு - 1 கப்,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
இளநீர் - 1 கப்,
உப்பு - ஒரு சிட்டிகை,
பச்சரிசி சாதம் அரைத்தது - 1/4 கப்,
சர்க்கரை - 1/2 கப்,
ஏலக்காய்த்தூள் - 1/4  டீஸ்பூன்,
முந்திரி, திராட்சை - தலா 20,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
ஃப்ரூட் சால்ட் (ஈனோ உப்பு- டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அரிசி மாவுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து கலக்கவும். இத்துடன் தேங்காயை நைசாக அரைத்து சேர்க்கவும். பின் இளநீர், ஏலக்காய், அரைத்த சாதத்தை கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். பின் பொங்கி வந்ததும் 1/4 கப் தண்ணீரில் ஈனோவை கலந்து மாவில் ஊற்றவும். பின்பு இட்லி சட்டி அல்லது குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி அதன்மீது ஒரு வட்டமான பாத்திரத்தை வைத்து, கலந்த மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து கேக் போல் எடுக்கவும். அதன்மீது நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

கப்பக்கறி

என்னென்ன தேவை?

மரவள்ளிக்கிழங்கு - 1/4 கிலோ,
கடுகு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு,
பூண்டு - 4 பல்,
பொடித்த இஞ்சி - 2 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1,
பெரிய தக்காளி - 1,
பச்சைமிளகாய் - 2,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 1 கப்,
கொடம் புளி (கேரளா புளி) - 4,
உப்பு - தேவைக்கு,
சோம்பு - 1/4 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது,
தாளிக்க தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

தேங்காய்த்துருவலை அரைத்து கொள்ளவும். கொடம் புளியை கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும். மரவள்ளிக்கிழங்கை சுத்தம் செய்து தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கி, சிறிது உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள் சேர்த்து வேகவைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெயை காயவைத்து கடுகு, சோம்பு தாளித்து, வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி, தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். இஞ்சி, பூண்டு, மசாலா வகைகளை சேர்த்து வதக்கி, கொடம் புளியை போட்டு வதக்கவும். மசாலா வாசனை போனதும் வெந்த கிழங்கை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அரைத்த தேங்காய் விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.

நேந்திரம் பழ அல்வா

என்னென்ன தேவை?

நேந்திரம் பழம் - 200 கிராம்,
வெல்லம் - 200 கிராம்,
கோதுமை மாவு - 200 கிராம்,
நெய் - 100 கிராம்,
ஏலக்காய்த்தூள் - சிறிது,
முந்திரி - 1/2 கப்.

எப்படிச் செய்வது?

கோதுமை மாவில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கலந்து 8 மணிநேரம் வைக்கவும். பிறகு மேலே தெளிந்து நிற்கும் தண்ணீரை வடித்துவிட்டு, கீழ் உள்ள மாவில் மீண்டும் தண்ணீர் ஊற்றி கலந்து மெதுவாக தெளிந்த பால் எடுக்கவும். கோதுமை பால் ரெடி. அடி கனமான பாத்திரத்தில் வெல்லம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி, ஒரு நூல் கம்பி பதம் வந்ததும் கோதுமை பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இடைவிடாமல் கிளறவும்.

இடையிடையே நெய் சேர்க்கவும். மிதமாக கிளறி கொண்டே நேந்திரம் பழத்தை கூழாக அரைத்தோ அல்லது சிறுசிறு துண்டங்களாகவோ சேர்க்கவும். ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறவும். பழ அல்வா சுருண்டு கரண்டியில் ஒட்டாத பதம் வரும்போது மீதியுள்ள நெய்யை சேர்த்து அல்வா பதத்திற்கு வந்ததும் இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி விருப்பமான வடிவத்தில் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்பு: பலா, மாம்பழம், அத்தி, பேரீச்சை, வாழைப்பழம் போன்ற பழங்களிலும் அல்வா செய்யலாம்.

கேரள எரிசேரி

என்னென்ன தேவை?

சேனைக்கிழங்கு - 1/2 கிலோ,
நாட்டு வாழைக்காய் - 2,
காய்ந்தமிளகாய் - 2,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
தேங்காய் பூ - சிறிது,
கடுகு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவைக்கு.

அரைக்க:
துருவிய தேங்காய் - 1/2 முடி,
சீரகம் - 1 டீஸ்பூன்,
தனியா - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

தேங்காய், தனியா, சீரகத்தை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். சேனைக்கிழங்கு, வாழைக்காயை சமபாகமாக வெட்டி வேகவைத்து இத்துடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள், சீரகம், அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு கொதித்து கெட்டியாக வரும்பொழுது, கடாயில் தேங்காய் எண்ணெயை காயவைத்து கடுகு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை தாளித்து, தேங்காய் பூ சேர்த்து சுருள வதக்கி எரிசேரி குழம்பில் கொட்டி கலந்து இறக்கவும்.

சிவப்பு புட்டரிசி மாவு உருண்டை

என்னென்ன தேவை?

புட்டரிசி - 1 கப்,
பொடித்த சர்க்கரை - 1 கப்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அடி கனமான பாத்திரத்தில் அரிசியை வாசனை வரும்வரை குறைந்த தீயில் வறுத்து கொள்ளவும். ஆறியதும் மிக்சி அல்லது மிஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவில் சர்க்கரைத்தூள், ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து வைக்கவும். நெய்யை காய்ச்சி கலந்த மாவில் சிறிது சிறிதாக ஊற்றி பிசைந்து உருண்டைகளாக உருட்டி அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்க்கலாம்.

படங்கள்: ஆர்.சந்திரசேகர்