மருத்துவ குணமிகுந்த முப்புரி வலம்புரி சங்கு!



- சீவலப்பேரி முக்கூடல்

புராதன  சின்னமாகவும், வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும் விளங்கும் ஸ்ரீஅழகர் கோயில், திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணிக்கரையில், சீவலப்பேரியில் அமைந்துள்ளது. சிவபெருமானின் கல்யாணகோலத்தைத் தரிசிக்க, பொதிகை மலையில் அகத்தியர், பெருமாளை சிவனாக மாற்றியமைத்து  குற்றாலநாதர் ஆக்கியது எல்லோருக்கும் தெரியும். அப்படி அகத்தியர் ஹரியும், சிவனும் ஒன்று என்ற திருவிளையாடலுக்காக மாற்றிய பெருமாள் எங்கே இருக்கிறார் தெரியுமா?

அகத்தியர், பெருமாளைத் தன் சித்தப்படி அழகராக, தாமிரபரணி ஆற்றங்கரையில் பிரதிஷ்டை செய்தார். மஹாலஷ்மியும்  அந்த இடத்தை வலம்வந்து பெருமாளுடன் சேர, அந்த இடம், ஸ்ரீவலம்வந்தபேரி என்று அழைக்கப்பட்டு, பின்னர் சீவலப்பேரி என்று ஆனது. இது இரண்டாம் நூற்றாண்டு கோயில். அகத்தியர் பிரதிஷ்டை செய்ததை கௌதம மகரிஷி  கர்ப்பகிரஹம் அமைத்து வழிபட்டு இருக்கிறார். ஸ்ரீவல்லப பாண்டியன் கோயில் நிர்மாணித்திருக்கிறார். கருவறையில்  நிறைய  கல்வெட்டுகள்  உள்ளன.

தென் தமிழ்நாட்டில் தாமிரபரணி, சித்ராநதி, கோதண்டராம நதி ஆகிய மூன்றும் கலக்கும் இடத்தில் விஷ்ணுதலம் என அழைக்கப்பட்ட சீவலப்பேரியில், சீவலமங்கையான அலர்மேல் மங்கையுடன் ஸ்ரீஅழகர் சுந்தரராஜர் எழுந்தருளியிருக்கிறார். இந்த ஊருக்கு முக்கூடல், திரிவேணி சங்கமம் என்ற பெயர்களும் உண்டு. மதுரையை, வடதிருமாலிருஞ்சோலை என்றும், சீவலப்பேரியை தென் திருமாலிருஞ்சோலை என்றும் சொல்வர்.

பூமியைச் சமநிலைப்படுத்த அகத்தியர் தென்னாடு வந்தபோது சிவபெருமானின் கல்யாணகோலத்தைப் பார்க்க திரிகூடமலையில் இருந்த அழகர் கோயிலினுள் செல்ல முயன்றார். ஆனால், அங்கு இருந்தவர்கள், அவர் சைவர் என்பதால் உள்ளே நுழையவிடாமல் தடுத்தனர். உடனே அகத்தியர், அரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்த திருமாலை வேண்டி, அவரை சீவலப்பேரியில் எழுந்தருளச்செய்து, அழகர் இருந்த இடமான திரிகூடமலையில் சிவபெருமை விளங்கச் செய்தார்.

அழகருக்கு சீவலப்பேரியின் அழகு பிடித்துப்போக, இங்கேயே தங்கிவிட்டார். திருமகளும் அழகரை வலம்வந்து, அவர் மார்பில் சேர்ந்தாள். அகத்தியருடன் வந்த சிறுபெண்ணான தாம்பரையும் நதியாகி அழகருடன் வந்தாள். அதுவே தாமிரபரணி நதி. இந்தக் கோயில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இரண்டாம் நுற்றாண்டு கோயில். திருப்பதி-திருமலை கோயிலுக்கு முன்பே உருவானது.

12ம் நூற்றாண்டில் அரசுபுரிந்த பாண்டியன் மாறவர்மன் ஸ்ரீவல்லபனால் கட்டப்பட்டது. பாண்டிய மன்னர்கள் இந்தக் கோயிலுக்கு மான்யங்கள் அளித்துள்ளதாகக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ஸ்ரீவல்லப பாண்டியரின் சிலையையும் கோயிலினுள் காணலாம்.
சுடலை மாடசாமி அழகருக்குக் காவல்தெய்வமாக, அண்ணன் முண்டசாமியுடன், அருகில் கோயில்கொண்டிருக்கிறார். மற்ற மாடன் கோயில்கள், இங்கிருந்து பிடிமண் எடுத்துக் கட்டப்பட்டவையாகும். சுடலை மாடசாமியின் பிறப்பிடமும் இதுதான்.

தங்கையாக துர்க்கை, விஷ்ணுதுர்க்கையாக எதிரில் தனிக்கோயில் கொண்டிருக்கிறாள். கர்ப்பகிரஹத்தில் விஷ்ணுவும்,  துர்க்கையும் அருகருகே எழுந்தருளியிருக்கிறார்கள். வேறு எங்கும் இந்த அமைப்பைக் காணமுடியாது. அகத்தியர் பூமியைச் சமன்செய்து திரும்பும்போது இங்குவந்து, அழகரைத் தரிசித்துவிட்டு, சிவனை மனதால் நினைக்க, சிவனும் காசிவிஸ்வநாதராக, விசாலாட்சியுடன் காட்சியளித்தார். அந்தக் கோயிலும் அருகே உள்ளது.

ஒரு முறை விஷ்ணுபகவானின் கையிலுள்ள ஸ்ரீசக்கரம், சுக்கிராச்சாரியாரின் தாயாரை சம்ஹாரம் செய்ததால் பிரமஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதற்காக விஷ்ணுவைப் பிரார்த்திக்க, பகவானும் தாமிரபரணி முக்கூடலில் நீராடித் தன்னை வழிபட்டுவந்தால் சாபவிமோசனம் கிட்டும் என்று அருளினார். ஸ்ரீசக்கரமும், சீவலப்பேரி வந்து முக்கூடலில் நீராடி பகவானை வழிபட, பகவான் ஸ்ரீகள்ளழகராகக் காட்சியளித்து ஸ்ரீசக்கரத்தை ஏற்றுக்கொண்டார். இதனாலேயே இங்குள்ள ஆறு சக்கர தீர்த்தமாகவும் விளங்குகிறது. சித்திரை மாதம் பௌர்ணமி அன்று அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் கொண்டாடப்படுகிறது.

சுந்தரராஜ பாண்டியன் மணப்படையைத் தலைநகராகக்கொண்டு ஆண்டுவருகையில், அவருக்குக் கண்தெரியாமல் போனது. அந்த சமயம் வேறொரு மன்னன், தன் குழாமுடன் கருடவாகனம் ஒன்றை உருவாக்கி அதனை சீவலப்பேரி வழியாகக் கருங்குளம் ஊருக்கு எடுத்துப் போகையில், அதன் கனம் திடீரெனக் கூடிவிட, பாரம் தாங்காமல் அதனை ஆற்றங்கரையிலேயே வைத்துவிட்டுச் சென்றுவிட்டான்.

கூடலழகர், பாண்டிய மன்னன் கனவில் தோன்றி, அந்த வாகனத்தைத் தன் கோயிலில் கொண்டு வந்து வைக்குமாறு உத்தரவுஇட, மன்னனும் அவ்வாறே செய்ய, அவரது கண்நோய் நீங்கியது. இன்றும் அந்த கருடவாகனம் இந்தக் கோயிலில் உள்ளது. கண்நோய் தீர, கருடசேவை செய்யும் பழக்கமும் இன்றளவும் நிலவிவருகிறது. இந்த கருடாழ்வாருக்குக் கண் மேல்நோக்கியுள்ளது.

நான்கு கரங்கள் உள்ளன. ஆபரணங்களாகத் தன் உடலில் ஆறு இடங்களில் சர்ப்பங்களை அணிந்திருக்கிறார். இதேபோன்ற வாகனம், மதுரை கள்ளழகர் கோயிலிலும், கூடலழகர் கோயிலிலும் உள்ளன. இவ்வாறாக மொத்தம் மூன்று இடங்களில் மட்டும்தான் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலைகள் கலைநுட்பம் வாய்ந்தவையாகத் திகழ்கின்றன.

மிக அழகான இச்சிலைகளை விரல்களால் சுண்டினால் சங்கிதமாக வெண்கல ஓசை ஒலிக்கிறது! குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இன்னொரு சிறப்பு, இங்குள்ள முப்புரி வலம்புரி சங்கு! ஒன்றுக்குள் ஒன்று என்று மூன்று சங்குகள் கொண்ட தொகுதி இது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அது கடலில் தோன்றும் என்ற அபூர்வ பின்னணி கொண்டது இது. ஒரு முனிவரால் அத்தகைய சங்கு ஒன்று இக்கோயிலுக்கு வழங்கப்பட்டது என்கிறார்கள்.

நாற்பத்தொரு நாட்களுக்கு இந்த சங்கால் தீர்த்தம் அருந்தினால் தீராத நோய்கள் எல்லாம் தீர்வதாக நம்பிக்கை, இப்பகுதியில் நிலவுகிறது. கௌதம மகரிஷி, தவம் புரிந்த பெருமை கொண்டது இந்தக் கோயில். அதற்கு சாட்சியாக ஒரு கல்தூணில் அவரது உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கும்பமேளா சமயங்களிலும், அமாவாசை, தமிழ் மாதப்பிறப்பு நாட்களிலும், மக்கள் இந்த ஊரிலுள்ள முக்கூடல் சங்கமத்தில் நீராடி பித்ருக்களுக்குச் சடங்குகள் செய்கிறார்கள்.

இந்த ஆற்றை பித்ருதீர்த்தமாகவும் பாவிக்கிறார்கள். காசி திரிகூட சங்கமத்திற்குச் சமமாக இந்த முக்கூடலைக் கருதுகின்றனர். விசுவநாத நாயக்கனின் மதியமைச்சராக இருந்த அரியநாத முதலியார், தனது தகப்பனாருக்கான பிதுர்பிண்டத்தை அளித்தபோது தந்தையாரே அங்கு பிரசன்னமாகி, கைநீட்டி, பிண்டத்தைப் பெற்றுக்கொண்டதைக் கண்டு பேரானந்தம் அடைந்திருக்கிறார்.

இந்த நதிக்கரையில், கோயில் பக்கத்தில் சத்திரம் ஒன்றைக் கட்டி தலயாத்திரையாக வரும் மகான்களுக்கும், பக்தர்களுக்கும் அன்னமிட ஏற்பாடு செய்தார். திருப்பதி வெங்கடாசலபதி, ஸ்ரீனிவாசராக இங்கே எழுந்தருளியிருக்கிறார். ஆஞ்சநேயர் சிறுகுழந்தை வடிவில் கைகூப்பியபடி காட்சியளிக்கிறார். அவருக்கு வெண்ணைக் காப்பு, வடைமாலை சாத்தி, சனிக்கிழமைதோறும் பக்தர்கள் வழிபடுகிறார்கள். நல்ல காரியங்களுக்குப் பூக்கட்டி பார்க்கும் ஆரூடப் பழக்கமும் இந்தச் சந்நதியில் இருக்கிறது.

லக்ஷ்மணர் முன்பக்கம் மனித ரூபமாகவும், பின்பக்கம் சர்ப்ப ரூபமாகவும் வித்தியாசமான கோலத்தில் திகழ்கிறார். ராமர், சீதையைத் தேடி வந்தபோது இந்தப் பகுதியிலுள்ள மலைமேல் ஏறித் தேடிப் பார்த்ததாகச் சொல்கிறார்கள். ராமருடைய பாதத் தடயம் மலையடிவாரத்தில் இருக்கிறது. முன்பெல்லாம் இந்தக் கோயிலில் ஒரு காராம்பசுவிடம், ஒரு நல்ல பாம்பு பால் குடித்து வந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
 
வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த அதிசயிக்கத்தக்க சம்பவத்தைப் பலரும் பார்த்திருக்கிறார்கள். இங்கு நிறைய நாகங்கள் காணப்படுகின்றன. ஆனால், அவை யாருக்கும் எந்தத் தீங்கும் செய்வதில்லை. சிலசமயம் பூஜைவேளையில் மூலவர் சிரம் மீது பளிச்சென்று காட்சியளித்து, மறைந்துவிடும். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பெரியாழ்வார் பாசுரங்களில் இந்தக் கோயில் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இந்தக் கோயிலின் தேர்த்திருவிழா சித்திரை மாதம் முதல் நாளன்று நடக்கும்.

மகாகவி பாரதியார், அழகரின் அருள் பெற்றவர். அவர் தன் சிறுபிராயத்தில் அழகரின் திருவடிகளைத் தொழுது, அவரைப்பற்றி பாடுவதில் பேரார்வம் கொண்டிருந்திருக்கிறார். அவருடைய பூர்வீக வீடு கோயில் எதிரில் இருந்ததாக தெரிகிறது. ஒவ்வொரு பங்குனி மாதமும் 24ம் தேதி அழகர் கோயிலில் கொடியேற்றிப் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெற்றிருக்கிறது. ஒன்பதாம் நாள் சித்திரை விஷு அன்று திருதேர்விழா நடந்துள்ளது.

கருட வாகனம், அனுமந்த வாகனம் தவிர மற்றவையெல்லாம் சிதிலமடைந்துவிட்டதால், பழையபடி உற்சவங்கள் நடைபெறுவதில்லை. ஊர் மக்களாலும், வாஞ்சி மணியாச்சி அரண்மனை, தளவாய் முதலியார் குடும்பத்தாராலும் மண்டகபடிகள் நடைபெற்றிருக்கின்றன. புரட்டாசி மாதம் எல்லா சனிக்கிழமைகளிலும் கருடசேவை உற்சவம் தொடர்ந்து நடைபெறுகிறது. இன்னும் நடக்கிறது. சித்திரை மாதப் பிறப்பன்று விசேஷ  பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆடி ஸ்வாதி கருட சேவை நடக்கிறது.

ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமையன்று விசேஷ பூஜை உண்டு. சீவலப்பேரி, பதினாலாம்பேரி, மருதூர், முறப்பநாடு ஆகிய ஊர்களில் அழகருக்கு நிவந்தனமாக அளிக்கப்பட்ட பல ஏக்கர்  நிலங்கள் இருப்பதாகத் தெரிகிறது. முக்கூடற்பள்ளு என்ற காப்பியம் முழுவதும் இந்த கோயிலின் புகழ் பாடுகிறது.

தாமிரபரணி மகாத்மியம், குற்றாலக் குறவஞ்சி ஆகிய நூல்களும் இந்த கோயில் புகழ் பாடுகின்றன. புராதானச் சின்னமாகத் திகழும் இக்கோயிலில் புனரமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இத்திருப்பணியில் ஆர்வமுள்ள ஆன்மிக அன்பர்கள் தங்களது காணிக்கைகளையும், சேவைகளையும் அர்ப்பணிக்கலாம். மேலும் தகவல் அறிய 9283148238, 9566243859 ஆகிய மொபைல் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். இ-மெயில் முகவரி: pvchaary@hotmail.com

- பி. வெங்கடாச்சாரி