சோதனையே, வா, வா!



வாழ்க்கையை அனுபவிக்கவேண்டும். அதற்காகத்தானே வாழ்க்கை! அதன் ஒவ்வொரு அம்சத்தையும் அனுபவிக்கவேண்டும். சராசரி மனித இயல்புப்படி மகிழ்ச்சித் தருணங்களை சந்தோஷமாகவும், துயரத் தருணங்களை துக்கமாகவும் அனுபவிக்கவேண்டும். கவர்ச்சியாகத் தோன்றுகிற, ருசிமணம் கமழ்கிற, சுவை மிகுந்த உணவை எப்படி சுகித்து அருந்துகிறோமோ, அதேபோல அது கழிவாக வெளிப்படும்போது அந்த துர்நாற்றத்தையும் ரசிக்க, ஏற்றுக்கொள்ளப் பழகவேண்டும்.

ஆனால்,  யதார்த்தம் இப்படி அல்லதான். மகிழ்ச்சி மட்டுமே நிரந்தரமாக நிலைத்திருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் அதிகம். தன்னை எந்த சோகமும் அண்டக்கூடாது என்று விரும்பும் ‘தப்பித்துக்கொள்ளும்’ (escapism) மனோநிலைதான் அதிகம். ஓர் இனிப்பை இனிப்பு என்று எப்படி உணர்கிறோம்? கசப்பை உணர்ந்த பிறகுதானே, இனிப்புச் சுவை தனியாகத் தெரிகிறது? வெறும் இனிப்பு மட்டுமே இருந்திருக்குமானால் அந்தச் சுவையை ‘இனிப்பு’ என்று வர்ணிக்க முடியுமா? வேறு எந்தச் சுவையும் உணரப்படாதபோது இனிப்புக்கு என்ன முக்கியத்துவம் வந்துவிடப் போகிறது?

ஆகவே கசப்பையும் ருசிக்கப் பழகிக்கொண்டால்தான் இனிப்பைப் பரிபூரணமாக உணரமுடியும். இது வாழ்க்கையில் தோன்றும் பிரச்னைகளுக்கும் பொருந்தும். ‘கஷ்டம் என்று வந்துவிட்டால் அதை அனுபவிக்கக் கற்றுக்கொள்வதும், அடுத்தடுத்து கஷ்டங்களே வந்து நோகடித்தால் அதுவே பழகிவிடும்’ என்பது வேதனையான நகைச்சுவை. அப்படிப் பழகிவிடுவதிலும் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது? ஆகவே சோதனைகளை அடுத்தடுத்து சந்திக்கவும், அவற்றிலிருந்து மீண்டு பெருமை கொள்ளவும் நாம் தயாராக இருக்கவேண்டும்.

அதாவது, ‘கடவுளே, எனக்கு எந்தச் சோதனையும் தராதே,’ என்று அழுது புலம்புவதைவிட, ‘கடவுளே, எனக்கு எந்தவகை சோதனை வேண்டுமானாலும் கொடு, ஆனால், அதையெல்லாம் எதிர்கொள்ளவும், அவற்றை வெற்றி கொள்ளவும், அதற்குப் பிறகும் வரப்போகும் பிரச்னைகளையும் ‘வா’ என்று வரவேற்கவும் மனோபலம் கொடு,’ என்று வேண்டிக்கொள்வதே சிறந்தது.

இப்படி பிரார்த்தனை செய்துகொண்ட உடனேயே மனதில் பளிச்சென்று ஒளி பரவுவதை உணர முடியும். அதோடு, அப்படி சமாளிக்கும், வெற்றிகொள்ளும் பிரச்னைகளைப் பற்றி பிறரிடமும் எடுத்துச் சொல்லி, அவர்களையும் உற்சாகப்படுத்தவும், நல்வழிப்படுத்தவும் முடியும்.

பிரபுசங்கர்
(பொறுப்பாசிரியர்)