பிரசாதங்கள்-சந்திரலேகா ராமமூர்த்தி

மிக்ஸ் மில்லட் கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

காய்ந்தமிளகாய் - 6,
பொடித்த மிளகு, வெந்தயம் - தலா 1/2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - தலா 1/4 கப்,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்.

அரைக்க:
கம்பு, தினை, வரகு அரிசி, சோளம் - தலா 1/4 கப்,
குதிரைவாலி, பச்சரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1/2 கப்.

எப்படிச் செய்வது?

கம்பு, வரகு அரிசி, தினை, குதிரைவாலி, சோளம், பச்சரிசிைய 3 மணி நேரமும், பருப்பு வகைகளை 1 மணி நேரமும் ஊறவைத்து வடித்து, ஒரு துணியில் உலர்த்தி காயவைக்கவும். உதிர் உதிராக காய்ந்ததும் மிக்சியில் ரவை போல் பொடிக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், காய்ந்தமிளகாய், மிளகு தாளித்து, 4 கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். கொதிக்கும் பொழுது பொடித்த ரவை கலவை, தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் சிறு சிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து தவாவை சூடு செய்து கொழுக்கட்டைகளைப் போட்டு, எண்ணெய் ஊற்றி மொறுமொறுவென்று சுட்டு எடுத்து பரிமாறவும்.

கைமுறுக்கு

என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு - 1 கப்,
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உளுத்தம் மாவு - 1 டேபிள்ஸ்பூன்,
கட்டி பெருங்காயம், சீரகம், உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

அரிசியை களைந்து சுத்தப்படுத்தி ஊறவைத்து நிழலில் உலர்த்தி மிஷினில் மாவாக அரைத்து கொள்ளவும். உளுந்தை வறுத்து அரைத்து சலித்து கொள்ளவும். பாத்திரத்தில் அரிசி மாவு, உளுத்தம் மாவு, உப்பு, வெண்ணெய், கரைத்த பெருங்காயத் தண்ணீர், சீரகம் கலந்து, சிறிது தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். ஈரப் பதமான மாவை வெள்ளைத் துணியில் இரட்டைச்சுற்று அல்லது நான்கு சுற்றாக விரலால் சுற்றி முறுக்கு செய்து, கடாயில் எண்ணெயை காயவைத்து, மிதமான தீயில் வைத்து முறுக்கை போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

குறிப்பு: முறுக்கு அச்சில் போட்டும் முறுக்கு பிழியலாம்.

கோகுல் பீத்தா

என்னென்ன தேவை?

மேல் மாவிற்கு:

பச்சரிசி, மைதா மாவு - தலா 1/2 கப்,
நைசாக பொடித்த அவல் - 1 கப்,
சர்க்கரை - 1/4 கப்,
ஏலப்பொடி - 2 சிட்டிகை,
உப்பு - ஒரு சிட்டிகை.

பூரணத்திற்கு:

இனிப்பு இல்லாத கோவா - 1/2 கப்,
தேங்காய்த்துருவல் - 1 கப்,
சர்க்கரை - 1/4 கப்,
ஏலப்பொடி - ஒரு சிட்டிகை,
நெய் - 1 டீஸ்பூன்,
உடைத்த முந்திரி - 1/2 கப்,
பொரிக்க எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மேல் மாவிற்கு கொடுத்த பொருட்களை தோசைமாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். பூரணத்திற்கு கடாயில் நெய் ஊற்றி முந்திரி, தேங்காய்த்துருவல், சர்க்கரை சேர்த்து சுருள வதக்கி, கோவா, ஏலப்பொடி கலந்து இறக்கவும். ஆறியதும் பூரணத்தை தட்டையாகவோ அல்லது உருண்டையாகவோ செய்து, மேல் மாவில் முக்கியெடுத்து, கடாயில் நெய் ஊற்றி, மிதமான தீயில் வைத்து உருண்டைகளை பொரித்தெடுத்து பரிமாறவும்.

குறிப்பு: இனிப்பான கோவா இருந்தால் சர்க்கரை தேவையில்லை.

புட்டு அரிசி கட்டு சாதம்

என்னென்ன தேவை?

சிகப்பு அரிசி - 1 கப்,
காய்ந்தமிளகாய் - 4,
கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு - தலா 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
வறுத்து பொடித்த வேர்க்கடலை - 1/2 கப்,
வறுத்த முழு வேர்க்கடலை - 1/4 கப்,
பொடித்த பச்சைமிளகாய் - 2,
உப்பு, எண்ணெய், கொத்தமல்லித்தழை - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

சிகப்பு அரிசியை 8 மணி நேரம் ஊறவைத்து, உப்பு போட்டு வேகவைத்துக் கொள்ளவும். அடிகனமான கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, நான்காக நறுக்கிய காய்ந்தமிளகாய், பச்சைமிளகாய், கறிவேப்பிலை தாளித்து, வெந்த சாதத்தில் கொட்டி, வதக்கிய தேங்காய்த்துருவல், வேர்க்கடலை, கொத்தமல்லித்தழையை சேர்த்து கலந்து, அப்பளம், தேங்காய் பருப்பு துவையல், சட்னி, தக்காளி சட்னியுடன் பரிமாறவும். விரும்பினால் பெருங்காயம் சேர்க்கலாம்.

குறிப்பு: தேங்காய், ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து இனிப்பாகவும் செய்யலாம்.

கருப்பு கொண்டைக்கடலை சுண்டல்

என்னென்ன தேவை?

கருப்பு கொண்டைக்கடலை - 1 கப்,
துருவிய தேங்காய் - 1/4 கப்,
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2.

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
ெபருங்காயத்தூள் - சிறிது,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
கறிவேப்பிலை - 1 கொத்து.

எப்படிச் செய்வது?

கருப்புக் கொண்டைக்கடலையை முதல்நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் உப்புபோட்டு வேகவைத்து வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, வெந்த கொண்டைக்கடலை, தேங்காய்த்துருவலை கலந்து படைத்து பரிமாறவும்.

குறிப்பு: தேங்காயுடன் மாங்காயும் சேர்த்து செய்யலாம். காய்ந்தமிளகாய் - 2, தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன் சேர்த்து வறுத்து பொடித்து கலந்து மசாலா சுண்டல் செய்யலாம்.

சொப்பு கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

மேல் மாவிற்கு:

அரிசி மாவு - 3 கப்,
தண்ணீர் - 3-3½ கப்,
உப்பு - ஒரு சிட்டிகை,
நெய், சர்க்கரை - தலா 1 டீஸ்பூன்.

பூரணத்திற்கு:

தேங்காய்த்துருவல் - 1½ கப்,
பொடித்த வெல்லம் - 1 கப்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
வறுத்த எள் - சிறிது,
வேக வைத்து மசித்த கடலைப்பருப்பு - 1/2 கப்.

எப்படிச் செய்வது?

கடாயில் சுத்தம் செய்து பொடித்த வெல்லம், தேங்காய்த்துருவல், கடலைப்பருப்பு, ஏலக்காய்த்தூள், எள் சேர்த்து சுருள வதக்கவும். பூரணம் ரெடி. அரிசி மாவு, உப்பு, நெய், சர்க்கரை கலந்து கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க வைத்து, அரிசி கலவையை கொட்டி சுருள கிளறி இறக்கி, 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்பு ஆறியதும் நன்கு பிசைந்து, ஒரு பெரிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து சொப்பு மாதிரி செய்து, அதன் உள்ளே 1 டீஸ்பூன் பூரணம் வைத்து, சிறிது மாவில் மூடி போல் செய்து தண்ணீரில் ஒட்டி மூடவும். சொப்பு கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

குறிப்பு: கோவா, நட்ஸ் கலவை, பொடித்த பழக்கலவை, காரமாக பருப்பு தேங்காய், மிளகாய் பூரணத்திலும் செய்யலாம்.

படங்கள்: ஆர்.சந்திரசேகர்