சலுகை மறுப்பதற்கும் காரணம் வேண்டும்!



தற்காலத்திய ஒவ்வொரு தகப்பனாருக்கும் பல கொள்கைகள் உண்டு. அவற்றில் முக்கியமானது - தான் கஷ்டப்பட்டதுபோல தன் பிள்ளை கஷ்டப்படக்கூடாது என்பதுதான். இதற்காக பிள்ளைக்கு ஏகப்பட்ட சலுகைகள், உரிமைகள், வசதிகளை உருவாக்கித் தருகிறார் தகப்பன். தன்னுடைய தந்தை தனக்கு மறுத்த பல சலுகைகளைத் தன் மகனுக்குத் தான் மறுக்கக்கூடாது என்று நினைக்கிறார்.

அதேசமயம், மறுக்கப்பட்ட சலுகைகளால் தான் இழந்தது என்ன என்று இன்றைய தகப்பன் யோசித்துப் பார்ப்பாரானால், அவையெல்லாம் இழக்கப்படவேண்டியவையே என்பது புரியும். ஆனால், தனக்குத் தான் எதிர்பார்த்த சலுகை கிடைக்கவில்லையே என்ற கோபத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதால் தன் பிள்ளை அதுபோல ஏங்கக்கூடாது என்று உணர்வுபூர்வமாக சிந்திக்கிறார்.

அந்தகாலத்தில் தான் சலுகையை மறுப்பதற்கான காரணத்தைத் தன் தந்தை விளக்கிச் சொல்லவில்லைதான்; ஆனால், தன் பிள்ளைக்கு அப்படி விளக்கக்கூடிய வாய்ப்பு, அதைவிட கடமை, இன்றைய தந்தைக்கு இருக்கிறது. விளக்கப்படாததாலேயே விளைவுகள் எப்படி இருக்கும் என்பது கற்பனை வட்டத்திற்குட்பட்டதுதானே தவிர, விளக்கப்பட்டால் அந்தக் கற்பனை மாயை விலகி நிதர்சனம் உணரப்படும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

இதற்கு அடிப்படை, நல்ல ஒழுக்கங்களைத் தான் பின்பற்றுவதோடு, தன் பிள்ளையும் பின்பற்றவேண்டும் என்று அறிவுறுத்துவதுதான். சிந்தித்தால் தன் தந்தையார் தனக்கு சலுகைகளை மறுத்ததும் இந்த அடிப்படையில்தான் என்பது புரியும். அதாவது, அவரால் தீர்க்கதரிசனமாக சில பின்விளைவுகளை ஊகிக்க முடிந்திருக்கிறது. அவ்வாறு ஊகிக்கும் திறமையைத் தானும் வளர்த்துக்கொள்ள முடிந்தால் தன் பிள்ளைக்கும் சலுகைகளைத் தருவதா வேண்டாமா என்று தீர்மானிக்க முடியும்.

ஊகிக்கும் திறமையை வளர்த்துக்கொள்வது எப்படி? பிரார்த்தனை மூலமாகத்தான். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தன் தந்தை இந்த ஆன்மிகப் பயிற்சியை வெளிப்படையாகவோ, உள்ளார்ந்தோ மேற்கொண்டிருந்த உண்மை புரியவரும். தானும் அவ்வாறே பயின்று, தன் சொந்த மற்றும் பிறருடைய அனுபவங்களின் அடிப்படையில் தன் மகனுக்கு உணர்வு பூர்வமாக சலுகைகளை வழங்காமல் அறிவுபூர்வமாக வழங்கும் பக்குவம் ஏற்படும். ஏனென்றால், தன் பிள்ளையை வறுமை தெரியாமல் ஒரு தகப்பன் வளர்ப்பதில் தவறில்லை. ஆனால், அந்த வறுமையிலிருந்து மீண்டுவரச் செய்யும் உழைப்பு தெரியாமல் வளர்ப்பதுதான் தவறு.

பிரபுசங்கர்
(பொறுப்பாசிரியர்)