அரனாரின் அணுக்கப்பிள்ளை!



கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்: கூகூர்

தமிழகத்தில் மிக அதிக அளவில் திருக்கோயில்களை எடுத்து வரலாறு படைத்தவர்கள் சோழப்பெரு மன்னர்களே. சோழர்கள் எடுத்த கற்கோயில்களை கோயிற் கலை வல்லுநர்கள் மூன்றாக பகுப்பர். விஜயாலய சோழன் காலம் தொடங்கி மதுராந்தக உத்தம சோழன் காலம்வரை எடுக்கப்பெற்ற கோயில்களை, முற்காலச்சோழர் கோயில்கள் என்றும், இராஜராஜ சோழன் காலம் முதல் அதிராஜேந்திர சோழன் காலம் வரை எடுக்கப்பெற்ற கோயில்களை இடைக்காலச்சோழர் கோயில்கள் என்றும், முதற்குலோத்துங்கனில் தொடங்கி மூன்றாம் இராஜேந்திர சோழன் காலம் வரை எடுக்கப்பெற்ற கோயில்களை பிற்காலச்சோழர் கோயில்கள் என்றும், அப்பகுப்பினைக் கூறுவர்.

இவ்வகைப்பட்ட திருக்கோயில்கள் வரிசையில் முற்காலச்சோழர் தம் கலைப்பாணியில் எடுக்கப்பெற்றதே சோழநாட்டு கூகூர் ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயிலாகும். கும்பகோணத்திலிருந்து நன்னிலம் செல்லும் பேருந்துத் தடத்தில் திகழும் திருநறையூர், மாத்தூர் ஆகிய ஊர்களை அடுத்து கூகூர் உள்ளது. முடிகொண்டான் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இவ்வூர் சோழப்பெருவேந்தர்கள் காலத்தில் ‘சத்திரிய சிகாமணி வளநாட்டு திருநறையூர்நாட்டு கூரூர்’ என்று அழைக்கப்பெற்றதாக ஆம்ரவனேஸ்வரர் ஆலயத்துக் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன.

கூரூர் எனும் பழம்பெயர் காலப்போக்கில் மருவி கூகூர் எனத் தற்காலத்தில் அழைக்கப்பெறுகின்றது. பராந்தக சோழனின் ஒன்பதாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பெற்ற கூகூர் ஆம்ரவனேஸ்வரர் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு திருநறையூர்நாட்டு கூரூர் ஆதித்தவீஸ்வரமுடைய பட்டாரகர்க்கு அஸ்த்ரதேவர் என்பவர் வைத்த திருநந்தா விளக்கு பற்றி குறிப்பிடுகின்றது.

தொன்மையான இக்கல்வெட்டுச் சான்றும், இக்கோயிலிலுள்ள பிற கல்வெட்டுக் குறிப்புகளும் கொண்டு நோக்கும்போது முதல் ஆதித்த சோழன் பெயரால் இக்கோயில் ஆதித்த ஈஸ்வரம் என அழைக்கப்பெற்றதும், அதில் உறைகின்ற ஈசனின் திருநாமங்களாக ஆதித்தேஸ்வர பட்டாரகர் என்றும், ஆதித்தேஸ்வரமுடைய பரமசாமி என்றும் அழைக்கப்பெற்றமையை அறிகிறோம்.

ராஜராஜசோழன் காலத்தில் இக்கோயிலுக்குரிய நிலம் ‘மாபலவன்’ எனும் அளவு கோலால் அளக்கப்பெற்றமை பற்றி ஒரு கல்வெட்டு கூறுவதோடு, இக்கோயில் ஈசனை திருமாம்பலமுடையார் என்று அழைக்கப் பெற்றமையையும் எடுத்துரைக்கின்றது. பின்னாளில் ஈசனின் திருநாமம் இதே பெயரால் அழைக்கப்பெற்றதை பின் வந்த சோழர் சாசனங்கள் எடுத்துக் கூறுகின்றன.

காலப்போக்கில் மாம்பலமுடையார் என்பது மாம்பழமுடையார் எனக் குறிக்கப்பெற்று தற்போது வடமொழியில் ஆம்ரவனேஸ்வரர் என அழைக்கப்பெறுகின்றார். மாமரக்காட்டில் (மாங்காட்டில்) திகழ்பவர் என்பது இதன் பொருளாகும். முற்காலச்சோழர் கட்டிடக்கலைப் பாணிக்கே உரிய சிறிய கற்றளியாக மூலட்டானம் திகழ்கின்றது.

கோஷ்ட தெய்வங்களாக கணபதிப்பெருமான், ஆடல்வல்லான், அகத்தியர், ஆலமர்ச்செல்வர், பிரம்மன், பிட்சாடனர், துர்க்கை ஆகிய தெய்வத் திருவுருவங்கள் காணப்பெறுகின்றன. ஆடல் வல்லானாகிய நடராசப்பெருமானின் கல் திருமேனி உலோகத்தில் வடிக்கப் பெற்றது போன்ற நுட்பமுடையதாகும். இப்பெருமானுக்கு பக்கவாட்டில் ஒருபுறம் ஆடுகின்ற காளிதேவியும், கைத்தாளமிட்டு பாடுகின்ற காரைக்கால் அம்மையாம் பேயாரும் காணப்பெறுகின்றனர்.

அகத்தியரின் திருமேனியும் அழகுடையதாகும். துர்காதேவி எட்டுக் கரங்களோடு காணப் பெறுகின்றாள். சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் ஏந்தியவளாக, ஒரு கரத்தால் அபயம் காட்டி, ஒரு கரத்தை இடுப்பில் இறுத்தியுள்ளாள். அக்கரத்தில் கிளியொன்று அமர்ந்துள்ளது. கானகத்து எருமையாம் மகிடனின் தலைமேல் நிற்கும், கருணையே வடிவான இத்தேவிக்கு இருபுறமும் இரண்டு வீரர்கள் மண்டியிட்டு அமர்ந்தவாறு தங்கள் உறுப்புகளை அரிந்து பலி தர முற்படுகிறார்கள். கலிங்கத்துப்பரணியில் ஜெயங்கொண்டார் கூறும்,

‘‘பலியாக உறுபரிந்து தருதும் என்று
பரவும் ஒலி கடல் ஒலி போல் பரக்குமாலோ’’
‘‘அடிக் கழுத்துடன் சிரத்தை அரிவராலோ
அரிந்த சிரம் அணங்கின் கை
கொடுப்பராலோ
கொடுத்த சிரம் கொற்றவையைப்
பரவுமாலோ’’

- என்ற அடிகள் தாம் இக்காட்சியை காண்போர்க்கு நினைவில் வருபவையாகும். கருவறை சுவரில் காணப்பெறும் அரைத் தூண்களில் இசைக்கலைஞர்கள் மற்றும் ஆடற்கலைஞர்களின் அழகுறு சிற்பக்காட்சிகளை காணலாம். பரிவார தெய்வங்களாகத் திகழும் பைரவர், காமகோட்டத்து பரமேஸ்வரி, சண்டீசர், சூரியன் போன்ற தெய்வத் திருமேனிகள் சோழர் கலையின் எழில் முத்திரைகளாகும். மூன்றுநிலை ராஜகோபுரம் இக்கோயிலுக்கு பிரதான வாயிலாக விளங்குகின்றது.

செம்பியன் மாதேவியாரின் திருவயிறு வாய்த்த உத்தமசோழன் முற்கால இக்கற்றளியைப் புதுப்பித்துள்ளான். கோயிலைக் கற்றளியாக எடுத்தவரின் உருவச்சிலை அவர் லிங்கத் திருமேனியை பூஜித்து வணங்கும் கோலத்தில் கருவறை சுவரில் காணப்பெறுகின்றது. அதன் அருகே அக்கற்றளியை எடுப்பித்தவர் மடமுடையார் வரகுணன் என்ற பெயர் குறிக்கப்பெற்ற கல்லெழுத்துச் சாசனம் உள்ளது.

மாமன்னன் ராஜராஜசோழனின் பல கல்வெட்டுச் சாசனங்கள் கருவறை சுவர் முழுதும் அலங்கரிக்கின்றன. முடிகொண்டான் ஆற்றின் எதிர்கரையில் உள்ள துக்காச்சி எனும் தலத்தினை ‘விடேல் விடுகு துக்காச்சி சதுர்வேதி மங்கலம்’ என ஒரு கல்வெட்டு குறிப்பதோடு அங்குள்ள சிவாலயத்தை ‘தென் திருக்காளத்தி’ என்று மற்றொரு கல்வெட்டு சுட்டுகின்றது.

ராஜராஜ சோழனுடைய பெருந்தரத்து அதிகாரி ராசராச பல்லவரையன் என்பான் இக்கோயிலுக்கு நன்கொடைகளை வழங்கியுள்ளான். அவன் மைசூர் நாட்டு கோலார் எனப்பெறும் குவலாலபுரத்தை சார்ந்தவன் என்பது இக்கல்வெட்டு குறிப்பிடும் செய்தியாகும். ராஜராஜசோழனின் 27ம் ஆட்சியாண்டில் (கி.பி. 1007ல்) கூகூரில் உள்ள நிலங்களை ஆவணங்கள் மூலம் அப்பேரரசரின் அலுவலர்கள் ஆராய்ந்தபோது கோயிலுக்குரிய சில நிலங்களை சில அலுவலர்கள் கவர்ந்து, லாபமடைந்து ஏமாற்றியமை கண்டுபிடிக்கப் பெற்றது.

உடன் தவறு செய்த அலுவலர்களுக்கு தண்டனை வழங்கப் பெற்றதோடு, கோயில் நிலங்கள் மீட்கப் பெற்றன. ஊழல் செய்த அந்த அலுவலர்களிடமிருந்து தண்டமாக பொன் பெறப்பெற்று அப்பொன்னால் ஆதித்தேஸ்வரமுடை மகாதேவருக்கு ஒரு தங்கத்தட்டு செய்யப்பெற்று நிவேதனம் வைப்பதற்காக அளிக்கப்பெற்றது. இதனை கருவறை மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு விரிவாக எடுத்துரைக்கின்றது.

கூகூரில் இக்கோயில் தவிர திருவெள்ளெருக்கீஸ்வரம் உடையார் கோயில், கரிகாலசோழ ஈஸ்வரமுடையார் கோயில் என்ற சிவாலயங்களும், குலோத்துங்கசோழ பெரும்பள்ளி என்ற ஜீனாலயமும் (சமணர் கோயில்) இருந்தமை பற்றி இங்குள்ள சிலா சாசனங்கள் எடுத்துரைக்கின்றன. மூவர் முதலிகள் எனப்பெரும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரில் சுந்தரரை தம்பிரான்தோழர் என திருவாரூர் கல்வெட்டு குறிப்பிடும்.

ஈசனிடம் தோழமை பக்தி கொண்டவர் இவர். இவருக்கு கூரூர் வாழ்மக்கள் சித்திரை மாதத்தில் சிறப்பு விழாக்களை இவ்வூரில் கொண்டாடினர் என்பதை இராஜராஜசோழனின் இரண்டு கல்வெட்டுச் சாசனங்கள் விரிவாக கூறுகின்றன. அவற்றில் ஒரு கல்வெட்டு சுந்தருக்காக எடுக்கப்பெற்ற விழாவை ஆதித்தேஸ்வரமுடைய பரமசாமியான ஈசனே வாய்மொழியாக கூறுவது போன்று அமைந்துள்ளது.

அதில் ஈசனார் ‘நம்முடைய அணுக்கப்பிள்ளை நம்பி ஆரூரனுக்கு’ விழா எவ்வாறு நிகழ்த்த வேண்டும் என்று குறிக்கப் பெற்றுள்ளது. தம்பிரான் தோழரை ‘அணுக்கப்பிள்ளை’ என்று ஈசனே குறிப்பிடுவதாக அமைந்த இக்கல்வெட்டு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ராஜராஜசோழனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் (கி.பி. 997ல்) கூரூர் ஊரார் அத்திருக்கோயிலிலுள்ள நம்பி ஆரூரருக்கு (சுந்தரருக்கு) இறையிலி நிலம் அளித்தனர் என்பதை கூறுகின்றது.

அதனைக் குறிப்பிடும் கல்வெட்டு ‘‘திருப்பதிகம் விண்ணப்பம் செய்த பிள்ளை நம்பி ஆரூரனார்க்கு பிரியமாய் கொடுத்தோம் ஊரோம்’’ என்று எடுத்துக் கூறுகின்றது. ஈசனார் அணுக்கப்பிள்ளை என்று கூறுவதும், கூரூர் ஊரார் ‘‘பிரியமாய் கொடுத்தோம்’’ என்றும் கூறுவதும் சுந்தரரின் தேவாரத் தமிழ்பால் மக்கள் கொண்டிருந்த அளவற்ற ஈடுபாட்டின், பக்தியின், வெளிப்பாடுகளேயாகும்.

இவ்வாலயத்திலுள்ள ராஜேந்திரசோழனின் ஒரு கல்வெட்டுச் சாசனம் திருநறையூர் நாட்டு பிரமதேயம் திருப்பெருந்துறை எனக் குறிக்கின்றது. மணிவாசகப்பெருமான் திருஞானம் பெற்ற திருப்பெருந்துறை புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார் கோயில் என்ற பெயரால் விளங்குகிறது. சோழ நாட்டு செந்தலை எனப்பெறும் சந்திரலேகை சதுர்வேதி மங்கலத்து சிவாலயம் திருபெருந்துறை என்ற பெயரால் வழங்கியது.

அது போன்றே கூகூருக்கு அருகில் ஒரு திருப்பெருந்துறை இருந்தது ஈண்டு நோக்கத்தக்கதாகும். பரகேசரிவர்மன் எனக் குறிக்கப்பெற்ற இங்குள்ள சோழமன்னன் சாசனமொன்றில் சில தனி நபர்கள் நிலக்கொடை கொடுத்து, அதன் வருவாயிலிருந்து ஒவ்வொரு நாளும் இரு போழ்து கூரூர் ஈசனார் முன்பு தங்கள் சோழமன்னன் உடல் நலம் பெற வேண்டி திருப்பதிகமாகிய தேவாரப்பாடல்கள் பாட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வூரில் ஓடும் ஆற்றுக்கு எதிர்கரையில் உள்ள துக்காச்சி சிவாலயத்தில் சோழமன்னன் மூன்றாம் ராஜராஜன் நோயுற்றமையால் அவன் உடல்நலம் பெற வேண்டி சனி மற்றும் பிரகஸ்பதி (குரு) திருமேனிகள் எடுத்து வழிபாடு செய்தமை அங்குள்ள கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது நோக்கத்தக்கதாகும்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்