வாமனரை யானையாக்கி ஊர்ந்த வேலவன்!



அருணகிரி உலா - 26

ஆவடுதுறை மாசிலாமணியீசர் கோயிலின் இரண்டாவது கோபுர நுழைவாயிலைக் கடந்து உள்ளே வருகிறோம். கொடி மரத்தருகே இருக்கும் மிகப்பெரிய நந்தி பிரமிப்பூட்டுகிறது. தமிழகத்திலேயே மிகப்பெரிய நந்தி இது. பீடத்தை சேர்க்காமல் 14 அடி 3 அங்குலம் உயரமுடையது. பல கருங்கற்களாலானது. (தஞ்சைப் பெரிய கோயில் நந்தியின் உயரம் 12 அடிதான்; ஆனால், அது ஒரே கல்லால் ஆனது.) தலபுராணம் இந்த நந்தியை ‘தர்மவிடை’ என்கிறது.

நந்தியின் பின்புறமுள்ள பலிபீடம் மிகுந்த சிறப்பு வாய்ந்தது. ஞானசம்பந்தரின் தந்தையார் வேள்விகள் நடத்தப் பொருளுதவி வேண்டும் என மகனிடம் கேட்டார். சம்பந்தப் பெருமான் ‘இடரினும் தளரினும்’ எனத் துவங்கும் பதிகம் பாடி, ‘இதுவோ எமை ஆளுமாறீவ தொன்றெமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே’ என்று ஒவ்வொரு பாடலையும் நிறைவு செய்தார்.

ஈசன் பூதகணங்கள் மூலமாக மேலும் மேலும் அதிகரிக்கக்கூடிய ஆயிரம் பொற்காசுகள் கொண்ட கிழி ஒன்றைப் பலிபீடத்தில் வைக்கச் செய்தார். சம்பந்தர் அதை எடுத்துத் தந்தையிடம் கொடுத்தார். ஆண்டுதோறும் ரதசப்தமித் திருவிழாவின் ஐந்தாம் நாள் ஞானசம்பந்தர் பொன் உலவாக்கிழி (பொற்காசுகள் நிறைந்த பை) பெற்று மகிழ்ந்த நிகழ்ச்சி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

பலிபீடத்தின் அடியில் திருமந்திரத் திருமறைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததை சம்பந்தப்பெருமான் அறிந்து அவற்றை எடுத்துக் கொடுத்தார் என்பர். இரண்டாம் கோபுர நுழைவாயிலைக் கடந்து உள்ளே வருகையில், வலதுபுறம் அன்னை ஒப்பிலாமுலை அம்மையின் திருச்சந்நதியைக் காண்கிறோம். அம்மன் சந்நதியின் அர்த்த மண்டபம், முன் மண்டபம் கடந்து ஆடிப்பூர அம்மனையும், யாகசாலை அருகே சண்டிகேஸ்வரியையும் தரிசிக்கிறோம். அம்பிகை தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் விளங்குகிறார்.

அடுத்து மூன்றாம் கோபுர வாயிலை வந்தடைகிறோம். பசுவாக நின்று லிங்கத்தின் மேல் பால் சொரிந்த கோரூபாம்பிகையைத் தரிசித்த பின் உள்ளே செல்கிறோம். வலதுபுறம் சந்திரன், பைரவர், சனி, சோழலிங்கம் மற்றும் ஆடல் வல்லானைத் தரிசிக்கலாம். இடப்புறம் திரும்பினால் சுந்தரமூர்த்தி நாயனாரின் உற்சவ மூர்த்தி, மூன்று சூரியர்கள், திருமுறை கண்ட விநாயகர், அறுபத்து மூவர் ஆகியோரைத் தரிசிக்கலாம்.

1989ல் பிரதிஷ்டை செய்யப்பட்ட சேக்கிழார் திருஉருவைக் காணலாம். கருவறைக்கு நேர் பின்னால் கன்னி விநாயகர், ஞானாம்பிகை, காளத்தீஸ்வரர் (லிங்கம்), கொங்கணேஸ்வரர் (லிங்கம்), கொங்கணேஸ்வரி அம்மன் ஆகியோரைத் தரிசித்து வரும்போது முருகப்பெருமானைக் காண எண்ணி மனம் துடிக்கிறது. கோட்டத்திலுள்ள லிங்கோத்பவருக்கு நேர் எதிரே இங்கும் முருகப்பெருமானைக் காண்கிறோம்.

நான்கு திருக்கரங்கள் கொண்டு, தேவியருடன் காட்சி அருள்கிறார் பெருமான். ஆவடுதுறை ஆதீனத்து சாமிநாத முனிவர், 18 காண்டங்களடங்கிய வடமொழி ஸ்காந்தத்திலுள்ள ருத்ரசங்கிதையில் கோமுத்தி க்ஷேத்ர மகாத்மியத்தைத் தமிழில் மொழிபெயர்த்து, 3 காண்டங்களையும், 68 அத்யாயங்களையும், 2,560 பாடல்களையும் கொண்ட ‘துறைசைப் புராணம்’ என்ற பெயரில் நூலாக, இயற்றி அருளினார்.

அருணகிரிநாதர் இத்தலத்தில் ஒரு திருப்புகழ் பாடியுள்ளார். துவக்கத்தில் ‘சொற்பிழை வராமல் உனைக் கனக்கத் துதித்து’ என்ற கருத்தை முன்வைக்கிறார். கந்தர் அலங்காரச் செய்யுளொன்றில் திருப்புகழை எழுத்துப் பிழையறக் கற்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்:

‘‘அழித்துப் பிறக்கவொட்டா அயில்வேலன் 
கவியை அன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீர் எரிமூண்ட
தென்ன
விழித்துப் புகையெழப் பொங்கு வெங்கூற்றன்
விடும் கயிற்றால்
கழுத்திற் சுருக்கிட்டிழுக்குமன்றோ கவி
கற்கின்றதே.’’
(எண் : 2)

‘‘கடுத்த துற்சன மகாகாதகரைப் புவிக்குள்
தழைத்த நிதிமேவு
கற்பக இராசனெனப் படைக்குப் பெருத்த
அர்ச்சுனந ராதியெனக் கவிக்குட்பதித்து
கற்றறி வினாவை எடுத்தடுத்துப் படித்து
மிகையாகக்
கத்திடு மெய்ஆக வலிக் கலிப்பைத் தொலைத்து
கைப்பொருளிலாமை எனக் கலக்கப்படுத்து
கற்பனை விடாமல் அலைத்திருக்கச் சலிக்க விடலாமோ.’’

- என்பது திருவாவடுதுறைத் திருப்புகழ். ‘‘துர்க்குணம் நிறைந்த மகாபாதகர்களை, கற்பகமே, அர்ஜுனனே என்று தேர்ந்தெடுத்த சொற்களால் கவிகளமைத்துப் பாடி மிக அதிகம் கூச்சலிடும் உடலைக் கொண்டவனாய், பொலிவற்று, கையில் பொருளில்லாததால் கலக்கமுற்றவனாய் நான் அலைச்சலுறும்படியும், சலிப்புறும்படியும் நீ என்னைக் கைவிடலாமோ?’’

அடுத்த ஆறு வரிகளில் திருமாலின் மகிமையைப் போற்றுகிறார்: ‘‘எற்பணி அராவை மிதித்து வெட்டித் துவைத்து பற்றிய கராவை இழுத்து உரக்கக் கிழித்து எட்கரி படாமல் இதத்த புத்திக் கதிக்கு நிலையோதி எத்திய பிசாசின் முலைக் குடத்தைக் குடித்து முற்றயிரிலாமல் அடக்கி விட்டுச் சிரித்த அயில் கணை இராமல் சுகித்திருக்க, சினத்த திறல் வீரா!’’

‘‘ஒளி பொருந்திய காளிங்கனை மிதித்து அழித்தவரும், கஜேந்திரனைப் பற்றிய முதலை வாயைக் கிழித்தெறிந்து, அவனைக் காத்து இன்பம் தரக்கூடிய உறுதிப் பொருளை அதற்கு ஓதியவரும், வஞ்சக எண்ணத்துடன் வந்த பூதனையின் முலைகளை உறிஞ்சிக் குடித்து, அப்பிசாசின் உயிரை எடுத்தவரும், கூரிய அம்பைக் கொண்டவருமான திருமால் முதலானோர் சுகித்திருக்கும்படி சூரர்களைக் கோபித்து அழித்த வீரனே!’’ இறுதி வரிகளில் மயிலின் அழகை மிகவும் வர்ணித்துப் பாடுகிறார்:

‘‘வெற்பென மதாணி நிறுத்துருக்கிச் சமைத்து வர்க்கமணியாக வடித்திருத்தித் தகட்டின் மெய்க்குலமதாக மலைக்க முத்தைப் பதித்து வெகுகோடி விட்கதிரதாக நிகர்த்தொளிக்கச் சிவத்த ரத்தின படாக மயில் பரிக்குத் தரித்து மிக்க திருவாவடு நற்றுறைக்குள் செழித்த பெருமாளே.’’

‘‘மலையென்னும் படியாய், பொன்னாலான பதக்கம் (மதாணி) ஒன்றை உருவாக்கி, அதில் பலவகை ரத்னங்களைப் பொறுக்கி எடுத்து அமைத்து, பொற்தகடு போல் பிரமிக்கும்படிச் செய்து, சூரியனது ஒளி கூடிவிட்டதோ என்று தோன்றும்படியாக ஒளி வீச, ரத்னப் போர்வை போர்த்துள்ளது போன்ற அழகிய உடலைக் கொண்ட மயில் வாகனத்தின் மீதமர்ந்து மிகச் சிறந்த திருஆவடுதுறை எனும் பதியில் விளங்குகின்ற பெருமாளே!’’ என்பது பாடலின் பொருள்.
 
மந்திர நூலாகிய கந்தர் அனுபூதியிலும், காப்புச் செய்யுளுக்கு அடுத்தபடியாக வரும் பாடலை ‘ஆடும் பரி’ என்று மயிலைப் போற்றியே துவக்கியுள்ளார் அருணகிரிநாதர். உற்சவத் திருமேனிகளுக்கிடையில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக் குமாரனையும் கண்டு மகிழலாம். முருகப்பெருமானைத் தரிசித்த பின்னர் சரஸ்வதி, மீனாட்சி, சொக்கலிங்கம், விசுவநாதர், சேரலிங்கம் மற்றும் மஹாலட்சுமியைத் தரிசித்து அணைத்தெழுந்த நாயகர் சந்நதிக்கு வருகிறோம்.

அம்பிகை பசு உருவில் லிங்கம் மீது பால் சொரிந்தபோது இறைவன் அவருக்குப் பழைய உருவை அளித்தார். அச்சமயம் அம்மையை அணைத்த திருக்கோலத்தவராய் இறைவன் முனிவர்களுக்குக் காட்சி அளித்தார். எனவே அவர் அணைத்தெழுந்த நாயகர் எனப்படுகிறார். அடுத்ததாக ஆடல்வல்லான் சந்நதியில் நின்று அவரது பேரழகில் மெய்மறக்கிறோம்.

மகாமண்டபம், நந்தி மண்டபம் கடந்து மூலவரைத் தரிசிக்கிறோம். சதுர வடிவில் அமைந்த கருவறையில் மாசிலாமணியீசர் அமைதியாக வீற்றிருக்கிறார் லிங்க வடிவில். அவர் ஞானசம்பந்தருக்குப் பொற்கிழி அளித்ததை அப்பர் பெருமான் பாடுகிறார்:

‘‘காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரார்க்கு அம்பொன்
ஆயிரம் கொடுப்பார் போலும் ஆவடுதுறையனாரே.’’

கருவறைக் கோட்டங்களில் அகஸ்தியர், பிரம்மா, துர்க்கை மற்றும் தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம். சுந்தரர் பாடுகிறார்:
‘‘செப்ப ஆல் நிழற் கீழிருந்து அருளும் செல்வனே திருவாவடுதுறையுள் அப்பனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே’’

சந்நதியின் மேல் முகப்பில் நடராஜப்பெருமானின் நடனக்கோலம் கருங்கல் திருமேனியாகக் குடையுடன் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையை அடுத்து தியாகேசப்பெருமான் கிழக்கு நோக்கித் தனிச் சந்நதியில் அமர்ந்துள்ளார். முசுகுந்த மாமன்னனுக்குப் புத்திரப்பேறு அளித்தமையால் இவருக்கு புத்திரத் தியாகேசர் என்ற திருப்பெயரும் உண்டு. சுந்தரமூர்த்தி நாயனாரின் திருவுருவம் தியாகேசரைப் பார்த்தபடி அமைந்துள்ளது. திருவாவடுதுறை அப்பனையும், சுப்பனையும் வணங்கி பிரியாவிடை பெறுகிறோம்.

நாம் செல்லவிருக்கும் அடுத்த தலம் திருபுவனம். கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் கும்பகோணத்திற்குக் கிழக்கே 6 கி.மீ. தொலைவிலுள்ளது. வட இந்தியாவிலிருந்து சிங்களம் வரையிலான பல இடங்களிலும் வெற்றிக்கொடி நாட்டிய மூன்றாம் குலோத்துங்க சோழன் கும்பகோணத்திற்கும் திருவிடைமருதூருக்கும் இடையே கட்டிய கோயிலே திரிபுவனேச்சரம் என்று வழங்கப்பட்டது.

விக்ரம பாண்டியன் மகனான குலசேகரப் பாண்டியனை வென்று மதுரையில் வீராபிஷேகம் செய்து கொண்டு ‘திரிபுவன வீரதேவன்’ எனும் பட்டம் சூட்டிக் கொண்டான். எனவே ஊரும் திரிபுவனம் என்றாயிற்று என்பர். (இன்று இதுவே மருவி திருபுவனம் என்றழைக்கப்படுகிறது.) பாண்டியனிடமிருந்து கைப்பற்றிய செல்வங்களின் ஒரு பகுதியை ஆலவாய் அழகனுக்குச் சமர்ப்பித்து விட்டு எஞ்சிய பொருட்களைக் கொண்டு இக்கோயிலைக் கட்டினான் என்கிறது வரலாறு.

பதினெட்டு சிவபுராணங்களையும் தெளிய அறிந்தவரும், சித்தாந்த ரத்னாகரம் எனும் நூலின் ஆசிரியருமான ராஜகுருவான ஈஸ்வர குரு எனும் சோமேஸ்வரரைக் கொண்டு இங்கு தெய்வ விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்வித்தான் அரசன். ஊரின் நடுவே கிழக்கு நோக்கி அமைந்துள்ளது திருபுவனம் கம்பஹரேஸ்வரர் திருக்கோயில். முன் கோபுரம் தோரணத் திருவாயில் எனவும், இரண்டாம் கோபுரம் திருமாளிகைத் திருவாயில் எனவும், அடுத்தது திரு அணுக்கன் திருவாயில் எனவும் அழைக்கப்படுகின்றன.

பல மன்னர்களாலும் பின்னர் தருமபுரம் ஆதீனத்தாலும் திருப்பணி செய்யப்பட்ட கோயிலே இன்று நாம் காண்பது. கோயில் விமானம் சச்சிதானந்த விமானம் எனப்படுகிறது. முதல் கோபுரத்தின் நுழைவாயிலின் இருபுறமும் நர்த்தன விநாயகரும், தண்டபாணியும் காட்சி அளிக்கின்றனர். மூலவரைத் தரிசிப்பதற்கு முன்பு பல படிகள் ஏறி, பல மண்டபங்களைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது.

முன் மண்டபத்தில் விநாயகர், கொடி மரம், பலி பீடம் மற்றும் நந்தியைக் காணலாம். அடுத்த வாயிலில் நுழையும் போது, வலப்புறம் இக்கோயிலின் மிகப்பிரசித்தி பெற்ற சரபேஸ்வரர் சந்நதியைத் தரிசித்து மகிழலாம். அதற்கடுத்த மண்டபத்தில் மிக நுண்ணிய சிற்பங்கள் அமைந்துள்ள பல தூண்களைக் காண்கிறோம். வலப்புறத்தில் நவகிரஹங்களையும் ஆடல்வல்லான் சந்நதியையும் தரிசிக்கலாம்.

மேலும் நடந்து அடுத்த மண்டபத்தருகில் செல்லும்போது, வாயிலருகே இடப்புறம் விநாயகரையும், வலப்புறம் கஜாரூடனராக முருகப்பெருமானையும் காணலாம். முருகனுக்கென இரு யானைகள் உண்டு. ஒன்று பிணிமுகம், மற்றொன்று தேவேந்திரன் மகளை மணமுடித்த போது அவளுடன் வந்த ஐராவதம். இது தவிரவும் ‘சுப்பிரமணிய பராக்ரமம்’ நூலில் மற்றொரு குறிப்பு உள்ளது.

திருமால், முருகனை நோக்கி ‘‘அசுர குலாந்தகா! என்னை முன் அவமதித்த தாரகன் உன்னால் கொல்லப்பட்டு சாத்தனார்க்கு யானை வாகனமாக விளங்குகிறான். அவனும் என்னைக் கண்டு அஞ்சுமாறு என்னை யானை வாகனமாக்கி ஊருதல் வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். அதன்படியே வாமனரை யானையாக்கி ஊர்ந்தான் முருகன்.

தேவரெல்லாம் பூமாரி பொழிய, யானையின் மீது ஏறும் மூர்த்தியாய் விளங்கிய சுப்பிரமணியக் கடவுள் ‘‘கஜாரூட மூர்த்தி’’ எனப் பெயர் பெற்றார். தணிகைப் புராணம் இவரைக் ‘களிற்றூர்திப் பெருமான்’’ என்கிறது. அடுத்துள்ள மண்டபத்தில் நுழைந்து வலப்புறம் சந்திரன், கஜலட்சுமி ஆகியோரையும், இடப்புறம் சூரியன், விநாயகன் ஆகியோரையும் வணங்கி நேரே கம்பீரமாகக் காட்சி அளிக்கின்ற கம்பஹரேஸ்வரரை நோக்கி மெய் மறக்கிறோம். சந்நதி அடி முதல் ஸ்தூபி வரை கருங்கல்லால் ஆன அமைப்பு.

இத்தலத்து இறைவனைப் பற்றிய தேவாரப் பாடல் ஏதும் நமக்குக் கிடைக்காமல் போய்விட்டதை எண்ணி மிகவும் வருந்துகிறோம். சுற்றிலுமுள்ள பல சிவத்தலங்களைப் பாடிய மூவர் நிச்சயமாக இங்கும் வந்திருப்பார்கள் என்பது உறுதி. ‘கம்ப’ என்றால் நடுக்கம் என்று வடமொழியில் பொருள்.

(உதாரணமாக பூகம்பம் என்பது நிலநடுக்கத்தைக் குறிக்கும்.) எனவே கம்பஹரேஸ்வரர் எனும் இறைவன் தமிழில் ‘நடுக்கம் தீர்த்த பெருமான்’ எனப்படுகிறார். (‘கம்பகரேஸ்வரர்’ என்று கோயிலில் எழுதப்பட்டிருப்பது முற்றிலும் வேறு பொருளைத் தருவதாகி விடுகிறது.) இறைவனுக்கு இந்தப் பெயர் எதனால் ஏற்பட்டது என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

(உலா தொடரும்)

சித்ரா மூர்த்தி

ஆனந்த வாழ்வருளும் ஆதி திருவரங்கம்

எம்பெருமான் வைகுண்டம் ஏகும் முன்பு தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவை அழைத்தார். திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட தம்முடைய திருமேனியைப்போல, அனந்த சயனமூர்த்தியை நிர்மாணிக்க திருவாய் மலர்ந்தார். நவபாஷாணத்தாலும், மூலிகைகளாலும் உருவான விஸ்வகர்மாவின் கைவண்ணம்தான் திருமாலின் திருவடிவம். ஆதி திருவரங்கம் என்ற முதல் அவதாரத் திருத்தலமாக அமைந்துள்ள எம்பெருமானின் கருவறையில் சாந்நித்தியமாகி ஆண்டாண்டு காலமாக ரங்கநாதர் சேவை சாதித்து வருகிறார்.

முதல் பிராகாரத்தின் உள்ளே, கருவறையில் பாம்பணையில் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் அனந்த சயன பெருமாள். இதுவரை எங்குமே தரிசித்திராத முப்பது அடி நீளத்தில் பிரமாண்டமாகக் காட்சி தருகிறார். அந்த பிரமாண்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது அந்த திருமாலின் திருவடியின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் ஆளுயர கண்ணாடி.

அதன் வழியே தரிசித்தால் 30 அடி நீள திருமால் அறுபது அடியாக விஸ்வரூப தரிசனம் அருள்வது சிலிர்ப்பூட்டுகிறது. இத்தலம், திருவண்ணாமலை - மணலூர்பேட்டை வழியில் 32 கி.மீ. தூரத்தில் உள்ளது. விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தாலுக்காவில் திருக்கோவிலூரில் இருந்து மணலூர்பேட்டை வழியாக 20 கி.மீ. சென்றும் ஆதி திருவரங்கத்தை அடையலாம்.