மனித உருவில் மங்கள ராகு!



-சித்ரா மூர்த்தி

கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் சாலையில் 5 கி.மீ. தொலைவில் காவிரியாற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருத்தலம் திருநாகேஸ்வரம். சண்பக வனமாக இருந்ததால் சண்பகாரண்யம் எனவும், ஆதிசேஷன், நகுஷன், தட்சகன், கார்கோடகன் எனும் நாகர்கள் பூசித்த தலமாதலால் நாகேஸ்வரம் என்றும் பெயர்கள் அமைந்தன. பௌடிய புராணத்தில், உத்தர பாகத்தில், சிவபெருமான், உமையம்மைக்கு இத்தலத்தின் மகிமையை உபதேசிப்பதாக வருகின்றது. அதன்படி, பிரம்மன், சனகாதி முனிவர்கள், சூரியன், சந்திரன், நளன், கௌதமர், வசிஷ்டர், பகீரதன், பராசரர் முதலானோர் இங்கு வழிபட்டு பேறு பெற்றுள்ளனர் என்று தெரிய வருகிறது. ராகு இங்கு இறைவனை வழிபட்டதோடு தன்னை வழிபடுவார்க்கு பல நலன்களையும் அருளுகிறார்.

‘‘நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார்
கோளும் நாளும் தீயவேனும் நன்காம் குறிக்கொண்மினே.’’

- என்கிறார் சம்பந்தப் பெருமான். சிவனை வணங்கும் விநாயகர், தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வம் கொண்டான், ஈசன் கழுத்து ஆபரணமாக இருந்த நாகராஜன். சிவபெருமானின் சாபத்திற்காளான அவன் சிவனார் ஆக்ஞைப்படி மகா சிவராத்திரியன்று, குடந்தைக் கீழ்க்கோட்டத்தில் வில்வவனமாக விளங்கிய இடத்தில் நாகேஸ்வரரை முதல் ஜாமத்திலும், சண்பகவனமான திருநாகேஸ்வரத்தில் நாகநாதரை இரண்டாம் ஜாமத்திலும், வன்னிவனமாக இருந்த திருப்பாம்புரத்தில் உள்ள பாம்புரேஸ்வரரை மூன்றாம் ஜாமத்திலும், புன்னை வனமான நாகைக் காரோகணத்தில் காயாரோகணேஸ்வரரை நான்காம் ஜாமத்திலும் வழிபட்டு மீண்டும் திருநாகேஸ்வரத்திற்கே திரும்பினான்.

இறைவன் நாகராஜனை இங்கேயே இருக்கும்படிக் கூறினார். இத்தலத்தின் பெயரும், இறைவன் பெயரும் தனதாகவே இருக்க வேண்டும் என்று அவன் கேட்டுக்கொண்டபடி ஊர் திருநாகேஸ்வரம் என்று பெயர் பெற்றது; இறைவன் நாகநாத சுவாமியானார். ஐந்து நிலை ராஜகோபுரமும் மூன்று பிராகாரங்களும் கொண்ட பெரிய கோயில். முதல் கோபுர வாயிலில் நுழைந்ததும் திருக்கோயில் வளாகத்துள்ளே அமைந்துள்ள ‘சூரிய புஷ்கரணி’ தீர்த்தத்தைக் காண்கிறோம்.

அருகே தென்திசை நோக்கிய ‘மழுப்பொறுத்த’ விநாயகரைத் தரிசிக்கிறோம். (பெயர்க் காரணம் தெரியவில்லை) அடுத்த கோபுரத்தருகே ‘கணநாதர் ரகசியம்’ என்ற சந்நதியைக் காணலாம். ஒருகாலத்தில், தீயசக்திகள், கோயிலைத் தரிசிக்க விடாமல் வலம் வந்துகொண்டிருந்தன என்றும், அவற்றைச் செயலிழக்கச் செய்ய அங்கு சதாசிவ பிரம்மேந்திரர் எந்திரம் ஒன்றை ஸ்தாபித்தார் என்றும் கூறுவர். கோயிலுள்ளே நவகிரக சந்நதியில் கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்த வண்ணம் வீற்றிருப்பது வித்தியாசமான காட்சியாகும்.

மூலவர் நாகநாத சுவாமியைத் தரிசித்து வலம் வருகிறோம். முதல் பிராகாரத்தில் சந்திரசேகரரும், ஆதிவிநாயகரும் உள்ளனர். நாகநாதர் சந்நதியின் இடப்புறம் ‘பிறையணி  வாள் நுதல் அம்மை’ சந்நதி உளது. கார்த்திகைப் பௌர்ணமி தினத்தன்று இரவு 7.30 மணி அளவில் இறைவியின் மீது நிலவின் குளிர்ந்த கிரணங்கள் படுகின்றன. இத்தினத்தில் சந்திரன் இறைவியை வழிபடுவதாக ஐதீகம். எனவே இறைவி ‘அர்த சந்திர பிம்ப குஜாம்பிகை’ எனக் குறிப்பிடப்படுகிறாள்.

சேக்கிழார், தம்பி பாலறாவாயர் மற்றும் அவர்களது தாயார் அழகாம்பிகை, நாலவர், சப்த கன்னிகையர், பரவை நாச்சியார் சமேத சுந்தரர் ஆகியோரை தரிசிக்கலாம். நாகநாதர்-சுப்பிரமணியர்-பிறையணி வாள் நுதல் அம்மை ஆகிய மூவர் சந்நதிகள் சோமாஸ்கந்த வடிவில் அமைந்துள்ளன. சோமாஸ்கந்தர் சந்நதியும் தனியே உள்ளது. ராகு பகவான் உற்சவர் சந்நதியை அடுத்து ஒருமுகமும் நான்கு கரங்களும் கொண்டு, வள்ளி-தெய்வானையுடன் விளங்கும் முருகப்பெருமானைத் தரிசித்து மகிழ்கிறோம். வழக்கம்போலவே இத்தலத்தில் அருணகிரியார் பாடிய திருப்புகழைச் சமர்ப்பிக்கிறோம். இப்பாடலில் கடையாய பிறப்பினர் பற்றிய நீண்ட பட்டியலே அளிக்கிறார், அருணகிரிநாதர்.

‘‘ஆசார ஈனக் குதர்க்க துட்டர்கள்
மாதா பிதாவைப் பழித்த துட்டர்கள்
ஆமாவின் ஊனைச் செகுத்த துட்டர்கள், பரதாரம்
ஆகாதெனாமல் பொசித்த துட்டர்கள்
நானா உபாயச் சரித்ர துட்டர்கள்
ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள், தமியோர் சொங்
கூசாது சேரப் பறித்த துட்டர்கள்
ஊரார்கள் ஆசைப் பிதற்று துட்டர்கள்
கோலால வாள்விற் செருக்கு துட்டர்கள், குரு சேவை
கூடாத பாவத் தவத்த துட்டர்கள்
ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள்
கோமாள நாயிற் கடைப் பிறப்பினில் உழல் வாரே
வீசாவிசாலப் பொருப்பெடுத் தெறி
பேராரவாரச் சமுத்திரத்தினில்
மீளாமல் ஓடித் துரத்தியுட்குறும் ஒரு மாவை
வேரோடு வீழத் தறித்தடுக்கிய
போராடு சாமர்த்தியத் திருக்கையில்
வேலாயுதா, மெய்த் திருப்புகழ் பெறு வயலூரா
நாசாதி ப்ராரத்த துக்க மிக்கவர்
மாயா விகாரத் தியக் கறுத்தருள்
ஞானோபதேச ப்ரசித்த சற்குரு வடிவான
நாதாவெனா முற்றுதித்திடப் புவி
ஆதாரம் ஆய்கைக்கு முட்ட முற்றருள்
நாகேச நாமத் தகப்பன் மெச்சிய பெருமாளே.’’

ஆசார ஒழுக்கங்களில் குறைபாடு உடையவர்கள், முறையற்ற தர்க்கங்களில் ஈடுபடுபவர்கள், தாய் தந்தையரைப் பழிப்பவர்கள், பசுவின் மாமிசத்திற்காக அதைக் கொல்பவர்கள், பிறன் மனைவியை இச்சித்தல் கூடாது எனும் நல்லறிவற்று அனுபவிப்பவர், பல தந்திரச் செயல்களைச் செய்பவர்கள், கள் குடித்தவர்கள், நாதியற்றவர்களின் சொத்தை திருடி அனுபவித்தவர், ஊரார்கள் அனைவரது ஆசையும் தாமே கொண்டு அறிவின்றிக் குழறுபவர்கள், ஆடம்பரமான, தீமையை விளைவிக்கக்கூடிய வாள்போரிலும், விற்போரிலும் ஈடுபட்டு செருக்கடைபவர்கள், குருசேவை செய்ய வாய்ப்பு கிடைக்காதவர்கள், யாருக்கும் தானமிடாது பொருளை மறைத்து சேகரித்து வைத்துள்ளவர்கள் ஆகியோர் அனைவரையுமே ‘துஷ்டர்கள்’ என்றழைக்கிறார் அருணகிரியார். இத்தகு துஷ்டர்கள் கும்மாளமிடும் நாயினும் இழிவான பிறப்பைப் பெற்று அலைச்சலுறுவர் என்கிறார்.

கடலில் ஒளிந்துகொண்டு மாமரமாய் நின்ற சூரனை அழித்த வேலாயுதனும், தனக்கு திருப்புகழ் பாடும் வன்மையை அளித்த வயலூரனும், பிராரப்த கர்மங்களால் வரும் கவலைகளை ஒழித்திடுவதும், உலகுக்கெல்லாம் ஆதாரமாய்ப் பயன்படுவதுமான பிரணவப் பொருளை சிவனுக்கு உபதேசித்த சற்குரு வடிவமானவனும், நாகேசன் எனும் திருநாமமுடைய தகப்பன் மெச்சியவனும் ஆகிய முருகப்பெருமானைப் பாடலின் பிற்பகுதியில் போற்றுகிறார்.

இழிவான பிறப்பை அடையாமலிருக்க நாமும் முருகனை வணங்கி, அருகிலுள்ள மகாலட்சுமியை போற்றுகிறோம். கௌதமர், பராசரர், சனகாதியர், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோர் பூஜித்த லிங்கங்களையும், பிட்சாடனர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், ஆடல் வல்லான், சிவசக்தி, மஹா பைரவர் ஆகியோரையும் தொழுது வெளியே வருகிறோம். வெளிச்சுற்றில் வன்னி மரத்தடி விநாயகரை வணங்கி, இத்திருத்தலத்தின் மற்றொரு தேவியாகிய கிரிகுஜாம்பிகையைத் தரிசிக்கிறோம். சுதை வடிவில் கலைமகளுடனும், திருமகளுடனும் தனிக் கோயிலில் வீற்றிருக்கிறாள்.

ஆடி, தை மாதங்களில் புனுகு சாத்தப்படுகிறது. பாலசாஸ்தா, தேவி தவம் செய்ய உதவினார் என்பதால் அவரது திருவுருவமும் உள்ளது. இவர்கள் தவிர சுரம் தீர்த்த விநாயகர், வைஷ்ணவி, பாலசுப்ரமண்யர், சங்கநிதி மற்றும் பதுமநிதி ஆகியோரையும் வணங்குகிறோம். கும்பகோணத்தைச் சுற்றியுள்ள நவகிரக தலங்களுள் திருநாகேஸ்வரம் ராகு தலமாகவே அதிக சிறப்புப் பெற்றுள்ளது. மன்னன் ஒருவனுக்கும் அசுரர் குலப் பெண் ஒருத்திக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு.

பாற்கடலிலிருந்து அமுதம் எடுத்தபோது, தன் உருவை மாற்றிக் கொண்டு தேவர்களுடன் சேர்ந்து திருமாலிடமிருந்து அமுது பெற்று தானும் உண்டான். இதை அறிந்த திருமால் அகப்பையினால் அவன் தலையில் அடிக்க, தலை வேறு, உடல் வேறாக விழுந்தன. அமுதம் உண்டதால் தலையில் உயிர் இருந்தது. இறைவனிடம் தன் தவற்றை உணர்ந்து அவன் மன்னிப்புக்கோரி தவமிருந்ததால் அவனது தலைப்பகுதியை பாம்பின் உடலுடன் சேர்த்து அவனை ஒரு சாயா (நிழல்) கிரகமாக்கினார். ராகு, நாகநாத சுவாமி கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் நாகவல்லி,
நாக கன்னி ஆகிய தேவிமாருடன் மங்கள ராகுவாக, தனிச்சந்நதியில் மனித உருவத்துடனே வீற்றிருக்கிறார்.

நாள்தோறும் ராகு காலத்தில் ஏராளமான அன்பர்கள் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தி ராகுவின் ஆசியைப் பெறுகின்றனர். ஒன்றரை வருடங்களுக்கொருமுறை ராகு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயரும் போது லட்சார்ச்சனை செய்யப்படுகிறது. ராகுவிற்கு உகந்த நிறம் நீலம் என்பதால் நீல ஆடை அணிவிக்கப்படுகிறது. அபிஷேகத்தின் போது பால் நீல நிறமாவதை காணலாம் என்பர். 16.2.88 அன்று ஐந்தரை அடி நீளப்பாம்பு ஒன்று தன் சட்டையை உரித்து ராகுவிற்கு மாலையாகப் போட்டிருந்தது கண்டு அதை எடுத்து கண்ணாடிப் பேழைக்குள் பத்திரப்படுத்தியுள்ளனர்.

காலங்கிரி முனிவரின் சாபத்தினால் பேயுரு கொண்டு திரிந்த கேரள மன்னன் சம்புமாலி என்பவன் எண்ணற்ற தலங்களில் நீராடி, இறுதியாக திருநாகேஸ்வரம் வந்து சூரிய புஷ்கரணியில் நீராடி சாபம் நீங்கப் பெற்றான். அவன் உருவம் கோயிலின் அலங்கார மண்டபத்தின் தூண் ஒன்றில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ‘சம்பு மாலி’ நாடகத்தை சிறந்த முறையில் நடத்தி வருகின்றனர். அறுபத்து மூவர் வரலாற்றைத் தொகுத்து உலகிற்களித்த சேக்கிழாருக்கு மிகவும் பிரியமான திருத்தலம் திருநாகேஸ்வரம். இவர் இரண்டாம் குலோத்துங்கனின் (1133-1150) முதலமைச்சராக இருந்தவர்.

கோயிலின் உள் மண்டபம், வெளிமதிற் சுவர், கோபுரங்கள், திருக்குளம் ஆகியன இவர் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டன. தன் மனம் கவர்ந்த நாகநாதருக்கு தனது ஊராகிய குன்றத்தூரில் கோயில் எழுப்பியுள்ளார். இது வட நாகேஸ்வரம் என அழைக்கப்படுகிறது.

‘‘திருநாகேச்சரத்துளானைச் சேராதார்
நன்னெறிக்கட் சேராதாரே’’ என்பது திருத்தாண்டகம்.
‘‘அயிலெடுத்து மயிலின் மேற் காலெடுத்தன்
றோலெடுத்தே அழுத வானோர்
துயிலெடுத்துத் துயரெடுத்த சூரெடுத்துப்
பேரெடுத்தச் சுரரைக் காத்துக்
குயிலெடுத்து மொழி இருவர் மணமெடுத்தோன்
தனதன்பர் குறையாப் பிறவி
வெயிலெடுத்து நிழல் கொடுக்கு முருகவேள்
அடிக்கமலம் விளம்பிச் சேர்வான்’’

(சிங்கார வேற்பிள்ளை அவர்கள் இயற்றிய திருநாகேச்சுரப் புராணத்திலிருந்து) நாகேச நாம தகப்பனையும், அவர் மெச்சிய சற்குரு வடிவான குமரக் கடவுளையும் வணங்கிப் புறப்படுகிறோம். அடுத்ததாக நாம் செல்லவிருக்கும் தலம் திருப்பந்தனை நல்லூர். இன்று பந்தநல்லூர் என்று அழைக்கப்படுகிறது. கும்பகோணத்திலிருந்து 29 கி.மீ. தொலைவில், மயிலாடுதுறை- திருப்பனந்தாள் வழியில் அமைந்துள்ள திருத்தலம்.

அருணகிரிநாதரால் ஒரு பாடலில் ‘கந்துகபுரி’ என்றும் அழைக்கப்படுகிறது. (கந்துகம் = பந்து) (‘கந்துகவரி’ - சிலப்பதிகாரம்) ஒருமுறை இறைவிக்குப் பந்தாடுதலில் விருப்பம் ஏற்பட்டது. இறைவன் நான்கு வேதங்களையுமே பந்தாக்கி அளிக்கிறார். தேவி மிக்க மகிழ்வோடு தோழியருடன் பந்தாடுகிறாள். இருளால் இவ்விளையாட்டிற்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால், சூரியன் மேற்கே சாயாமல், பகல் பொழுது நீண்டுகொண்டே போக, உலகிலுள்ள உயிர்கள் தவித்தன. விளையாடும் மும்முரத்தில் இறைவன் வந்ததைக்கூட தேவி கவனிக்கவில்லை.

எனவே இறைவன் தன் திருக்காலால் பந்தை எற்ற, அது வந்து பூமியில் விழுந்தது. (எனவே இத்திருத்தலம் பந்தணைநல்லூர் எனப் பெயர் பெற்றது.) இறைவி மன்னிப்புக் கோரியபோது இறைவன் மறுத்ததோடு, அவளைப் பசுவாக மாறும்படிச் சாபமிட்டார். இறைவி பசு உருவில், பந்து வீழ்ந்த சரக்கொன்றை வனத்தில் தவம் புரிந்தபோது, சுயம்பு லிங்கமாய் இறைவன் இருந்த புற்றின் மீது பாலைச் சொரிந்து வழிபட்டாள்.

பசு, கண்வ முனிவர் ஆசிரமத்தில் இருந்ததால், முனிவர் பூஜைக்குப் பால் குறைந்தது. திருமால் அங்கு கோவலனாக (இடையன்) இருந்தார். பசு புற்றில் பால் சொரிவது கண்டு அதைக் கோலால் அடித்தார். பசு துள்ளிப் புற்றை மிதித்தது. உடனே அன்னை தன் உருவை அடைந்தாள். கோவலனாக நின்ற பெருமாள், ஆதிகேசவனாக கோயில் கொண்டார்.

பந்தணை நல்லூரில் இறைவன், பசுபதீஸ்வரர், அன்னை வேணுபுஜாம்பிகை, பிரம்மன், விஷ்ணு, அம்பிகை, நாரதர், கண்வமகரிஷி ஆகியோர் இந்த இறைவனைப் பூஜித்திருக்கிறார்கள். இறைவன் எற்றிய பந்து வந்து விழுந்ததால் ஊர் பந்தணை நல்லூர். பசு உருவில் அம்பிகை இறைவனைப் பூஜித்ததால் இறைவன் பசுபதீஸ்வரர், பந்தணைந்த சுவடும், பசுவின் குளம்புச் சுவடும் தன்மீது அன்பின் அடையாளங்களாகக் கொண்டு விளங்குகிறார். இறைவியின் தவத்தினை ஏற்று, தேவர்களனைவரும் கண்டு மகிழும்படிக் கல்யாண சுந்தரனாகக் காட்சி அளிக்கிறார்.

(உலா தொடரும்)