நோய் விரட்டும் புற்றுமண் பிரசாதம்!



-சங்கரன்கோவில்

இயற்கையோடு இயைந்திருக்கும் ஐம்பெரும் பூதங்களாக ஆகாயம், காற்று, நீர், நெருப்புமற்றும் பூமி திகழ்கின்றன. இந்த பொக்கிஷங்களையே கடவுளர்களாகக் கொண்டாடி, வழிபாடும் செய்து மகிழும் மரபும் நம்மிடம் உண்டு. அந்த ஐம்பெரும் சக்திகளை நாம் கோயில்களாக உருவகித்து, தரிசித்து மகிழ்கிறோம். அந்தவகையில் சங்கரன்கோவில் மண்தலமாகவும், தாருகாபுரம் நீர்தலமாகவும்/, தென்மலை காற்றுத்தலமாகவும்,  கரிவலம்வந்தநல்லூர் நெருப்புதலமாகவும், தேவதானம் ஆகாயத்தலமாகவும் அழைக்கப்படுகிறது. ஒரே நாளில் இந்த ஐந்து கோயில்களையும் தரிசிப்பது சிறப்பு என்பார்கள். இதில் முதலில் நிலமெனும் மண் தலமாக போற்றப்படும் சங்கரன்கோவிலை தரிசிக்கலாம்.

சிவனும், விஷ்ணுவும் ஓருருவில் காட்சி தரவேண்டுமென சக்தி நினைத்தார். எனவே, சிவனை வேண்டி நீண்ட நாள் தவம் இருந்தார். தேவியின் முன் சிவபெருமான் தோன்றினார். உமாதேவியார் சிவபெருமானிடத்தில் விஷ்ணு மூர்த்தியுடன் நீங்கள் பொருந்தியிருக்கும் திருக்கோலத்தைக் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சிவபெருமான்  சங்கரநாராயணராகக் காட்சியளித்தார். அப்போது தேவர்கள், முனிவர்கள் எல்லோரும் அந்தக் காட்சியைக் கண்டு களித்து பூத்தூவி வாழ்த்து தெரிவித்தார்கள். சக்தி மிகுந்த சந்தோஷம் அடைந்தாள்.

அப்படி ஈசன், விஷ்ணு ஒருபாகனாக அவதரித்த அருமையான  தலம்தான் சங்கரன்கோவில். காலங்கள் கடந்தன. இத்தலம் யாவரும் அறியாத வண்ணம் பாழ்பட்டுப் போனது. கோயில், அந்த வளாகத்தில் இருந்த தோட்டம், பாம்பு புற்று எல்லாமும் மண்ணில் அழுந்தி மறைந்தன. அக்காலத்தில் மணிக்கிரீவன் என்ற தேவன் பார்வதி தேவியின் சாபத்தால் பூலோகத்தில் தாழ்த்தப்பட்ட இனக் குடும்பத்தில் வந்து பிறந்தான்.  அவன் தன் வீட்டருகே ஒரு தோட்டத்தைக் காவல் காத்தான். அந்தத் தோட்டத்தில் பாம்பு புற்று ஒன்று மேல்நோக்கி வளர்ந்தது.

அது தோட்டத்தின் அழகை சீர்குலைப்பதாகக் கருதிய அவன், அந்தப் புற்றை வெட்டினான். அதனால் புற்றுக்குள்ளிருந்த பாம்பின் வால் வெட்டுப்பட்டது. உடனே பேரொளி ஒன்று அங்கே பிரகாசித்தது. கூடவே சிவலிங்கம் ஒன்றும் தோன்றியது. மணிக்கிரீவன், மன்னன் உக்கிர பாண்டியனிடம் இந்தச் சம்பவத்தைக் கூறினான். மன்னன் தன் படைவீரர்களுடன் அங்கே வந்து சிவலிங்கத்தை நோக்கி வணங்கி நின்றான். அப்போது “பாண்டிய மன்னனே, இந்த இடத்தில் எனக்கு  கோயில் கட்டு” என்று அசரீரி கூறியது. 

சிவபெருமானின் அந்த வாக்கை ஏற்றுக்கொண்டு உக்கிர பாண்டியன் இந்தக் கோயிலை உருவாக்கினான். இந்த தலத்துக்கு பல பெயர்கள் உண்டு - பூகைலாயம், புன்னைவனம், சீராசபுரம், சீராசை, வாராசைபுரம், கூழைநகர். சிவ பெருமானுக்கு சங்கரமூர்த்தி, வாராசைநாதன், வைத்தியநாதன், சீராசைநாதன், புன்னைவனநாதன், கூழையாண்டி ஆகிய பெயர்கள் உண்டு.   
 
நம்மை கோயில் நுழைவாயில் வரவேற்கிறது. மேற்கு நோக்கி கோயிலுக்கு நுழைந்தால், இருபுறம் வெள்ளியாலான கண்மலர் மற்றும் கைகால் உறுப்புகள் மற்றும் மிளகு-உப்பு விற்பவர்களைக் காணலாம். நாம் நேர்ந்துகொண்டபடி அதற்கான பரிகாரப் பொருட்களை வாங்கிக்கொண்டு உள்ளே செல்லலாம். முதல் மண்டபத்தில் இருபுறமும் கடைகள் அணிவகுக்கின்றன. ஆரம்பத்தில் சௌபாக்கிய விநாயகர், பழனி ஆண்டவர் ஆகியோர் முகப்பில் கொலுவிருந்து அருள்பாலிக்கிறார்கள்.
 
தொடர்ந்து செல்லும்போது மீண்டும் கடைகள் அணிவகுப்பைக் காணலாம். அவற்றைக் கடந்து சென்றால், சித்தி விநாயகர் அன்போடு வரவேற்கிறார். வலதுபுறம் திரும்பிச்சென்றால் தெப்பக்குளம், பெயர் நாகசுனை. ஒரு காலத்தில் இந்த தெப்பக்குளத்தில் பரிகார மாக பக்தர்கள் உப்பு-மிளகை போடுவார்கள். அப்படி போட்டால் அவர்கள் குடும்பம் நலமாக இருக்கும் என்று நம்பிக்கை.

ஆனால் தற்போது தெப்பக்குளத்தில் எதையும் போடக்கூடாது என்று தடை உள்ளது. 25 வருடங்களுக்கு முன்பு கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் இந்த தெப்பக்குளத்தில் நீராடிவிட்டுதான் கோயிலுக்குள் நுழைவது என்ற வழக்கம் இருந்தது. தொடர்ந்து கோயிலினுள் சென்றால் பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவை முறைப்படி அமைந்துள்ளன. அருகிலேயே நவகிரக சந்நதி. அடுத்துள்ள மண்டபத்துள் சங்கரலிங்கம் சந்நதியைக் காணலாம்.

அருகே இருபுறமும் தனித்தனி சந்நதியில் அம்பிகை கோமதியும், சங்கரநாராயணரும் கொலுவிருக்கிறார்கள். சங்கரலிங்கம் சந்நதி மண்டபத்துக்குள் நவகிரகங்கள் தனித்தனி சந்நதிகளிலிருந்து அருள்பாலிக்கிறார்கள். இந்த கோயிலை வலம் வந்தால் நவகிரகங்களினால் ஏற்படும் தோஷம் விலகி நன்மை பிறக்கிறது. எனவேதான் ஆடித்தபசு காலத்தில் இந்த கோயிலை 108 முறை பக்தர்கள் வலம் வருகிறார்கள். கோயில் வளாகத்தில் உள்ள நாகராஜாவுக்கு பாலும் பழமும் வைத்து வணங்கி, வேண்டுதல் நிறைவேறப்பெறுகிறார்கள்.

அருகில் உள்ள தொட்டியில் புற்றுமண் உள்ளது. இதை பக்தர்கள் அனைத்து நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தி வருகிறார்கள். கைகால், உடல் வலி தீர இந்தப் புற்று மண்ணை தேய்த்து குளிக்கிறார்கள். இதனைக் கரைத்துக் குடித்தால் காய்ச்சல் மற்றும் நாள்பட்ட நோய்களும் தீருகின்றன என்கிறார்கள். கோயிலில் பிரசாதமாக திருநீறுடன் புற்றுமண் கட்டியும் வழங்குகிறார்கள். கோமதியம்மனுக்கு இறைவன் காட்சி கொடுத்த இடத்தில் உள்ள பாம்பு புற்றில் தற்போதும் பாம்புகள் மண்ணை தள்ளி விடுகிறது என்றும், அந்த புற்றில் உள்ள மண்ணைதான் தொட்டியில் வைத்து பக்தர்களுக்கு வழங்குகிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

கோமதியம்மன் நின்ற கோலத்தில் தனிச்சந்நதியில் அருள்பாலிக்கிறாள். இவள் முன்னாலும் கொடிமரமும், பலிபீடமும் உண்டு. அம்மன் தவமிருந்த இடத்தில் சக்தி பீடம் உள்ளது. பீடம் அமைந்துள்ள இடத்தில் அமர்ந்து பல பக்தர்கள் தியானம் செய்கிறார்கள். தங்கள் குடும்ப பிரச்னை தீர நெய்தீபம் போட்டு  வழிபடுகிறார்கள். பத்திசார முனிவர், இந்திரன், அகத்தியர், வைரவர், சூரியன், அக்னி ஆகியோர் சங்கரநயினாரையும், கோமதியம்மனையும் வழிபட்டுத் திருவருள்பெற்றிருக்கிறார்கள்.  

இந்த அம்மன் சுற்றியுள்ள கிராமங்களில் விஷஜந்துகள் மக்களை அண்டாமல் பாதுகாக்கும் சிறப்பு தெய்வமாகப் போற்றப்படுகிறார். வயலில் விவசாயம் செய்யும் போது, விஷஜந்துகளால் எந்தத் தொந்தரவும் வராமல் இருக்க கோமதியம்மனை வேண்டிக்கொள்கிறார்கள். நன்றிக் கடனாக வெள்ளி பாம்பு எடுத்து அம்மைக்கு காணிக்கை செலுத்துகிறார்கள். அதேபோல் கண் உபாதை, உடல்நலப் பிரச்னை என்று எது இந்த அம்மன் அருளால் தீர்ந்தாலும், அதற்குப் பரிகார காணிக்கையாக கண் மலர், உடல் உருவம் செலுத்துகிறார்கள்.

இந்தக்கோயிலில் ஐந்து தீர்த்தங்கள் உள்ளன: அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், வைரவ தீர்த்தம், கௌரி தீர்த்தம். கோயிலின் தலமரம் புன்னை மரம். சங்கரனார் தேர் மிகப்பெரியது. அம்மன் தேர் சற்றுச் சிறியது. இந்த தேர்களில் சித்திரை திருவிழாவின் ஒன்பதாவது நாளில் சங்கரரும், அம்பிகையும் வீதிஉலா வருவார்கள். ஆடி விழாவில் ஒன்பதாவது நாளில் அம்மன் தேர் இழுக்கப்படும். ஆடித்தபசு திருவிழா இங்கு விமரிசையாக நடக்கும்.

அப்போது காட்சி கொடுத்தல் என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். அதாவது மக்கள் தங்கள் நிலங்களில் விளைந்த விளைபொருள்களை எல்லாம் தபசுக் காட்சி நடக்கும் சிவன், சக்தி மீது போடுவார்கள். அவ்வாறு போடுவதால் அந்த ஆண்டு விளைச்சல் அதிகரிக்கும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இங்கு சித்திரைப் பிரமோற்சவம் திருவிழாவும் மிகச்சிறப்பாக நடக்கும்.

திருநெல்வேலி புது பேருந்து நிலையத்திலிருந்து அடிக்கடி பேருந்துகள் சங்கரன்கோவிலுக்குச் செல்கின்றன. கோவில்பட்டியிலிருந்து கழுகுமலை வழியாகவும் சங்கரன்கோயிலை அடையலாம். ராஜபாளையம், தென்காசியிலிருந்தும் சங்கரன்கோயிலுக்கு பாதை உள்ளது. நெல்லையில் இருந்து 52 கிலோ மீட்டரில் இந்த கோயில் உள்ளது. காலை 6 முதல் 12 மணி வரை, மாலை 4 முதல் 8 மணி வரை கோயில் திறந்திருக்கும். ஆலயத் தொடர்புக்கு தொலைபேசி எண்: 04636 - 222265

- முத்தாலங்குறிச்சி காமராசு
படங்கள்: பரமகுமார், சங்கர்