திறமையை வளர்த்துக்கொள்ள இறையருள் தேவை



இந்த உலகத்தில் திறமையில்லாதவர் என்று யாருமே இல்லை. ஆனால், தன் திறமை என்னவென்று தெரிந்துகொள்ளாதவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். ஒவ்வொருவரையும் திறமைகொண்டவராகத்தான் இறைவன் படைக்கிறார். அவர்கள், தம் திறமையைக் கண்டுணர பல்வேறு வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறார். ஆனால் அந்த வாய்ப்புகளால் தம் திறமையை வளர்த்துக்கொள்ளாமல் சுய நம்பிக்கையில்லாமலோ, சோம்பல்பட்டோ, வேறு ஆதாயங்களை எதிர்பார்த்தோ காலம் கடத்துவதால் இறைவன் அருளிய நம் அற்புதத் திறமை நமக்குள்ளேயே புதைந்துபோகிறது.

வெறும் பாராட்டுக்காக அல்லாமல், வெறும் வருமானத்துக்காக இல்லாமல், பொதுச் சேவையாக அந்தத்திறமையை வெளிக்காட்டுவதும், வளர்த்துக்கொள்வதும் நம் பொறுப்புதான் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவில்லை. நம்மைவிட அடுத்தவர் தம் திறமையால் செல்வாக்கும், சொல்வாக்கும் பெற்றுப் பரிமளிப்பதைப் பொறாமை நோக்கில்தான் பார்க்கிறோமே தவிர, அவருக்கு இல்லாத ஒரு திறமை நம்மிடமும் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் மயங்கிக் கிடக்கிறோம்.

‘அப்பாடா, இன்றைய ஒருநாள் கழிந்தது’ என்று பொழுதைத் தள்ளிவிடும் போக்கு, இறைவன் கொடுத்திருக்கும் மதிப்பற்ற, மீண்டும் கிடைக்கவே கிடைக்காத கால அவகாசத்தை, அவமதிக்கும் செயலாகும். ‘இன்றைக்கு உருப்படியாக என்ன செய்தோம்?’ என்ற இரவுநேரக் கேள்வியை விட ‘இன்றைக்கு உருப் படியாக என்ன செய்யப்போகிறோம்’ என்ற காலை நேரக் கேள்விக்கு விடையாக, சேவகம் செய்ய, காலம் கைகட்டி நமக்கு முன் காத்திருக்கிறது.

‘நூறு ரூபா சம்பளத்துக்கு இருநூறு ரூபாய்க்கு வேலை செய்யறாம்ப்பா’ என்ற பாராட்டு, நாம் சம்பாதிப்பதன் மதிப்பீடு அல்ல, நம் திறமையின் மதிப்பீடு. இந்த மதிப்பீடு உயர, உயர நம் எதிர்காலமும் வளமாகும். தினமும் இறைவணக்கத்தின்போது ‘என் திறமை என்ன, இதை எப்படி மேம்படுத்துவது?’ என்று கடவுளிடம் கேட்டுக்கொண்டே இருங்கள், நீங்கள் பெருமகிழ்ச்சி கொள்ளத்தக்க பதிலை இறைவன் உங்களுக்கு அருள்வார். பெரும்பாலான சிக்கல்களுக்கு, இறைவனை வணங்கும் நேரம் எப்படி தீர்வுகளை வழங்குகிறதோ, அதேபோல நம் திறமைகளை மேம்படுத்திக்கொள்ளவும் அது நல்ல வாய்ப்புகளைத் தந்து உதவும்.

பிரபுசங்கர்
(பொறுப்பாசிரியர்)