திருவையாறு பஞ்சநதிக்கரையில் பொங்கல்தஞ்சை பெரிய கோயிலிலிருந்து 12 கி.மீ தொலைவிலுள்ளது. திருவையாறு ஐயாறப்பன் கோயில். இதன் தெற்கு கோபுரத்திற்கு அருகிலுள்ள புஷ்ப மண்டபக் காவேரி படித்துறை இயற்கை எழில் கொஞ்சும் சூழலோடு திகழ்கிறது. சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, கங்கா தீர்த்தம், பாலாறு, நந்திவாய்நுரை தீர்த்தமாகிய நந்தி தீர்த்தம் ஆகிய ஐந்தும் கலப்பதால் ‘ஐயாறு’ என்னும் திருப்பெயர் இத்தலத்திற்கு அமைந்தது. இதனால் இத்தலத்தை பஞ்சநதம் என்றும் அழைப்பர்.

காசிக்குச் சமமாகக் கருதப்படும் தலங்கள் ஆறு. அவை திருவெண்காடு, திருவையாறு, மாயூரம், திருவிடைமருதூர், திருச்சாய்க்காடு, திருவாஞ்சியம் ஆகும். இவற்றுள் திருவையாறு  சப்த ஸ்தான திருத்தலங்களுள் ஒன்று என்ற பெருமையும் கொண்டது. மற்றவை திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகும்.

திருவையாறு திருத்தலத்தில் ஐயாறப்பர் ஆலயத்தின் தெற்கு கோபுர வாசலுக்கு நேரே சுவாமி தீர்த்தத்திற்கு உகந்ததான காவிரி படித்துறை அமைந்துள்ளது. இந்த காவிரி நதியில் நீராடுவதை அப்பர் சுவாமிகள் வெகுவாக சிறப்பித்துள்ளார். புஷ்பமண்டப படித்துறை என்ற இத்துறையில் நீராடும் பக்தர்களை, ஐயாறப்பர் பெருஞ்செல்வந்தர்களாக மாற்றுவார் என்பது அப்பரின் வாக்கு.

புண்ணியமளித்தலில் காசிக்கு வீசம் அதிகம் என்று சொல்லப்படுவதால் இத்தலப் படித்துறையில் மார்கழி மாதம் கடைசி நாளன்று காவிரி அன்னை இங்கு தங்கி, ஐயாறப்பரை வழிபட்டு மறுநாள், தைப் பிறப்பன்று வருணனை அடைந்ததாக புராண வரலாறு கூறுகிறது. எனவே, பெண்கள் இன்றும் மார்கழி கடைசி நாளன்று இரவு இங்கு தங்கி ஐயாறப்பரை வழிபட்டு, தை முதல் தேதியன்று இந்தப் படித்துறையில் பொங்கல் தயாரித்து, காவிரி அன்னைக்கு மங்கலப் பொருட்களுடன் படைத்து வழிபடுகிறார்கள்.

இதனால் சுமங்கலி பாக்கியம் நீடிப்பதுடன், தங்கள் இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை. காவிரி நதிஓடும் இந்த புஷ்பப் படித்துறையில் ஒவ்வொரு தமிழ்மாதப் பிறப்பன்றும் நீராடினால் உடல் நலம் வளம் பெறும். மேலும், மாசிமாத மகம் நட்சத்திரத்தன்றும், சித்திரை பௌர்ணமி அன்றும், ஐப்பசி துலா ஸ்நானம், கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளிலும் குறிப்பாக கார்த்திகை கடைசி ஞாயிற்றுக்கிழமையும் இங்கு நீராடுவது மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது.

காசிக்கு (வாரணாசி) சமமான திருத்தலமாக இத்தலம் கருதப்படுவதாலும், திருவையாறு ஐயாறப்பர், கோயில் தெற்கு கோபுர வாசலில், தனிச் சந்நதியில் எமனைத் தன் காலடியில் வீழ்த்தி, அமுக்கியிருக்கும் ஆட்கொண்டாரின் பார்வை இப்படித்துறையைப் பார்த்த வண்ணமிருப்பதாலும் இங்கு நீராடினால் எமபயம் நீங்கும். அதனால் இங்கு பகல், இரவு என்று பாராமல் எந்த நேரத்திலும் நீராடலாம் என்றும் கூறப்படுகிறது.

காசி மணிகர்ணிகா, கங்கை படித்துறையைப் போல, முக்தி தரும் படித்துறையாகக் கருதப்படுவதால் இங்கு மறைந்த முன்னோர்களுக்கு நீத்தார்கடன் செலுத்துவதற்கு இப்படித்துறையின் அருகில் வசதிகள் உள்ளன. காசியைப் போன்றே இறப்போர்க்கு இறுதி மூச்சு விடும்போது இறைவன் தாரக மந்திரம் உபதேசம் செய்வதாக நம்பப்படுவதால் இந்த திருவையாறு தலமும் பஞ்ச தீர்த்தமான காவிரியும் மிகவும் போற்றப்படுகிறது.

- தி.இரா. பரிமளரங்கன்

உடல் நான் எனில், உலகமும் உமக்கு அன்னியமாய் வெளியே இருப்பதாய்த் தோன்றும். ஆன்மாவே நானென்று உணர்ந்தால் வையகம் பிரும்மாகாரமாய் விளங்கும்.