சிறப்புகள் பல நல்கும் சிவ-விஷ்ணு ஆலயம்சுண்ணாம்பு கொளத்தூர்

சென்னை மாநகரையொட்டி அமைதி தவழும் கிராம சூழலில் அமைந்த ஊர் சுண்ணாம்பு கொளத்தூர். சென்னை மடிப்பாக்கத்தை அடுத்துள்ள கோவிலம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள இந்த ஊரில், பழமையான மரகத லிங்கத் திருமேனியையும், விஷ்ணு திருமேனியையும் கொண்ட திருக்கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலயத்தை அந்தப் பகுதி மக்கள் ‘சிவா-விஷ்ணு ஆலயம்’ என்று அழைக்கிறார்கள். நாலரை ஏக்கர் பரப்பளவில் பழமையான திருக்குளத்தோடு கூடிய இந்த ஆலயம் மனதுக்கும், சிந்தனைக்கும் இதமளிக்கும் சூழ்நிலையில் இருப்பது தனிச் சிறப்பு.

பழங்காலத்து வீடு கட்டும் முறையில், முக்கிய பொருளாக விளங்கிய சுண்ணாம்பு வளம் மிகுந்த ஊராகவும், நீர் ஊற்றுகள் கொண்ட குளம் அமையப்பெற்றதாகவும் திகழ்ந்ததால், இந்த ஊர் ‘சுண்ணாம்பு குளத்தூர்’ என்று பெயர் பெற்றதாக பெயர்க்காரணம் கூறப்படுகிறது. மன்னர் காலத்தில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழ வள நாட்டின் பகுதியாக, இந்த ஊர் இருந்திருக்கிறது. அப்போதே இந்த ஊரில் மரகத லிங்கத்திற்கும், விஷ்ணுவிற்கும் தனித்தனியாக ஆலயங்கள் அமைந்திருந்தன.

இவை அன்னிய படையெடுப்பின்போது தரைமட்டமாக்கப்பட்டு விட்டன. ஒருமுறை இந்தப் பகுதியில் உள்ள முனீஸ்வரர் ஆலயத்தில் விழா நடைபெற்றது. அப்போது முனீஸ்வரருக்குப் புனித நீர் கொண்டு செல்வதற்காக, விழா நடத்திய மக்கள் இங்குள்ள குளக்கரைக்கு வந்துள்ளனர். அப்போது வேகமாக காற்று வீசியதுடன், பலத்த மழையும் பெய்யத் தொடங்கியது. இதனால் நீர் எடுக்க வந்தவர்கள் அனைவரும் குளக்கரையோரம் இருந்த ஆலமரத்தின் கீழ் ஒதுங்கி நின்றிருக்கிறார்கள்.

அங்கு செடிகொடிகளுடன் மண் மூடிக்கிடந்த ஒரு மேடான பகுதி பலத்த மழையால் கரையத் தொடங்கியது. அந்த இடத்தில் பச்சை நிறத்தில் குழவிக்கல் போன்ற ஒன்று தென்பட்டது. அனைவரும் அது ஒரு குழவிக்கல் என்றே நினைத்து அதனை எடுத்தபோது, அதன் அடியில் ஆவுடையார் இருப்பதைக் கண்டனர். இதையடுத்து குழவிக்கல் லிங்கத்தை அந்த ஆவுடையாரில் பொருத்தி வெளியே எடுத்தார்கள். புதரை அப்புறப்படுத்தினர். கூடவே அழகிய நந்தி சிலையும், பழமையான விஷ்ணுவின் திருவுருவமும் கிடைத்தன.

பூமியில் தெய்வச் சிலைகள் கிடைத்ததால், முன்பு இங்கு ஆலயம் இருந்திருக்கலாம் என்று எண்ணி பொதுமக்கள், இது தொடர்பாக பிரச்னம் பார்த்தபோது இங்கு ஒரு கோயில் இருந்த விஷயம் தெரியவந்தது. இதனால் மனம் மகிழ்ந்த அடியவர்களில் சிலர் ஒன்று கூடி சிறு ஓலைக் கொட்டகை அமைத்து தெய்வச் சிலைகளை அங்கு வைத்து வழிபட்டு வந்தனர். நாளடைவில் அது மக்கி விடவே, இறைவன் வானம் பார்த்தவராக நிலைத்திருந்தார்.

அப்போது, அங்கு வந்த ஒரு பெண்மணிக்கு அருள் வந்து, ‘இறைவனை வெயிலில் வைப்பது முறையா? உடனே நல்ல கொட்டகை அமைத்து அதன் பிறகு வழிபடுங்கள்’ என்று கூறினார். இதையடுத்து ஊர் மக்கள் அனைவரின் நடவடிக்கையின் பேரில் ஆலயம் கொஞ்சம் கொஞ்சமாக உருப்பெறத் தொடங்கியது. இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானையும், விஷ்ணுவையும் வழிபடுபவர்களுக்கு நல்ல விஷயங்கள் பல நடைபெறத் தொடங்கியதைத் தொடர்ந்து ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. எனவே பக்தர்கள் பலரும் சேர்ந்து ஆலயத்தை மேலும் அழகுற அமைத்துள்ளனர்.

கிழக்கு நோக்கிய சிவன், விஷ்ணுவிற்குத் தனித்தனி ஆலயங்கள். பழமையான திருக்குளம். இறைவன் மரகத லிங்கத் திருமேனியுடன், சதுர வடிவ ஆவுடையாரில், கிழக்கு முகமாய் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இவர் மரகதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். லிங்கத் திருமேனியில் பொன்னிற சொர்ண ரேகை அமைந்துள்ளது சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. இதனை அபிஷேக நேரங்களில் மட்டுமே கண்டுகளிக்க முடியும். இவரை பிரம்மன் வழிபட்டார் என்று கூறப்படுகிறது.

சிவபெருமானின் கருவறைக்கு எதிரே, இடது புறம் தெற்கு நோக்கிய அன்னை மரகதாம்பிகைக்குத் தனிச் சந்நதி அமைந்துள்ளது. அன்னை நின்ற கோலத்தில் எளிய உருவில் அருளாசி வழங்குகிறாள். அன்னையின் சந்நதிக்கு இடதுபுறம் தனி ஆலயமாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயம் கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. தொன்மைவாய்ந்த இந்தப் பெருமாள், அபயகரம் காட்டி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.

தவிர விநாயகப் பெருமான், வள்ளி - தெய்வானை சமேத முருகப் பெருமான், சண்டிகேஸ் வரர், மகாலட்சுமி, கருடாழ்வார், ஆஞ்சநேயர், பைரவர் மற்றும் நவகிரக சந்நதிகளும் ஒருங்கே அமையப்பெற்றுள்ளன. இத்திருக்கோயிலில் மரகதலிங்கம், விஷ்ணு, நந்திதேவர் மட்டுமே பழமையானவர்கள் என்றாலும், புதியதாக வடிக்கப்பட்ட தெய்வத் திருமேனிகளும் இங்கே அதே தனித்தன்மையுடன் விளங்குவது அற்புதமாகும். ஆலயத் தலமரமாக ஆலமரம் விளங்குகிறது. இது திருக்குளத்தின் கரையோரத்தில் அமைந்திருக்கிறது. தல தீர்த்தம் ‘மரகதத் தீர்த்தம்’ ஆகும்.
 
சிவ, வைணவ ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் அனைத்து விழாக்களும் இங்கே சிறப்புடன் நடத்தப்படுகின்றன. இது தவிர, சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தையும், இந்த ஆலயத்தில் வைத்துதான் நடத்துகின்றனர். இறைவன் மணமக்களை பதினாறு பேறுகளுடன் வாழ வைப்பார் என்ற நம்பிக்கையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். சென்னை மடிப்பாக்கத்தை அடுத்த கோவிலம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கிராமமாக சுண்ணாம்பு கொளத்தூர் அமைந்துள்ளது. துரைப்பாக்கம் - பல்லாவரம் புறவழிச் சாலையில் இவ்வூர் இருக்கிறது. வாகனத்தில் வர, சாலை வசதி உள்ளது.

- சாய் பிரசன்னா

நான், எனது என்னும் அபிமானமற்று முயற்சி செய்தால், கர்மம் சித்த சுத்தியையும், அவ்வழியே ஏகாக்கிரத்தையும் பயக்கும். ஏகாக்கிரமான உள்ளத்தில் உண்மை தானே துலங்கும்.

வெளி விஷயங்களெல்லாம் நிலையற்று நசிப்பதை உணர்ந்தால் அதனால் விஷய விரக்தி உண்டாகும். ஆகவே (ஆன்ம) விசாரணையே மிக முக்கியமான முதற்படி. அவ்விசாரணையால் உலக இன்பங்கள், செல்வம், பெயர், புகழ் முதலியவற்றில் துச்ச புத்தி உண்டாகும்.