விவாதத்தை விடுவோம்!உரையாடுவதற்கும், விவாதம் செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. உரையாடுவதில் எது சரி என்ற கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சி இருக்கும்; விவாதத்தில் யார் சரி என்ற சுயநலத்திற்கான கோபம் இருக்கும். உரையாடுவதில் மென்மை இருக்கும், பொதுவாக இருதரப்பிலும் குரல் ஓங்காது; விவாதத்தில் சூடு பறக்கும்,  தன் பக்கமே சரி என்ற உரத்த குரல் ஒலிக்கும்.

உரையாடுவதில் எதிர் தரப்புக் கருத்தையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும், தன்னை மேலும் வளர்த்துக்கொள்ள அந்தக் கருத்து உதவும் என்ற உயர்ந்த நோக்கம் இருக்கும்; விவாதத்தில் எதிர்த் தரப்பின் கருத்து எத்தகையதாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற வீம்பு இருக்கும். அதைத் தான் ஏற்பது தன் சுயகௌரவத்துக்கு இழுக்கு என்ற அகம்பாவம் இருக்கும்.

உரையாடுவதில் பேச்சில் மரியாதை, நடத்தையில் நாகரிகம் இருக்கும், அது உரையாடலில் கருத்துப் பரிமாற்றத்தைவிட இரு தரப்பின் நட்பை மேலும் வலுவாக்கும்; விவாதத்தில் சிலசமயம் மரியாதைக் குறைவான வார்த்தைகள் வெடிக்கலாம். சிலசமயம் கை ஓங்கும் அளவுக்கும் அநாகரிகமும் வெளியிடப்படலாம். இது இரு தரப்புக்கிடையே பகையை வளர்க்கும். துரதிருஷ்டவசமாக சில உதாரணங்களில் நீடித்தப் பகையாகவும் ஆகிவிடலாம்.

வெளிப்படையான மனதுடன் பேச்சில் கலந்துகொள்வதுதான் உரையாடல். பேச்சில் தோற்கக்கூடாது என்று ஏற்கெனவே தீர்மானித்துக்கொண்ட வைராக்கியத்துடன், தன் கருத்து சரிதானா, பிறரால் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதானா என்ற நியாயமான சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் கலந்துகொள்வதுதான் விவாதம். உரையாடலில் அப்போதைய சுமுகமான பேச்சால் அடுத்த சந்திப்பின்போதும் நட்பு மணம் வீசும்;

விவாதத்தில் அப்போதைய காழ்ப்புணர்வு பேச்சால் அடுத்தடுத்த சந்திப்புகளில் முகம் பார்த்துக்கொள்ளவும் விரும்பாத கசப்புணர்வு தோன்றும். இறைவனிடமும் உரையாடுங்கள்; விவாதிக்காதீர்கள். இறைவனைப் போற்றியபடி நீங்கள் உரையாடினீர்களென்றால், உங்கள் உள்ளம் தெளிவு பெறும், நல்லெண்ணங்கள் ஊற்றெடுக்கும்.

‘இத்தனை நாள் வேண்டிக்கொண்டேனே, எனக்கு என்ன செய்தாய்?’ என்பது மாதிரியான விவாதத்தில் இறைவனுடன் இறங்கினால் நம் மனசு மேலும், மேலும் எதிர்பார்ப்பு என்ற குழப்பக் குட்டையாகிவிடும். மீண்டுவர மிகவும் கஷ்டமாகிவிடும். எனவே எப்போதும் யாருடனும் உரையாடுவோம்; விவாதத்தைத் தவிர்ப்போம்.

பிரபுசங்கர்
(பொறுப்பாசிரியர்). 

இந்த இதழ்: முச்சிறப்பு (பொங்கல், திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி) சிறப்பிதழ்.