விளையாட்டுக்குப் பின்?



ஆயிரம் கிரணங்கள் நீட்டி
அணைக்கின்ற ஆதவா போற்றி!
ஆனந்தம் அருளும் அற்புத சூரியனே போற்றி!

சதுரங்க (செஸ்) விளையாட்டில் இரண்டு அணிகள் - கறுப்பு, வெள்ளை. இரண்டிலும் சமமான உறுப்பினர்கள். அவர்களுக்கு சமமான பதவிகள், நகரும் சலுகைகள், எதிரியை வெட்டிச் சாய்க்கும் வாய்ப்புகள். ராஜா, ராணி, மந்திரிகள், குதிரைப்படை, யானைப்படை, போர் வீரர்கள் என்று பல பொறுப்புகள் மேற்கொண்டவர்கள், தனித்தனியே இரு அணிகளுக்கும்.

ஒவ்வொரு பதவியினருக்கும் தனித்தனி மதிப்புகள் - கூடுதலாகவோ, குறைச்சலாகவோ. கட்டம் கட்டமாக நகர்ந்து செல்வதும், ஒரேயடியாக எதிரி கோட்டைக்குள் பாயும் வேகமும் ஒருவருக்கொருவர் வித்தியாசப்படும்.

போட்டியில் ஒரு தரப்பு மன்னர் வீழ்வதை ஒட்டி அல்லது அவர் தப்பிக்க இயலாதவாறு முற்றுகையிடப்பட்ட பிறகு, எதிர் அணியினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். எல்லாம் முடிந்து விளையாட்டை மூட்டை கட்டும்போது என்ன ஆகிறது?கறுப்பு, வெள்ளை பேதமில்லை, ராஜா, சேவகன் என்ற பாகுபாடு இல்லை, எல்லோரும் ஒரே பெட்டிக்குள்! இந்த சமத்துவப் பெட்டிக்குள், எந்த ஏற்றத் தாழ்வும் காட்ட இயலாமல் அனைவரும் ஒன்றாகப் புழங்குகிறார்கள்!

உலகமென்னும் நாடக மேடையில் அவரவர் பாகத்தை நடித்து முடித்த பிறகு அனைவருமே ‘நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இட’த்திற்கு வந்து சேரவேண்டியது தான்.
இது எல்லோருக்குமே தெரிந்த உண்மை. ஆனாலும், யார் சிறந்த நடிகர், யார் வசதி அதிகம் என்ற சுயநலப் போராட்டத்தில் தினம் தினம் மனதை யுத்த களமாக்கிக்கொண்டு வருகிறோம்.
அதனால் மனம் பொறாமை, அசூயை என்ற பேரிரைச்சலாலும், தூசுகளாலும் மாசடைந்து குன்றி மாய்கிறது. இதிலிருந்து விடுபடத்தான் தினமும் இறை வணக்கம் செலுத்தவேண்டியது கட்டாயமாகிறது. நம் உணர்வு களைக் கட்டுப்படுத்தும் மாயம் நிகழ அது ஒன்றே வழி. வாழும்போதே  சமரசம் காண வைக்கும் அற்புத வழி.

(பொறுப்பாசிரியர்)

பிரபுசங்கர்