இதுவும் கடந்து போகும்!



ஆயிரம் கிரணங்கள் நீட்டி
அணைக்கின்ற ஆதவா போற்றி!
ஆனந்தம் அருளும் அற்புத சூரியனே போற்றி!

என்னிடம் ஒரு தட்டு தரப்பட்டது. அதை நான் கையில் ஏந்தினேன். அந்தத் தட்டைக் கீழே வைக்கவுமில்லை, எந்த வகையிலும் பயன்படுத்தவுமில்லை. ஐந்து நிமிடத்திற்குப் பிறகு தட்டின் கனம் அதிகமாகத் தெரிந்தது. ஒரு மணி நேரம் அப்படியே பிடித்திருந்தபோது இன்னும் அதிகம் கனத்தது, கை வலித்தது. அரைநாள் முழுக்க அப்படியே நான் தாங்கியிருந்தபோது என் கைகள் மரத்துவிட்டன. அந்த அளவுக்குத் தட்டு கனமாக இருந்தது!உண்மையிலேயே தட்டின் கனம் நேரமாக ஆகக் கூடிக்கொண்டே போகுமா என்ன?

இல்லை. பிறகு ஏன் என் கை முதலில் வலித்து, நேரமாக ஆக மரத்துப் போனது?
சும்மா பிடித்துக்கொண்டிருந்ததால்தான்! சும்மா சுமந்து கொண்டேயிருந்ததால்தான்.நம் வாழ்க்கையும் சில சமயம் பெருஞ்சுமையாகத் தோன்றவும் இந்தத் தத்துவம்தான் காரணம். ஆமாம், அனாவசியமாக நாம் பிரச்னைகளை சுமந்து கொண்டிருக்கிறோம். அதனைக் கீழே இறக்கி வைக்கத் தெரியவில்லை அல்லது அந்தப் பிரச்னையை எப்படி திசை திருப்புவது என்றும் தெரியவில்லை. சும்மாவானும் அதை மனதிலும், மூளையிலும் சுமக்கிறோமா, வாழ்க்கையே மரத்துப் போய்விடுகிறது!

‘இதுவும் கடந்து போகும்’ என்று ஒரு சொலவடை உண்டு. பிரச்னை என்று வந்தால் அதிலேயே மூழ்கிவிடாமல், அதிலிருந்து மீள வேண்டிய உத்தியை ஆராய்வது, அப்படி எந்த உத்தியும் கிடைக்காவிட்டால், அந்தப் பிரச்னை தானாக சரியாகும் என்று அமைதியாக இருந்துவிடுவது. ‘அதெப்படி அமைதியாக இருக்க முடியும்? என் பிரச்னையை நீங்கள் அனுபவித்தால் தெரியும்!’ என்று வாதிடலாம். ஒரு பிரச்னைக்கு உடனே தீர்வு காணமுடியவில்லையா, ‘எல்லாம் கடவுள் விட்ட வழி’ என்று இறைவனிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு அமைதியாக இருந்து பாருங்கள், நம்பிக்கையுடன் இருந்து பாருங்கள், பளிச்சென்று தீர்வு உங்கள் மனதுக்குத் தானே புலப்படும். அல்லது அந்தப் பிரச்னையே காணாமல் போய்விடும்!

(பொறுப்பாசிரியர்)

பிரபுசங்கர்