கடவுள் எப்போது வந்து உதவுவார்?



ஆயிரம் கிரணங்கள் நீட்டி
அணைக்கின்ற ஆதவா போற்றி!
ஆனந்தம் அருளும் அற்புத சூரியனே போற்றி!

பொதுவாகவே பலரும் இப்படி சலித்துக்கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம்: ‘அந்தக் கடவுளுக்குக் கண்ணில்லையோ? சரியான நேரத்தில் எனக்கு உதவ வரமாட்டேனென்கிறாரே!’ஆனால், ஒரு உண்மையை நாம் மறந்துவிடுகிறோம். நாம் எந்தத் துன்பத்தில் ஆழ்ந்திருந்தாலும் அதன் உச்சகட்டத்தில்தான் கடவுளையே நினைக்கிறோம். அதற்கு முன்னால் எல்லா பிரச்னைகளையும், எல்லா துன்பங்களையும் நம்மாலேயே தீர்த்துக்கொள்ள முடியும் என்று நாம் கற்பனை செய்துகொண்டு அதற்கான வழிகளில் ஈடுபடுகிறோம்.

பிரச்னை முற்றும்போது, நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்று நாமே உணரும்போதுதான் கடவுளை நினைக்கிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்தக் கடவுள் நமக்கு சரியான சமயத்தில் உதவவில்லை என்று உரிமையுடன் அவரைக் கடிந்துகொள்ளவும் செய்கிறோம்.

ஆழ்ந்து யோசித்துப் பார்த்தோமானால் கடவுள் சரியான நேரத்துக்குதான் வருகிறார்; நாம்தான் அவசரப்படுகிறோம். கடவுள் பார்த்துக்கொள்வார் என்று நாம் நிதானமாக, அமைதியாக சிந்தித்தோமானால், செயல்பட்டோமானால் அவர் நிச்சயம் பார்த்துக்கொள்வார் என்பது உறுதி.

 அதாவது, அந்த நம்முடைய நிதானம், குறிப்பிட்ட பிரச்னையிலிருந்து மீள்வது எப்படி என்ற படிப்பினையை, ஊக்கத்தை, மாற்றுச் சிந்தனையை நமக்குள் உருவாக்கும். இதை ஆரம்பத்திலேயே நாம் பயின்றோமானால், எந்த பிரச்னைக்கும் ஆரம்பத்திலேயே கடவுள் நம்முடன்தான் இருக்கிறார்; நம்மைக் கைத்தாங்கலாக வழிநடத்துகிறார் என்ற உண்மையைப் புரிந்துகொள்ளவும் முடியும்.

தன் சொந்த முயற்சியால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள திரௌபதி செயல்பட்டபோது அவளுக்கு கிடைக்காத கடவுளின் கருணை, அவரை அவள் முற்றிலுமாக சரணடைந்தபோது கிட்டியது. தன் பலத்தால் முதலையின் பிடியிலிருந்து விடுபடலாம் என்று கஜேந்திர யானை முயற்சித்து, தோல்வியுற்று, இறுதியாக ‘ஆதிமூலமே’ என்றழைத்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டது.

ஆகவே, பிரச்னைகளை கண்டு பயப்படக்கூடாது என்பது கடவுள் நம் காத்திருத்தலின்போது நமக்கு புகட்டும் ஆரம்பப் பாடம். நிதானமான அணுகுமுறை அந்தப் பிரச்னைக்கு ஆரம்பம் என்ன என்பதை நினைவுறுத்தும். அதில் நம் பங்கு என்ன என்பதையும் தெளிவுபடுத்தும். இப்போது அந்தப் பிரச்னையிலிருந்து விடுபட நல்ல வழி தெரியும். அதாவது, அப்போதுதான் கடவுள் உதவ வருகிறார்!