மெல்லப் பேசுவோம்



ஆயிரம் கிரணங்கள் நீட்டி
அணைக்கின்ற ஆதவா போற்றி!
ஆனந்தம் அருளும் அற்புத சூரியனே போற்றி!

இனிமையாகப் பேசுவது ஒரு நல்ல பழக்கம். இதனால் உண்டாகும் நன்மை, பெரும்பாலும் குரல் உயராமல் இருப்பதுதான். நடத்தையிலும், பழகும் முறையிலும் மென்மை கூடும். ‘இனிமையாகப் பேசுபவரால் காரமுள்ள மிளகாயை விற்க முடியும்; கடுமையாகப் பேசுபவரால் தேனைக்கூட விற்க முடியாது’ என்று ஒரு பழமொழியே உண்டு. உரத்த குரல், ‘சண்டைக்காரர்’ என்ற பட்டத்தை எளிதில் வழங்கிவிடும். வாக்குவாதம் முற்றக் காரணமே அதில் ஈடுபடும் இருவரின் குரலும் நேரம் ஆக ஆக உயர்ந்துவிடுவதால்தான்.

வாக்குவாதத்தில் அதற்குக் காரணமானவர் தம் தவறை ஒப்புக்கொள்ளாதது, அடுத்தவர் அவர் அப்படி உணரத்தான் வேண்டும் என்று எதிர்பார்ப்பது இரண்டுமே குரல் உயரக் காரணங்களாகிவிடுகின்றன; பின்விளைவுகளும் விபரீதமாகிவிடுகின்றன. இறைவனைத் துதிப்பதையும் மென்மையாகவே செய்தால் அதில் தெய்வீகம் மிளிரும். பிறர் தன்னுடைய பக்தியைக் கேட்டு மெச்ச வேண்டும் என்பதற்காக அப்படி உரத்தக் குரலில் துதிப்பார்களானால், அவர்கள் பெரும்பாலும் பாராட்டப்படுவதற்கு பதில், ஏளனத்துக்குள்ளாவதுதான் அதிகமாக இருக்கும்.

கோயிலில் சில பக்தர்கள் தமக்குத் தெரிந்த ஸ்லோகங்களை குரல் உயர்த்திப் பாடிக்கொண்டிருப்பார்கள். தாம் செய்யும் இந்த இறைசேவை மற்றவர்கள் காதுகளில் விழவேண்டும்; தம்மைப் பார்த்து புருவம் உயர்த்தவேண்டும் என்பது அந்த பக்தர்களின் எண்ணமாக இருக்கும்.

ஆனால், கோயில் என்ற பொது இடத்தில், கோயில் வழிபாட்டு முறைப்படி ஒலிப்பெருக்கியில் பாடல்கள் ஒலிப்பதோ, பிராகாரத்தில் சற்று ஓரமாக ஒதுங்கி ஓதுவார்கள் தேவாரம் முதலான இறைப் பாடல்களைப் பாடுவதோ நடக்கும். இந்த வகைகளைத் தவிர கோயிலுக்கு வரும் பக்தர்கள் அப்படி உரத்துப் பாடுவது பிறருடைய தெய்வீக சிந்தனையை பாதிப்பதாகவே அமையும்.

ஒரு பாடம் மனதில் பதிய வேண்டுமானால் உரத்துப் படிப்பதும், கேட்பதை காதால் கிரகித்துக்கொண்டு உரத்துத் திருப்பிச் சொல்லுவதும் ஒரு பழக்கமாக இருக்கலாம். ஆனால், மனதில் ஆழப்பதிந்த இறைப் பாடல்களை மெல்ல மெல்லக் குரல் இறக்கி, ஒரு கட்டத்தில் உதடுகள் அசையாமல் மனசுக்குள்ளேயே பாடப் பழகிக்கொள்வதுதான் சிறந்தது.

அதாவது, சுவாச இழையாக அந்தப் பாடல்கள், துதிகள், ஸ்லோகங்கள் எல்லாம் உள்ளே போய் வெளியே வரவேண்டும். இந்தக் கட்டத்தை அடைய பல வருடப் பழக்கங்கள் தேவை என்பதும் உண்மைதான். மெல்லப் பேசினால் அக்கம்பக்கத்தாரும், உடனிருப்போரும் நம்மை மிகுந்த மரியாதையோடு நடத்துவார்கள்; மெல்ல ஸ்லோகம் சொன்னால், இறைவனும் இர(ற)ங்கி வந்து செவிமடுப்பார்.

பிரபு சங்கர்
(பொறுப்பாசிரியர்)