ஸ்ரீ ராம தரிசனம்



கும்பகோணம் ராஜயோகம்  தரும் ராமஸ்வாமி

அது 1614ம் ஆண்டு. தமிழகம் தாண்டி ஈழம் வரை வெற்றிக் கொடியேற்றி விண்ணுயரப் புகழ் பெற்றிருந்த ரகுநாதநாயக்கரின் அகத்துள் பாற்கடல் அலைபோல ராமநாமம் எந்நேரமும் கொப்பளித்துக் கிடந்தது. ‘எம்பெரு மானுக்கோர் ஆலயம் எப்போது எடுப்பிப்பேன்’ எனும் தாபம் அலைகளை அடக்க முயற்சித்தது. அதேசமயம், குணக்குன்றாக விளங்கும் ராமனும் குடந்தையில் திடமாக அமர ஆவல் கொண்டார்.

ரகுநாதநாயக்கரை ஓர் அதிர்ச்சித் தகவல் தாக்கியது. ஜக்கராயன் என்பான் கல்லணையை சிதறடித்துக் கொண்டிருக்கிறான் என்றும், சோழ தேசத்தை சிதைத்து விடுவதாக அவன் மிரட்டிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வந்தன. ‘ராமப்பிரபுவே...’ என்று மனசுக்குள் அபயம் வேண்டினார். அமைதியாக அமர்ந்தார். தஞ்சையை தாக்குவதற்காக ஸ்ரீரங்கத்தில் தயாராக இருக்கும் கொப்பூரி ஜக்கராயன் பற்றி தளபதி சொல்லத் தொடங்கினார்.

   விஜயநகரப் பேரரசன் வேங்கடபதிராயரை முதுமை முழுமையாக ஆக்ரமித்தது. மெல்ல அவரை மரணப் படுக்கையில் சாய்த்தது. தம் மனைவியரை கண்கள் கலங்க பார்த்தபடி படுக்கையில் கிடந்தார். ‘அரசாள ஓர் ஆண் மகன் இல்லையே’ என வெதும்பினார். ‘மரணம் தன்னை மாய்ப்பதற்குள் அரண்மனை மாளிகைக்கு ஓர் அரசகுமாரன் வேண்டுமே’ எனும் கவலை இடைவிடாது நெஞ்சை அறுத்தது. மன்னவனின் மனைவியருள் பேரழகியான இளையவள் பாயம்மா, வேங்கடபதிராயரின் கவலையை புரிந்து கொண்டாள்.

ஆனால், அவள் சிந்தனையை அவ்வப்போது மேலும் கெடுத்துக் கொண்டு குறுக்கு வழி சொல்லும் அவளுடைய சகோதரனான கொப்பூரி ஜக்கராயன் இளவரசனுக்கு என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்தான். தமக்கையை அழைத்து காதருகே ஒரு ரகசியம் ஓதினான். ஊருக்குள் ஓர் அந்தண கர்ப்பவதி இருக்கிறாள் என்றும், அவளுக்குப் பிறந்த குழந்தையை நீ பெற்றதாக சொல்லிவிடலாம் என்றான்.

அதைக்கேட்ட அவளும் சந்தோஷமாகச் சிரித்தாள். தன் வயிற்றுப் பகுதியை பார்த்துக் கொண்டாள். நடை தளர்ந்து வேங்கடபதிராயரின் முன்பு நாணி நின்றாள். தலைதூக்கி தலைவன் பார்த்தபோது, கணவனிடம் வெட்கத்துடன் விஷயம் சொன்னாள். வேங்கடபதிராயர் ‘தனக்கொரு வாரிசா’ என்று தள்ளாடி எழுந்தார். பாயம்மாவை நோக்கி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். அவள் நகர்ந்ததும், ‘எனக்கா... மகனா..! ராமா இதென்ன லீலை’ என வியந்தார்.

வேங்கடபதிராயரை நோக்கி ஸ்ரீராமர் கருணை கொண்டார். தம் பெயர் கொண்ட ஓர் அரசகுமாரனின் மீது தன் அமுதப் பார்வையை வீசினார். அது வேறு யாருமல்ல வேங்கடபதிராயரின் சகோதரரான ஸ்ரீரங்கனின் இரண்டாவது மகனேயாகும். எம்பெருமான் அருளால் அவன் பெயரும் ‘ஸ்ரீராமன்’ என்றே அமைந்திருந்தது.  ஸ்ரீராம சக்தி அவனை முழுவதுமாக ஆட்கொண்டது.
அந்தணப் பெண், குழந்தையைப் பெற்றாள். ஜக்கராயன் குழந்தையை பறித்துக் கொண்டான். நிறை மாத கர்ப்பிணியாக நடித்திருந்த தன் சகோதரியிடம் ரகசியமாக  சேர்ப்பித்தான்.

பாயம்மாவிற்கு குழந்தை பிறந்துவிட்டது என்று ஊர் முழுவதும் நம்பியது. ஜக்கராயன் குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு  வேங்கடபதிராயரிடம் சென்றான். ‘பாருங்கள் உங்கள் குலத் திலகத்தை’ என்றான். குழந்தையைப் பெருமையுடன் பார்த்தார். பாயம்மாவுக்குப் பொன்னும், பொருளும் வாரி வாரி அளித்தார். அமைதியாக நின்று பொய்ப் பணிவு காட்டினான். ஆனால், மாமன்னரின் அருகேயே நின்றிருந்த அவருடைய சகோதரரான சிக்கதேவ ராயன் எனும் ஸ்ரீரங்கனை கோபத்தோடு அடிக்கடி பார்த்தபடி இருந்தான். அப்போது யாரும் எதிர் பாராவண்ணம் வேங்கடபதியார் தனது அரச மோதிரத்தை கழற்றினார்.

அதைப் பார்த்த ஜக்கராயன் ஆவலுடன் குழந்தையை தூக்கிப் பிடித்தான். வேங்கடபதிராயர் ஜக்கராயனைப் பார்த்துச் சிரித்தார். அந்தப் பார்வை நான் ஏமாறமாட்டேன் என்பதுபோல இருந்தது. அருகே நின்றிருந்த தன் சகோதரரான ஸ்ரீரங்கனின் மகனான ஸ்ரீராமனின் கைகளைப் பிடித்து மோதிரத்தை அணிவித்தார். எனக்குப்பிறகு என் சகோதரனின் மகன் இவனே ஆளட்டும் என்றார். ஜக்கராயன் அதிர்ந்தான். நிலைகொள்ளாது தவித்தான். வேங்கடபதிராயர் அன்றிரவு நிம்மதியாகத் தூங்கினார். ஆனால், இரண்டு நாட்களுக்குள் பரமபதம் ஏவினார்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட ஜக்கராயன், வேங்கடபதிராயனின் சகோதரரான ஸ்ரீரங்கனின் குடும்பத்தை சிறை பிடித்தான். அவர்களில் ஸ்ரீராமன் எனும் பன்னிரெண்டு வயது பாலகன் எதுவும் புரியாது விழித்தான். ஆனாலும், ராமபிரானின் விழி அம்பு அமுதமாக அப்பாலகனை நோக்கியே இருந்தது. ஜக்கராயன் பெரும் பேரரசைக் கைப்பற்றினான். முன்னரே தனக்குச் சாதகமாக மாறியிருந்த அனைவருக்கும் பதவி கொடுத்தான். நாட்டில் ஜக்கராயனின் அநீதியை பொறுக்காத உண்மையான ராஜ விசுவாசிகள் யாசமநாயக்கர் எனும் குறுநில மன்னனின் கீழ் படையாக ஒன்றாகத் திரண்டனர். எப்படியேனும் ஸ்ரீரங்கனின் ராஜ குடும்பத்தை அரியணையில் அமர வைக்க வேண்டும் என்று வெறி கொண்டிருந்தனர். 

மறுநாள், துணி துவைக்கும் தொழிலாளியாக ஒருவன் வேடமிட்டான். ஸ்ரீரங்கனின் இரண்டாம் மகனான ஸ்ரீராமனை துணியோடு துணியாக சுற்றி வெளியே கொண்டு வந்துவிட்டான். ஜக்கராயனின் காதுக்கு இந்த செய்தி சென்றது. நீண்ட வாளை எடுத்துக் கொண்டான். ஸ்ரீரங்கராயர், பதினேழு வயதான அவன் மூத்த மகன், மனைவி, இரண்டாவது மகன் ஆகியோரை வாளால் துண்டு துண்டாகச் சிதைத்தான். யாசமநாயக்கன் எப்படியாவது ஸ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்து விடுவான் என்று பயந்தான். யாசம நாயக்கனையும், ஸ்ரீராமனையும் ஒழித்துக்கட்ட வேண்டுமென்று படை திரட்டினான். செஞ்சி கிருஷ்ணப்ப நாயக் கரையும், மதுரை வீரப்ப நாயக்கரையும் தமக்கு உதவ கேட்டுக்கொண்டான்.

பெரும் படையோடு திரிசிரபுரம் எனும் இன்றைய திருச்சிக்கு வந்தமர்ந்தான். இறை சக்தி கோவிந்த தீட்சிதர் எனும் மகானின் வடிவத்தில் விஜயநகர இளவலான ஸ்ரீராமனுக்கு துணை வந்தது. யாசமநாயக்கருக்கு ஆதரவாக நின்றார். ஜக்கராயனின் கொடுங் கோன்மையான குணத்தையும், அவன் கொன்று போட்ட ஸ்ரீரங்கராயர் குடும்பத்தைப் பற்றியும் ரகுநாதநாயக்கரின் தந்தையான அச்சுதப்ப நாயக்கரிடம் சொன்னார். அச்சுதப்பநாயக்கர் தனது மகன் ரகுநாதனிடம் இவ்விஷயத்தைக் கூற எத்தனிக்கும் வேளையில், ஜக்கராயன் ஒற்றர்கள் மூலம், அச்சுதப்பநாயக்கர், யாசமநாயக்கர் - ஸ்ரீராமனின் பக்கம் நிற்கிறார் என்று அறிந்தான். உடனேயே  கல்லணையைக் குறிவைத்து அடித்தான்.

சோழ தேசம் தன்னைக் கண்டு மிரளட்டும் என்று எதிர்த்து நின்றான். ஜக்கராயனின் தந்திரத்தையும், கொடுங்கோன் மையையும் அறிந்த ரகுநாத நாயக்கர், பெரும் படையோடு அதிவேகமாக கல்லணையை நெருங்கினார். அருகேயுள்ள காவிரியின் தென்கரையிலுள்ள பழமார்நேரியை அடைந்தார். அங்கிருந்து தோப்பூரை நோக்கி முன்னேறினார். தற்போது அது தோகூர் என்றழைக்கப்படுகிறது. ராமபத்ரன் எனும் தமது பட்டத்து யானையின் மீது அமர்ந்து, தனது படையுடன் ஜக்கராயனை தேடி, ரகுநாத நாயக்கர் அவனை வெட்டி இருகூறாக் கினார்.

செஞ்சி மற்றும் மதுரை நாயக்கர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்தார். ராமச்சந்திரமூர்த்தி அவனது அகத்துள் தூக்கியிருந்த கோதண்டத்தை மெல்ல கீழே வைத்தார். அக்காட்சி அவனை பரவசப்படுத்தியது. பட்டாபிஷேகக் காட்சியில் வெற்றிக் களிப்போடு மட்டுமல்லாமல், எம் பெருமான் அமர்ந்த கோலத்தில் காட்சியளித்தது அவனுக்குக் களிப்பூட்டியது.

யாசமநாயக்கரும், ஸ்ரீராமன் எனும் விஜயநகரப்பேரரசின் குலக் கொழுந்தும் கும்பகோணத்திற்குச் சென்றனர். ரகுநாதநாயக்கர் அவ்விருவரையும் எதிர் கொண்டு அழைத்தார். ஊரார் சிலிர்த்தனர். அந்தப் பன்னிரண்டு வயது பாலகனான ஸ்ரீராமனின் முகப்பொலிவும், பிரகாசமும் பார்த்து அதிசயித்தனர். குடந்தையின் மையத்தே ஸ்ரீராமனுக்கு பட்டாபி ஷேகம் செய்து விஜயநகர அரசனாக, ஸ்ரீராமராயராக அரியணை ஏற்றினர். ரகுநாத நாயக்கர் தன் இதயத்தில்  ராமராகவனுக்கே பட்டாபிஷேகம் செய்வது போல பாவித்தார். ராமதாசனான ஆஞ்ச நேயரைப் போன்று தன்னை நினைத்துக் கொண்டார். மகாகவியும், சிறந்த இசை விற் பன்னனுமான அவர் தன் கைகளில் வீணையை ஏந்தினார். பட்டாபி ஷேகத்தன்று ராம கீர்த்தனத்தை நெக்குருக, கண்களில் நீர் பெருக இடையறாது பாடினார். சங்கீதசுதா என்று மிகச்சிறந்த இசை நூலை எழுதியவனல்லவா அவன்!

‘குடந்தையாம் கும்பகோண அற்புதத் தலத்தில் என் ராகவன் ராமனுக்கோர் பெரிய கோயில் எடுப்பிப்பேன்’ என்றார். எந்த இடத்தில் விஜயநகர வாரிசான ஸ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் நடந்ததோ, அத்தலத்திலேயே ஒரு பெருங்கோயிலை பார்த்துப் பார்த்து கட்டினார். தனக்குள் அக்னியாக தகித்துக் கொண்டிருந்த ராம பக்தியையும், சிலிர்த்து சிருங்காரமாக தண்ணிலவாக திகழ்ந்த கலைத் திறத்தையும் இத்தலத்தில் அப்படியே அர்ப்பணித்து கோபுரமாக்கினான்.

யுகங்களாக புராணப் பெருமை கொண்டது கும்பகோணம். அதில் ரத்தினமாக ஒளிர்கிறது ராமஸ்வாமி திருக்கோயில். புராணத்திற்கு இணையாக நானூறு ஆண்டு களுக்கு முன்பு சரித்திரப் பின்னணி யில், பெரும் போர்ச் சூழலின் நிறைவாக எழுப்பப்பட்டது. ராஜ பக்தியில் விளைந்த ஞானப் பிரானின் கருணை கருவூலமே இந்த ராமஸ்வாமி திருக்கோயில். அவர் ஆசையாக, அழகாக கட்டிய இக்கோயில் எப்படித்தான் இருக்கிறது? கும்பகோணத்தின் மையமாக அமைந்துள்ளது ஸ்ரீராமஸ்வாமி கோயில். ராஜகோபுரம் நெடிதுயர்ந்து ராமநாம முத்திரையுடன் வரவேற்கிறது. மகாமண்டபத்திற்குள் நுழைந்தவுடன் மாபெரும் எழில் சூழ் சிற்பச் சோலைகளும் எதிர்கொள்கின்றன.

சிற்பக் கலையில் இதற்கு மிஞ்சி வேறெதுவும் செய்ய முடியுமா என்று சவால் விட்டிருக்கிறார்கள். கற்கள் பேசுமோ என்றவருக்கு இக்கோயிலில் கற்களைக் கொண்டு காவியம் படைத்திருக்கிறார்கள். ரகுநாதநாயக்கர் தமது துணைவியரோடு எப்போதும் ராமனை பணிவாக வணங்கி நிற்கும் சிற்பம் காண, நமக்கும் அவனை வணங்கத் தோன்றும். சுக்ரீவ பட்டாபிஷேக புடைப்புச் சிற்பம் காணும்போது விழி விரியும். திருவிக்கிரமனாக நிமிர்ந்த எம்பெருமானின் சிற்பம் முன்பு நிற்க, பிரமாண்ட சக்தியின் முன்பு சிறு தூசாக மனம் உணரும். ராம பட்டாபிஷேகத் தைப் பார்க்க அகமும், புறமும் மறைந்து வெறும் ராம சாந்நித் தியம் மட்டுமே இங்கிருக்கிறது எனும் பேருண்மை தெரிய வரும்.

ஆஞ்சநேய ஸ்வாமியை விதம் விதமான சிற்பங்களில், பல்வேறு பக்தி பாவனைகளுடன் காட்டி யிருக்கிறார்கள். பாரதத்தின் பெருமை கூறும் ரிஷிகளின் திருவுருவங்களை நூற்றுக் கணக்கில் கற்சிலைகளாக வடித்திருக்கிறார்கள். முனிவர் களின் முகத்தில் தவழும் அமைதி, நமக்குள்ளும் பரவிடச் செய்யும் வித்தையை அனுபவித்து சிலிர்க்கலாம். ஒன்றா, இரண்டா, நூறா, ஆயிரமா... எத்தனை என்று எண்ணி மாளவில்லை. இது பக்தியா, கலைத்திறனா என்று பிரித்துப் பார்க்க இயல வில்லை. இந்தச் சிற்பம் அழகு,  அந்தச் சிற்பம் எவ்வளவு நேர்த்தி என்று ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து,  பிரமிப்பில் அயர்ந்து போகிறது. வர்ணிக்க வார்த்தைகளைத் தேடித் தேடி தவித்து, அமைதியாகிறது.

ஆனால், ஒன்று மட்டும் உண்மை. இது, தெய்வம் தானே தமக்காக கட்டிக்கொண்ட கோயில்; தானே விரும்பி அமர்ந்த திருத்தலம் என்று எண்ணி மனம் விம்முகிறது.சிற்ப சோலைகளைத் தாண்டி நேரே கருவறை நோக்கி நகரும்போது பச்சைக் கற்பூரத்தின் மணமும், துளசியின் வாசமும் நெஞ்சை குளிர்விக்க, குங்குமத்தின் சுகந்தம் மனதை சுழற்றுகிறது. மூலஸ்தானத்தில் ராமச்சந்திர மூர்த்தி, தன் சிம்மாசனத்திலேயே சீதா பிராட்டிக்கும் இடம் கொடுத்து, ராஜ்ய பரிபாலன திருக்கோலத்தில், சாளக்கிராம திருமேனியாக சேவை சாதிக்கிறார். ராஜகம்பீரத் தோற்றம். இடது  காலை மடக்கி மற்றொரு காலை பூமியில் தொங்கவிட்டிருக்கும் அழகு காணுதற்கரியது. நீருண்ட மேகம் போன்ற நிறம். ஞானச் சூரியனின் கிரணங்களால் ஒளிரும் தெள்ளிய திருமுகம். தாமரை போன்ற மலர்ந்த கண்கள் அருட்சாரலைப் பொழிகின்றன. கூரிய நாசி. செவ்விதழ்கள்.

அதன் ஓரமாகத் தவழும் பேரானந்தப் புன்னகை. கைகள் அபயஹஸ்தம் காட்டி ‘எப்போதும் காப்பேன்’ என்கிறது. சீதா பிராட்டியார் அருளமுதம் பெருக்கி ஸ்ரீராமனிடம் விநயமாக நம் குறைகளை எடுத்துக் கூறுகிறார். நிறைவான வாழ்க்கையை வாரித் தருகிறார். அருகேயே சத்ருக்னன், அண்ணலுக்கு வெண்சாமரம் வீசும் காட்சி வேறெங்கும் காணக் கிடைக்காத அற்புதம்.
லஷ்மணாழ்வார் ஸ்ரீராமரின் கோதண்டத்தை கையில் ஏந்திக்கொண்டு, அஞ்சலி ஹஸ்தமாக கை கூப்பியபடி நிற்பதைப் பார்க்கும்போது மனசு நெகிழ்ந்து போகிறது. அவருக்குப் பக்கத்திலேயே பரதாழ்வார் வெண்குடை சமர்ப்பித்துக் கொண்டு நிற் கும் காட்சியைக் காண கண் கோடி வேண்டும். எல்லோரையும் தாண்டி, அனைத்தையும் ராம சொரூபமாக பார்க்கும்,

ராம சேவகன், ராம தாசன், ஆஞ்சநேய ஸ்வாமி இத்தலத்தில் ஆச்சரியமான முறையில் சேவை சாதிக்கிறார். கைகளில் வீணை ஏந்தி, சதாகாலமும் ராமகாவியச் சுவடியை பாராயணம் செய்து கொண்டிருக்கும் கோலம் காணக் கிடைக்காது. அக்காட்சியை காணும் போது கண்களில் கண்ணீர் தானாக சுரக்கும். அங்கேயே உற்சவ மூர்த்திகள் பொலிவுடன் காட்சி தருகின்றனர். அந்த சந்நதியில் மனம் அப்படியே கரைந்து போகிறது. அயோத்திக்கே சென்று விட்ட ஓர் உணர்வு சூழ்கிறது. எம்பெருமானுக்கு நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம் ‘ராம... ராம... ராம...’ எனும் திவ்ய நாமத்தை விடாமல் சொல்வதேயாகும். இதுவே சகல சம்பத்தையும் கொண்டு வந்து சேர்க்கும் என்பது வேத ரிஷிகளின் வாக்கு.

சமீபத்தில் தோன்றிய மகானான ‘ராமாயணம் தாத்தா’ என்று அழைக்கப்பட்டவர் இத்தல ராமனை கண்ணாரக் கண்டவர். இத்தல ராமனிடம் தான் தீட்சை பெற்றார். ராமாயண பாராயணம் செய்து ராம மயமானார். சதாசர்வ காலமும் ராம காதையை உள்ளத்தில் நெய்து நெய்து நெக்குருகிக் கிடந்தவர். ராமரோடும், பிராட்டியோடும் சகஜமாகப் பேசியவர். சந்தேகித் தோருக்கெல்லாம் ராமரை நேரில் காட்டியவர். ஆன்ம அனுபவத்தில் நம்மாழ்வாரை நிகர்த்தவர். இத்தல நாயகனை கொண்டாடியவர்.

அவரையும் மனதில் நினைந்து நகர மனமின்றி பிராகாரம் நோக்கிச் செல்கிறோம். பிராகாரச் சுற்றுச் சுவரில் வேறெந்த கோயிலிலு மில்லாத அளவுக்கு ராமாயணத்தை மிக அழகிய சித்திரங்களாகத் தீட்டியுள்ளனர். நாயக்கர் கால பாணியில் வரைந்த ஓவியங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. தூரிகை சித்திரங்கள் ராமகாதையை அழகாகச் சொல்கின்றன. ராமாயணமா அல்லது ராம ஆரண்யமா என்று பிரமிக்க வைக்கின்றன. இதைப் பார்த்தாலே போதும் ராமாயண பாராயண பலன் நமக்குக் கிடைத்துவிடும்.

பெரிய கோயில். நின்று நிதானமாக தரிசிக்க வேண்டிய ஆன்மிகக் கருவூலம். பார்க்கப் பார்க்க ஆயிரம் விஷயங்களை அள்ளித்தரும் கோயில். வெறுமே ராமநாமத்தைச் சொல்லுங்கள், இத்தல ராமர் உங்களை அழைப்பார். பிராகாரத்தைச் சுற்றி வந்து நமஸ்கரித்து நிமிர, ராமனின் அருட்பாணம் நம்மை மென்மையாகத் துளைத்துச் செல்வதை சிலிர்ப்புடன் உணரலாம்.

 கிருஷ்ணா
படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்