ஸ்ரீ ராம தரிசனம் திருநின்றவூர் அம்பு ஏந்திய இளவல்



திருநின்றவூர் திருக்கோயிலில் வருண புஷ்கரணியின் தற்போதைய நிலை கண்ணீரை வரவழைத்தது ஒரு பக்கம் என்றால், பக்தவத்சலனை தரிசித்தவர்கள், அருகிலேயே இருக்கும் ராமரைப் புறக்கணிப்பதும் வருத்தம் கொள்ள வைப்பதுதான். பக்தவத்சலன் கோயிலிலிருந்து சுமார் இருநூறு காலடி தொலைவில் ஏரிகாத்த ராமர் கோயில் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டின் ஏழாவது பெரிய ஏரி என்றும் சுற்று வட்டாரத்தில் சுமார் 16 கிராமங்களுக்கு நீர்த் தேவையை இந்த ஏரி பூர்த்தி செய்கிறது என்றும் தெரிய வருகிறது.

மக்களின் நன்மைக்காக இன்றும் இந்த ஏரிப் பகுதியை யாரும் ஆக்ரமித்து விடவோ, ஆர்ஜிதம் செய்துவிடவோ கூடாது என்பதற்காகவே ராமர் இதனைக் காத்து வருகிறாராம்! ஏரிக்கு நடுவே இருக்கும் நாலுகால் மண்டபத்தில் அவர் தெப்போற்சவமாகச் சென்று அருள்பாலித்த நாட்கள் நினைவுத் திரையிலிருந்து மறைந்து வருகின்றன. இப்போது அந்த மண்டபத்தில் புற்களும் செடிகளும் மண்டிக் கிடக்கின்றன. கரையோரமாக ஏரியைப் பலர் பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர, இந்த மண்டபத்தை யாரும் எட்டியும் பார்ப்பதில்லை என்றே தோன்றுகிறது.

ஆனால், ராமர் கம்பீரமாக சுமார் எட்டு அடி உயரத்துக்கு சீதை, லட்சுமணருடன் எழுந்தருளி, அருள் வழங்குவதை மட்டும் சுருக்கிக் கொண்டு விடாமல் இருக்கிறார். இங்கே ஏரி காக்கும் ஏந்தலுக்கு உறுதுணையாக லட்சுமணன், அம்பு ஏந்திய கைகளுடன் காட்சி தருவது நயமானது. தன் தமயன் எதிரிகளை, தம் பக்தர்களை இம்சிப்பவர்களை விரட்டுவதற்காக வில்லேந்தும்போது, அவரது உடனடித் தேவைக்காக கைகளில் அம்பு ஏந்தி காத்திருக்கும் கோலம். இந்தக் கோயிலின் உற்சவர் சிலைகள், பக்தவத்சலப் பெருமாள் கோயிலுக்குள் வைத்துப் பராமரிக்கப்படுகின்றன.

இந்த ராமர், பகவத் ராமானுஜரின் பெரிய சகோதரியான பூமிநாச்சியாருக்கு மகப்பேறு அருளியவர். அனந்த நாராயண தீட்சிதர்-பூமிநாச்சியார் தம்பதி தமக்குப் புத்திரப் பேறு வேண்டி திருமலைக்கு யாத்திரை புறப்பட்டனர். வழியில் இந்த ஏரிகாத்த ராமரின் ஆலயத்தில் தங்கினர். அப்போது அவர்கள் கனவில் தோன்றிய ராமன், அவர்கள் திருமலை செல்லும் சிரமத்தை மேற்கொள்ள வேண்டாம் என்றும் தன் அம்சமாகவே அவர்களுக்கு ஒரு புத்திரன் அமைவான் என்றும் அருளாசி வழங்கினார்.

அதுபோலவே அவதரித்த குழந்தை, முதலியாண்டான். இந்த ராமர் சந்நதிக்கு நேர் எதிரே தனியாக அனுமன் கோயில் கொண்டிருக்கிறார். தன் இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களின் நலனைப் பெரிதும் பாதுகாப்பவர் இவர். இவரைத் தவிர ராமர் சந்நதிக்கு இடது பக்கத்தில் சுமார் 3 அடி உயரத்திலும் ஓர் ஆஞ்சநேயர் தரிசனம் தருகிறார். இவர் காலடியில் ஓர் அரக்கி. இலங்கைக்குள் அனுமன் புக முடியாதபடி அவரைத் தடுக்க முயற்சித்து, பிறகு அவரால் வதம் செய்யப்பட்ட லங்கிணி எனும் அரக்கி. இவரது தோள்களில் ராம, லட்சுமணர். ராவணப் படைகளுடன் போரிட ஏதுவாக அவர்களை தம் தோளில் சுமந்த கோலம். ராமாயணத்தின் யுத்த காண்டத்தின் இரு சம்பவங்களை ஒரே சிலையில் வடித்து விளக்கியிருக்கிறார்கள்.

ராமருக்கு வலது பக்கத்தில் காளிங்க நர்த்தன கிருஷ்ணன். காளிங்கன் என்ற பாம்பு உருவ அசுரனை கிருஷ்ணன் வதைக்கும் இந்த சிற்பம், மனித மனதுக்குள்ளும் உருவாகக்கூடிய அரக்க உணர்வுகளை மாய்க்கும் என்ற தத்துவத்தை விளக்குகிறது.

இந்த இரு சிற்பங்களுமே தீயவற்றை தம் காலில் போட்டு மிதிப்பதாக நமக்கு மறைமுகமாகத் தெரிவிக்கின்றன. அதாவது, ராமரை சரணடைந்தால், இந்த ஆஞ்சநேயரும், கிருஷ்ணரும் நம் பகை விலக்கி, துயர் துடைத்து, நம்முடைய நல்வாழ்வுக்கு வழிகாட்டுவார்கள் என்பதை அவர்களை தரிசித்த மாத்திரத்திலேயே உணர முடிகிறது.  பொதுவாகவே பக்தவத்சலப் பெருமாளை சேவிப்பவர்கள், அருகிலேயே இந்த ராமர் இருப்பதை அறியாமலேயே போய்விடுகிறார்கள். ஆனால், பெருமாள் கோயிலில் கேட்டால், அங்கிருக்கும் பட்டர் இங்கு வந்து தரிசனம் செய்து வைக்கிறார்; அர்ச்சனை செய்து பிரசாதமும் தருகிறார்.

திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாளும் இந்த ஏரி காக்கும் ராமரும் இணையாக வழிபடப்பட வேண்டியவர்கள் என்கிறார்கள். பக்தர்கள் மீது வாத்ஸல்யம் பொழிகிறார் பெருமாள் என்றால், பக்தர்கள் தம் குடும்பம் எனும் படகில் வாழ்க்கை சாகரத்தில் எந்தப் புயலும் தாக்காதபடி பயணிக்கும் ஆதரவையும் ஆறுதலையும் அருள்கிறார் ஏரி காக்கும் ராமபிரான் எனலாம்.

சென்னை-திருவள்ளூர் மின்சார ரயில் பாதையில் திருநின்றவூர் ரயில் நிலையத்தில் இறங்கிக்கொண்டு, தெற்கு நோக்கிச் சென்றால் கோயிலை அடையலாம். சுமார் 2 கி.மீ. தொலைவு என்பதால் ரயில் நிலையத்தின் அருகிலிருந்தே ஆட்டோ அல்லது ஷேர் ஆட்டோ மூலம் செல்லலாம்.

ஒரு மணி நேரத்துக்கு ஒன்று என்ற கணக்கில் வரும் பேருந்திலும் போகலாம். சென்னையிலிருந்து சாலை வழியாக வருவோர் ஆவடியைக் கடந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் திருநின்றவூர் ஊருக்கு வந்து வடக்கே திரும்பிப் பயணித்தால் விரைவில் கோயிலைக் காணலாம்.

பி.எஸ்.