அட்சதை





மங்கல நிகழ்வுகளில் அட்சதை தூவி வாழ்த்தும் வழக்கம் நம்மிடம் உள்ளது. அட்சதை என்றால் குற்றப்படாததும், பழுதுபடாததுமான (நுனிமுறியாத) அரிசி, மஞ்சள்பொடி சேர்ந்த கலவை. அட்சதை எனும் வடமொழிச் சொல்லை ‘அறுகரிசி’ எனத் தமிழில் சொல்வர். கன்யாதானம், மங்கல நாண் பூட்டுதல், ஆசீர்வாதம் போன்ற முக்கிய திருமண நிகழ்வுகளின்போது அட்சதையைத் தூவி வாழ்த்துகிறோம்.

அட்சதை முழுமைத்துவத்தின் குறியீடாக விளங்குகிறது. அரிசியில் உள்ள முனை சந்ததி விருத்தியைக் குறிக்கின்றது. முழுப் பச்சை அரிசி செழிப்பிற்கான குறியீடாகும். மஞ்சள் மங்கலத்தின் வெளிப்பாடு.

சங்ககாலத்தில் நெல்லும் மலரும் தூவி ஆசிர்வதிக்கும் முறை நடைமுறையில் இருந்துள்ளது. தற்போதைய திருமணங்களில் தாலி கட்டுதலே முக்கிய நிகழ்வு. சங்ககாலத் திருமணங்களில் தலைவன் தலைவியின் கூந்தலில் பூச்சூடுதலே முக்கிய நிகழ்வு. அதன்பின் அட்சதை தூவி வாழ்த்துவது நடைபெறும். பெரியோர்கள் மணப்பெண்ணை வாழ்த்தும்போது ‘கற்பு ஒழுக்கத்தினின்று சிறுதும் வழுவாமல் நல்ல மனைவியாய் கணவனுக்கு பல உதவிகளைச் செய்து உன்னை மனைவியாகப் பெற்ற உனது கணவனை நீ பெரிதும் விரும்புகிறவள் ஆகுக’ எனக் கூறி பெண்ணின் கூந்தலின் மேல் நெல்லையும், மலர்களையும் தூவி வாழ்த்துவது நடைமுறையாக உள்ளது. ஆசார்ய பீடாதிபதிகள் அனைவரும் தம் பக்தர்களுக்குத் தரும் முக்கிய பிரசாதமாக அட்சதையே விளங்குகிறது. சோழர் காலத்தில் தோன்றிய கந்தபுராணத்தில் கூட வள்ளியம்மை முருகப்பெருமான் திருமணப் படலத்தில் ஆசீர்வாதத்திற்காக மலர்களையும், அறுகையும், அட்சதையையும் தூவியதாக கூறப்பட்டுள்ளது.

இதை கச்சியப்பர், ‘‘புல்லிய குறவர் மாதர் பொருவில் சீர் முருகன் தானும் வல்லியுமின்னே போல வைகலும் வாழ்க என்று சொல்லியல் ஆசி கூறித் தூமரறுகு தூர்த்தார்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.  
ஆசீர்வாதமாக அட்சதை இடும்போது சிரசு, தோள்கள், முழந்தாள்கள் ஆகிய பகுதிகளில் இடவேண்டும் என்போரும் உண்டு. இறைவனுக்கான உபசாரங்கள் பாதாதி கேசமாக செய்யப்படுதலே மரபு. ஆலயத்தில் தீபம் அர்ப்பணிக்கப்படும் போது பாதத்தில் இருந்து சிரசை நோக்கியே காட்டப்படுகிறது. திருமணத்தின் போது மணமக்கள் அம்மையப்ப வடிவமாகவும், திருமால்-திருமகள் வடிவமாகவும் பாவிக்கப்படுவதால் பாதாதி கேசமாகவே அட்சதையை இடவேண்டும் என சொல்வோரும் உண்டு. சில பிரிவினர்களில் காப்பு கழற்றிய பின்னரே ஆசிர்வாதம் மேற்கொள்ளப்படுகிறது. காப்பு அகற்றப்பட்ட பின் மணமக்களை வாழ்த்துவோர் வயதில் பெரியோரே. எனவே கேசாதி பாதமாக அட்சதை போட்டு ஆசிர்வதிப்பதே சரி என்போரும் உண்டு.

மகான்கள் சிலரை தரிசிக்கும்போது அவர்கள் அட்சதையைப் பிரசாதமாக வழங்குவார்கள். குருவருளுடன் அவ்வாறு வழங்கப்படும் அந்த அட்சதையை வீட்டில் பூஜையறையில் பாதுகாப்பாக வைத்துக்கொண்டால், பஞ்சம், பட்டினி என்ற குறை எதுவும் அந்தக் குடும்பத்தை அண்டாது என்பது நம்பிக்கை.
மங்கலப் பொருட்களில் ஒன்றாகக் கருதப்படும் அட்சதை இடம்பெறாத தேவ பூஜையே கிடையாது என்பதிலிருந்து அட்சதையின் மகிமை விளங்கும்.
- சிவகுருநாதன்