நவராத்திரி நாயகியர் பற்றி தேவி மகாத்மியம் சொல்வதென்ன?





நவராத்திரி ஒன்பது இரவுகளும் அம்பிகையை வணங்குகிறோம். கிட்டத்தட்ட பிரபஞ்சத்தையே பொம்மையுருவில் வைத்து கொலுவில் அமர்த்தி வழிபடுகிறோம். சிறு புல் முதல் பிரமாண்டமான டைனோசர் வரை கொலுவில் அடுக்கி ஆனந்தப்படுகிறோம். எல்லாமுமாக அவளே ஆகியிருப்பதை உணர்த்தும் பேருண்மையை வழிபாடாக நிகழ்த்துகிறோம். சகலமும் அவளின் சிருஷ்டி. அவளின் ஆளுமை. சர்வம் சக்தி மயம் என்கிற மாபெரும் மகாவாக் கியத்தின் அடிநாதமே நவராத்திரி வழிபாடு. அந்த மகாசக்தியை மூன்று அம்சங்களாக மகா காளி, மகாலக்ஷ்மி, மகாசரஸ்வதி என்று பகுதிப்படுத்தி வழிபடுகிறோம். ஒவ்வொரு தேவிக்கும் மும்மூன்று நாட்களாக ஒன்பது நாட்கள் கோலாகலம்.
நவராத்திரி, பொதுவாக விழாவாகவும், பக்தர்களுக்கு பண்டிகையாகவும், உபாசகர்களுக்கு தத்துவமாகவும் கொண்டாடப்படுகிறது. இவற்றிற்கெல்லாம் அடிப்படை தேவியின் மகாத்மியமே.  
அதென்ன தேவி மகாத்மியம்?

தேவி மகாத்மியம், மார்க்கண்டேய புராணத்தில் எழுநூறு மந்திரங்களாக விரிந்திருக்கிறது. துர்க்கையின் லீலைகளையும் மகிமைகளையும் சொல்லும் சரிதம். ‘துர்க்கா சப்த சதீ’ என்றே அழைப்பர். சப்த சதம் என்றால் எழுநூறு என்று பொருள். இந்த  துர்க்கா சப்த சதீயைத்தான் தேவி மகாத்மியம் என்கிறோம். தேவி மகாத்மிய மைய நாயகியை சண்டிகா என்பர். எழுநூறு மந்திரங்களும் அவளின் முழுத் திருவுருவாக விளங்குவதால் சண்டீ என்று போற்றுகின்றனர். நவராத்திரியின்போது தேவி மகாத்மியத்தை பாராயணமாகச் செய்வதும், அதையே சண்டீ ஹோமமாக நிகழ்த்துவதும் நெடுங்காலமாக வழக்கத்திலுள்ளது.



இந்த மகாத்மியத்தை மேதஸ் என்கிற மகாமுனிவர் சுரதன், சமாதி என்பவர்களுக்கு உரைத்தார்.
தன் ராஜ்யத்தை இழந்த சுரதன், தன்னைச் சார்ந்தவர்கள் தர்மம் விலகியவர்களாய், சுயநலமிகளாய் இருந்ததையும் கண்டு மனம் வெறுத்து கானகம் ஏகினான். அங்கே தன்னைப் போலவே வாழ்வில் விரக்தியடைந்த சமாதி என்ற வியாபாரியின் நட்பு கிடைத்தது. இருவரும் ஒரு குடிலை அடைந்தார்கள். மகா குருவும், ஞானியுமான மேதஸ் அவர்கள் இருவரின் பூர்வ கதைகளைப் பொறுமையோடு கேட்டார். இருவரும் தங்களுக்கு அவர் ஞானத்தின் துறையைக் காட்டுமாறு பணிந்து கேட்டுக்கொண்டனர்.

உடனே அவர், தேவி மகாத்மியத்தின் மூன்று முக்கிய நாயகியரான காளி, லட்சுமி, சரஸ்வதியின் வீர வைபவங்களை உரைக்கத் தொடங்கினார்.
அது பிரளய காலம். பராசக்தி அனைத்தையும் நீரால் கரைத்து நீரையும் தனக்குள் கரைத்து தானே சகலமுமாய் மாறி நிற்பாள். பிரம்மா தன் நான்கு சிரசுகளாய் விளங்கும் வேத அதிர்வுகளை அடுத்த பிரபஞ்சப் படைப்பில் பரவவிட்டார். இப்போது பராசக்தியின் பிரளயத் தாண்டவம் தன் உச்சியை எட்டியது. மகாசக்திக்குள் ஈசன், விஷ்ணு, பிரம்மா மூவரும் அடங்க, இப்போது பராசக்தி மட்டும் அனைத்துமாகி நின்றாள்.

ஊழிக் காலத்தில் எங்கும் ஒரே நீர் மயம். ஆதிசேஷத்தின் மீது விஷ்ணு நித்திரையில் ஆழ்ந்திருக்கிறார். சட்டென்று அவரின் செவிக் குள்ளிருந்து அழுக்கு போல இரண்டு அசுரர்கள் வெளிப்படுகிறார்கள். அவர்களின் பார்வை நாபியின் மீதிருக்கும் பிரம்மாவின் மீது திரும்பியது. ‘‘நாங்கள் மதுகைடபர்கள். மகாவிஷ்ணுவின் நாபிக் கமலத்தில் அமரும் தகுதி இனி எங்களுக்குத்தான்’’ என்று அந்த பிரளய காலத்தில் தப்பிப் பிழைத்த அசுரர்கள் பிரம்மாவை மிரட்டினர்.


பிரம்மா பயப்படவில்லை என்றாலும் பிரளய காலத்தில் அசுரர்களால் வதம் செய்யப்பட்டார். அந்த இறுதி கட்டத்திலும்  அற்புதமான துதிகளால் காளியை துதித்தார். உடனே அவள் ஆவிர்பவித்தாள்.
பேரூழியிலுள்ள காரிருளையும் விட கன்னங் கரியவளாக விளங்கினாள். மிக விசித்திரமான பத்து முகங்கள். பத்து கைகள். பத்து பாதங்கள். மூன்று நயனங்கள். வலப்பு கீழ்க் கரத்திலிருந்து தொடங்கி இடது புறக் கீழ்க்கரம் வரையில் தனது பத்து கரங்களிலும் கத்தி, அம்பு, கதை, சூலம், சக்கரம், சங்கம், புசுண்டி என்கிற கவண், குண்டாந்தடி, வில், குருதி கொட்டும் தலையை தரித்திருந்தாள். தெற்றுப் பற்களோடு அட்டகாசமாக சிரித்தாள்.

‘‘மகாகாளி, மகாவிஷ்ணுவே நித்திரை கலைந்து இவர்களை வதைத்து தம்மிடமே சேர்த்துக் கொள்ளத் தாங்கள் அருள் புரிய வேண்டும்’’ என்று இரைஞ்சினார். இப்படி வேண்டிக்கொண்ட அந்தக் கணமே தாமஸீ எனும் தேவதை விஷ்ணுவை விட்டு விலகினாள். விஷ்ணுவும் யோக நித்திரையிலிருந்து எழுந்து அந்தக் கணமே மது-கைடபருடன் மாபெரும் போர் தொடுத்தார். ஆனால் அவர்களுக்கு நீரில் இருக்கும் வரை மரணம் சம்பவிக்காது என்ற உண்மை தெரிந்து மகாவிஷ்ணு தீவிரமாக பராசக்தியை நோக்கி தவம் செய்தார். சட்டென்று பேருருவம் கொண்டார். அகன்றிருந்த தனது திருத்தொடைகளை நீட்டினார். அவை அப்படியே கெட்டிப்பட்ட பூமியாக இருந்தன. அந்த பூமிப் பகுதியில் மதுவையும் கைடபனையும் தூக்கி வைத்துக் கொண்டார். அவர்களின் தலைகளை நோக்கி சக்ராயு தத்தை பிரயோகித்தார். இருவரும் தம் அசுர குணங்கள் அழிந்து மீண்டும் விஷ்ணுவின் மூலத்திற்கு சென்று ஒடுங்கினர்.



மது-கைடபர் வேறு யாருமல்ல. பிரளயத்தின் போது கூட ஒடுங்க மறுத்த அதர்மங்கள்தான். சிற்றின்ப வாசனைகளின் வடிவமே மது. மனிதனை அவனுக்கான தர்மத்தை மறக்கச் செய்து வெறும் புழு (கீடம்) போல அவனை மாற்றி ‘ப’ என்கிற மனிதனாகக் காட்டுகிற ‘கீட - ப’ மான துன்ப நுகர்ச்சியே கைடபன். மது  - கைடபரின் ரகசியத் தூண்டுதலால்தான் மனிதர்கள் பாவம் புரிகிறார்கள். இப்படி பிரளய காலத்திலும் கூட கர்ம வாசனைகள் அசுரர்களாக அலையும்போது அதை அழித்து மூலத்திற்கு கொண்டு செல்பவள்தான் காளி.  

அடுத்து மேதஸ் முனிவர் மான்மியத்தின் மத்திய சரித நாயகியான லட்சுமியின் வீரமும் ஞானமுமிக்க வைபவங்களை கூறத் தொடங்கினார்.  
அசுர சகோதரர்களான கரம்பனும், ரம்பனும் தவம் மேற்கொள்ளப் போகிறார்கள் என்று செவியுற்றபோது தேவர்கள் மிரண்டு போயினர். கரம்பன், ஜலஸ்தம்பனம் என்றழைக்கப்படும் நீரின் சக்தியை தன் வசமாக்கும் வித்தையால் மூச்சை நிறுத்தி நீருக்குள் நெடுநேரம் ஜீவிக்கும் தன்மையை தன்வயமாக்கினான். சகோதரன் ரம்பன் மேகம் முட்டும் உயரத்திற்கு அக்னியை மூட்டி, ஒற்றைக் காலில் நின்று மனதை ஒருமையாக்கி தீக்கடவுளை சித்தத்தில் நிறுத்தி, தீக்குள் தீயாகி மறையும் ஆற்றல் பெற்றான்.

அசுரர்கள் மும்மூர்த்திகளிடமிருந்து வரம் கோருவதில் சமர்த்தர்கள். அதைத் தடுக்க வேண்டும். உடனே இந்திரன் முதலை உருவில் நீருக்குள் நுழைந்தான். கரம்பனின் காலைக் கவ்வினான். கபளீகரம் செய்தான். சகோதரனின் மரண ஓலத்தை கேட்டு ரம்பன் புரண்டு புரண்டு அழுதான். தன்னைச் சுடாத அக்னியிடம் புலம்பினான். அவர் அருளால், இந்திரனை வீழ்த்தும் வியூகத்தை அமைத்தான். ஒரு எருதாக உருமாறினான். ஒரு பெண்ணெருமையை இணையாக்கிக் கொண்டான். ஆனால், இன்னொரு எருது ரம்பனை கொம்பால் குத்த, ரம்பன் சரிந்தான். தம் தலைவனை அசுர ஜனங்கள் சிதையில் வைத்து தீ மூட்டினர். ரம்பனுடன் இணைந்த பெண் காட்டெருமை பதிவிரதை போன்று தீப்பாய்ந்தது. இதை அசுரர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பெண்ணெருமை பாய்ந்த வேகத்தில் அதற்குள்ளிருந்து எருமைத் தலையோடும், மானுட உடலோடும் அதீத சக்தி பொங்க ஒருவன் வெளிவந்து விழுந்தான்.

அசுரக் கூட்டம் புதியவனை ஆரத்தழுவியது. 'மகிஷன்' என பெயர் சூட்டி மகிழ்ந்தது. தந்தையின் அவாவை மகிஷன் நிறைவேற்றத் துடித்தான். எருமைபோல் சோம்பியிருக்காது 'போர்... போர்' என தேவர்களை எதிர்கொண்டான். முழு வலிமையோடு அவன் இறங்க, தேவப் படை சிதறி ஓடியது. ஆனால், மீண்டும் வந்து போருக்கு நின்றது. இதைப் பார்த்த மகிஷன் கலங்கினான். மரணமே இல்லாததால்தான் அவர்கள் வெல்லமுடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தான்.
தன் தந்தையின் நினைவு சட்டென்று நெஞ்சில் நிழலாட, அவரின் தபோ பலத்தாலேயே தான் உருவாகி யுள்ளோம் என்று எண்ணம் உதித்தது. உடனே பிரம்மனை நோக்கி உக்கிரத் தவ மியற்றினான். பிரம்மனும் பிரசன்னமானார். 'எனக்கு மரணம் வராதிருக்க வேண்டும்’ என்று அவன் கேட்க, ‘‘ஒரு பெண்ணால் தவிர வேறு யாராலும் எனக்கு மரணம் நேரக்கூடாது'' எனக் கேட்டான். பிரம்மன் வரம் தந்தார்.    



மகிஷனின் முழுக் கூட்டமும் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் ஈடுபட்டது. தேவலோகத்தை அநாயாசமாக அசுரலோகமாக்கிக் கொண்டது. மானிடர்களும், அந்தணர்களும் இருண்டனர். இந்திரன் தளர்ந்துபோய் தனது குருவான வியாழ பகவான் எனும் பிரஹஸ்பதியின் பாதத்தைச் சரணடைந்தான்.
குரு தேவர்களின் நிலையினை எண்ணி வருந்தினார். "பராசக்தியிடம் பாரம் கொடுத்துவிடு. பிரம்மன் அளித்த வரம் குறித்து திருமாலிடம் சொல். ஈசனின் தாள் பணிந்து உருகு’’ என்று அறிவுரை கூறினார், பிரகஸ்பதி. உடனே பரமேஸ்வரன், மகாவிஷ்ணுவின் பாதங்களில் சகல தேவர்களும் போய் வீழ்ந்தனர்.

ஈசனும், மகாவிஷ்ணுவும் கண்களில் கனல் பொங்க கோபாவேசத்தோடு தவம் செய்தனர். தேவர்களும் அவர்களோடு இணைந்தனர். சட்டென்று பிரபஞ்சமே ஒளிரும் பேரொளி ஹரியினுள்ளும், அரனுள்ளுமிருந்து ஜோதியாய் வெடித்தது. அது மங்களமான பெண் உருவாகத் திகழ்ந்தது. நாராயணனின் புஜபலம் முழுதும் திரட்டி பதினெட்டுத் திருக்கரங்களோடு நின்றாள் பிராட்டி. பிரம்மனின் செம்மை அங்கு பாதங்களாக பரிமளித்தன. ஈசனின் வெள்ளொளி திருமுகமாக மலர்ந்தது. எமனின் கருமை கருங்குழல் கற்றையாக காற்றில் அலைந்தது. இந்திரனின் ஜால சக்தி அம்மையின் இடைப் பகுதியாயிற்று. பாத விரல்களில் சூரியனின் ஜோதி தெறித்துப் பரவியது. ஈசனின் இணையற்ற பக்தனான குபேரனின் ஒளி திருமகளின் நாசியாக மின்னியது. அக்னி அவளின் திருநயனங்களில் உக்கிரமாகக் குடி புகுந்தார். கனலாகிச் சிவந்தாள் துர்க்கா. வாயு இனிய கானமாய் அவள் செவிக்குள் புகுந்தான். அருணையின் செவ்வொளி கீழுதடாகவும், முருகனின் செவ்வேள் மேலுதடாகவும் ஒளிபரப்பி சிவந்திருந்தனதேவர்கள் கண்களில் நீர் பொங்க, 'ஜெய்... ஜெய்...' என விண்முட்டும் கோஷம் எழுப்பினர். இது நிகழ்ந்தது மஹாளய அமாவாசைக்கு முதல் தினம். பிரளயத்தின்போது பார்வதி காளியாகி வந்தாள். இப்போது மகாலக்ஷ்மியே அஷ்டபுஜ துர்க்கையாக எழுந்தாள். சகல ஆயுதபாணியாக, சிம்ம வாகினியாக சிலிர்த்து கம்பீரமாகத் தோன்றினாள்.

சிம்மத்தின் கர்ஜனை மகிஷனின் காதை செவிடாக்கியது. மகாலக்ஷ்மி மாபெரும் உருவோடு அவனெதிரே நின்றாள். மகிஷன் அவளை மதியாது ஆயுதங் களை வீசினான். அதை புல்லாக கிள்ளி எறிந்தாள். அசுரக் கூட்டம் அதற்குள் பேயாகப் பறந்து தாக்கினர். அன்னை, அசுரர்களின் உடலைச் சீவி எறிந்தாலும், உள்ளிருக்கும் ஜீவன்களை பரம கருணையாக தன்னிடம் அழைத்துக் கொண்டாள். தேவர்களுக்குக் கூட கிடைக்காத பாக்கியம் இது! இறுதியாக எருமைத் தலையனான மகிஷனை வாரி எடுத்தாள் துர்க்கை. தன் இரு பாதங்களையும் மகிஷன் மீது வைத்து நசுக்கினாள். மகிஷன் அலறி மலைபோலச் சரிந்தான். தேவர்கள் துர்க்கா மகாலக்ஷ்மியை பூத்தூவி அர்ச்சித்தனர். இவளே 'மகிஷாசுரமர்த்தினி' எனப்படுபவள். 'மர்த்தனம்' என்றாலே 'மாவுபோல் அரைப்பது' என்று பொருள். மகிஷனின் இறுகிய கல் போன்ற அகங்காரத் தலையை சிதைத்து வெண் மாவாய் இழைத்ததாலேயே 'மகிஷாசுரமர்த்தினி' என அழைக்கப்படுகிறாள்.

அடுத்ததாக மேதஸ் மகரிஷி வெண்ணிற நாயகியாம் சரஸ்வதியின் வீரவிளையாடல்களை கூறத் தொடங்கினார்.
தேவர்கள் பேரின்பத்தின் உறைவிடமான பராசக்தியின் திருப்பாதங்களை மறந்து தேவலோக மங்கைகளின் நாட்டியத்தில் தோய்ந்திருந்தனர். இறை நினைப்புபோய் வெறும் போகக் கூட்டமாகப் பெருத்திருந்தனர். கொடூர அசுர சகோதரர்களான சும்பனும், நிசும்பனும் இந்திரலோகம் உறங்கிக் கொண்டிருந்ததை சரியான வாய்ப்பாக்கிக் கொண்டனர். கூட்டமாக உள்ளே புகுந்து சிறை பிடித்தனர். சர்வாதிகாரத்தை மூவுலகிலும் நிறுத்தி வானுலகை தமது வசமாக்கினர். தேவர்களை கண்காணாது விரட்டினர்.

பதுங்கி ஓடிய தேவர்கள் பிரகஸ்பதியின் பாதத்தில் சரிந்தனர். ஆனால், அப்போதும், ஆதிமகாசக்தியின் நினைவு அவர்களுக்குள் எழவில்லை.
‘‘இமயச் சாரலில் வெண் பனியில் அருள் மழை பொழியும் பர்வதராஜனின் மகளான பார்வதியை தொழுதால் மட்டுமே இந்திரலோகத்தை மீட்க முடியும். விஷ்ணு மாயை எனும் மகாசக்தியுள்ள அதிநுண்ணிய காரியமாற்றும் சக்தியால் மட்டுமே சும்ப-நிசும்ப, சண்ட-முண்ட, ரக்தபீஜர்களான அரக்கப் பெருங் கூட்டத்தை அழிக்க முடியும். எனவே, இப்போது இமயம் செல்’’ என்றார்.
குருவின் குளுமையான வார்த்தைகளைக் கேட்டவர்கள் தேவியின் பாதச் சரணங்களை இன்னும் இறுக்கப் பற்றிக் கொண்டனர். பல்வேறு துதிகளால் அவள் இதயம் கரைய கண்ணீர் சொரிந்தார்கள். இமயத்தில் கருணை கங்கையாக அவளும் கரைந்தாள். வேதத்தின் இலக்காக விளங்கும் பிரம்ம சக்தி முற்றிலும் வேறொரு உருக்கொண்டு வந்தது. பார்வதியின் உடலிலிருந்து உயிர்சாரம் முழுவதும் திரட்சியாகப் பொங்கி வெண் மலையையே ஆடையாக அணிந்த மகாசக்தி வெளிவந்தது. தீந்தொழில் புரிபவர்களை அழிக்க வந்திருப்பினும், தேவர்களைக் காத்து இன்னருள் புரிய உதித்திருந்தாலும் இவற்றோடு எதனாலும் பாதிப்படையாத பரப்பிரம்ம ஸ்படிகம் போன்ற சத்திய சொரூபமாக இவள் இருந்ததால் இவளை மகா சரஸ்வதி என்று அழைத்தார்கள். தேவர்கள் 'கௌசிகீ' எனவும் அழைத்தனர். சிருஷ்டிக்கு அதி தேவதை பிரம்மாவெனில், கலை, காவியம், சாஸ்திரப் புராணங்கள் என்று சிருஷ்டியின் நீட்சியை இவள் பெருக்கி அனுக்கிரகம் செய்கிறாள். இவ்விரு தொழில்களுக்கும் அப்பால் வேத வாணியாக, ஞானபூரணியாக விளங்குகிறாள். அதனாலேயே பிரம்மாவையும், சரஸ்வதியையும் திவ்ய தம்பதியராக இதிகாசங்கள் வரிக்கின்றன.

மகா சரஸ்வதி எழில் வடிவினள். வெண் பனியின் மலைச் சிகரத்தில் கருணைச் சிகரமாக அமர்ந்தாள். சிம்மத்தின் மீது அமைதியாக அமர்ந்து வீணாகானத்தில் லயித்திருந்தாலும், அம்பு, உலக்கை, சூலம், சக்கரம், சங்கம், மணி, கலப்பை, வில் ஏந்தி சந்திர ஒளியில் பிரகாசித்திருப்பாள்.

சத்தியத்தின் நேர் துருவங்களாக, கொடுங் கோன்மையின் முழு உருவாக இருந்த சும்ப-நிசும்ப சகோதரர்களின் அணுக்கத் தொண்டர்களான சண்டனும், முண்டனும் இமயக்கிரியில் திரிந்தபோது கௌசிகீயை கண்டனர். சிம்மத்தின் மீது அமர்ந்த அந்த அழகுச் சிகரத்தைப் பார்த்து திகைத்துப் போயினர். தம் அசுரத் தலைவர்களுக்கு இவளை அர்ப்பணித்தால் என்ன என்று குரூரமாக யோசித்தனர். சும்பனிடம் தாம் கண்ட பேரழகுப் பெண்ணைப் பற்றிச் சொல்ல அவனுக்குக் காமம் தலைக்கேறியது, இவளே மாதேவி என அறியாத அற்பன் அவளை தன்னவளாக மாற்றிக் கொள்ள யோசித்தான்.

  தன் அரசவையில் அழகிய குரலையுடை யோனான சுக்ரீவன் என்பானை அழைத்தான். 'எப்படியாயினும் இனிய மொழி பேசி அரசவைக்கு அவளை அழைத்துவா' என்றான். அவனும் அதிவிரைவாக இமயக்கிரி அடைந்தான். கௌசிகீயை பார்த்து, ''சும்பனின் அரசவையை ஒளிரூட்டும் பேரழகு படைத்தவளே...'' என்று தொடங்கி அமிர்த வாக்காலும், மயக்கு வார்த்தைகள் பேசி, சம்மதமா என்று முடித்தான். அவளும் சம்மதம் என்றாள்; ஆனால், ''யார் என்னுடன் போரிட்டு வெற்றி பெறுகிறார்களோ அவர்களையே மணப்பேன்'' என்றாள்.

கடுங்கோபத்தோடு நுழைந்தவன் விவரம் சொல்ல சும்பன் தூம்ரலோசனனை அழைத்தான். 'தூம்ரம்' என்றால் 'புகை' என்று பொருள். பொங்கும் புகையோடு பெரும் படையோடு கிளம்பியவன் கௌசிகீயின் எதிரே கர்ஜிக்க, அவள் வாகனமாக இருந்த சிம்மத்தின் ஹூங்காரத்திலேயே அவன் கரைந்து வீழ்ந்தான். தூம்ரலோசனன் மாண்டான் என்பதை கேள்வியுற்ற சும்ப-நிசும்பரின் படைத் தலைவர்களான சண்டனும், முண்டனும் திமிறிக் கிளம்பினர். மாபெரும் படையோடு வந்த அவர்கள் கௌசிகீயின் சிம்மத்தைப் பார்த்து அம்பு செலுத்தினார்கள். கௌசிகீயின் கண்கள் சிவந்தது. அசுரப் படையின் ஒரு பகுதியை தம் கதையை ஏவித் தாக்கியபோதுதான் முதன் முறையாக சிம்மவாஹினி சாதாரணவள் இல்லை. இவளே சாமுண்டி என்பதை சண்ட, முண்டர்கள் உணர்ந்தார்கள். அதுவரை சாந்தமாக இருந்தவளின் நெற்றிப் பொட்டிலிருந்து மாகோரமிக்க அதிபயங்கர உருவோடு காளி வெளிப்பட்டாள்.       

தெற்றுப் பற்களோடு கூடிய அதிகோர முகமும், செம்பட்டைச் சடையோடு கன்னங்கரியவளாக இருந்தாள். கத்தியும், கழுத்தைச் சுருக்கிட்டு இழுத்துப் போடும் பாசமும், கபாலம் சொருகிய கட்வாங்கம் என்ற குண்டாந்தடியும், அனேக கபாலத்தை மாலையாக பிணைத்து கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டாள். தலையில்லா உடலை இடையில் கட்டி முடிந்திருந்தாள். வரிப்புலியின் தோலை உரித்து சேலையாக்கி போர்த்திக் கொண்டிருந்தாள். உடல் முழுதும் ரத்தக் குழம்பை கஸ்தூரி சந்தனமாகப் பூசிக் கொண்டாள். உலகம் முழுதும் துழாவிப் புசிப்பதுபோல் நாவைச் சுழற்றியபடி இருப்பவளின் கண்கள் செந்தணல் துண்டங்களை எரிமலையாகப் பொழிந்தன. அவள் கர்ஜிப்பு தாங்காது அசுரர்களின் ரத்தம் உறைந்து போயிற்று.

எங்கேயோ மறைந்திருந்த தேவர்களும், கந்தவர்களும், ஏன் மகேசனும், பிரம்மா, விஷ்ணு போன் றோரும்கூட அங்கு பிரசன்னமாயினர். ஒரு கணம் சூரியனை மறைத்து பூமியையே பிளக்கும் பேரதிர்வோடு நின்றிருக்கும் கௌசி கீயிலிருந்து வெளிப் பட்டிருக்கும் சாமுண்டியை சும்பனும், நிசும்பனும் பார்த்தார்கள். மகா யுத்தம் தொடங்கியது. அசுரர்களின் ஒட்டு மொத்த படைக் கலன்களையும் சிம்மமும், சாமுண்டியும் சம்கரிக்க சும்ப-நிசும்பர்கள் பலம் மொத்தமும் சேர்த்துக் கொண்டு அருகே வர, தேவியின் வாள் நிசும்பனின் தலையை வெட்டியது. சூலத்தை சும்பனின் மார்பினில் பாய்ச்சினாள். சண்ட, முண்டர்களை அழுத்திக் கொன்றாள். தேவர்களும், வானவரும் கண்களில் நீர் பெருக 'ஜெய் நிசும்பசூதனி' என்று ஜெயகோஷம் எழுப்பினர். இதுவே மகா சரஸ்வதியான சத்தியம், தர்மத்தை நிலைத்துச் செய்ய வந்த நிசும்பசூதனி.

இந்தப் புராணங்களை சொன்ன மேதஸ், துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி, சாமுண்டா வடிவினலான சண்டிகா பரமேஸ்வரி எனும் மூலப் பிரம்ம சக்தியை காட்டித் தரும் மந்திரமான நவாக்ஷரீ என்ற புனித மந்திரத்தை, சுரதனுக்கும், சமாதிக்கும் உபதேசித்தார். நவாக்ஷரீ மந்திரம் சத், சித், ஆனந்தத்திற்கான அட்சரங்களை கொண்டது. ஆனால், இந்த சரிதமோ முதலில் காளியான ஆனந்தத்தையும், சித் எனப்படும் லட்சுமியையும், சத் என்கிற சரஸ்வதியையும் வரிசை மாற்றி சொல்கிறது. ஆனால், முதலில் காளி சரிதத்தை உதயம் என்றும், மத்தியிலுள்ள லட்சுமியை உச்சி என்றும், சரஸ்வதியை லயம் என்றும் மூன்று பகுதிகளாக பிரித்து ஞானத் தேடலாக சரிதத்தை கூறுகிறது. தேவி மகாத்மியத்தில் சொல்லப்பட்ட தேவியர்கள் ஒருவரே. சக்தியின் வெவ்வேறு தோற்றங்களே என்பதையும் புரிய வைத்தார். சுரதனும், சமாதியும் எப்போதும் தேவியின் லீலைகளையும், முனிவர் போதித்த மந்திரங்களையும், பூஜை முறைகளையும் பின்பற்றினர்.

அகிலமனைத்தையும் காக்கும் மகாசக்தி சுரதனை பூபதி என்று பூமியையே ஆளச் செய்தாள். ஆனால், சமாதியோ ஞானத்திலேயே தோய்ந்து கிடக்கும் ஞான சமாதியையே கேட்டான். ஒரே சமயத்தில் இகம், பரம் என்கிற இரு துருவங்களிலுமுள்ள உச்சத்தை அருளினாள். சுரதனுக்கு பூலோக சாம்ராஜ்ஜியம். சமாதிக்கு ஞான பக்தி சாம்ராஜ்ஜியம். சண்டிகையான தேவி மறைந்தாள். சுரதன் சிம்மாசனம் ஏறினான். சமாதி, சமாதி நிலையிலேயே தேவி மகாத்மியத்தை அனை வருக்கும் கூறி பேரானந்தம் எய்தினான்.
தேவி மகாத்மியம் மாபெரும் சாகரம். அதன் சாரலே மாபெரும் சுகம். பாராயணமாக படிப்போரின் பிறவிச் சுழல் நிற்கும். மேலே சொன்ன தேவி மகாத்மியம் வெறும் அறிமுகமே. சமுத்திரத்தில் ஆழாக்கு கூட இல்லை. சாகரத்தின் முன்பு நின்று விழிக்கும், வியப்பவனின் ஆச்சரியமே சிறிய சரித சுருக்கமாக மாறியிருக்கிறது.  
- கிருஷ்ணா
படங்கள்: ஸி.ஏ.ராமச்சந்திரன்