மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி கோலாகலம்





அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாலும் அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாதான். நவராத்திரிகளில் முதல் மூன்று நாட்கள் வீரத்தை அருளும் அம்பிகையையும், அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை அருளும் மகாலட்சுமியையும், நிறைவு மூன்று நாட்கள் கல்வியை அருளும் சரஸ்வதியையும் வழிபடுவது நம் தொன்றுதொட்ட பழக்கம்.

நவராத்திரி கொண்டாட்டத்தின் சிறப்பு அம்சம், பொம்மைக் கொலு. பல படிகளைக் கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைத்து அவற்றை ஆராதிப்பது இந்த கொலு வழிபாட்டு முறை. மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்தும் வகையில் படிகளில் பொம்மைக் கொலு அமைக்கப் படுகிறது. இந்த வழக்கப்படி ஓரறிவு கொண்ட தாவரங்களின் பொம்மைகள் முதற்படியிலும், ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு பொம்மைகள் இரண்டாம் படியிலும், மூன்றறிவு கொண்ட கரையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள் மூன்றாம் படியிலும், நான்கறிவு கொண்ட நண்டு, வண்டு போன்ற பொம்மைகள் நான்காம் படியிலும், ஐந்தறிவு கொண்ட மிருகங்கள், பறவைகளின் பொம்மைகள் ஐந்தாம் படியிலும், ஆறறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகள் ஆறாம் படியிலும், மனித நிலையில் இருந்து உயர்ந்த சித்தர்கள், ரிஷிகள் போன்றவர்களின் பொம்மைகள் ஏழாம்படியிலும், தேவர்கள், அஷ்டதிக் பாலகர்கள், நவகிரக அதிபதிகளின் பொம்மைகள் எட்டாம் படியிலும் மற்றும் பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் தேவியர்களின் பொம்மைகள் ஒன்பதாம் படியிலும் வைக்கப்படுகிறது. (இது சம்பிரதாயமான அமைப்பு. ஆனால், இன்று அவரவர் சௌகரியம்போல பார்வைக்கு அழகாகவும், மனதைக் கவரும் படியாகவும் பொம்மைகளை அவரவர் விருப்பப்படி, புதுப்புது கற்பனையில், கவர்ச்சியாக படிகளில் அலங்காரமாக வைப்பது வழக்கமாகிவிட்டது.)  

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், நவராத்திரி கொலுக் கண்காட்சி தனிச் சிறப்பு வாய்ந்தது. இந்தக் கண்காட்சியை காண ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருவர். கோயிலின் பொற்றாமரைக்குளம் முழுவதும் மின்சார வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜகஜ்ஜோதியாய் காட்சியளிக்கும்.  கோயிலில் கண்களைக் கவரும் வண்ணம் பெயின்ட் கோலம் போடப்படும். கோயிலின் வாசல்கள் அலங்கரிக்கப்பட்டு அழகாக காட்சியளிக்கும். பக்தர்களின் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் அம்மன் சந்நதி துவக்கத்தில் இருந்து கொலு பொம்மைகள் வைக்கப்படும். வாகனங்களும் கண்காட்சியில் இடம் பெறும்.



கோயிலில் நவராத்திரி விழா அக்டோபர் 5ம் தேதி தொடங்குகிறது. ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு மீனாட்சி அம்மன் பிரத்தியேக அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் காட்சியளிப்பார். முதல் நாளன்று அம்மன், ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். சிவனின் 64 திருவிளையாடல்களும் நிகழ்ந்த தலம் மதுரை. இந்தத் திருவிளையாடல் அலங்காரத்தை அம்மனுக்கு செய்வித்து கொலு மண்டபத்தில் அம்மனை வீற்றிருக்கச் செய்வார்கள். இது, மீனாட்சி அம்மன் கோயிலில் தொன்றுதொட்டு நிலவிவரும் ஒரு மரபாக உள்ளது. அந்த அடிப் படையில் அக்டோபர் 6ம் தேதி கருங் குருவிக்கு உபதேசித்த திரு விளையாடல், அக்டோபர் 7ம் தேதி  பாணனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடல், அக்டோபர் 8ம் தேதி நாரைக்கு முக்தி அளித்த திரு விளையாடல் என்று விதவிதமான அலங்காரங்களில் மீனாட்சி அம்பிகை வீற்றிருப்பாள். வந்தியின் பிட்டுக்காக சுவாமி சுந்தரேஸ்வரர் மண் சுமந்த லீலை மிகவும் பிரசித்தி பெற்றது. இத்திருவிளையாடல் ஆவணி மூல விழாவில் நடைபெறும். இத்திரு விளையாடல் கோலத்தில் அக்டோபர் 9ம் தேதி அம்பாள் கொலு மண்டபத்தில் எழுந்தருள்வாள். சுவாமி சுந்தரேஸ்வரர் திருவிளையாடல்களில் எல்லாம் வல்ல சித்தராக காட்சியளிக்கிறார். இதனை குறிக்கும் விதமாக மீனாட்சி அம்மன் மற்றும் இம்மையில் நன்மை தருவார் கோயில்களில் எல்லாம் வல்ல சித்தர் சந்நதி இருப்பதைக் காணலாம். அக்டோபர் 10ம் தேதி மீனாட்சி அம்மன் எல்லாம் வல்ல சித்தர் கோலத்தில் பக்தர்களுக்கு அருள் புரிவாள்.



அக்டோபர் 11ம் தேதி முத்துகளால் செய்யப்பட்ட ஆடை அணிந்து முத்தங்கி சேவையில் காட்சி அளிப்பாள். அக்டோபர் 12ம் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்திலும், அக்டோபர் 13ம் தேதி சிவபூஜை அலங்காரத்திலும் காட்சியளிப்பாள். சரஸ்வதி பூஜையன்று பூஜையில் வைத்த புத்தகங்களை எடுத்து படித்தால் சரஸ்வதியின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது நாம் நம் வீடுகளில் பின்பற்றும் வழக்கம். அதுபோல மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக ஒவ்வொரு ஆண்டும் கோயிலில் உள்ள சரஸ்வதி சந்நதியின் முன்பு மாணவர்கள் கூடி சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள். கலைத்துறையில் மேன்மையடைவதற்காக, வீணை இசைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் என்று 108 பேர் கொண்ட
குழுவினரால் வீணை இசை வழிபாடு செய்யப்படுவது வழக்கம். இந்தாண்டு இந்த வீணை இசை
வழிபாடு மாலை 4 மணி முதல் 7.30 மணி வரை மேற்கொள்ளப்படவிருக்கிறது. ஒவ்வொரு
நாளும் மாலையில் பக்தர்களின் கண்களுக்கும், செவிக்கும், மனதுக்கும் விருந்தளிக்கும்
வகையில் மாலை 4 மணி முதல் கோயிலின்
பழைய கல்யாண மண்டபத்தில் இன்னிசை,
நடனம், பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
(மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழாவின் கோப்புப் படங்கள் உங்கள் தரிசனத்துக்காக.)
- ஆர். ஜெயலெட்சுமி
படங்கள்: பாலா, மணி, ஜேபி