வாஸ்து கட்டிடத்தால் கொழிக்கும் வியாபாரம்





கிழக்கு மனையில் அமைந்த குடியிருப்பு பற்றி அறிந்து கொண்ட நாம், இனி கிழக்கு மனையில் அமையக்கூடிய தொழிற்சாலை, சத்திரம், மண்டபங்கள் போன்ற கட்டிடங்களை அமைப்பது பற்றித் தெளிவாக காண்போம்.

தொழிற்சாலைகள் கண்டிப்பாக சுற்றுச் சுவர்கள் கொண்டவையாக இருக்க வேண்டும். இந்தச் சுற்றுச் சுவர்கள் தெற்கு-மேற்கு திசையில் 2 அல்லது 3 அடி உயரம் அதிகமாகவும், வடக்கு-கிழக்கில், தெற்கு-மேற்கு சுவர்க¬ளை விட சற்றுக் குறைவான உயரமாகவும் இருக்க வேண்டும். சுற்றுச் சுவர்கள் மீது கம்பி (Grill) வைத்து கட்டுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு அதிகம் வேண்டுமெனில் சிமென்ட் அட்டைகள் அல்லது தகர அட்டைகளைக் கொண்டு மறைப்பதில் தவறில்லை.

காவலாளி அறை, மின் அறை, பொருட்கள் உற்பத்தி பகுதி, உற்பத்தியான பொருட்கள் வெளியேறும் பகுதி, மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, புகை போக்கி ஆகியவற்றை அமைப்பது குறித்து காண்போம்.



முதன்முதலாக நிலத்தை பண்படுத்திக்கொள்ள வேண்டும். இடிந்த கட்டிடம், கொட்டி வைத்திருக்கும் பழைய மண், கழிவுகள் ஆகியவற்றை முழுமையாக நீக்கி நல்லதொரு முகூர்த்த நாளில் பூமி பூஜை போட வேண்டும். அடுத்ததாக பூமியை படத்தில் உள்ளபடி ‘O level', +1, +2, +3 என்றவாறு தரை உயரம்  இருக்குமாறு அமைக்க வேண்டும்.
தரையின் வடகிழக்கு பகுதியை சாலையின் மட்டத்தை விட 3 முதல் 4 அடி உயரத்திற்கு மேடாக்க வேண்டும். இதேபோல் வடமேற்கு பகுதியை, வடகிழக்கை விட அதிக உயரத்திற்கும், வடமேற்கை விட தென்கிழக்கு தரை உயரமாகவும் தென்கிழக்கை விட தென்மேற்கு உயரமாகவும் இருக்குமாறு முதலில் அமைக்க வேண்டும். பிறகுதான் கட்டிட நிர்மாணம் குறித்து சிந்திக்க வேண்டும்.
அடுத்து, சுற்றுச் சுவரை(Compound Wall) நிர்மாணிக்க வேண்டும். இப்போது கிழக்கு சுற்றுச் சுவரை அமைப்பது குறித்து விரிவாகக் காண்போம்.

கிழக்கு சுவரில், பிரதான வாயிலை படத்தில் உள்ளபடி உள்பக்கமாக தள்ளி அமைப்பது வாகனப் போக்குவரத்துக்கு மிகவும் எளிதாக இருக்கும்.
படத்தில் காட்டியவாறு வடக்கு-கிழக்கில் அதிக காலியிடம் விட்டு கட்டிடங்களை அமைக்க வேண்டும். சிமென்ட் அட்டை, தகர அட்டை, அமைக்கும்போது வடக்கு-கிழக்கு சரிவு 2 பாகமாகவும், தெற்கு-மேற்கு சரிவு 1 பாகமாகவும் இருக்குமாறு அமைக்கவும். எக்காரணத்தைக் கொண்டும் கி போல சமமாக அமைக்கக் கூடாது.



காவலாளி அறையை கிழக்கு காம்பவுண்ட் சுவரை ஒட்டாமல் ஒன்றரை அடி காலியிடம் விட்டு வடக்கு ஈசான்யத்தில் கதவு வரும் வகையிலும், வடக்கு சுவரில் ஜன்னல்/கிரில் அமைப்பு ஏற்படுத்தி பார்வையில் படும்படியாகவும் உருவாக்கி, நடந்து வருபவர்களுக்கு படத்தில் காட்டியபடி சிறிய வாயில் (wicket gate) ஒன்றும் அமைத்துக் கொள்ளலாம்.

மின் அறையை தென்கிழக்கு ஷெட்டிலும் பளுவான மெஷின்களை தெற்கு-மேற்கு சுவரை ஒட்டியும், விற்பனை மேலும் செறிவூட்டப் பயன்படும் பொருட்கள் பார்வையில் படும்படியும், நடந்து வருபவர்களுக்கு படத்தில் காட்டியபடி சிறிய வாயில் (wicket gate) ஒன்றும் அமைத்துக் கொள்ளலாம். இதனால் சிறப்பான வியாபாரம் நடக்கும்.

இதிலேயே கழிவறை அமைக்கும்போது காவலாளி அறைக்கு தெற்கிலோ அல்லது வடமேற்கு பகுதியிலோ, மேற்கு சுவரை ஒட்டியும் அமைக்கலாம்.

அலுவலக அறையை தென்கிழக்கு பகுதியில் அமைக்கலாம். மின் அறையை ஒட்டி சிறிய அறை அமைத்து, வடக்கு ஈசான்ய வழி வைத்து அமைக்கலாம். அல்லது வடமேற்கில் வடக்கில் போக்குவரத்து வைத்து கிழக்கு ஈசான்யத்தில் வாசற்படியை அமைத்துக் கொள்வது சிறப்புடையதாக இருக்கும். இங்கேயே தென்மேற்கில் பணம் வைக்கும் பேழையை வைத்துக் கொள்ளலாம்.

கட்டிடத்திலிருந்து வழியும் மழைநீர் வடக்கு-கிழக்கு சுற்றுச் சுவரை ஒட்டி வழிந்தோடி காவலாளி அறைக்கு அருகிலிருந்தோ அல்லது ஈசான்யத்திலிருந்தோ வெளியேறச் செய்யலாம். வடக்கில் மழைநீரை சேமித்து வடகிழக்கு வழியே அனுப்ப சிறப்பான வியாபாரம் நடக்கும்.

கிரேன் தெற்கு-மேற்கு சுவரை ஒட்டி வடக்கு-தெற்கு அல்லது கிழக்கு மேற்காக செல்லுமாறு அமைக்கலாம்.
மேல்நிலைத் தொட்டி - சிமென்ட் அட்டை போடும் அமைப்பானாலும் ஆர்.சி.சி. அமைப்பானாலும் தென்மேற்கு பகுதியில் பிரம்மஸ்தானத்தை ஒட்டாமல் தெற்கு-மேற்கில் அமைத்துக் கொள்ளலாம்.
கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டி - வடக்கு ஈசான்யம் அல்லது கிழக்கு ஈசான்யத்தில் வட்ட வடிவில் அமைத்துக் கொள்ள சிறப்பான பலனை எதிர்நோக்க முடியும்.

சிம்னி (புகைபோக்கி) - பூமியானது மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுவதால் இதனை கருத்தில் கொண்டே புகை போக்கி எனும் சிம்னியை அமைக்கவும். வடமேற்கில் வடக்கு போக்குவரத்து இருக்குமாறும், தென்கிழக்கில் கிழக்கு போக்குவரத்து இருக்குமாறும் அமைப்பது சிறந்த பலன் தரும்.
(தொடரும்)