பரிவு கொண்டோர்க்கு சிவன் பொய்யாகான் : திருமூலர் மந்திர ரகசியம்





இதுவரை, அட்ட வீரட்டத் தலங்களைப் பற்றிச் சொல்லி, யார் யார் என்ன என்ன தவறு செய்தார்கள், என்ன என்ன தண்டனை அடைந்தார்கள் என்றெல்லாம் திருமூலர் சொன்னதைப் பார்த்தோம்.

தவறு செய்தவர்கள், யாராக இருந்தாலும் அவர்கள் தண்டனை அடையத்தான் வேண்டும் என்பது, அப்பாடல்களில் தெளிவாகத் தெரிகிறது. அதே சமயம், சற்று பயமாகவும் இருக்கிறது. காரணம்?
அந்த எட்டுப் பாடல்களிலும் வழங்கப்பட்ட தண்டனை பற்றி விவரம் இருக்கிறதே தவிர, அந்த தண்டனையிலிருந்து தப்பிக்கவோ அல்லது உரிய பரிகாரம் தேடவோ வழி காட்டுதல் இல்லை. அந்தக் குறை தீர்வதற்காகவே தண்டனை பெற்றவர்கள் எட்டு பேர்களின் வரலாற்றைச் சொன்ன திருமூலர், அதைத் தொடர்ந்து, சிவபெருமானை யாரெல்லாம் வழிபட்டார்கள், அவர்கள் என்னவெல்லாம் பெற்றார்கள் என்று சொல்லி வழி காட்டுகிறார்.
அடி சேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி
முடி சேர் மலை மகனார் மகளாகித்
திட மாதவம் செய்து தேவர் அறியப்
படியார அர்ச்சித்துப் பத்தி செய்தானே.
(திருமந்திரம் - 347)
இப்பாடல், ஒரு வழிகாட்டும் பாடல் மட்டுமல்ல. வழிபாட்டுப் பாடலும் கூட. அம்பிகையே வழிபாடு செய்ததாகக் கூறுகிறது. செயல்பட்டது, பார்த்து அறிந்தவர், செயல்முறை, இறைவன், நோக்கம் என ஐந்து விதமான தகவல்கள் இப்பாடலில் இடம் பெற்றுள்ளன.

செயல்பட்டது - மலையரசன் மகளாகிய பார்வதி; பார்த்து அறிந்தவர் - தேவர்கள்; செயல்முறை - பக்தி, இறைவன் - சிவபெருமான்! நான்கு வரிப்பாடலில் ஐந்து விதமான தகவல்களைச் சொல்லி, பார்வதி கல்யாணத்தைச் சொல்லிவிட்டார் திருமூலர். மலையரசான இமவானுக்கு மகளாக அவதரித்த பார்வதி தேவி, ‘‘சிவபெருமானை அடைவேன், அவரையே மணம் செய்து கொள்வேன்’’ என, சிவபெருமானை நோக்கித் தவம் செய்தாள். அப்போது, சிவபெருமானே ஒரு முதியவர் வடிவில் வந்து, ‘‘ஆதியும் அந்தமுமில்லாத சிவபெருமானை அடைவது சுலபமல்ல. அதெல்லாம் நடக்காது’’ என்று அவளுடைய மனோதிடத்தை அறியும் சோதனையாகச் சொன்னார்.
ஆனால், அம்பிகை தன் தவத்தை நிறுத்தி விடவில்லை. ‘‘அந்தச் சிவபெருமான், என் கோரிக்கையை நிறைவேற்றி வைக்காவிட்டால் கூட, நான் என் தவத்தை விட மாட்டேன்; மேலும் கடுமையாக்குவேன்’’ என்று சொல்லி விட்டாள்.

‘‘எடுத்த காரியத்தை முடிப்பதில்தான் என்ன தீவிரம், என்ன அழுத்தம்!’’ என சிவபெருமான் பாராட்டினார். அம்பிகையின் திடமான உள்ளம் இணைந்த தவத்தை ‘திட மாதவம் செய்து’ எனத் திருமூலர் குறிப்பிடுகிறார். அம்பிகையின் தவத்தைப் பார்த்து, தேவர்களே அந்த வழிமுறைகளை அறிந்து கொண்டார்களாம்.
இவ்வாறு, அம்பிகையின் வழிபாட்டைச் சொல்லி வழிகாட்டிய திருமூலர், அடுத்த பாடலில் நமக்குத் தைரியம் ஊட்டுகிறார்: ‘பார்வதி தேவி தெய்வம். அவள் தீவிரமாகத் தவம் செய்து, சிவத்தை அடைந்தாள். நம்மால் அப்படிச் செய்ய முடியுமா, நமக்கு இறைவன் அருள் கிடைக்குமா என்ற எண்ணம் தோன்றிவிட்டால்?’ என்ற கேள்வியை எழுப்பி, அதற்குப் பதிலையும் தருகிறார் திருமூலர்.
திரிகின்ற முப்புரஞ் செற்றபிரானை
அரியன் என்று எண்ணி அயர்வுற வேண்டா
பரிவுடையாளக்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறிவானே
(திருமந்திரம் - 348)
பாடல், திரிபுரசங்காரம் செய்த சிவபெருமானைப் பற்றிச் சொல்கிறது. சிவபெருமான் போரிடாமலேயே, பார்வையாலேயே திரிபுரசங்காரம் செய்தார். அப்படிப்பட்ட சிவபெருமானை நம்மால் அடைய முடியுமா? அவரது அருளைப் பெறமுடியுமா? அவரை நெருங்க முடியுமா என்றெல்லாம் எண்ணித் தளர்ச்சி அடையவேண்டாம்.
விருப்பத்தோடு, அன்போடு (பரிவு) வழிபாடு செய்பவர்களுக்கு, சிவன் பொய்யாகான். அன்பு காட்டி நிற்கும் அடியவர்களுக்கு, அவரவர் தகுதி அறிந்து சிவபெருமான் பரிவோடு அருள் செய்வார் என்கிறார் திருமூலர். அவரவர்க்குத் தக்கபடி சிவபெருமான் அருள்புரிவார் என்றதால், பயனைக் கருதியும் வழிபடலாம் என்பது குறியீடாகப் புரிகிறது.

முந்தைய பாடலில், பார்வதி தேவி சிவபெருமானை மணக்க வேண்டும் எனத் தவமிருந்து, அந்த விருப்பம் நிறைவேறி சிவபெருமானை மணந்தாரல்லவா? அதுபோன்ற பயனைக் கருதியும் வழி படலாம்; சிவபெருமான் அருள்புரிவார்.

தகுதிக்கு ஏற்ப சிவபெருமான் அருள் செய்வார் என்று இவ்வாறு சொன்ன திருமூலர், அடுத்த பாடலில், அவ்வாறு அருள் செய்த ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறார். அது, ராவணன் கயிலை மலையைத் தூக்கிய நிகழ்ச்சி.
தாங்கி இருபது தோளுந் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
ஆங்கு நெரித்த மரா வென்றழைத்தபின்
நீங்கா அருள்செய்தான் நின்மலன்தானே
(திருமந்திரம் - 350)
இப்பாடலில், ராவணன் கயிலை மலையை எடுத்ததும், அதன் காரணமாகத் துயரப்பட்டதும். பிறகு அவன் சிவனின் அருளைப் பெற்றதும் சொல்லப்பட்டிருக்கின்றன.
ராவணன் ஏன் கயிலை மலையைத் தூக்க வேண்டும்? வேண்டுதலா? ஏதாவது பிரார்த்தனையா? இரண்டுமில்லை. பிறகு?
ஒரு சமயம் ராவணன் புஷ்பக விமானத்தில் ஆகாய வீதிவழியாக சென்று கொண்டிருந்தான். அப்போது கயிலை மலை குறுக்கிட்டு, அவன் பயணத்தைத் தடை செய்தது. ஒரு மலை நம் பயணத்தைத் தடை செய்வதா என ராவணன் யோசித்த போது, கயிலை மலையிலிருந்து நந்தி பகவான், ‘‘தசக்ரீவா! இது எம்பெருமான், சிவபெருமான் எழுந்தருளி உள்ள கயிலை மலை. இதன் மேல் நீ பறக்கக் கூடாது. மலையைச் சுற்றிப் போ. அல்லது இறங்கிப் போய், மலையைக் கடந்ததும், விமானத்தில் ஏறிப் போ!’’ என்று அறவுரை சொன்னார்.
அதுவரை, ராவணனுக்கு தசக்ரீவன் என்பதுதான் பெயர். கயிலை மலை சம்பவத்திற்குப் பிறகுதான், அவனுக்கு ராவணன் என்ற பெயர் வந்தது. அதனால்தான் நந்திபகவான், ‘தசக்ரீவரே’ என்று அழைத்தார். திருமூலரோ, இப்பாடலில் எந்தப் பெயரையும் குறிப்பிடவில்லை.



சரி, நந்தி பகவான் அறவுரை சொன்னதற்கு, ராவணன் என்ன பதில் சொன்னான்? நந்தி பகவான் சொல்லி விட்டால், ராவணன் கேட்டு விடுவானா என்ன? நந்தி பகவான் சொன்னதைக் கேட்டு, அவனுக்குக் கோபம் வந்து விட்டது?
‘‘ஹ, இந்த மலை இங்கே இருப்பதால்தானே, இது என் பாதையைத் தடுக்கும்? இதை அடியோடு தூக்கி எறிந்து விட்டால்..’’ என்று ஆணவத்தோடு பேசியவன் விமானத்தில் இருந்து இறங்கி, நந்தி பகவானை நெருங்கினான்.
நந்தி பகவானைப் பார்த்ததும் ராவணனுக்கு இகழ்ச்சி அதிகமானது. ‘‘ஹும்! உன் மூஞ்சியும் நீயும்! குரங்கைப் போல்... மூஞ்சியைப் பார்
மூஞ்சியை’’ என்று இகழ்ந்தான்.

நந்திபகவான் சாபம் கொடுத்தார். ‘‘தசக்ரீவா! என்னைக் குரங்கு என்று ஏசிய, உன் நகரம் ஒரு குரங்கால் அழிக்கப்படட்டும்!’’
நந்தி பகவானின் அந்தச் சாபம் காரணமாகவே, ராவணனது லங்கா நகரம் ஆஞ்சநேயரால் அழிக்கப்பட்டது. நந்தி பகவானின் சாபத்தைக் கேட்ட ராவணன் அதை அலட்சியப்படுத்திவிட்டு...
கயிலை மலையை, இருபது கைகளாலும் பெரும்பாடுபட்டுத் தூக்கினான்.
அதே விநாடியில், கயிலை மலையான் தன் கால் கட்டை விரலை ஊன்றி, மலையை ஓர் அழுத்து அழுத்தினார். ராவணன் மலையின் கீழ் அகப்பட்டு, நெரிபட்டு அழுதான்.
ராவணன் என்றால், ‘‘ரோதனம் இடுபவன்’’ என்பது பொருள். இதன் பிறகே, அவன் ராவணன் எனப்பட்டான். அதன் பிறகு ராவணன் சாமகானம் பாடி, சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டு, அருள் வேண்டினான். சிவபெருமான் அவனுக்கு அருள்புரிந்தார்.
இவ்வாறு, தவறு செய்தவன் அதை உணர்ந்து, அருள் வேண்டியபோது, அவனுக்கு அருள் செய்த சிவபெருமான்,
தவறு செய்தவரைத் தண்டித்தவர்க்கு அருள் புரிந்ததை, திருமூலர் அடுத்த பாடலில் சொல்கிறார்:
உறுவதறி தண்டி ஒண் மணல் கூட்டி
அறுவகை  ஆன் ஐந்தும் ஆட்டத்தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மனு மழுவால் வெட்டி மாலை பெற்றானே
(திருமந்திரம் - 351)

இப்பாடலில் சண்டிகேஸ்வரரின் வரலாற்றை, மிக மிகச் சுருக்கமாகச் சொல்கிறார் திருமூலர். இந்த நான்கு வரிப் பாடலின் விரிவுதான் சேக்கிழார் சுவாமிகளின் பெரிய புராணம், சண்டிகேஸ்வரரின் வரலாறாக விவரித்திருக்கிறது.

திருச்சேய்ஞலூரில் எச்சதத்தன்-பவித்ரை தம்பதியருக்கு மைந்தனாக அவதரித்தார் விசாரசருமர். ஒருநாள் தன் வயதொத்த மாணவர்களுடன் வேதம் ஓதியபடி போய்க் கொண்டிருக்கையில்,
அவ்வூர்ப் பசுக்குலங்களை மேய்க்கும் சிறுவன் தன்னை முட்டிய பசு ஒன்றைக் குச்சியால் நன்றாக அடித்தான். அதைப் பார்த்த விசாரசருமர், ‘‘பசுக்களின் அருமை அறியாத நீ, இனிமேல் அவற்றை மேய்க்க வேண்டாம். நானே மேய்க்கிறேன்’’ என்றார்.

அதன்படியே மிகுந்தச் பொறுப்போடும் அன்போடும் விசாரசருமர் பசுக்குலங்களை மேய்த்தார். அவருடைய தூய்மையான அன்பால், பசுக்களும் அவரிடம் மிகுந்த அன்போடு
இருந்தன. அவை முன்பைவிட அதிகமாக பாலைக் கறந்தன. அது மட்டுமல்ல, விசாரசருமரைப் பார்த்தவுடன், அப்பசுக்கள் தம் கன்றைக் கண்டதைப் போல, மடியில் இருந்து தாமாகவே பாலைப் பொழிந்தன.

பால் வீணாவதைக் கண்ட விசாரசருமர், அதை வைத்து சிவவழிபாடு செய்ய எண்ணினார்.
உடனே தான் மாடு மேய்க்கும் மண்ணியாற் றங்கரையில், மணலால் ஒரு சிவலிங்கம் அமைத்தார். தானாகப் பொழிந்த பாலைக் குடங்களில் பிடித்து அபிஷேகம் செய்தார். நாட்கள் பல கடந்தன. ஊராருக்குத் தகவல் தெரிந்தது. உண்மையை உணராத அவர்கள் எச்சதத்தனை அழைத்து, ‘‘உன் மகன் செய்யும் செயல் உனக்குத் தெரியாதா?’’ என்று ஆரம்பித்துப் புகார் செய்தார்கள்.
‘‘நாளை முதல் அவ்வாறு நிகழாதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று எச்சதத்தன் வாக்குறுதி அளித்தான்.

மறுநாள் விசாரசருமர் மாடு மேய்க்கப்புறப்பட்டதும் அவரறியாமல் எச்சதத்தன் பின்தொடர்ந்தான். விசாரசருமர் வழக்கப்படி, மாடுகள் தாமாகவே சொரிந்த பாலைக் குடங்களில் பிடித்து
வைத்து, மணலால் சிவலிங்கம் அமைத்து, அபிஷேக அர்ச்சனைகளைத் தொடங்கினார். மகனின் செயல்களை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த எச்சதத்தன், வெகுவேகமாகப் போய் மகனை ஏசினார். விசாரசருமர் அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை.

எச்சதத்தனுக்குக் கோபம் அதிகமானது. அந்தச் செயலைத் தடுப்பதற்காக, விசாரசருமனின் முதுகில் நன்றாக நாலு சாத்து சார்த்தினான். தன் வழிபாட்டிலேயே ஆழ்ந்திருந்த விசாரசருமர் அப்போதும் திரும்பவில்லை. முதுகில் விழுந்த அடியால், அவர் முனைப்பைத் தடுக்க முடியவில்லை. கடைசியில், அங்கிருந்த பால் குடங்களையெல்லாம் எச்சதத்தன் கால்களால் உதைத்து, உடைத்துக் கவிழ்த்தான்.

அபோதுதான் விசாரசருமருக்கு சீற்றம் மூண்டது. அவர் தன் பக்கத்தில் இருந்த பசு மேய்க்கும் கோலை எடுத்தார். அது சிவனருளால் மழுவாக மாறியது. அந்த மழுவாலேயே எச்சதத்தனின் இரண்டு கால்களையும் வெட்டினார்.

எச்சதத்தன் அலறித் துடித்து மண்ணில் விழுந்தான். விசாரசருமரோ, இனி இடையூறு இல்லை என்று மகிழ்வோடு, சிவபூஜையைத் தொடர்ந்தார்.
அப்போது சிவபெருமான் அங்கே காட்சியளித்து ‘‘நம் பொருட்டு, உன் தந்தையின் கால்களைத் துண்டித்த உனக்கு, இனி யாமே தந்தை; நீ நம் மகன்’’ என்று கூறி விசாரசருமரைத் தழுவினார். மார்போடு அணைத்து உச்சி முகர்ந்து சீராட்டினார்.

விசாரசருமர் மாயா உடம்பு நீங்கி, அருள் உடம்பு பெற்று சிவ குமாரராயினார். சிவபெருமான், ‘‘நம்மை வழிபடும் அடியவர் நமக்குச் சார்த்திய, நிர்மால்ய பொருட்கள் உனக்கு மட்டுமே உரியனவாக ஆகட்டும்’’ என்றார்.

அத்துடன் சிவனடியார் பலருக்கும் தலைமையாய், அடியார்கட்கு தம் திருத்தொண்டின் பயனை அளிக்கும் ‘சண்டீசன்’ எனும் பதவியை விசாரசருமருக்கு அளித்தார். அதற்கு அடை யாளமாகத் தமது திருமுடியிலிருந்த கொன்றை மாலையை எடுத்து, விசாரசருமருக்குச் சூட்டி யருளினார் சிவபெருமான்.

சண்டீசர் என்பது, அவரது பதவியால் பெற்ற பெயர். கையில் தண்டு கொண்டு பசுக்குலங்களை மேய்த்து, அத்தண்டே மழுவாக மாறப் பெற்று, தவறு செய்தவனைத் தண்டித்ததன் காரணமாக இவருக்குத் ‘‘தண்டீசர்’’ என்ற திருப்பெயரும் உண்டு. அதனைக் குறிக்கும் முகமாக திருமூலரும் இப்பாடலில் சண்டீசரை ‘தண்டி’ என்றே குறிப்பிட்டார்.
வழிபாட்டின் வகைகள், அதனால் பலனடைந்தோர் எனப் பட்டியலிட்டு திருமூலர் நடத்தும் பாடங்களே இப்பாடல்கள்.
(மந்திரம் ஒலிக்கும்)