சரஸ்வதி தரிசனம்




சந்தன மர சாரதாம்பிகை
கர்நாடக மாநிலத்தில், சிக்மகளூர் மாவட்டத்தில், துங்கபத்ரா நதிக்கரையில், சிருங்கேரி தலத்தில் சந்தன மரத்தால் ஆன சாரதாம்பிகை கோயில் அமைந்துள்ளது. ஆதிசங்கரர் ஸ்ரீசக்கர வடிவத்தைக் கல் மீது வடித்து, அதன்மேல் சாரதாம்பிகையின் திருவுருவைப் பிரதிஷ்டை செய்துள்ளார். அன்னை, மேல் வலது கையில் ஜபமாலையையும், கிளியையும், மேல் இடது கையில் அமிர்தகலசத்தையும், கீழ் இடது கையில் புத்தகத்தையும் தாங்கி, கீழ் வலது கரத்தில் சின் முத்திரை மிளிர காட்சி தருகிறாள்.

ஞான சரசுவதி
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகில் உள்ள கூத்தனூர் என்ற திருத்தலத்தில் அம்பாள் ‘ஞான சரஸ்வதி’ என்ற திருநாமத்துடன் இருந்து அருள்பாலிக்கிறாள். இதற்கு ஹரிநாகேஸ்வரம் என்ற பெயரும் உண்டு. இங்குள்ள ஞான சரஸ்வதிக்கு தனி மகிமை ஒன்று உண்டு. வீணை கையில் இருக்காது. நான்கு கைகளிலும் அருள் ஞான முத்திரை, சுவடி (புத்தகம்), அஷ்டமாலை (ஜபமாலை), கெண்டி (ஜல பாத்திரம்) இதனுடன் தாமரைப் பூவில் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்துடன் ஞான சரஸ்வதியாக காட்சி அளித்து அருள்புரிகிறார்.

சரஸ்வதி தேவி நாமங்கள்
சரஸ்வதி தேவியின் பெயர்கள் (மந்திர சாஸ்திரங்கள்) பத்து. அவை: 1. த்ரவா வாகீஸ்வரி, 2. விஷ்ணு வாகீஸ்வரி, 3. நகுலி, 4. பரா சரஸ்வதி, 5. பால சரஸ்வதி,
6. தாரண சரஸ்வதி, 7.  நீல சரஸ்வதி,
8. நித்யா சரஸ்வதி, 9. வாக்வாதினி,
10. நர்த்தன சரஸ்வதி.
பிற ஆலயங்களில் சரஸ்வதி திருநாமம்
சிவாலயங்கள், விஷ்ணு, புத்த, ஜைன ஆலயங்கள் சிலவற்றில் சரஸ்வதி தேவியையும் தரிசிக்க முடிகிறது. சிவாலயங்களில் வாயு மூலையில் இந்த தேவியைக் காணலாம்.

வினோத வடிவில் சரஸ்வதி
சரஸ்வதி தேவி நான்கு தலைகளுடன், வீணையை ஏந்திய நிலையில் திருவிடை மருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கிறார். சாரதா திலகம், சரஸ்வதி பஞ்சாங்கம், தாராசுந்தர சாஸ்திரம் ஆகியவை மகா சரஸ்வதியின் வல்லமையைப் பேசுகின்றன.