அரசனின் ஆயுள் விருத்திக்காக அகல் விளக்கேற்றிய மக்கள்





கோயம்புத்தூரிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் கோவையிலிருந்து இருபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பழம்பெருமை வாய்ந்த கௌசிகபுளி என்னும் கோயில்பாளையம் திருத்தலம். காலகாலேஸ்வரர் என்னும் திருநாமத்துடன் இத்தலத்தில் ஈசன் அருள் பாலிக்கிறார்.

திருக்கடையூரில் மார்க்கண்டேயன் மரணத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டி சிவலிங்கத்தை ஆரத்தழுவிக் கொள்கிறான். எமதர்மன் பாசக்கயிறை வீசுகிறான். சிவலிங்கத்தைப் பற்றியிருந்த மார்க்கண்டேயன் மீது பாசக்கயிறு விழுந்து தெறிக்கிறது. சிவபெருமானின் கோபத்தினால் உந்தித் தள்ளப்பட்ட எமதர்மன் வீழ்ந்து இறந்துபடுகிறான். மார்க்கண்டேயன் என்றும் பதினாறாக வரமளிக்கப்படுகிறான்.

எமதர்மனே மாண்டதால் பூவுலகில் மரணம் சம்பவிக்கவில்லை. பிறந்தவர்கள் மூப்பெய்திய பின்னும் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இதனால் பூலோகம் தாங்கமுடியாத பளுவால் திணறியது. பூமாதேவியும், தேவர்களும் ஈசனிடம் சென்று முறையிடுகிறார்கள். அவர்களின் வேண்டுகோளைச் செவியுற்ற ஈசன் எமனை உயிர்ப்பிக்கிறார். மேலும் எமதர்மனை பரிகாரம் ஒன்றையும் செய்யச் சொல்கிறார் ஈசன். பேரூருக்கு வடகிழக்கே ஒரு நீரூற்றுக்கு அருகில் சிவலிங்கம் ஒன்றினை பிரதிஷ்டை செய்து வழிபடவேண்டும் என்று அலகிற் சோதியன் ஆணையிடுகிறார்.

ஈசனின் ஆணையை சிரமேற்கொண்ட எமதர்மன் பேரூர் பட்டீஸ்வரரை வணங்கிய பின் அடர்ந்த காட்டுப்பகுதியான கோயில்பாளையத்தை அடைகிறார். அங்கு கேட்ட ஓர் அசரீரியின்படி, எமன் தண்டத்தால் தரையில் அடிக்க அங்கு நீரூற்று பொங்கி வருகிறது. அந்த இடத்திலேயே நொங்கும் நுரையுமாய் பொங்கிய ஊற்று நீரையும் மண்ணையும் குழைத்து சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்கிறார். இக்கோயில்தான் இன்றும் நாம் வணங்கி வரும் கோயில்பாளையம் காலகாலேஸ்வரர் திருக்கோயில். அம்பிகை, கருணாகரவல்லி.



இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் சொல்லும் செய்தி என்ன?
அரசன் எவ்வழி அவ்வழி குடிவழி என்பது ஆன்றோர் வாக்கு. ஒரு நாட்டின் அரசன் எத்தகைய குணநலன்களுடன் விளங்குகிறானோ அதுபோலத்தான் மக்களும் இருப்பார்கள். அரசன் கொடுங்கோலனாக இருந்தால் மக்களும் கொடுங்கோன்மை மனப்பான்மை கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். அரசன் தன் குடிகளின் மீது அன்பு செலுத்துபவனாகவும், ஆதரவு தருபவனாகவும் இருந்தால் மக்களும் மற்றவர்கள் மீது மட்டற்ற அன்பைப் பொழிபவர்களாகவே இருப்பார்கள். இப்படி அன்பைப் பெருக்கும் அரசனின் ஆயுள் நீடித்திருக்க வேண்டும் என்றே மக்கள் தாளாற்றித் தவமிருப்பார்கள்.
அப்படித்தான் கோயில்பாளையத்தை ஆண்ட அரசன் ‘கோனேரின்மை கொண்டான்,’ நீண்ட ஆயுள் பெற்று வாழ அவ்வூர் மக்கள் யாகங்களும், வேள்விகளும் செய்தார்கள்.

அது மட்டுமல்லாமல் மரணமிலா வாழ்வும், இறவாப்புகழும் தரும் காலகாலேஸ்வரர் ஆலயத்திற்கு வந்து வழிபட்டார்கள். கலையன்புத்தூர் ஊராளிகள் அரசனின் நன்மைக்காக வாணிபக் குழுக்களிடமிருந்து எண்ணெய் பெற்று காலகால தேவ நாயனார்க்கு சந்தியாதீபம் ஏற்றி வைத்தார்கள். இந்த செய்தியைக் கூறுகிறது கோயிலின் ஒரு மண்டபத்திலுள்ள ஒரு கல்வெட்டு. அரசனின் ஆயுள் விருத்திக்காக அகல் விளக்கேற்றிய மக்களின் மகத்தான செயலை விவரிக்கிறது:
’’ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவந சக்ரவத்தி
கொநெரின்மை கொண்டான் வட
                  பரிசாரனாட்டுக்
கவையந் புத் தூரில் ஊரு மூராளிகளுக்கும்
நம் ஓலை எடுத்தபடி யாவது நாயனநார்
                   கால கால
தேவற்குச் சந்தியா தீபம்.... ஒன்றுக்கும்
வாணிபக் குடிகளை நமக்கு நன்றாக இந்நாய
னாற்குத் திருவிளக்கெண்ணெ யளப்பதாக                           உதகம் பண்ணி...’’
அர்ச்சகர்கள் பராமரித்தால்தான் ஆலயம் அழகு பெறும், பொலிவு பெறும். அதற்கு முதலாக அர்ச்சகர்கள் பராமரிக்கப்பட வேண்டும். அர்ச்சகர்கள் வசதி வாய்ப்புடன் நல்ல வருமானம் உள்ளவர்களாக இருந்தால்தான் ஆலயத்தில் ஐந்து கால பூஜைகளும் அழகாக நடந்தேறும். இன்றைக்கு பழம்பெருமை வாய்ந்த பல கோயில்களில் வருமானம் இல்லாததால்தான் அர்ச்சகர்கள் எல்லாம் வேறு தொழில் தேடி நகரங்களை நோக்கி நகர்ந்து விட்டார்கள். சில கோயில்கள் சிதிலமடைந்து போனதற்கும் அது காரணமாக இருக்கலாம். இப்படியெல்லாம் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அர்ச்சகர்களுக்கு
‘பிரம்ம தேயம்’ எனப் பல நிலங்கள் மன்னர்கள் காலத்தில் வழங்கப்பட்டன. நிலங்களும், ஊர்களும்கூட அர்ச்சகர்களுக்கு அரசர்களால் தானமாக வழங்கப்பட்டன. சில அரசர்கள் அர்ச்ச கர்களுக்கு, புலவர்களுக்கு வழங்குவது போல பொன்னையும் பொருளையும் வழங்கினார்கள்.

அப்படித்தான் கலையன்புத்தூர் காலகாலேஸ்வரர் கோயில் சிவனடி யார்களுக்கு கோயில் வருமானத் திலிருந்து பொன் கொடுக்க வேண்டும் என்று அரசன் உத்தரவிட்டுள்ளான். இக்கோயிலின் நடை மண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கல்வெட்டு இச்செய்தியை நமக்குக் கூறுகிறது:
’’ ஸ்வஸ்தி ஸ்ரீ கொனெரின்மை
கொண்டான்வ டபரிசாரநாட்டிற் க
வயன்புத்தூர் கால கால தெவ கன்
மிகளுக்கு நம்மோலை குடுத்த படியாவது
சிவப் ப்ராமணரு அடியார்க்கு நம் வரியி
லார் நிபந்தப் பொன்னுக்கு
தர விட்டதாக இது கொட்டொம்....’’
‘‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’’ என்பது பழமொழி. கோயில் இருக்கின்ற ஊர்களில் கோயிலை விடவும் பெரிதாக, உயரமாக வசதியாக வீடுகள் கட்டக்கூடாது என்பது நடைமுறை. பகவானுக்கு பச்சைத் தண்ணீர் கூட காட்டாமல் நாம் பால் சாப்பிடக்கூடாது என்பதே இதன் தாத்பர்யம். பகவானைவிட ஒருவன் பணக்காரனாக இருக்க முடியாது. இறைவனை விடப் பெரியவர் இவ்வுலகில் இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த உண்மையை உணர்ந்து கொண்ட அந்தக் கால அரசர்கள் அதனை ஊருக்கு உணர்த்துவதற்காக நிலங்களை ஆண்டவனின் ஆலயத்திற்கு தானமளித்தார்கள். அதிலிருந்து வரும் வருமானத்தின் மூலம் ஆலயத்தின் அன்றாட பூஜைகள் தடைபடாமல் பார்த்துக் கொண்டார்கள்.

அரசர்கள் மட்டுமல்லாமல், தனி மனிதர்களும் தங்கள் நிலங்களை கோயில்களுக்கு கொடையாக கொடுத்தார்கள். பல சமயங்களில் ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து நிலம் வாங்கி அதனை அறக்கொடையாக ஆண்டவனுக்கு அர்ப்பணித்திருக்கிறார்கள். அப்படி ஒரு செய்தியைத்தான் கால காலேஸ்வரர் கோயிலின் முன் மண்டபத்தில் உள்ள சுந்தரபாண்டியன் என்ற மன்னன் காலத்து கல்வெட்டு கூறுகிறது.
கவையன்புத்தூர் ஊரும், ஊராளிகளும் இவ்வூர் காலகாலேஸ்வரமுடையார் கோயிலுக்கு வானவன்மாதேவிநல்லூர் என்ற ஊரை தானமாகக் கொடுத்திருக்கிறார்கள். இவ்வூரில் இருந்து கிடைக்கும் வரி, வட்டி, மற்ற பிற வருவாய்களையும் இக்கோயிலுக்கு உரித்தாக்கி, அச்செய்தியைக் கல்வெட்டிலும் பொறித்துள்ளார்கள்.

‘‘ஸ்வஸ்தி ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவற்குயாண்டு
உயத்தாறாவது வடபரிசார நாட்டு கவையன்புத்தூர்
ஊருமூராளிகளோமும் எங்களூர் நாயிநார்
கால காலீஸ்வரமுடையாற்கு எங்கள்கால்பாடு                          கடிகூவலான
வானவன் மாதேவிநல்லூர் இன்னாயனாற்கு                                உதகம்
பண்ணிக் கொடுத்தபடியாவது இவ்வூரும்                                  ஏற்றிக்குடியும்
இடுவோமாகவும் இவ்வூரால் வரும் இறை புரவு
சிற்றாயம் தெண்ட குற்றம் மற்றும் எப்பெர்
                        பட்டநவும் இந்
நாயினாற்கு இறுப்பதாகவும் இறுத்துப்                              பொதுமிடத்து
ஆரானும் தெவதானம் இக்கணஞ் சொல்லுமிடத்து
ஆணை மாறுப்பாடும் இத் தெவ தானமாகவும்
இப்படிக்கு செம்பிலும் சிலையிலும் வெட்டிக்
                         குடுத்தொம்.....’’
அரசாங்கம் அறிவிக்கும் சில திட்டங்கள் அல்லது பிறப்பிக்கும் சில உத்தரவுகள் எல்லாம் சில
காலம் மட்டுமே பரபரப்பாக பேசப்படும். அத்திட்டங்களும், உத்தரவுகளும் சில வருடங்களுக்கு தீவிரமாக பின்பற்றப்பட்டு பின்பு அதையெல்லாம் அனைவரும் மறந்து போய்விடும் துர்ப்பாக்கியம் இக்காலத்தில் மட்டுமல்ல,  அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறது.
பரகேசரி கோனேரின்மை கொண்டான் என்ற மன்னன் கோயில் பாளையத்தை ஆட்சி செய்த போது, நல்லூர்க்கால், காவடிக்கால், வாயறைக்கால் ஆகிய நாட்டுப் பிரிவிலும் இடிகரை, துடியலூர், கூடலூர், அரியபிராட்டி நல்லூர் ஆகிய ஊர்களிலும் பூஜைகள் செய்ய ஆதி சைவர்களுக்கு முன்பு கொடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால், அக்கொடைகள் இடையில் சில காரணங்களால் நின்று போய்விட்டன. அக்கொடைகளை மீண்டும் சில பிராமணர்களிடம் கொடுத்து கோயில் வழிபாடுகள் தடைபடாமல் தொடர்ந்து நடத்த மன்னன் ஆணையிட்டான்.

கால கால தேவ நாயனார் கோயில் மண்டபத்தின் நான்காவது தூணில் உள்ள கல்வெட்டு இச்செய்தியைக் கூறுகிறது:
‘‘பரகேசரி திரிபுவன சக்கரவத்திகொ
னெரிமெல் கொண்டா நல்லூர்காந் காவடிக்
கால் வாயிறைக்கால் நாடு இன்னாட்டு
சிவப் பிராமணக் காணியாவிற்கும்     இடிகரை                     துடியலூர்
கூடலூர் கவையன் புத்தூர் சூரலூரான அரி
ய பிராட்டி நல்லூர் இவ்வூர்களில் சிவப்
பிராமணக் காணியாளற்கும் நம் ஓலை
குடுத்தபடியாவது தாங்கள் முன்னாள் ஆதி                           சைய்வச்
சக்கரவத்திக்கு குடுத்துவரும் வெண்டுகொள்பரி
வட்ட முதலும் தவனடை தானப் பெற்றுக்கும்
தங்கள் பெரில் ஆண்டு தொறும்....’’
கோயிலில் அணையவிருந்த அகல்விளக்கை எண்ணெய் ஊற்றி ஏற்றிவைத்த ஒருவனுக்கு, அந்தக் காரணத்திற்காக மட்டுமே சொர்க்கத்தில் இடம் கிடைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆயிரம் வாட்ஸ் பல்பு ஒன்று எரிவதை விட
அகல் விளக்கொன்று ஆலயத்தில் எரிவதுதான் எத்தனை அழகு, எத்தனை புனிதம்!
அகல் விளக்கொன்று ஏற்றினால் போதும்
அங்கே நம் அக விளக்கும் ஏற்றப்படுகிறது.

நம்மைச் சூழும் துன்பங்கள் ஆலாய்ப் பறந்து விடுகின்றன. எனவேதான் நம் முன்னோர்கள் ஆலயத்தில் விளக்கேற்றுவதை
வழிபாட்டின் முக்கிய பகுதியாக வைத்தார்கள். இச்செய்தியை மெய்ப்பிக்கும் விதமாக
இந்தக் காலகாலேஸ்வரர் கோயிலில்
விளக்கு வைக்க கவையன்புத்தூர் வாணிகர்கள்
ஒன்று கூடி இந்தக் கோயிலுக்கு 23 சந்தியா விளக்குகளை வழங்கினார்கள்.
அந்த விளக்குகளை எரிக்க நாள் ஒன்றுக்கு முப்பிடி எண்ணெய் வழங்கி மன்னன்
விக்ரம சோழன் உத்தரவிட்டான். கால காலேஸ்வரர் கோயில் சுவரில் உள்ள கல்வெட்டு, விளக்கேற்றி வைத்தச் செய்தியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது:
‘‘ஸ்வஸ்தி ஸ்ரீ விக்கிரம சொழ தெவற்கு
யாண்டிருபதாவது வடபரிசார நாட்டு
கவையன்புத்தூர் வாணியிரொம்                            ஆருடையார்
கால கால தெவர்க்கு
நாங்கள் வைத்த சந்தியா தீபம்                   இருபத்தைஞ் சுக்குங்காண
நால் நிமித்தம் முப்பிடியெண்ணை குடுப்பொமாக கல்வெட்டிக்                              குடுத்தோம்....’’
                     படங்கள்: நிவாஸ்கர்